*பிள்ளையார்** நோன்பு*
நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கென்று ஒரு தனிப்பட்ட நாகரிகமும் , பண்பாடும், பழக்க
வழக்கங்களும்,சடங்குகளும், நோன்புகளும் உண்டு. நகரத்தார்கள் கொண்டாடும்
நோன்புகளில் தலையாயது பிள்ளையார் நோன்பாகும். விநாயகப் பெருமானாகிய
பிள்ளையாருக்கும், நகரத்தார் சோழ நாட்டிலிருந்தபோதே மரகத விநாயகரை வழிபட்டு
வந்ததாகவும், அங்கிருந்து அவர்கள் பாண்டி நாட்டிற்குப் புறப்பட்டு வரும்போது
மரகத விநாயகரை எடுத்து வந்ததாகவும் அவர்களில் ஒரு பிரிவினர் கேரளாவிலிருந்து
கோட்டாற்றுப் பகுதிக்குச் சென்றவர்கள் மரகதவிநாயகரை வைத்து வழிபடுவதாகவும்
நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் வரலாற்று நூல்கள் கூறுகின்றன. நகரக்கோயில்களில்
ஒன்று பிள்ளையார் பட்டி என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். கணேசன், கற்பக
கணபதி என்ற பெயர்கள் நகரத்தார்களிற் பலருக்கு உண்டு. பிள்ளையார் கோயில்
இல்லாத நகரத்தார்களின் ஊர்கள் எதுவும் இல்லை. பிள்ளையாரை வணங்காமல்
நகரத்தார்கள் எந்தச் செயலிலும் ஈடுபடமாட்டார்கள். எதை எழுதத் தொடங்கினாலும்
பிள்ளையார் சுழி போட்ட பின்பே எழுதுவார்கள். இவ்வாறு பிள்ளையாரிடத்திற் கொண்ட
ஈடுபாட்டின் விளைவாக நகரத்தார்களிடம் மட்டும் பிள்ளையார் நோன்பு என்ற நோன்பு
இருந்துவருகிறது. பெண்களுக்குத் திருமணத்தில் சீர்கொடுக்கும்
வெள்ளிச்சாமன்களில் பிள்ளையாரும்,, பிள்ளையார் நோன்பு விளக்கும் , கட்டாயம்
உண்டு என்றால் நகரத்தார் மரபில் இந்நோன்புக்குரிய இடத்தை எளிதில் உணரலாம்.
பரம்பொருளாகிய சிவ பெருமானின் திருமகனார் பிள்ளை-விநாயகர் என்பது சைவ மரபு
. எனவே விநாயகரைப் பிள்ளையார் என்று வழங்கினர். சைவ மதத்தை வாழ வைக்கவந்த
ஞானசம்பந்தப் பெருமான் ‘‘பிடியதன் உருவுமை கொளமிகு கரியது: வடிகொடு தனதடி
வழிபடும் அவரிடர் கடிகணபதி’’ என விநாயகரைப் பாடியுள்ளார். சைவத் திருமுறைகளைத்
தொகுத்த நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரை வழிபடு
தெய்வமாகக்கொண்டு அவர்மீது திரு இரட்டை மணிமாலை பாடியுள்ளார். சொல்லப்போனால்
சைவத்திருமுறைகளைத் தொகுப்பதற்கு உதவிய பெருமை விநாயகப் பெருமானையே சாரும். இந்து
மதக் கடவுளருள் மிக்க முதன்மையும் , சிறப்பும் உடையவர் விநாயகர். விநாயகர்
என்ற சொல்லுக்கு தலைவர்கட்கெல்லாம் மேலான தலைவர் என்பது பொருள். சைவரும்,
வைணவரும், சமணரும்,சாக்தரும் , பௌத்தருமாகிய பல சமயத்தவர்களும் வணங்கும்
தெய்வம் பிள்ளையார். விநாயகர் வழியாடு இந்திய நாட்டில் மட்டுமின்றி இலங்கை ,
பர்மா, சயாம், ஜாவா, பாலி, சுமத்ரா, போர்னியோ, சம்பா, கம்போடியா ,இந்தோசைனா,,
சைனா, நேபாளம், திபேத், துருக்கிஸ்தானம், ஆப்கானிஸ்தானம், சூடான் , மங்கோலியா,
ஜப்பான், மெக்ஸிகோ, எகிப்து, கிரேக்கம், இத்தாலி முதலிய பல நாடுகளிற் பல
நூற்றாண்டுகளாகப் பரவியுள்ளது.
