*விசாகத்திருவிழா நடத்துவது ஏன்?*

வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில்
சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் "வைசாக' மாதம் என்றிருந்து பின்னாளில்
"வைகாசி' என்றானது. இந்த மாத பவுர்ணமி நாளை "வைகாசி விசாகம்' என்று
குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான்  அவதாரம் செய்ததாக
சாஸ்திரங்கள் கூறுகின்றன.

திருமுருகன் உலகமுய்யத் தோன்றியதால் திருமுருகன் வீற்றிருக்கின்ற
கோயில்களிலும், அறுபடை வீடுகளிலும் விசாக வழிபாடு சிறப்பாக நடைபெறும்.

"வி' என்றால் "பட்சி' (மயில்), "சாகன்' என்றால் "சஞ்சரிப்பவன்' மயில் மீது
வலம் வரும் இறைவன் என்பதால் "விசாகன்' என்றும் வழங்குவர். முருகனுடைய வாகனமாக
சூரபத்மனே வீற்றிருக்கிறான். பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை
முருகப்பெருமானிடத்தில் காணலாம்.

புத்தர் அவதரித்ததும் வைகாசி விசாகத்தில் தான். புத்த பூர்ணிமா என பவுத்தர்
இதனைக் கொண்டாடுவர்.

இந்நன்னாளில் நம்மாழ்வார் அவதரித்தருளினார்.

தெற்கு திசையின் திக்பாலகரான யமதர்ம ராஜனுக்குரியது வைகாசி விசாகமே. வைகாசி
விசாகமும் தேய்பிறை கிருஷ்ணபட்ச சதுர்த்தியும் செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து
விட்டால் யமன் இந்நாளை பலமடங்கு உகப்பாக புராணங்கள் கூறும்.

குருவின் நட்சத்திரம் விசாகம்.

இட்சுவாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாகக் கருதப்பட்டதால் விசாகம் அமைந்துள்ள
கோள் நிலையில் ராம-ராவண யுத்தம் நடந்ததாக ஸ்ரீமத் ராமாயணம் கூறும்.

அகோபிலம் எனப்படும் சிம்மாலத்து நரசிம்ம மூர்த்திக்கு வருட முழுதும்
சாத்தப்பட்டிருக்கும் சந்தனக் காப்பினை இந்நாளிலேயே களைவார்கள்.

வைகாசி விசாகத்திலே காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு கருட சேவை நடைபெறும்.

குடந்தை ஆதிகும்பேசுவரர் திருக்கல்யாணம் வைகாசி விசாகத்திலே நடைபெறும்.

திருவேட்களத்தில் அர்ச்சுனனுக்கு பரமன் பாசுபதாஸ்திரம் வழங்கிய விழா கொண்டாடப்
பெறுவது வைகாசி விசாகத்தன்று தான். கன்னியாகுமரி அம்மனுக்கு ஆராட்டு விழா
வைகாசி விசாகத்திலே தான்.

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் வைகாசி விசாகத்திலே சித்தி அடைந்ததால் அவரது
குருபூஜை நடக்கிறது.

வைகாசி விசாகத்தில் விரதமிருந்து முருகனை தரிசித்தால் சகல நன்மைகளும்
கிடைக்கும். வேலுண்டு வினையில்லை என்பார்கள். வேலால் தன் பக்தர்களின் வினைகளை
அறுப்பவன்.

விசாக திருநாளில் முருகப்பெருமானுக்கு விரதமிரந்து மனமுருகி வேண்டிக் கொண்டால்
வேண்டிய வரம் கிடைக்கும் என்பது உறுதி. குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம்
அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று
வேண்டிக் கொண்டால் அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை
தவழுவது உறுதி.

திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக் கொண்டால்
விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை ஆண்களும்
இருக்கலாம்.

பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து ஆறுமுகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்வர்.

*வைகாசி விசாக வழிபாடு:*


*** மயில் மீது வலம் வருபவனே! வேதத்தின் உட்பொருளாய் திகழ்பவனே! கண்டவர் மனம்
கவரும் அழகனே! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமே! சிவபெருமானின் புதல்வனே!
முருகப்பெருமானே! உன்னைச் சரணம்அடைகிறோம்.

* "மலையேறி வந்து என்னைத் தரிசித்தால் வாழ்வின் உச்சியை அடைந்து மகிழ்வாய்'
என்பதை எடுத்துக் காட்டுவதற்காக, குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்டவனே!
ஆறுமுகப்பெருமானே! எப்போதும் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தருள வேண்டும்.

* பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! ஒளிமயமான ஸ்வர்ண மஞ்சத்தில்
அமர்ந்து, ஆயிரம் சூரியன்கள் ஒன்று சேர்ந்தாற்போல் அழகுற காட்சி தருபவனே!
தேவர்களுக்கு வாழ்வு அளித்த தெய்வமே! கார்த்திகேயனே! உன்னை எப்போதும் எங்கள்
மனதில் நினைத்துக் கொண்டிருப்போம்.

* வேடராஜனின் குமரியான வள்ளிநாயகியை மணந்தவனே! இந்திரன் மகள் தெய்வானையின்
துணைவனே! தாரகா
சுரனை வதம் செய்த வீரனே! தாமரை போன்ற உன் ஆறுமுகங்களும் புன்சிரிப்பால்
மலர்ந்துள்ளன. கண்கள் கருணையைப் பொழிந்து கொண்டிருக்கின்றன. சிவகுமரனே! உன்
திருவடியைச் சரணடைந்து விட்டோம்.

* இளங்குமரனே! சிவபெருமானுக்கு குருவாய் வந்த குகனே! கந்தப்பெருமானே!
சேனாதிபதியே! வெற்றி வேலவனே! மயில்வாகனனே! பக்தர்களின் துயர் தீர்ப்பவனே!
எங்கள் தலைவனே! அசுரனை அழித்தவனே! எப்போதும் எங்களைக் காத்தருள வேண்டும்.

* கந்தப்பெருமானே! எங்கள் கண்கள் உன் திருவடிகளை மட்டுமே காணட்டும். காதுகள்
உன் திருப்புகழை மட்டும் விருப்பத்தோடு கேட்டு மகிழட்டும். நாக்கு உன்
பெருமையை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கட்டும். உனக்கு தொண்டு செய்து வாழ்வதே
எங்கள் பணியாக அமையட்டும்.

* முருகா! தாயும் நீயே! தந்தையும் நீயே! உன் பிள்ளைகளான எங்கள் பிழைகளைப்
பொறுத்தருள்வாயாக. உன்னையன்றி வேறொருவரையும் நாங்கள் அறிந்ததில்லை.
பாமரருக்கும் அருள்புரியும் பரம்பொருளே! நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வவளம்
ஆகிய அனைத்து பேறுகளையும் தந்தருள்வாயாக.

வைகாசி விசாகத்திருநாளான இன்று குடும்பத்தினர் அனைவரும் கூட்டாக அமர்ந்து இந்த
பிரார்த்தனையைச் செய்து, குமரன் அருள் பெறுங்கள்.

    <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



  *v **a n a k k a m**  S u b b u*
*  .*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to