ஓம்.
”அச்சமில்லை அச்சமில்லை” என்று பாடினார் பாரதியார்.”அஞ்சுவது யாதொன்றுமில்லை.
அஞ்ச வருவதும் இல்லை” என்று அப்பர் பாடினார். இதிலிருந்து அச்சமென்பது உலகில்
நீங்காதிருப்பது நிரூபணமாகிறது. எல்லார்க்கும் எப்போதும் வாழ்க்கையில் ஒருவித
பயம் இருந்துகொண்டே இருக்கிறது. அது ஏன்? அதைத் தவிர்க்க்க வழியுண்டா?
உயிர்கள் அனைத்தும் அழியாமல் யாண்டும் வாழ்திருக்கவே விரும்புகின்றன.
ஆனால், இயற்கையின் திட்டத்தில் அது இயல்வதில்லை. வாழ்வின் மறுமுனையாக சாவு
வந்தே தீர்கிறது. உலக வாழ்வில் ஈடுபட்டுள்ள அனைத்தும் அச்சத்தின் பிடியில்
இருப்பதற்கு இது ஒன்றே காரணம்.
தீயில் கையை வைத்தால் கை காந்திப்போகிறது. ஒரு முறை அதை அனுபவித்த பிறகு
மீண்டும் தீயில் கை வைக்க அஞ்சுவது இயல்பு.. அதைப் போல் அச்சங்கள் அனைத்தும்
அனுபவத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
பருந்து ஒன்று பறந்து வந்தால் கோழிக் குஞ்சுகள் பறந்தோடி தாயின்
சிறகுகளுக்குள் புகுந்து கொள்கின்றன. நாய்க்குட்டி ஒன்று பாம்பைப் பார்த்ததும்
பயந்து பின் வாங்குகிறது. பறவை ஒன்று இரைதேடி பூமியில் இறங்கினால் அது சதா தன்
தலையை அங்கும் இங்கும் திருப்பிப் பார்த்துக்கொண்டே எச்சரிக்கையோடு இரை
தேடுகிறது. இப்படி மரணத்தைப் பற்றிய அச்சம் அவைகளுக்கு எப்படி வந்திருக்க
முடியும், முற்பிறவி அனுபவத்தைத் தவிர? உயிருக்கு ஆபத்து என்றால் மனிதனுக்கு
வருகின்ற பயத்துக்கு அளவே இல்லை; நோயில் மாண்டு போவோமோ! பகைவர்கள்
கொன்றுவிடுவார்களோ? “ என்று மனிதன் கொள்ளும் பயங்களெல்லாம் இவன் இதற்கு முன்
பல முறை செத்துச் செத்துப் பிறந்திருக்கிறான் என்பதையே தெளிவாக்குகின்றன.
ஓர் உயிர் வாழ வேண்டுமானால் அதுமற்ற உயிர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ
தாக்கி அழிக்காமல் வாழ முடிவதில்லை. வாழ்வே உயிர்களுக்குள் நடக்கும் ஜீவ மரணப்
போராட்டமாகத்தான் இருக்கிறது. அதனால் தான் மனிதன் மட்டுமின்றி அனைத்து
உயிர்களும் எப்போதும் ஒருவித பயத்துடனேயே வாழ்ந்துகொண்டிருகின்றன்.
இனி இந்த மரண பயத்தைப் போக்குவதற்கு என்ன வழி? ஞான விசாரம் ஒன்றே வழி.
உயிர்களின் முன்னேற்றம் அனைத்தும் வாழ்ந்திருப்பதில் மட்டும் தான்
அமைந்திருக்கின்றதா? என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். உயிர்கள் சிறு
நிலையிலிருந்து பெருநிலைக்குப் பரிணமித்தல் என்ற நிகழ்வு உடல்கள் மாறுவதன்
மூலம்தான் நிகழ்கிறது. உடல் மாற்றத்திற்கு ஏற்றபடிதான் அறிவும் மனமும்
விகசிக்கிறது
அந்த உடல் மாற்றமும் முன்னேற்றமும் மரணத்தால் அன்றி வேறு எதனாலும்
ஏற்படமுடியாது என்னும்போது மரணத்தைப் பற்றிய பயம் வீணல்லவா? எனவே ஜீவனுக்கு ஜனன
மரணங்கள் இரண்டும் அவசியமே. இதைப் புரிந்துகொள்வதன் மூலம்தான் அச்சத்தை
அகற்றமுடியும். இது அனுஷ்டான வேதாந்த ரகசியமாகும்.
