பூர்வீக நாகரிகங்கள்
*‘மனிதருள் மாணிக்கம்’ ஜவஹர்லால் நேரு அவர்கள், 1928 ஆம் ஆண்டு தம் மகள்
இந்திராவுக்கு எழுதிய கடிதங்களில் ஒன்று இது. இந்திராவுக்குப் பத்து முதல்
பதினைந்து வயதுக்குள் எழுதப்பட்ட கடிதங்களுள் ஒன்று.இந்திரா பின்னர் பாரதப்
பிரதமராக வளர்ந்த உயரத்திற்கு நேருவின் கடித அறிவும் ஒரு இடம் வகிக்கிறது.
நவம்பர் மாதம் நேரு பிறந்த மாதம். புதிய பாரதம் படைத்த மகத்தான தலைவருக்கு
காணிக்கை.*
அன்பான இந்திரா,
குழுத்தலைவர்களைப் பற்றியும் அரசர்களைப் பற்றியும் போதிய அளவு
பேசியாகிவிட்டது. இனி நாம் பூர்வீக காலத்து நாகரிகங்களைப் பற்றியும்
அக்காலத்தில் வசித்த ஜனங்களைப் பற்றியும் கவனிப்போம்.
இந்தப் பூர்வீக காலத்து ஜனங்களைப் பற்றி நமக்கு அதிகமாக ஒன்றும் தெரியாதிருந்த
போதிலும் பழைய கற்காலத்தவர்களைப் பற்றியும் (Paleolithic) புதிய
கற்காலத்தவர்களைப் பற்றியும் (Neolithic) நமக்குத் தெரிந்திருப்பதை விட
பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்பு கட்டின பெரிய இக்கட்டிடங்களையும்
கோவில்களையும் அரண்மனைகளையும் பார்க்கும்போது அக்காலத்து மக்கள்
எப்படிப்பட்டவர்கள், எப்படி வாழ்ந்தவர்கள் என்பதைப் பற்றி உத்தேசமாக நாம்
அறிந்துகொள்ள முடிகிறது.
முக்கியமாக, இப்பழைய கட்டிடங்களிலுள்ள சிலைகளும் சிற்ப வேலைப்பாடுகளும் இதற்கு
மிகவும் உதவியாக இருக்கின்றன. இச்சிலைகளினின்றும் பழைய காலத்து மனிதர்கள்
எம்மாதிரி ஆடை தரித்தார்கள் என்பது போன்ற பல விவரங்களும் சில சமயங்களில்
நமக்குத் தெரியவருகின்றன.
முதன் முதலில் மனிதர்கள் எங்கே குடியேறி நாகரிகத்தை வளர்த்தார்கள் என்பதை நாம்
தீர்மானமாகச் சொல்ல முடியாது. அட்லாண்டிக் மகா சமுத்திரத்தின் நடுவில்,
பண்டைக் காலத்தில் அட்லாண்டிஸ் என்ற ஒரு பெரிய தேசம் இருந்ததாகச்
சொல்லுகிறார்கள். இந்தத் தேசத்தில் ஜனங்கள் வசித்திருந்ததாகவும், அவர்கள்
அதிகம் நாகரிகம் அடைந்திருந்ததாகவும், ஒரு காலத்தில் அட்லாண்டிக் மகா
சமுத்திரம் பொங்கியதால் அத்தேசம் மூழ்கிப் போயிற்றென்றும் சொல்லுகிறார்கள்.
இதற்குச் சாட்சியம் ஒன்றும் இல்லை. எல்லாம் கதைகளே. ஆகவே நாம் இதை
விட்டுவிடலாம். கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அடுத்தபடியாக அமெரிக்காவில் பண்டைக் காலத்தில் பிரசித்தி பெற்ற நாகரிகங்கள்
இருந்து வந்ததாகச் சொல்கின்றனர். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்ததாகச்
சொல்கின்றனர். அது உனக்குத் தெரியும். இதனால் கொலம்பஸ் கண்டுபிடிப்பதன் முன்பு
அமெரிக்கா அவ்விடத்தில் இருக்கவில்லை என்று எண்ணக்கூடாது. அதாவது
கொலம்பஸ் போவதற்குப்
பல ஆண்டுகள் முன்னரே அங்கே ஜனங்கள் வசித்து வந்தனர். ஒருவாறு நாகரிகமும்
படைத்திருந்தனர். வட அமெரிக்காவில் மெக்ஸிகோ நாட்டில் உள்ள யுகடான் என்ற
ஊரிலும் தென் அமெரிக்காவிலுள்ள பெரூ என்னும் தேசத்திலும் சிதைந்துபோன பழைய
கட்டிடங்களைப் பார்க்கலாம். ஆகவே யுகடானிலும், பெரூவிலும் பல்லாண்டுகளுக்கு
முன்னர் நாகரிகம் படைத்த மக்கள் வசித்திருந்தனர் என்பது தெளிவு. இக்காலத்தில்
அவர்களைப் பற்றி அதிகமான விவரங்கள் நமக்கு கிடையாது. ஆகையால் இதற்குமேல்
விசேஷமாக நாம் ஒன்றும் சொல்ல இடமில்லாமல் இருக்கிறது. ஒரு சமயம் பின்னால் நாம்
அவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள நேரிடலாம்.
