ஊருக்கே படியளப்பவனுக்கு அன்னாபிஷேகம்!
*சா**ம* வேதத்தில் ஒரு இடத்தில் ‘அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ' என்று
கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின்
வடிவில் இருப்பதாக அர்த்தம்! அதன் வெளிப்பாடே அன்னாபிஷேகம் முதலான தெய்வீக
விழாக்களும், பண்டிகைகளும்!
யாரும் பசித்திருக்கக் கூடாது, எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் எனும்
உயரிய நோக்கில், அன்னாபிஷேகமும், அதையடுத்து அன்னதானமும் செய்யப்படுகிறது.
‘இதுபோதும்’ என்று மனித மனம் திருப்தியுறும் இடமே உணவுதானே! அன்னம்தான் உலகில்
வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம்
பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம் என்பர்.
அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா அன்னாபிஷேகம். ஐப்பசி
மாதப் பௌர்ணமியன்று எல்லா சிவாலயங்களிலும், மாலை வேளையில் லிங்கத்திருமேனிக்கு
அன்னாபிஷேகம் செய்யப்படுகி்றது. பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன்
பூரண சோபையுடன் விளங்குகின்றான். அன்று அமிர்த கலையில் ஜொலிப்பான். அத்தகைய
நாளில், அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனாருக்கு அபிஷேகம்
செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லது!
சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி
அடைந்தால் பிரதி பிம்பமும் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம்பாலிக்கும்
அந்த அன்னபூரணியை தனது வாம பாகத்திலே கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம்
செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது சத்தியம்!
தில்லையிலே அனுதினமும் காலை 11 மணியளவில், ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம்
நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
எனவேதான் சிதம்பரத்தை அப்பர் பெருமான், ‘அன்னம் பாலிக்கும் தில்லை
சிற்றம்பலம்’ என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து
பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை
என்பது ஐதீகம்!
அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை
அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம்
செய்ததற்குச் சமம்! சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை
அபிஷேகம் செய்யலாம். அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு
அன்னத்தால் அபிஷேகம் செய்வது பூரணத்துவமான சிறப்பு பெற்றது!
சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம்
முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகிறது. சிவன் பரம்பொருள்.
அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும். இரண்டும் வேறல்ல. அபிஷேக
அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது
பேரருட்கருணையினால் குளிர்வது இயற்கைதானே!
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல்
அரிசியாகிறது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. எனவே அன்னமும்
பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி
முழுவதும் தழுவி, அவனிடம் அடைக்கலமாகிறது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள்
அடக்கமென்பது புலனாகிறது. எனவே அவனைச் சரணடைவதே முக்திக்கு வழி என்கிறார்கள்
பெரியோர்!
ஐப்பசி பெளர்ணமியில், மாலையில் அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு சிறப்பு
பூஜைகள் நடைபெறும். அதையடுத்து, அன்னம் கலைக்கப்பட்டு, பக்தர்களுக்குப்
பிரசாதமாக வழங்கப்படும். அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம்
இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்!
*- ஷைலஜா* ( பெங்களூரு ) - (நன்றி விகடன்)
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
*v **a n a k k a m** S
u b b u* [image: cid:74B3150B6A5D47C78D74886103F1C35E@om0cb1f5f8600f]
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.