*கோவில் நிலங்களை மீட்போம்; ஜெ.,வை காப்போம்: அ.தி.மு.க.,வினருக்கு
மடாதிபதிகள் வேண்டுகோள்*






*'பரிகாரத்திலேயே சிறந்தது, இறைவனுக்கே பரிகாரம் செய்வது தான். அதனால்,
ஜெயலலிதா விடுதலைக்காக, பரிகாரம் செய்யும் அ.தி.மு.க.,வினர், இறை சொத்துகளை
மீட்டெடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர் மடாதிபதிகள்.இது குறித்து,
மடாதிபதிகள் அளித்த பேட்டி:மதுரை ஆதீனம்:ஜெயலலிதா விடுதலைக்காக,
அ.தி.மு.க.,வினர் நாடு முழுவதும் மொட்டை போடுவது, தீச்சட்டி ஏந்துவது, பால்
காவடி எடுப்பது, அசைவம் சாப்பிடாமல் இருப்பது, சுத்த பத்தமாக இருப்பது என, பல
வகையான பரிகாரங்களை செய்கின்றனர்.இவை, இறைவனை நோக்கி செய்யப்படும் காரியங்கள்
தான்; அதில் தவறில்லை.இறைவனை நோக்கி, நாம் காரியங்களை செய்வது தான்,
பணிகளிலேயே புனிதப் பணி.இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு, சட்ட ரீதியாக சிக்கல்கள்
ஏற்பட்டிருக்கின்றன. அதற்காக, கட்சியினர் பல பரிகாரக் காரியங்களில்
ஈடுபட்டிருக்கின்றனர்.அதில் முக்கியமானது, உடனடியாக செய்ய வேண்டியது எது
என்றால், அது, இறை சொத்தை இறைவனிடமே மீட்டுக் கொண்டு வந்து சேர்ப்பது
தான்.தமிழகம் முழுவதும் பல ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, கோவில்
சொத்துகள் தனியாரால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன.இதனால், கோவில்களுக்கு,
பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இவற்றை நாம்
மீட்டெடுத்து, கோவில் நிர்வாகத்தில் சேர்ப்பது தான், இப்போதைய தலையாயப் பணியாக
இருக்க வேண்டும். கும்பகோணம் அருகில் உள்ளது திருப்புறம்பியம் கிராமம். அங்கே,
இருப்பது சாட்சிநாத திருக்கோவில். நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலம்.அங்கே,
பிரளயம் காத்த விநாயகர் சன்னிதி உள்ளது. இது உலகப் பிரசித்தி பெற்றது.
அங்கிருக்கும் விநாயகர் சிலை, அந்த காலத்தில், கிளிஞ்சல், கடல் நுரை கொண்டு
அமைக்கப்பட்டது. அதனால், விநாயகர் சதுர்த்தி அன்று, 125 லிட்டர் தேன் கொண்டு,
அந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்யும் போது, துளியளவு தேன் கூட, வெளியே வழிந்து
செல்லாது.ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி நாளில், உலகம் முழுவதிலும் இருந்து,
லட்சக்கணக்கான பக்தர்கள் அந்த கோவிலுக்கு வருவர்.இந்த கோவில், மதுரை
ஆதீனத்துக்கு சொந்தமானது. கிட்டதட்ட அந்த ஊரே, ஆதீனத்துக்கு சொந்தமானது
தான்.கோவிலுக்கு சொந்தமான இடத்தை பலர் மடக்கி வைத்துள்ளனர். இடத்துக்கான
வாடகையையும் செலுத்துவதில்லை; நிலங்களுக்கு குத்தகை தொகையையும்
செலுத்துவதில்லை. இப்படி, மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான பல கோவில்கள் தமிழகம்
முழுவதும் உள்ளன. எல்லா கோவில்களின் நிலையும் இப்படித் தான்.கோவில்
நிலங்களையும், இடங்களையும் முறையாக மீட்டெடுத்தால், அதுவே, மிகச் சிறந்த
இறைபணி.எனவே, ஜெயலலிதாவின் விடுதலைக்காக, பரிகாரம் செய்யும் அ.தி.மு.க.,வினர்
இந்த புனிதப் பணியையும் பரிகாரமாக எடுத்து செய்ய வேண்டும். இதற்கு பொது
மக்களும், அதிகாரிகளும் உறுதுணையாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர்
கூறினார்.ஸ்ரீபெரும்புதுார், எம்பார் ஜீயர் சுவாமிகள்:  ஐந்தாண்டுகள்
ஆட்சியில் இருப்பதாலேயே, ஆட்சியும், நாடும் நிரந்தரமாக நம்முடையது தான் என
