திரு.முகில் எழுதிய சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் என்கிற புத்தகத்தைப்
படிக்கும் அரிய வாய்ப்பு என் நண்பர் திரு.சித்ரநாத்தால் கிடைத்தது.


பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு புத்தகத்தையும் ஒரே மூச்சில் படித்து
முடித்தேன்.  படித்த பிறகும் என் சிந்தனை சந்திரபாபு எனும் மிகப் பெரும்
(அரும்) கலைஞனைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.  யான் பெற்ற இன்பம்
பெறுக இவ் வையகம் என்பதற்கிணங்க அப் புத்தகம் குறித்த சில தகவல்களைப்
பரிமாரிக் கொள்ள விழைந்ததன் விளைவே இந்த மின் அஞ்சல்.


நாம் சிலவற்றைப் பார்க்க முடியும் ஆனால் அதன் தாக்கத்தை உணர முடியாது என்பதை
நீதி மன்றம் என்றுகூடப் பாராமல் நீதிபதியின் முன்  ஒரு தீக்குச்சியை எடுத்து
உரசிப் பற்ற வைத்து அந்த ஜூவாலையில் உள்ளங்கையை வைத்து  நான் செய்ததைப்
பார்த்தீர்கள் ஆனால் அந்தச் சூட்டைத் தங்களால் உணர முடிந்ததா என்று
தைரியத்துடன் விவாதித்த சந்திர பாபுவை முதல் அத்தியாயத்தில் தரிசிக்கிறோம்.


சுதந்தர வீரன் பத்திரிக்கையின் ஆசிரியரும், சுதந்தரப் போராட்டத் தலைவர்களுள்
ஒருவரான ரோட்ரிக்ஸ், ரோஸலின் எனும் மீனவர் குடும்பத் தம்பதியர்களின் 13
பிள்ளைகளில் 6 ஆவது பிள்ளையாகப் பிறந்து படிப்பில் நாட்டமில்லாமல் ஆடிப்
பாடிக் குறும்புகள் செய்து  வந்த சந்திரபாபுவின் முழுப் பெயர் *ஜோசப் பிச்சை
பனிமயதாசன் ஃபெர்னாண்டோ*.  பாபு என எல்லோரும் செல்லமாக அழைத்து வந்ததாலும்
சந்திர குலத்தைச் சார்ந்தவர் என்பதாலும் சந்திரபாபு எனப் பெயரை மாற்றிக்
கொண்டார்.1939ல் உப்புச் சத்தியாக்கிரகம் செய்ததால் சிறை சென்றார்
ரோட்ரிக்ஸ்.  11 வயது சந்திரபாபுவை அப்போது வளர்த்தவர் பெருந்தலைவர்
காமராஜர்.


இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டார் ரோட்ரிக்ஸ்.  அதனால் சந்திரபாபு இலங்கை
சென்று கொழும்பு செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் சீனியர் கேம்பிரிட்ஜ்
வரை படித்தார்.  1942ல் இரண்டாம் உலகப் போரின் கோரப்பிடியில் கொழும்பு
சிக்கியது. ஜப்பான் கொழும்பில் குண்டு போட்டது.  ஹட்டன் எனும் நகருக்கு
சந்திரபாபுவின் குடும்பத்தார் இடம் பெயர்ந்தனர்.  அங்கு நடத்திய கடையில்
ஏற்பட்ட நஷ்டம் சந்திரபாபு குடும்பத்தை 1943 ஆம் ஆண்டு இந்தியாவிற்குத்
திரும்பி வரவேண்டிய சூழலை உருவாக்கியது.  சொந்த ஊரான தூத்துக்குடி செல்ல
விரும்பாமல் சென்னையைத் தஞ்சமடைந்தனர்.


யாரிடம் பேசுகிறோம் என்ற எண்ணம் இல்லாமல் தனது கருத்தைத் தயங்காமல் அப்படியே
கூறுவது சந்திரபாபுவின் பிறவிக்குணம். இக்குணத்தால் வாழ்க்கையின் இறுதி வரை
அவர் பல்வேறு துன்பங்களைச் சந்திக்க நேர்ந்தது.  பல பெரிய மனிதர்கள் (? ? ) என
மக்களால்  போற்றப்பெற்றவர்கள் அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்து துன்பத்தில்
துவண்ட போதும் அந்தக் கலைஞன் தன் இயல்பை கடைசி வரை மாற்றிக் கொள்ள வில்லை.


