தொழில் தொடங்கலாம் வாங்க 24: உங்களைவிட திறமையானவர்களைத் தேடுங்கள்
Published :  25 Jul 2017
டாக்டர். ஆர். கார்த்திகேயன்

பல வருடங்களுக்கு முன்பு ஒரு தொழிலதிபர் என்னைச் சந்திக்க வந்தார். என்னைப்
பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டவர் என்றாலும் முதன் முறையாகப் பார்ப்பதால் பெருத்த
ஏமாற்றம் அவருக்கு. “உங்களைப் பெரிய கன்சல்டண்ட், ஒரு கம்பெனிக்கு முதலாளி,
அனுபவசாலி என்றெல்லாம் கேள்விப்பட்டதும் சற்று வயதானவராக எதிர்பார்த்தேன்!”
என்று ஏமாற்றத்துடன் சொல்லிவிட்டுதான் அமர்ந்தார். உள்ளே ஜில்லென்று
உணர்ந்தாலும், அவர் ஏமாற்றமடைந்ததற்கான நிஜமான காரணத்தை யோசித்தவாறு மெலிதாகச்
சிரித்தேன். அவர் அதற்கு வேலை வைக்கவில்லை. “இப்படிச் சின்னப் பையன் மாதிரி
இருந்தால் எப்படி எங்க ஆளுங்களை சமாளிப்பீர்கள்?” என்றார். எனக்குப் புரிய
ஆரம்பித்தது.

*எப்போது சந்தித்துக் காபி குடித்தீர்கள்?*

நேரே விஷயத்துக்கு வந்தார். “எம்.டி.யான நான் எது சொன்னாலும் என்னுடைய அடுத்த
கட்டத் துறைத் தலைவர்கள் கேட்பார்கள். ஆனால் அவர்களுக்கு இடையில் ஒற்றுமை
இல்லை. அவர்களை எப்படி ஒன்றுபடுத்துவது என்று எனக்கும் தெரியவில்லை. என்னுடைய
கம்பெனி நல்ல பெயர் வாங்கி இருக்கு. தரக்கட்டுப்பாடுகள் சார்ந்த அனைத்து
அவார்டுகளும் வாங்கியிருக்கிறோம். லாபத்துக்கும் குறைவில்லை. நான் சொல்லாத
எதையும் எனக்கு கீழே இருக்கவங்க செய்ய மாட்டாங்க. ஆனால், ஒருத்தருக்கு
ஒருத்தர் குழி பறிக்கிறதே வேலை.

என் கண்டிப்புக்குப் பயந்துதான் அடிப்படை வேலைகள் நடக்குது. ஆனால், ஒரு
புதுமையான எண்ணம்கூட இவர்களிடமிருந்து வராது. இவ்வளவு வளர்ந்தும், இதனால்தான்
என்னால அன்றாட பணிகளிலிருந்து மீள முடியல. இவர்களைச் சுதந்திரமாக, பொறுப்பாக,
குறிப்பாக நான் இல்லைனாலும் திறம்படச் செயல்பட நீங்கள் பயிற்சி அளிக்க
வேண்டும்” என்றார். “எங்க ஆளுங்க எல்லாம் முப்பது வருஷ சர்வீஸ் போட்டவங்க.
சின்னப் பையன் மாதிரி நீங்க இருந்தால் ஏய்ச்சுட்டு போய்டுவாங்க. அதான்
யோசிக்கிறேன்...” என்றும் சொல்லி முடித்தார்.

நேரில் கள ஆய்வு செய்யக்கேட்டேன். அவரிடம் ரிப்போர்ட் செய்யும் அந்த 9 பேரும்
வந்தனர். நவக்கிரகம் போலதான் இருந்தார்கள். ஃபேக்டரி கதை வேண்டாம் என்றேன்.
“கடைசியாக எப்போது நீங்களாகச் சந்தித்துக் காபி குடித்தீர்கள்?” என்று
கேட்டேன். “எம்.டி. மீட்டிங்கில் மட்டும்தான் சந்திப்போம். மற்றபடி தனிப்பட்ட
சந்திப்புகள் கிடையாது” என்றனர். அனைவரும் சர்வ ஜாக்கிரதையாகப் பேசினார்கள்.
எம்.டி. அனுப்பிய ஆலோசகர் என்பதால் என் மேல் எம்.டி.க்கு காட்டும் அதே பயபக்தி
தெரிந்தது. எனக்குத் தேவையான தகவல்களை அளந்து அளந்து தந்தார்கள்.

*அதிகாரத்தையும் பொறுப்பையும் பகிருங்கள்*

எனக்குப் பிரச்சினை புரிந்தது. இவர்களை இப்படி ஆக்கியதே அந்த எம்.டி.தான்.
ஆனால் பழி முழுவதையும் இவர்கள் மேல் போட்டுவிட்டு, அவர் தியாகி பட்டம்
வாங்குகிறார். அவருக்குத் தேவை வேலைத் தெரிந்த தலையாட்டிப் பொம்மைகள். அவர்
முடிவுகளை மற்றவர்கள் மூலம் நடத்தி அந்த நிறுவனத்தையே ஒற்றை ஆளாய்
நடத்திவருகிறார்.