நினைத்து செயல்படுகின்றனர். அது, சட்டமும் அல்ல; மரபும் அல்ல; நியதியும் அல்ல;
நடைமுறையும் அல்ல என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொண்டு காரியமாற்றினால்,
அவர்களுக்கு, பெரிய அளவில் சிக்கல்கள் ஏற்படுவதில்லை. ஆனால், உலகமே என்னுடையது
தான்; என் கரங்களுக்கு கீழே தான் எல்லாம் என நினைத்து செயல்படும்போது தான்,
சிக்கல்கள் ஏற்படுகின்றன. நமக்கு மேலே இறை சக்தி இருக்கிறது. இறைவன்
இருக்கிறான். அவனின்றி சிறு துளியும் அசைவதில்லை எனக் கருதி செயல்படும் போது,
வாழ்க்கை யாருக்கும் சிக்கல் இல்லாமல் செல்கிறது. ஜெயலலிதாவுக்கு
ஏற்பட்டிருக்கும் சிக்கலை உடைக்க, கட்சியினர் பல்வேறு வகைகளில் பரிகாரம்
செய்கின்றனர். அந்த பரிகாரத்தால், நல்ல பலன் கிடைக்குமா, கிடைக்காதா என,
கேட்டால், அறுதியிட்டு எதையும் சொல்ல முடியாது.ஆனால், இறைவனுடைய சொத்து,
இறைவனுக்குத் தான் என்று இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அதற்காக நாங்கள் பாடுபடுவோம்; அதுவே, ஜெயலலிதா விடுதலைக்காக நாங்கள் செய்யும்
பிரார்த்தனை, பரிகாரம் என்று அ.தி.மு.க.,வினர் சபதம் எடுத்து செயல்பட
ஆரம்பித்தால், அதுவே அவர்கள் செய்யும் புனிதப் பணி; பெரும் பணி.அதன் மூலம்,
ஆக்கிரமிப்பில் இருக்கும் இறைவனுடைய சொத்தில், காணி நிலம் இறைவனுக்கே
திரும்பினால்கூட, அதற்கான பலன், ஜெயலலிதாவை சென்று சேரும் என்பது உறுதி.இந்த
இறை பணியைக் கூட, ஜெயலலிதாவுக்கு சிக்கல் என்றதும் செய்து விட்டு, அவர்
விடுதலையானதும், அப்படியே விட்டுவிடக்கூடாது. ஜெயலலிதா ஜாமினில் விடுதலையான
பின்னரும், இறைவனுக்கான இந்த தொண்டு பணியில், அ.தி.மு.க.,வினர் தீவிரமாக
இறங்கி செயல்பட்டால், அந்த புண்ணியம் அவர்களை சேரும்.முதலில், எம்பார் ஜீயர்
சுவாமி மடத்துக்கு சொந்தமான நில புலன்களை, தனியாரிடம் இருந்து
அ.தி.மு.க.,வினர் மீட்டுக் கொடுக்க முன் வருகின்றனரா என்பதை, பார்க்க
வேண்டும்.அவர்களின் அந்த சீரிய முயற்சிக்காக, ரத்தினக் கம்பளம் விரித்து
காத்திருக்கிறேன்.*

*குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், மவுன மடம், திருச்சி
(தருமபுரம்): முன்னவனார் கோவில் பூசைமுத்திடின் மன்னர்க்கு தீங்குலேபாரி வளம்
குன்றும்கள்ளம் களவு மிகுந்திடும் என் அரும் நந்தி எனக்குஎடுத்துரைத்தானே -
இது திருமூலர் பாடல்.இறைவன் குடிகொண்டிருக்கும் கோவில்களில் முறையாக பூஜைகள்
நடந்தால், நாட்டில் மும்மாரி பொழியும்; நாடு செழிக்கும். மன்னன்
பிரச்னையில்லாமல் நாட்டை சீரும் சிறப்புமாக நடத்தி செல்வான்.அப்படி இல்லாமல்
போனால், நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு, பசியும், பட்டினியும் தாண்டவம்
ஆடும்.இதனால், நாட்டை வழி நடத்தி செல்லும் மன்னன், சரியான நிர்வாகம் செய்ய
முடியாமல், தடுமாறி சிக்கலுக்கு ஆளாவான்.இதற்காகத் தான், மன்னன் மட்டுமல்ல,
நாட்டு மக்களும் அந்த காலத்தில், இறைவனை நோக்கி, தங்கள் சொத்துகளை நிறைய தானம்
செய்தனர்.ஒவ்வொரு கோவிலுக்கும் மிகப் பெரிய சொத்துகள் ஏற்பட்டிருக்கின்றன
என்றால், அதற்கான அடிப்படையான காரணம் இது தான்.ஆனால், அந்த சொத்துகள் மூலம்,
கோவிலுக்கு வருமானம் வந்து, கோவில் நிர்வாகம் சிறப்பாக நடக்க வேண்டும்
என்பதற்காகவே, சொத்துகள் தனியாருக்கு வாடகைக்கும், குத்தகைக்கும்
விடப்பட்டன.அந்த சொத்துகளில் இருந்து முறையான வருமானம் எதுவும் வருவதில்லை.
