ஓம்.
வீட்டில் விருந்து வைத்தால் தெரிந்த மனிதர்கள் உறவினர் வருகிறார்கள்.
அவர்களுக்கு விருந்து கொடுத்து உபசரித்து மகிழ்சிய்டோடு
அனுப்பிவைக்கிறோம்.  ஹோமம் நடத்தினால் தேவர்கள் வருகிறார்கள்.  அவர்களை
சந்தோஷப்படுத்தி அனுப்புகிறோம். சந்தோஷ மிகுதியால் திருப்தியால் அவர்கள்
நமக்கு வேண்டிய வரங்களை அருள்கிறார்கள்.

        நமக்கெல்லாம் முழு முதற் கடவுள்  கணபதி. அதனால்தான் ஒவ்வொரு
நிகழ்சிகளையும் கணபதி ஹோமத்திலிருந்தே துவங்குகிறோம்.

இந்த மஹா கண்பதி மந்திரங்களை உருவாக்கியவர் கனகரிஷி. முதல் முதலலாக கணபதி
ஹோமம் செய்தவர் காச்யப முனிவர். கணபதிமீது அதீத பக்தி வைத்திருந்த
அவருக்கு இரு மனைவியர். ஒருவர் தேவ மாதா, பெயர் அதிதி. இன்னொருவர்
அசுரமாதா பெயர் திதி.

காச்யபர் அருகம் புல் கொண்டு கணபதியை வழிபடுவதைப் பார்த்து தேவ மாதாவான
அதிதிக்கு சந்தேகம். “இந்த அருகம் புல்லில் அப்படி என்ன இருக்கிறது. இதை
வைத்து பிள்ளையாரை வழிபடுவதற்கு என்ன காரணம்?” என்று காஷ்யபரிடம்
கேட்டார்.

        அருகம் புல்லின் மகத்துவத்தை தேவ மாதாவுக்கு உணர்த்த விரும்பிய
காஷ்யபர், ஒரு துண்டு அருகம் புல்லை அவரிடம் கொடுத்து, “தேவலோகம் சென்று
இதற்கு ஈடாகத் தங்கம் வாங்கிவா!” என்றார்.

        ”ஒரு குண்டுமணி தங்கமே இந்தப்புல்லை விட கனமாக இருக்குமே.. இதற்கு ஏன்
தேவ லோகம் போகவேண்டும்?” என்று அதிதி குழம்பினாலும் கணவர் சொல்படி தேவ
லோகம் கிளம்பினார். தங்கள் அன்னை வந்திருக்கிராறே என்று இந்திரன்
உள்ளிட்ட தேவர்கள் அவரை அன்போடு வரவேற்றனர்.

        காஷ்யபரின் கட்டளையை அவர்களிடம் சொன்னார் அதிதி. இந்திரன் சிரித்து
விட்டான். ஆனாலும் சேவகர்களை அனுப்பி தராசையும் கொஞ்சம் தங்கத்தையும்
கொண்டுவரச் சொன்னான். இரண்டும் வந்தன. தராசின் ஒரு தட்டில் அருகம் புல்லை
வைத்து மற்றொன்றில் சிறிது தங்கத்தை வைத்தார்கள் சேவகர்கள். ஆனாலும்
அருகம்புல் இருந்த தட்டு கனமாக அடியிலேயே இருந்தது. ஆச்சரியத்துடன்
இந்திரன் மேலும் சிறிது தங்கத்தைஎடுத்து வந்து தர்ராசில் வைக்கச்
சொன்னான். இன்னும் கொஞ்சம்.... இன்னும் கொஞ்சம்..... என்று கருவூலத்தில்
உள்ள ஒட்டு மொத்தத் தங்கத்தையும் எடுத்து வைத்தார்கள். அப்படியும் அந்தச்
சிறு அருகம்புல் இருந்த தட்டே அதிக எடையுள்ளதாகக் கீழே இறங்கி இருந்தது.

        இந்திரன் தனது தவறறை உணர்ந்து மானசீகமாக காஷ்யபரிடம் மன்னிப்புக்
கேட்டான். உடன் அங்கு தோன்றிய காஷ்யபர், கணபதியைத் துதித்தபடி அதிதி
கையிலிருந்த ஒரு துளி தங்கத்தை தராசில் வைத்தார். உடன் அருகம்புல்
இருந்ததட்டு சற்று உயர்ந்து சமமானது.

        கணபதி பூஜைக்கு வந்த அருகம்புல்லுக்கு இவ்வளவு சக்தி என்றால், கணபதியின்
சக்திக்கு எல்லையுண்டோ? சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகியவற்றைச் செய்யும்
மூன்று கடவுளர்....அவர்களும் விரும்புபவர் கணபதி.

சாஸ்திரங்களில் ‘கலாதேவி விநாயகவ்’ என்று கூறுகிறது. அதாவது கலியுகத்தில்
அம்பாளுக்கும் கணபதிக்கும் தான்  சக்தி அதிகம். கலிகாலத்தில் கூப்பிட்ட
குரலுக்கு வந்து கைகொடுப்பவர்கள் அம்பிகையும் கணபதியும்.

        எந்த பூஜையிலும் ஆரம்பம் பிள்ளையார் பூஜை தான்.. எந்த ஒரு புது
விஷயத்தையும் ஆரம்பிக்கும் போது அது தடையில்லாமல் நடப்பதற்காகச்
செய்யப்படுவது கணபதி ஹோமம். சைவர்கள் இவரை விநாயகர் என்றும் வைஷ்ணவர்கள்
விஷ்வக்சேனர் என்றும் அழைக்கிறார்கள்.

        சாஸ்த்திர சம்பிரதாயங்கள்  எதுவுமின்றி கூப்பிட்டவுடன் ஓடி வருபவர்
கணபதி.  மஞ்சள் தூளைக் கொஞ்சம் எடுத்து நீர்விட்டுப் பிசைந்து கையால்
பிடித்து, “பிள்ளையாரே உன்னை அழைக்கிறேன்” என்றால் போதும்.... அடுத்த
கணம் அங்கே வந்து பிரத்தியக்ஷம் ஆகிவிடுவார். ’ஹரித்ரா பிம்பம்’
என்பார்கள் (பிடிச்சு வெச்ச பிள்ளையார் என்கிறோமே அது இதுதான்.) அதனால்
எந்தப் பொருள்கள் வாங்குவதரற்கு பட்டியலிட்டாலும் முதலில் எழுதுவது
மஞ்சள்.

        மகா பாரதத்தை ஐந்தாவது வேதம் என்பார்கள். வாழ்க்கையின் பொருள் நான்கு
என்று பெரியவர்கள் சொல்வார்கள். அவை தர்மம்,அர்த்தம், காமம், மோட்சம்.
வாழ்க்கை வாழ்வாங்கு வாழ்வதற்கு மகாபாரதம் வழிகாட்டுகிறது. மஹாபாரதத்தில்
இல்லாதது வேறெங்கும் இல்லை. அப்படிப்பட்ட மஹாபாரதத்தை வியாசர் சொல்ல
எழுதினார் ஏகதந்தன்.

அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.

Reply via email to