*இருகை யானை!
ஐம்புலன்களால் அனுபவிக்கப்பெறும் உலகியல் இன்பங்கள் அனுபவிக்கும் போது இன்பமே.
யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் அனுபவிக்கும் போது மட்டும் தான் இன்பம். அனுபவம்
முடிந்த பின்னர் அந்த இன்பம் தொடர்வதில்லை. அனுபவ காலத்தும்,அதன் பின்னரும்,
எண்ணும் போதெல்லாம் இன்பம் தருவது இரண்டு. ஒன்று இறைவன், மற்றொன்று இலக்கியம்.
அதனால் கடவுளையே இலக்கியம் என்று குறிப்பிட்டார் குமரகுருபரர். 'தொடுக்கும்
கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே' என்று மீனாட்சியம்மையைக் குறிக்கும் பொருள்
இதுதானே!

மாணிக்கவாசகரின் திருவாசகம் உள்ளத்தை உருக்கும் பக்தி உணர்வுடன் இலக்கிய வளமும்
நிறைந்தது. திருவாதவூரர் என்ற பெயர் படைத்தவருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயர்
அமைந்ததே, பழுதற்ற முனை முறியாத சொற்களால் பாடியமை காரணமாக.

மாணிக்கவாசகர் மனிதனின் உள்ளப்போக்கை நன்கு உணர்ந்தவர். மனிதன் ஆன்மா இறைவனை
நோக்கியும், அவன் உடல் உலகியலை நோக்கியும் பிரயாணம்செய்கின்றன என்பதை நன்கு
உணர்ந்தவர், வெவ்வேறு திசையில் செல்லும் ஆன்மாவையும் உடலையும் ஒன்றாக்கி
இரண்டையும் ஆன்ம நாயகன்பால் செலுத்துவதே பக்தி நெறியின் முடிவு என்று
உணர்ந்தவர்.

அதனால் உலகியலிலும், இறைமை உணர்விலும் மாறி மாறிச் செல்லும் மனித வாழ்க்கையின்
போக்கைப் பல பாடல்களில் பாடியுள்ளார். இத்தகு சமயக் கருத்து நயமாக
வெளிப்படும்போது அது காலத்தால் அழியாத இலக்கியமாக உருவெடுக்கிறது.

இறைவனை நோக்கி மாணிக்கவாசகர் முறையிடும் பல வேண்டுகோள்களில் 'கைம்மாறு
கொடுத்தல்' என்ற தலைப்பில் ஒரு வேண்டுகோள் பாடல்,
'வானத்து உள்ளோர்க்குத் தலைவனே! என்னை வருக என்று நீ கட்டளையிட்டாய்! இரண்டு கை
யானையை ஒத்திருந்த என் உள்ளக் கருவாகிய உன்னை நான் கண்டிலேன்; கண்டதெல்லாம்
துன்பமே, உன்னை அனுபவிக்கும் வலி எனக்கு இல்லை; ஆனால் உலகியலைஅனுபவிக்கும்
வலிதான் இருக்கிறது.'

மேற்குறித்த கருத்தை வெளியிடும்திருவாசகப் பாடல் மிகுந்த சுவையுடையது.

தன் உள்ளக் கருவாய்-- இருகைபடைத்தயானையாய்-- இருக்கும்
இறைவனைக் காண இயலாது உலகியலையே தன் உள்ளம் நாடுவதை இப்பாடல் தெரிவிக்கிறது.
இதில் இறைவனை 'இருகை யானை' என்று அழைப்பது மிகச் சிறப்பானது.

இறைவனை 'இருகை யானை' என்று உருவகப்படுத்தி அழைத்தவர் இருவர். ஒருவர்
மாணிக்கவாசகர்; மற்றொருவர் கம்பர். கம்பர் தமது ராமாயணத்தில் இராம பிரானை
'இருகை வேழத்து ராகவன்' என்றார். வேழம் என்றால் யானை.