வளர்ச்சிக் குறைவு, புதுமை எண்ணம் இல்லை, துறைத் தலைவர்கள் சுயமாக நடந்து
கொள்ளவில்லை என்று புலம்பினாலும் புதிய மனிதர்களையோ புதிய எண்ணங்களையோ அவர்
ஊக்குவிப்பதில்லை. பின் ஏன் புதிய மனிதரான என்னை அழைத்தார்? அந்த நிறுவனம்
விண்ணப்பித்திருந்த ஒரு சர்வதேசப் பரிசுப் போட்டியில் மனித வளத்துக்கான
மதிப்பெண் மட்டும் மிகக் குறைவாகக் கிடைக்க, அந்த வேகத்தில்தான் என்னை
அணுகியிருந்தார்.

நான் அவரிடமே தெளிவாகச் சொன்னேன். இது ரோபோவைப் பழுது பார்க்கும் சமாச்சாரம்
அல்ல. ஒரு மனிதனின் பங்கீடு சிறக்க வேண்டும் என்றால், அவனுக்கு முதலில்
சுதந்திரமான எண்ணமும் செயலும் வேண்டும். தோல்வி பயம் இல்லாமல் புதிய
விஷயத்தைச் செய்து பார்க்கும் சுதந்திரம் வேண்டும். சரியோ தவறோ எதுவானாலும்
பேசும் சுதந்திரம் வேண்டும். தனிப்பட்ட உறவுகளை விட நிறுவன நலம் முக்கியம்
என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

அதற்கு அதிகாரத்தையும் பொறுப்பையும் பகிர்ந்து கொடுத்து அவர்கள் கற்பதற்கு
அவகாசம் கொடுக்க வேண்டும், இதற்கெல்லாம் நீங்கள் தயாரா என்று கேட்டேன்.
“சித்தாந்த அளவிலாவது நீங்கள் தயார் என்றால்தான் பயிற்சி பற்றி நினைக்க
வேண்டும். அதை விடக் குறிப்பாகப் பயிற்சியில் நீங்களும் பங்கு பெற வேண்டும்!”

முதலில் மறுத்து விலகியவர், இரு ஆண்டுகள் கழித்துத் திரும்ப வந்தார். “நீங்கள்
சொன்னது சரிதான். என் பழைய ஆட்களில் இருவர் ஓய்வு பெற, அதற்கு அவர்களுக்குக்
கீழே சிறப்பாகப் பணி செய்துவந்த இருவரை தேர்ந்தெடுத்துப் பதவி உயர்வு
கொடுத்தேன். என்னிடம் ரிப்போர்ட் செய்ய ஆரம்பித்தவுடன் அவர்களும் செயல் திறன்
இழந்ததுபோல உணர்கிறேன். அதனால்தான் நான் மாற வேண்டும் என்று இம்முறை
வந்துள்ளேன்.” என்றார். அவருக்கு ஆலோசகராகவும் நிர்வாகப் பயிற்சியாளராகவும்
பின்னர்ப் பணியாற்றி நிறுவனத்துக்கு உள்ளிருந்தே பல சிறப்பான தலைவர்களை இனம்
கண்டு திறன் வளர்ப்பு செய்ய முடிந்தது தனிக் கதை.

*பல தலைவர்கள் வேண்டும்*

முதலாளிக்கு அடுத்துப் பணியாற்றும் பணியாளர்களை வளர்த்தெடுப்பது பற்றி ஏற்கனவே
விரிவாக எழுதிவிட்டேன். இதை எழுதக் காரணம், ஸ்கேலிங்செய்து விஸ்வரூப வளர்ச்சி
எடுக்கத் தேவை அடுத்த வாரிசை விரைவில் கண்டுபிடிப்பது.

தலைமையின் வெற்றியே வாரிசை உருவாக்கித் தொடர்ச்சியை வழங்குவதுதான். ஒரு தொழில்
என்பது பல தொழில்களாக மாற வேண்டும் என்றால் பல தலைவர்களைக் கண்டுபிடிப்பது
அல்லது உள்ளிருந்து வளர்த்தெடுப்பது. நீங்கள் செய்யும் வேலையை உங்களைவிடத்
திறமையாகச் செய்யக்கூடிய ஆட்களைத் தொடர்ந்து தேடிக் கொண்டிருப்பதுதான்
சூட்சமம்.

இது பெரு முதலாளிகளுக்கு மட்டுமல்ல, சிறு முதலாளிகளுக்கும்தான். உங்கள் ராஜ
ரகசியம் தெரிந்து உடனே போட்டியாகத் தொழிலுக்கு வந்துவிடுவார்கள் என்ற பயத்தை
உடைத்தெறிந்துவிட்டுத் திறமைக்கு நல்ல விலை கொடுங்கள்.

நீங்கள் பட்டை தீட்டும் வைரம் வெளியில் போய்விடக்கூடாது என்பதற்காக மனித வளத்
தரத்தைச் சமரசம் செய்தாலோ, பொறுப்பு அளிக்கத் தவறினாலோ உங்கள் நிறுவன
மதிப்பும் வெறும் கூழாங்கற்களின் அளவில்தான் இருக்கும்.

வாரிசு தெரியாமல் அல்லது சரியில்லாமல் போனால் என்ன ஆகும் என்பதற்கு இன்றைய
தமிழக அரசியல் கட்சிகள் சிறந்த உதாரணங்கள். உங்கள் வாரிசு யார் என்பதை முடிவு
செய்துவிட்டீர்களா?

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*      V A N A K K A M  S U B B U *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to