விநாயகருடைய திருவுருவம் பல தத்துவ நுட்பங்களைக் கொண்டதாகும். விநாயகரின்
திருவுருவத்தில் நாபி பிரமனையும் முகம் திருமாலையும் , முக்கண் சிவபெருமானையும்
, இடப்பக்கம் சக்தியையும் தும்பிக்கைபிரணவ மந்திரத்தினையும் உணர்த்தும்
மூன்றுகண்கள் ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று ஒளிப்பொருள்களையும்
குறிக்கும். வேண்டுவார் வேண்டுவதை விரைந்து தருவதற்காக அவர் நீண்ட
துதிக்கையைப் பெற்றுள்ளார். பக்தர்களின் குறையைக் கேட்க விரிந்த பரந்த
காதுகள் அவருக்குள்ளன. அவருடைய ஐந்து திருக்கரங்கள் படைத்தல் , காத்தல்,
அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்கள் செய்வோர் என்பதைப்
புலப்படுத்தும். திரு ஐந்தெழுத்தை உணர்த்துவதாகவும் உரைப்பர். அவர் தம்
கைகளில் ஒன்றில் தம் பொருட்டு மோதகம் வைத்திருக்கின்றார். மற்றொரு கையில்
தேவர்களைக் காப்பதற்காகத் தந்தம் தாங்கி இருக்கிறார். பிரிதொரு கையில்
தம்முடைய பெற்றோர்களை வழிபடுவதற்காக நீர்க்கலசம் தாங்கியிருக்கிறார். ஏனைய
இரண்டு கைகளில் உயிர்கள் ஆகிய நம்மை ஆணவ மலமாகிய யானை ஆட்கொள்ளாது தடுக்க
அங்குசமும், பாசமும் வைத்துள்ளார். அவர் ஒருபுறம் கொம்புடைமையால் ஆண்
எனவும் மற்றொரு
புறம் கொம்பில்லாமையால் பெண் எனவும் இவ்வாறு இரு திறமும் விரவி நிற்றலால்
அலியாகவும் விளங்குகிறார்;. விநாயகர் விலங்குத் தலையும் உடலும் தேவர்க்குரிய
பாதங்களும் பெற்றுத் திகழ்கிறார். பிள்ளையாரின் பேழை வயிறு எல்லா உலகங்களையும்
, உயிர்களையும் தன்னுள் அடக்கிக்கொண்ட அருளுடன் பாதுகாத்து வருவதைப்
புலப்படுத்துகின்றது. அவரது பெருச்சாளிவாகனம் அவரே எல்லாப் =பொருட்களுக்கும்
தாங்கும் நிலையிலும் தாங்கப் பெறும் நிலையிலும் இருக்கிறார் என்பதை
உணர்த்துகிறது. பெருச்சாளியைப் பிள்ளையார் வாகனமாகக் கொண்டது ஆணவமாகிய அசுரனை
அடக்கிய தன்மையையும் புலப்படுத்தும் . விநாயகர் சித்தி(நற்பெறு) புத்தி(
நல்லறிவு) என்னும் இருசக்திகளைத் தமக்கும் தேவிமாராகக் கொண்டு
இருக்கின்றார். விநாயகரை
வணங்குவதால் நமக்கு வாக்குண்டாம். நல்ல மனமுண்டாம் மாமலராளாகிய திருமகளின்
நோக்குண்டாம் மேனி நுடங்காது, அவர் திருவருள் திருவாக்கும்,செய்கருமம்
கைகூட்டும். செஞ்சொற் பெருவாக்கும் ,பீடும் பெருக்கும் , சித்தியும் ,
புத்தியும் , பத்தியும் தரும்,மெஞ்ஞானம் பாலிக்கும்.
பிள்ளையார் நோன்பு மார்கழி மாதத்தில் சஷ்டி திதியும், சதய நட்சத்திரமும்
, கூடுகின்ற நாளில் கொண்டாடப்படுகின்றது. ‘‘மாதங்களில் நான் மார்கழி’’ என்று
கண்ணன் கீதையில் கூறுவதால் மார்கழி மாதத்தின் பெருமை நன்கு விளங்கும்.