வேறு முறையில் சொன்னால், வாழ்க்கையில் அச்சம் தவிர்ப்பது எவ்வாறு என்பதை
அறிஞர்கள் எவ்வாறு பேசுகிறார்கள்? அச்சமற்ற நிலைக்குப் பெயர் துணிவு. உயர்ந்த
நிலை பெறுவதற்கு அச்சத்தை விட்டொழிக்கவேண்டும். அச்சம் பிறந்தால் அழிவு
பிறக்கும். அச்சம் கொண்டால் சிந்தனைக்குச் சிக்கல் ஏற்படும். செயலுக்கும் தடை
ஏற்படும். துணிவும் உரிமையும் உற்சாகத்தை ஊட்டும்;மக்களோடு உறவை
அறிமுகப்படுத்தும். எண்ணத்திற்கு மெருகேற்றும். அச்சத்தின் அறிகுறி
தென்பட்டாலும் சிந்தனை தடைப் பட்டுவிடும். அழிவுக்கு அச்சாரம் வாங்குவதுதான்
அச்சத்துக்கு இடமளிப்பது.
”வேதனை நேரும் என்று வேதனைப்பட வைப்பது அச்சம்” என்கிறான் ஒரு அறிஞன். ”அடி
விழாத போது அலறுகிறோம்” என்று அச்சத்தினால் விளையும் ஆபத்தை எடுத்திக்
காட்டியிருக்கிறான் கத்தே என்ற அறிஞன். நாளை என்ன நேருமோ என்ற கவலையால் இன்றைய
இன்பமும் பறந்துபோகும்படி அச்சம் கொள்ளலாமா?
தூய இதயத்தில் அச்சம் தோன்றாது. பணிவு இல்லாத இதயத்தில் அழுக்கடையும்.
துணிவு இல்லாத இருண்ட இதயத்தில் தீமை தொற்றிக் கொள்ளும். அழுக்கைத் தின்று
கொழுக்கும் புழுவைப் போன்றது அச்சம்.”மரணம் நேரும் என்று அச்சம் காட்டி என்னை
எந்தத்தவறும் செய்யும்படி எவருமே செய்யமுடியாது! அப்படித் தவறு செய்வதைவிடச்
சாவதையே விரும்புகிறேன்” என்கிறார் சாக்ரட்டீஸ் என்னும் மேதை.
பேரிடர் துன்பம் தொல்லை நிறைந்த வாழ்வைத் துணிந்து வாழ்வதன் வழியாகத்தான்
அச்சம் என்ற பேயிடமிருந்து விடுதலை பெறும் வழி. நினைப்பிலும் துணிச்சல்,
செயலிலும் துணிச்சல் நிறைந்திருக்க வேண்டும். மனிதன் வாழ்க்கையில் முன்னேற
பணிவோடு இருக்கவேண்டும். உணர்ந்து நடக்கவேண்டும். ஒழுக்கம் குன்றாத துணிந்த
வாழ்க்கை வாழவேண்டும்” என்கிறார் பேராசிரியர் ஜே.பீ. எஸ். ஆல்டேன்.
நண்பர் ஒருவருடன் ம்கிழ்வுந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார் காந்தி
அடிகள். அவரைப் பிடிக்காத சிலருக்கு இந்த விஷயம் தெரியவந்தது. வரும்பாதையில்
மறைந்திருந்தவர்கள், ஒருகுறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும் சரமாரியாகக் கற்களை
மகிழ்வுந்தின் மீது வீசித் தாக்கினர்.
உடனே, காரை நிறுத்தச் சொல்லிய அடிகள் கீழே இறங்கினார். கல்லெறிந்தவர்கள்
மறைந்திருக்கும் இடத்துக்குச் சென்றார்.”உங்களுக்கு என் மீது கோபம் என்றால்,
என்னைத் தாக்குங்கள்., அந்த வாகனம் என்னுடைய நண்பருடையது. அதன் மீது கல்
எறிந்தால் நண்பருக்குபத் தான் பாதிப்பு. எனவே, இங்கேயே நிற்கிறேன். உங்கள்
கோபம் தீரும் வரை என் மீது கல் எறியுங்கள். அதன் பிறகு இந்த இடத்தைவிட்டுச்
செகிறேன்...” என்றார்.
காந்தியடிகளின் துணிச்சல், கல்லெறிந்தவர்களை யோசிக்கவைத்தது. அவரின்
வார்த்தைகளில் இருந்த நியாயத்தை உணர்ந்தவர்கள், தங்களின் செயலுக்காக வெட்கித்
தலை குனிந்தனர். அவர்களை மன்னித்து அறிவுரைகள் வழங்கிய அடிகள் தன்பயணத்தைத்
தொடர்ந்தார்.
நன்றி தர்மசக்கரம் மற்றும் உள்ளூர் இதழ்.
வெ.சுப்பிரமணியன் ஓம்.
ஓம் வெ.சுப்பிரமணியன் ஓம்.