சென்னை : பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, அரசு விரைவு பஸ் கட்டணத்தின் விலை ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.150 வரை உயருகிறது. இது, தற்போதைய ஆம்னி பஸ் கட்டணத்துக்கு இணையானதாகும். புறநகர் பஸ் கட்டணம் மற்றும் புறநகர், அரசு விரைவு பஸ் கட்டணங்களின் விலையை முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளார். அதன்படி, புறநகர் பஸ்சுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 28 பைசாவில் இருந்து 42 பைசாவாக கட்டணம் உயர்த்தப்படுகிறது. புறநகர் விரைவு மற்றும் செமி டீலக்ஸ் ஒரு கிலோ மீட்டருக்கு 32 பைசாவில் இருந்து 56 பைசாவாக உயர்த்தப்படுகிறது.
சூப்பர் டீலக்ஸ் பஸ்சுக்கு 38 பைசாவில் இருந்து 60 பைசாவாகவும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 52 பைசாவில் இருந்து 70 பைசாவாகவும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, மாநகர பஸ்சில் குறைந்த கட்டணம் ரூ.2ல் இருந்து ரூ.3 ஆக உயருகிறது. இனிமேல் சாதாரண பஸ்களில் ஒவ்வொரு ஸ்டேஜுக்கும் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் 50 பைசாவில் இருந்து ரூ.1 உயரும் என்று கூறப்படுகிறது. அதேபோன்று சாதாரண பஸ்களில் அதிகபட்ச கட்டணம் ரூ.7 ஆக இருந்தது 12 ரூபாயாக உயருகிறது. அரசு விரைவு பஸ்களில் பஸ் கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.150 வரை உயருகிறது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சூப்பர் டீலக்ஸ் பஸ்சில் தற்போது ரூ.240 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கட்டணம் உயர்த்தப்பட்டதால், இனி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.370 வசூலிக்கப்படும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்ல அரசு விரைவு பஸ்சில் தற்போதைய கட்டணத்தைவிட ரூ.150 அதிகரிக்கும். புதிய கட்டணம் வசூலிக்கப்பட்டால் தற்போதைய ஆம்னி பஸ் கட்டணத்துக்கு இணையாக அரசு விரைவு பஸ் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பஸ்சில் செல்ல புறநகர் மற்றும் அரசு விரைவு பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்தாலும், எந்த தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் அறிவிக்கவில்லை. தங்கும் விடுதி வாடகை அதிகரிக்கும் * மின் கட்டண உயர்வால் வீடுகளுக்கான மின் கட்டணம் அதிகரிக்கும். * வாடகை வீடுகளில் குடியிருப்போர் அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். * ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிகளின் அறை வாடகை உயரும். * சலவை முதல் சினிமா வரை கட்டணம் உயரும். * திருமண மண்டபங்கள் தனியார் கூட்ட அரங்குகள் ஆகியவற்றில் வசூலிக்கப்படும் கட்டணம் பல மடங்கு உயரும். றீ சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் நடத்தி வரும் சிறிய தொழில் அதிபர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். இந்த தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் விலையும் மறைமுகமாக எகிறும். * சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் சிறிய அளவில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையான பாதிக்கப்படுவர். டீ, காபி விலை உயரும் * ஏழை முதல் கோடீஸ்வரன் வரை விரும்பி அருந்தும் டீ, காபி விலை கடுமையாக உயரும். *தயிர், மோர், வெண்ணெய், நெய், பால்கோவா, பால் பொருட்கள், பால் பவுடர் ஆகியவற்றின் விலை உயரும். * பாலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இனிப்பு பண்டங்களின் விலை உயரும். * ஆவின் பால் விலை உயர்த்தப்படுவதால், தனியார் நிறுவனங்களின் பாலும் விலை உயரும். * ஆவின் பாலை பயன்படுத்தி டீக்கடை நடத்துவோர் மற்றும் அது தொடர்பான தொழிலை செய்வோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். ஆம்னி, தனியார் பஸ் கட்டணம் உயரும் * பஸ் கட்டண உயர்வால் தனியார் பஸ் கட்டணமும் உயரும். * ஆம்னி பஸ் கட்டணங்களும் தாறுமாறாக உயரும். * மாநிலம் முழுவதும் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் பஸ் மூலம் வருகின்றன. இந்த பஸ் கட்டண உயர்வால் காய்கறிகளின் விலையும் உயர காரணமாக இருக்கும். * புறநகர் பகுதிகளில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் நகரங்களை நோக்கி தினக்கூலி வேலை செய்ய வரும் ஏழை, எளிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். * பஸ் பாஸ் வசதி இல்லாத மாணவர்களும் தினமும், அதிக கட்டணம் கொடுத்து பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. * அரசு பஸ்களில் குறிப்பிட்ட எடை அளவு அனுப்பப்படும் லக்கேஜ் கட்டணங்களும் அதிகரிக்கும். * அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இந்த விலை ஏற்றத்தை சந்திக்கும். ரயில்களில் கூட்டம் அலைமோதும் தமிழகம் முழுவதும் பஸ் கட்டணத்தை உயர்த்தி நேற்று அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் ரூ.50 முதல் ரூ.150 வரை கட்டணம் உயருகிறது. இதன் காரணமாக அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் இனி மக்கள் பயணம் செய்வார்களா? என்பது கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. அதாவது, சென்னையில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு ரயிலில் செல்ல ரூ.282 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாகர்கோவில் செல்ல ரூ.315 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், அனைத்து ரயில்களிலும் கட்டணங்கள் குறைவாக உள்ளது. இந்நிலையில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ரயில்களில் பயணத்தை தொடர அதிக வாய்ப்புள்ளது. ரயில்களில் கூட்டம் நிச்சயம் அதிகரிக்கும் என்பது எந்த விதத்திலும் சந்தேகம் இல்லை.