மார்கழி மாதத்தில் வரும் சஷ்டியும், சதயமும் கூடும் நாளில் விநாயகர் கஜமுகா
சூரனை வதம் செய்தார் என்று புராணங்கள் கூறும். இந்நன்னாளைத்தான் பிள்ளையார்
நோன்பு விழாவாக நகரத்தார்கள் கொண்டாடுகின்றார்கள். இந்த நோன்பு உண்மையில்
கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று தொடங்குகிறது. அன்றிலிருந்து
இருபத்தொரு நாட்கள் நோன்பு நோற்று 22ஆம் நாளான மார்கழி
மாதத்தில்,சஷ்டியும், சதயமும்
கூடும் நாளில் நிறைவேற்றப்படுகின்றது. இந்த 21 நாட்கள் நோன்பு நோற்றதன்
அறிகுறியாகப் பிள்ளையார் நோன்பு அன்று கோடி வேட்டியிலிருந்து 21 இழைகளை எடுத்துத்
திரிகள் அமைக்கின்றார்கள். 21 இதழ்கள்கொண்ட ஆவாரம் பூக்களைக் கொண்டு வழிபாடு
செய்கிறார்கள். பிள்ளையார் நோன்பு அன்று நகரத்தார்கள் குடும்பங்களில்
வகைவகையான சிற்றுண்டி செய்வார்கள். அச்சிற்றுண்டிகளுள் கருப்பட்டிப்
பணியாரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எள், நெல், சோளம் கம்பு, ஆகியவற்றைக்
கொண்டு தயாரிப்பார்கள். அப்பமொடு, அவல் பொரி கப்பிய கரிமுகன் விநாயகன்’ ஆதலின்
அவனுக்கு இவை இரண்டும் இன்றியமையாத பொருள்களாகக் கருதப்படுகின்றன. பாலை
நன்குக் காய்ச்சித் திரட்டுப் பாலிலிருந்தும் சிலர் இழைமா தயாரிப்பார்கள். பலர்
இதற்குப்பதிலாகக் கருப்பட்டியையும் அரிசி மாவையும் சேர்த்து இழைமா
தயாரிப்பார்கள். தெற்கு வட்டகையினர் இழைமா வேகவைத்து ஆலங்காய் தயாரித்து
அதில் இழை மா எடுப்பார்கள். ஆடவர்கள் காலையில் கோடி வேட்டியிலிருந்து 21 இழைகளை
எடுத்து இழைமாவில் வைப்பதற்குரிய திரிகளைத் தயாரிப்பார்கள். ஆவிரம்
பூக்களுடன் அருகம்புல் , நெற்கதிர், கண்ணுப்பூ ஆகியவற்றை எல்லாம் இணைத்து ஒரு
சிறு குச்சியில் செண்டு போலக் கட்டுவார்கள். இப்படி இரண்டு கோல்கள்
தயாரிப்பார்கள்.
மாலையில் நடுவீட்டில் மெழுகிக் , கோலம் இட்டுக் குத்து விளக்கு ஏற்றி
, பிள்ளையார்
சிலையை முன்னே வைத்துச் சிற்றுண்டிகள் எல்லாம் படைப்பார்கள். அரைத்த
மஞ்சளினாலோ, பசுவின் சாணத்தினாலோ பிள்ளையார் பிடித்து அருகம்புல் சார்த்தியும்
வைப்பார்கள். பிள்ளையார் உருவத்திற்கு அருகில் ஒரு சிறு நெய் விளக்கும் ஏற்றி
வைத்திருப்பார்கள். பிள்ளையார் உருவத்தின் இரு மருங்கிலும் ஆவிரம்
பூக்கோல்கள் இரண்டும் இருக்கும். குடும்பத் தலைவர் அல்லது பெரியவர்
பிள்ளையார் உருவத்திற்கு அருகில் தலைப்பா(கை)கட்டி கொண்டு, தடுக்கில் அமர்ந்து
பிள்ளையார்க்குரிய வேழ முகப் பாடலைப் பாடிச் சிற்றுண்டிகளை நிவேதனம் செய்து
வழிபட்டுவிட்டு இழை எடுக்கத் தொடங்குவார். இழைஎடுக்கும்போது மங்கலப்
பொருளாகிய சங்கு ஊதப்பெறும். முன்னரே தயாரித்து வைக்கப்பட்டு இருக்கும் இழை
மாவை நெய்யுடன் சேர்த்துப்பிள்ளையார் பிடிப்பது போல முக்கோண வடிவில் திரட்டி
எடுத்து வைப்பார்கள். முன்னே தயாரித்த திரியைச் சிறுதுண்டாக வெட்டிப்
பிள்ளையாருடன் அருகம் புல்லைச் சேர்ப்பது போல இந்த நூல்களைத் திரியாகப் பிடித்த
மாவுடன் சேர்ப்பார்கள். இதை எடுக்கும் பெரியவர் அதை நெய்யில் தோய்த்து
அருகே உள்ள நெய்விளக்கில் ஏற்றி முதலில் பிள்ளையாரை வணங்கி வழிபட்டுவிட்டு
இழையைப் பெரியவரிடம் ஒருவர் பின் ஒருவராக வாங்கிச் சுடருடன் வாயில் இட்டு
உட்கொள்வார்கள். இறுதியில்; குடும்பப் பெரியவர் தமக்குரிய இழையையும் எடுத்துக்
கொள்வார். கருவுயிர்த்த பெண்களுக்குத் தாய்க்கு ஒன்றும். சேய்க்கு ஒன்றுமாக
இரண்டு இழைகள் கொடுப்பது வழக்கம் . பிறகு அனைவரும் கூடிச் சிற்றுண்டி உண்டு
மகிழ்வார்கள்.
