ஓம்
கேள்வி: ஆன்மீகம் என்றால் என்ன? உடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
பதில்:

   - பக்தன் கடவுள் என்று சொல்வதை வேதாந்தி ஆத்மா என்று சொல்கிறான் கடவுள்
   தத்துவங்கள், மகிமை,அருள் அவரை அடைதல், ஆகிய விஷயங்கள் ஆத்மிகம் என்று சொல்லப்
   படுகிறது. மனித நாட்டங்களுள் கடவுள் நாட்டமே மேலானது. அறநெறி, சன்மார்க்கம்,
   ஒழுக்கம்,சீலம், தூய்மை ஆகிய அனைத்தும் அடங்கப் பெற்றது ஆத்மிகம்.
   இப்பிரபஞ்சத்தையும் அதில் உள்ள உயிர்கள் அனைத்தையும் இயக்குவது , வாழச்செய்வது
   ஆத்மா. ஒவ்வோர் உயிருக்கும் ஓர் ஆத்மா இல்லை. ஒரே ஆத்மாதான் இத்தனை ஜீவர்களாக
   விளங்கிக் கொண்டிருக்கிறது. ஒரே சூரியன் கோடானுகோடி நீர்நிலைகளில் தனித்தனி
   சூரியன்களாகத் தெரிவது போன்றது இது. நம் உடலுக்கும் நாம் அணிந்திருக்கும்
   சட்டைக்கும் உள்ள சம்பந்தம் எதுவோ, நீராவிக்கும் கப்பலுக்கும் , எஞ்சினுக்கும்
   டீஸலுக்கும் என்ன சம்பந்தமோ அந்த சம்பந்தம் தான் உடலுக்கும் ஆத்மாவுக்கும்.
   ஆத்மா இன்றி உடலொரு செயலும் செய்யமுடியாது.ஆத்மா தன் மகிமையை, சக்தியைக்
   காட்டுவதற்கு ஓர் உடல் வேண்டும் வேதத்தில் ஓர் அருமையான சுலோக வரிசை
   இருக்கிறது: மகன் நேசிக்கப்படுவது மகன் என்பதற்காக அன்று, ஆத்மாவே
   நேசிக்கப்படுகிறது. மனைவியை நேசிப்பது மனைவி என்பதற்காக அன்று, ஆத்மாவே
   நேசிக்கப்படுகிறது. இப்படி நாம் நேசிக்கும் அனைத்துப் பொருள்களையும்,
   உயிர்களையும் சொல்லியிருக்கிறார்கள். இவ்வுலக வாழ்க்கையைக் கடவுளை அடையப்
   பயன்படுத்தவேண்டும். நாம் அன்புவைக்கின்ற, தேடுகின்ற செல்வம், பதவி, புகழ்,
   செல்வாக்கு,அதிகாரம் அனைத்தையும் கடவுளை அடையப் பயன் படுத்த வேண்டும். நாம்
   அப்படிச் செய்தால் அது ஆத்மீக வாழ்க்கை எனப்படுகிறது. உலக இன்பம், உடல் இன்பம்,
   இந்திரிய சுகம் அனுபவிப்பதற்கென்று பயன் படுத்தினால் அது லௌகிக வாழ்க்கை எனப்
   படுகிறது. லௌகிக வாழ்க்கையினின்று படிப்படியாக அற வாழ்வுக்கு, சீலமான
   வாழ்வுக்கு வரவேண்டும். பிறகு, பாரமார்த்திக வாழ்வுக்கு உயர வேண்டும். இவ்வுலக
   வாழ்க்கையைக் கடவுளை அடையப் பயன்படுத்தவேண்டும்.

கேள்வி: திருமணம் ஆனபிறகு ஆன்மீகத்தில் ஈடுபடமுடியுமா?
பதில்:

   - உண்மை பேசுவது, அறவழியில் நடப்பது இதற்கு இல்லறம் தடையன்று. உலக
   வாழ்க்கையை நேர்மையாக, சீலமாகத்தானே வாழும்படி சொல்கிறார்கள். ஒரு மனைவி
   கற்புத் தெய்வமாவது திருமணமான பிறகு தானே? பிரம்மானந்தர், சிவானந்தர்  ஆகியோர்
   திருமணமானவர்கள். குடும்பச் சூழ்நிலையில் திருமணம் செய்துவிட்டார்கள்.
   இருவருடைய மனைவியர்களும்  சில வருடங்களில் இறந்துவிட்டார்கள். அவர்களை
   இராமகிருஷ்ணர் தம் அத்யந்த சீடர்களாக ஏற்றுக்கொண்டார்.இருவரும் ஆத்மிகத்தில்
   மிக உயர்ந்த நிலை அடைந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். திருவள்ளுவர் திருமணமானவர்.
   அவருடைய துணைவி வாசுகி அம்மையார் இறக்கும் தருவாயில் திருவள்ளுவரிடம், “நான்
   உணவு பரிமாறிய போதெல்லாம் குவளை ஒன்றில் தண்ணீரும் அதன் அருகே ஓர் ஊசியையும்
   வைக்கச் சொன்னீர்களே, அவை எதற்காக?” என்று கேட்டார். “பரிமாறும் போது
   அன்னம்சிந்தினால் அதை ஊசியால் எடுத்துத் தூய்மைப் படுத்தி உண்வில் சேர்த்துக்
   கொள்வதற்காகவே வைக்கச் சொன்னேன். நீ பரிமாறும் போது ஒரு நாளும் அன்னம்
   சிந்தவில்லை. உன் அடக்கம் அத்தகையது அம்மா! ”என்றார். இல்வாழ்க்கையில்
   இருந்துகொண்டே கடவுளை அடைந்த பெண்மணிகளும் பக்தர்களும் உண்டு.

நன்றி: தர்மச் சக்கரம்.
வெ.சுப்பிரமணியன் ஓம்.

Reply via email to