ஐரோப்பாவும் ஆசியாவும் சேர்ந்த யூரேஷியா என்ற கண்டத்திலும், மெஸபொடோமியா,
எகிப்து, க்ரீட், இந்தியா, சீனம் போன்ற தேசங்களிலும்தான் பண்டைக் காலத்தில்
நாகரிகம் முதன் முதலாக ஏற்பட்டது. எகிப்து தேசம் ஆப்பிரிக்காவில் இருந்தாலும்
அது ஐரோப்பாவையும் ஆசியாவையும் சேர்ந்தாற்போல் இருப்பதால், அது யூரேஷியாவைச்
சேர்ந்தது என்றே சொல்லலாம். எந்த இடத்தில் ஆகாரப் பொருள்களை எளிதில் பயிர்
செய்ய முடியுமோ அந்த இடத்தில் நாடோடிகளான பழைய ஜாதியினர் குடியேறினர்.
ஏனென்றால் அவர்கள் அந்தக் காலத்தில் வயல்களில் பயிர் செய்து விளைந்த
தானியங்களை சாப்பிட்டு வந்தார்கள். விவசாயத்திற்கு நீர்வளம் இன்றியமையாதது.
தண்ணீர் இல்லாவிடில் வயல்கள் வறண்டு போகும். அவற்றில் புல்லும் வளராது. பருவ
காலத்தில் போதிய அளவு மழை பெய்யாவிடில் இந்தியாவில் தானியங்களைப் பயிர் செய்ய
முடியாமல் போகிறது.
அதனால் நாடெங்கும் பஞ்சம் ஏற்படுகிறது. உண்ண உணவின்றி ஏழைகள் பட்டினி
கிடக்கின்றனர். ஆகையால் தண்ணீர் வசதி மிகவும் அவசியம். ஆகவே எந்த இடத்தில்
ஏராளமான தண்ணீர் வசதி இருந்ததோ, அந்த இடத்தில் பண்டைக் காலத்தவர்கள்
குடியேறியிருக்க வேண்டும். இது முற்றும் உண்மை என்பது இப்போது நமக்குத்
தெரிகிறது.
மக்கள் மெஸபொடோமியாவில் டைக்ரீஸ், யூப்ரடீஸ் என்ற நதிகளுக்கிடையில் உள்ள
செழிப்பான இடத்திலும், எகிப்து தேசத்தில் நீல நதிக் கரையிலும்
குடியேறினார்கள். இந்தியாவில் கங்கை, யமுனை நதிக்கரைகளில் அவர்கள் குடியேறிய
இடங்களில் பெரிய பெரிய நகரங்கள் உண்டாயின. அவர்களுக்கு உணவையும் செல்வத்தையும்
அளித்த நீர்வளம் மிகுந்த நதிகளைப் புனிதமாக அவர்கள் கருதினார்கள்.
அவர்கள் வாழ்க்கைக்கு நீர் அத்தணை இன்றியமையாததாயிருந்தது. எகிப்து தேசத்தில்
நீல நதியை அவர்கள், ‘எங்களப்பன் நீலன்’ என்று வணங்கி வந்தார்கள்.
இந்தியாவிலும் கங்கையை வணங்கி வந்தார்கள். இன்றைக்கும் ஜனங்கள் அதை ஒரு
புண்ணிய நதியெனக் கருதுகின்றனர். அதை ‘கங்கம்மா’ என்று சொல்கிறார்கள்.
யாத்ரீகர்கள் ‘கங்காமாயீ கீ ஜய்’ என்று முழங்குவதை நீ கேட்டிருக்கலாம்.
ஜனங்கள் நதிகளை இங்ஙனம் வணங்குவதற்கு நதிகளினால் அவர்களுக்கு உண்டாகும் பல்வகை
நன்மைகளே காரணம். இந்நதிகள் அவர்களுக்குத் தண்ணீரைக் கொடுப்பதல்லாமல்
வயல்களுக்குச் செழிப்பைத் தரும் வண்டல்களையும் மணலையும் வழங்குகின்றன. ஆற்றின்
தண்ணீர் வசதியாலும் மணல், வண்டல்களாலும் நிலம் ஏராளமான உணவைக் கொடுத்தது.
இதனால்தான் நதியை அப்பன் என்றும், அம்மை என்றும் சொல்கிறார்கள் என்பதை ஜனங்கள்
மறந்து விடுகின்றனர். நீல நதியையும் கங்கை நதியையும் ஜனங்கள் புனிதமானவையென்று
கருதி வணங்குவதற்குக் காரணம் அவை தண்ணீரும் உணவும் கொடுப்பதுதான் என்று நாம்
நினைக்க வேண்டும்.
*இப்படிக்கு,அன்பு அப்பாநன்றி : நேருவின் கடிதங்கள் (சி.ரா. வெங்கட்ராமன்)*
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
*v **a n a k k a m** S u b b u*
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.