பிள்ளையார் நோன்பில் இந்த இழையை எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சிதான்
இன்றியமையாத நிகழ்ச்சியாகும். இழையில் உள்ள மாவடிவம் பிள்ளையார் வடிவத்தையும்
அதன் மேலுள்ள 21 இழைகள் கொண்ட திரி 21 நாள் நோன்பு நோற்றதின் அறிகுறியாகவும்
அதில் ஏற்றப்படும் சுடர் பேரின்பம் தரும் ஞானச் சுடராகவும் அமைகின்றன. சுடருடன்
உட்கொள்வதால் அகமும் புறமும் ஞான ஒளி பெறுகின்றது. ‘‘சோதியே சுடரே சூழொளி
விளக்கே’’, ”மதிப்பவர் மனமணி விளக்கே’’ ‘‘ஆதியும் அந்தமும் இல்லா
அரும்பெரும்சோதி’’ என்ற திருமுறை வாக்குகளுக்கு ஏற்ப இங்கு நெய் விளக்கு
இறைவனாகக் காட்சி அளிக்கிறது. அதிலிருந்து ஏற்றப்படும் இழை- சுடர்
அருட்பெரும்சோதியாகிய ஆண்டவனின் அருளுக்கோர் ஒரு சிறு அடையாளமாகும்.. நோன்பு
நோற்றதின் நோக்கம் இந்த இறையருளைப் பெறுவதற்கே என்ற கருத்தையும் இழை
வலியுறுத்துகிறது. இறை அருளைப் பெற்ற பின் பேரின்பம் தான் என்பது போல இழையுண்ட
பின்னர் எல்லோரும் உண்டு மகிழ்கின்றனர்.
பிள்ளையார் நோன்பினைத் தத்தம் ஊர்களில் குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து
வீடுகளில் கொண்டாடுகின்றார்கள். சில ஊர்களில் ஓரே வாரிசுதார்கள் பங்காளிகள்
சேர்ந்தும் செய்கின்றார்கள். பிள்ளையார் நோன்பு விழாவினை வீட்டில் சிறப்புடன்
செய்ய இயலாதவர்கள் வைரவன்பட்டி சென்று இங்கு நகரத்தார்கள் பொதுவாகச் செய்யும்
நோன்பில் கலந்து கொண்டு இழை எடுத்துக்கொள்ளலாம். தவிர்க்க முடியாத
காரணத்தால் அன்று பயணம் மேற்கொண்டால் வாழைப்பழத்திலாயினும் இழை எடுத்துக்
கொள்ளலாம். தொழில் செய்யும் ஊர்களில் நகரத்தார் அனைவரும் ஒரு பொது இடத்தில்
சேர்ந்தும் கொண்டாடுகின்றார்கள். இதனால் பிள்ளையார் நோன்புப் பெருவிழா
நகரத்தார்களிடத்தில் தெய்வத்திருவருளை மட்டும் அல்லாமல் ஒருங்கே
கூடிவாழும் ஒற்றுமை
உணர்வையும் வளர்ப்பதற்கு உதவுகின்றது. எனவே வெளியூரில் வாழும் நகரத்தார்கள்
ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் கூடிப் பிள்ளையார் நோன்பு செய்யும் பழக்கத்தைப்
பெருக்க வேண்டும். இதனால் ஓருரிலுள்ளவர்கள் அனைவரும் ஒருநாள் கலந்து
கூடவும், பேசவும்
வாய்ப்பு ஏற்படுகின்றது. தனித்தனியாக வீடுகளில் செய்யும் போது ஏற்படும்
செலவும் குறைகின்றது. சிக்கனம் மட்டுமின்றி ஒற்றுமைப் பண்பையும் ஒருங்கு
கூடும் உறவு மனப்பான்மையையும் வளர்க்க உதவுகின்றது. ஒன்று பட்டால் உண்டு
வாழ்வு.
--நெய்வேலி நகரத்தார் சங்கம்கொண்டாடிய பிள்ளையார் நோன்பு விழாவை ஒட்டி
வெளியிட்ட புத்தகத்திற்காக டாக்டர் சுப. திண்ணப்பன், சிங்கப்பூர் தேசிய
பல்கலைக்கழகம், சிங்கப்பூர் எழுதிய கட்டுரை
Click the following link to know more about Pillaiyar Nonbu in English
http://www.scribd.com/doc/94380901/Nagarathar-Pillayar-Nonbu-Detailed-Version
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
[image: ♛GM☺❀Jim S]
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
*v **a n a k k a m** S u b b u*
[image: Sunday]
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.