இறைவனை ஏன் இரு கை யானை என்று கூறவேண்டும்? 'இருகை'யைக் கூறுவது ஒரு இலக்கிய
மரபு; அவ்வளவே. எந்த ஒரு ஆண்மகனையும் சிறப்பிக்கக் கையைச் சிறப்பித்துக்
கூறுவது மரபு. நன்கு வளர்ந்த ஆண் மகனை 'ஓங்குகையான்' என்று தமிழிலும்,
'ஆf?னுபாகு' என்று வடமொழியிலும் அழைப்பது வழக்கம். ஆf?னுபாகு என்ற
சொல்லுக்குப்பொருள் 'தொங்குகிற கையை உடையவன்'என்பதே. f?னு என்றால் தொடை, பாகு
என்றால் தோள்; ஆ என்றால் வரைக்கும். தோளிலிருந்து தொடைவரைக்கும் தொங்கும்
கையையுடையவன் ஆf?னுபாகு. அதனால் இரு கையை வணிப்பது பொது மரபே. ஆனால் இறைவனை
யானை என்று ஏன் கூறவேண்டும்?

யானைக்கு ஒரு குறிப்பிட்ட இயல்பு உண்டு. யானையின் மேல் ஏறி அமர யார்
ஆசைப்பட்டாலும் அதன் காலைப் பிடித்தால்தான், அதன் மேல் ஏறி அமர முடியும். வேறு
வழியே இல்லை. யானைக்கு இயல்பு கால் பிடிப் பார் தம்மைத் தலைக்கு மேல் தூக்குவது
அல்லவா? அது போல் இறைவன் காலையார் பிடிக்கிறார்களோ அவர்களை வாழ்க்கையில் தூக்கி
விடுவான் என்ற கருத்து வெளிப்படவே இறைவனை 'இரு கை யானை' என்றார்.

கம்பர் இராமபிரானையும், மாணிக்கவாசகர் சிவனையும் 'இருகை யானை' என்றனர்.
-----------------------------------------------------
நன்றி- 'இருகை யானை'புலவர் கீரன் அவர்களின் கட்டுரையிலிருந்து.....
--------------------------------------------------------
குறிப்பு: அன்பர்கட்குத் தெரியும் திரு கீரன் அவர்கள் ஒருகால் ஊன முற்றவர்.
காஞ்சி பரமாச்சாரியார் அவர்களை தரிசிக்க அவர் சென்ற ஒருசமயம் அவர் அடைந்த
அனுபவம் ஒன்றினை ஒரு சொற்பொழிவினூடே கூறினார்.

மைதானத்தில் நடந்தபோது ஊனமுற்ற காலின் வலி சிரமங்களுடன் பரமாச்சாரியார்
அவர்களைக் காண்பதற்கு மேலும் அதிக நேரம் தாமதித்து நிற்கவேண்டியிருந்ததாம்.
பரமாச்சாரியாரின் தரிசனம் கிட்டியபோது அவர் வாயைத் திறந்து ஒன்றும் கூறாமலேயே
பிரசாதம் மட்டும் கொடுத்து அனுப்பியமை மேலும் உள்ளத்தில் வலித்ததாம். பத்தோடு
பதினொன்றாக வரிசையாளர்கள் நகரும்போது அவரும் நகர்ந்து மைதானத்தினை நடந்து
கடந்தபோது, பரமாச்சாரியார் அவர்களின் அழைப்பைச் சுமந்து வந்து ஒரு தொண்டர் திரு
கீரனை அணுகி பரமாச்சாரியார் பார்க்கவிரும்புவதாய்த் தெரிவித்தார். பரக்கப்
பரக்க மறுபடி நொண்டிக்கொண்டே மைதானம் கடந்து நடந்து பரமாச்சாரியார் அவர்களைத்
தரிசித்தபோது, முறுவல் காட்டி ஓரிரு வார்த்தைகள் பேசி அனுப்பினாராம்.
உள்ளத்தின் வலி நீங்கியபோதிலும் உடலின் சிரமமும் வேதனையும் மிகவும் கொடியதாய்
இருந்ததாம். விடைபெற்று திரும்பி சற்றுதூரம் நடந்தபின்னர் மீளவும்
பரமாச்சாரியார் அழைத்தார். பத்து நிமிடங்களுக்கு மேலாகக் காலடியில் அமரவைத்து
அளவளாவி ஆசீர்வதித்து அனுப்பினாராம் பாமாச்சாரியார். ஆறு மாதங்களாய் ஊனமுற்ற
காலின் மூட்டினில் இருந்த கடுமையான வலியினைப் போக்குவதற்கு அவர் தந்த
சிகிச்சையும் பயிற்சியுமாக அந்த நிகழ்வினைக் கூறி நெகிழ்ந்தார் புலவர்.
அன்புடன்,
வெ.சுப்பிரமணியன்.
ஓம்.





-- 
Service Above Self
cnu.pne *

Reply via email to