இதுதான், தமிழகம் முழுவதும் கோவில் சொத்துகளின் நிலை இருக்கிறது. இப்படி
தனியார் கரங்களில் சிக்கி இருக்கும் நிலங்களை, மீட்க வேண்டும் என, தமிழகத்தில்
ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், கோவில்களின் நிர்வாகத் தரப்பில் இருந்து,
அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.தற்போது, ஜெயலலிதாவை ஜாமினில்
விடுவிக்க, அ.தி.மு.க.,வினர் நடத்தும் பல்வேறு வகையான பரிகாரங்களில், கோவில்
நிலங்களை தனியாரிடம் இருந்து மீட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்
திருப்பணியை, அரும் பணியாக செய்தனர்கள் என்றால், கண்டிப்பாக அதற்கான பலன்கள்
கிடைக்கும்.*




*ஸ்ரீலஸ்ரீ காசி வாசி சுவாமிகள், காசி மடத்து அதிபர் :இறைவன் சொத்து,
இறைவனுக்கே உரியது என்பதால் தான், தனியாரிடம் சிக்கிக் கொண்டிருக்கும் இறைவன்
சொத்துகளை மீட்டெடுக்க வேண்டும் என, காலம் காலமாக நாங்கள் வலியுறுத்திக்
கொண்டிருக்கிறோம். உதாரணத்துக்குஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்வேன். எங்கள்
மடத்துக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு விவசாயம் செய்யும் விவசாயிகள்,
மடத்துக்கு சேர வேண்டிய குத்தகைத் தொகையை முறையாக செலுத்தாமல்
இருந்தனர்.சொல்லி சொல்லி பார்த்தோம் கேட்கலை. உடனே, கோர்ட்டை அணுகி,
மடத்துக்கு சாதகமாக உத்தரவு பெற்றோம். அதில், கரும்பு விலையில், 25 சதவீதத்தை,
மடத்துக்கு செலுத்த வேண்டும் என, உத்தரவு வந்து, தொகையும் வந்தது.ஆனால், தொகை
கூடுதல் என்பதால், அதில் ஒரு பகுதியை திருப்பிக் கொடுக்க முன் வந்தோம். ஆனால்,
உரியவர்கள் அதை பெற்றுக் கொள்ள வராமல் இருக்கின்றனர். அப்படியென்றால் என்ன
அர்த்தம். இறைவன் என்னை கொடுக்க சொல்கிறான்; ஆனால், அதை பெற்றுக் கொள்ளும்
கொடுப்பினை அவர்களுக்கு இல்லை.அதன்படி என்ன தான், இறைவன் கொடுத்தாலும், அதை
பெற்றுக் கொள்ளும் பாக்கியம் பெறுபவர்களுக்கு வேண்டும்.அந்த வகையில்,
அ.தி.மு.க.,வினர், தங்கள் தலைவியின் விடுதலைக்காக, இறைவன் சொத்து இறைவனுக்கே
சென்று சேர வேண்டும் என, பரிகாரம் செய்ய முன் வந்தால் வரவேற்கத் தக்கது
தான்.அந்த பரிகாரங்கள் அவர்களுக்கு கட்டாயம் நன்மை ஏற்படுத்தக் கூடும்.இறைவன்
சொத்துகளை தனியார் ஆக்கிரமிப்பது, கையாண்டு விட்டு குத்தகை தராமல் இருப்பது
போன்ற காரியங்களை தடுக்க வேண்டும் என்று தான், 'சிவன் சொத்து குல நாசம்' என,
சொல்லி வைத்தனர்.இருந்தும், அதை பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல், கோவில்
சொத்துகளை கொள்ளையடிப்பவர்களை, அ.தி.மு.க.,வினர் பரிகாரத்துக்காகவாவது,
திருத்துவர் என்றால், சந்தோஷம் தான்.மற்றபடி, இறைவன் என்பவன் மிகப் பெரியவன்.
ஒருவன் தவறானவன் என்றால், அவன் திருந்த வாய்ப்பு வேண்டும் என்பதற்காக, அவனை
தவறு செய்ய விடுவார். பிறகு, அவனை திருத்துவார். இது உலக நியதி.இவ்வாறு, அவர்
கூறினார்.- நமது நிருபர் -*


*​K.Raman.​*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to