சினிமா சினிமா என்ற ஆசையில் உழன்று வேறு வேலைக்குப் போகாமல் சுற்றிக்
கொண்டிருந்ததால் வீட்டில் தரித்திரம் என்ற பெயர் வந்தது.  வீட்டைவிட்டு
வெளியேறி பிளாட்பாரங்களில் படுத்துத் தூங்கும் அவல நிலை வந்தது.  1944-50க்கு
இடைப்பட்ட காலங்களில் இந்த உயர்ந்த கலைஞன் பசி நிரம்பிய வயிறோடு அலைந்தான்.
 நண்பர்கள் தயவில் சாப்பிட்டான்.  ஓரிரு நாட்கள் தண்ணீரை மட்டும் குடித்து
உயிர் வாழ வேண்டிய கட்டாயம் கூட நேர்ந்ததுண்டு. பட்டினி கிடந்தபோதும்
இலட்சியத்தை மறக்கவில்லை.  வேடிக்கை பேச்சும் ஆட்டமும் ஒரு போதும்
குறைந்ததில்லை. மிகுந்த சிரமங்களுக்கிடையே 1947ல் பி.எஸ் ராமையா அவர்களின் தன
அமரவாவதி என்ற படத்தில் ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தது.


அவரிடம் இருந்த இரண்டு உடுப்புகளை விதவிதமாகவும், சுத்தமாகவும்,
மடிப்புக்கலையாமல் அணிந்து கால் நடையாக வெகு தூரம் நடந்து வாய்ப்புத் தேடி
அலைந்து அல்லலுற்று கேலியான கிண்டலான பதில்களைக் கேட்டு மனம் நொந்தாலும்
சினிமாவில் நடிக்க வேண்டும் பெயர் பெற வேண்டும் பெரிய நடிகனாக வேண்டும் என்ற
இலக்கு ஒரு போதும் மாறவில்லை.


1951லிருந்து வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது,  அடுத்தடுத்து திரைப்பட
வாய்ப்புகள் நடிப்பதற்கும். பாடுவதற்கும் வந்து அவரைப் புகழின் உச்சிக்குக்
கொண்டு சென்றது.  வசதிகள் வந்தது.  ஆனால் கலைக்காக வாழ்ந்ததால் அவர்
யாருக்கும் பணிந்து போகவில்லை.  தவறு கண்ட இடத்தில் தட்டிக் கேட்காமல்
இருந்ததும் இல்லை.  மனதுக்குப் பிடிக்கவில்லை என்றால் நடிக்க மறுத்து
ஒதுங்கவும் தயங்குவதில்லை.  உதாரணம் ஹிந்திப்படமான மிஸ்டர் சம்பத்தில் நடனமாட
மறுத்தது.  இது அவருக்குத் திமிர் பிடித்தவன் என்ற பெயரை வாங்கித் தந்தது.


29.05.1958ல் ஷீலா என்ற அழகான பெண்ணை மணந்தார்.  ஆனால் ஷீலா தனக்குத்
திருமணத்திற்கு முன் சில கயவர்களால் நேர்ந்த அவலங்களால் மனம் வெதும்பி சந்திர
பாபுவுக்குத் துரோகம் செய்யக் கூடாது என்று பிரிந்து வாழ முடிவு செய்து
இலண்டனுக்குப் புறப்பட்டுப் போனார்.  அங்கு ஒரு மருத்துவரை மணந்து ஏழெட்டுக்
குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சுகமாக வாழ்ந்தார்.  ஆனால் இந்த மண முறிவு
சந்திர பாபுவை மிகப் பெரிய குடிகாரர் ஆக்கியது. ஆனால் உலகம் சந்திர பாபு
குடிகாரன், கோமாளி, சந்தேகப் பேர்வழி அழகான பெண்ணுடன் வாழத் தெரியாமல்
துரத்தி விட்டான் என்று கை கொட்டி சிரித்தது.  கட்டியவளுடன் ஒழுங்காய் வாழ
வக்கற்றவன் எப்படி ஒழுங்காய் நடிப்பான் என்று எண்ணி பலர் இவருக்கு சினிமா
வாய்ப்புகள் தரத் தயங்கினர்.

மேற்கத்திய பாணியில் பாடும் சந்திர பாபு கவலை இல்லாத மனிதன் படத்தில்
பிறக்கும் போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான் ஒரு நாளேனும்
கவலையில்லாமல் சிரிக்க மறந்தான் மானிடனே என்ற தத்துவப் பாடலைத் தத்ரூபமாகப்
பாடி நற்பெயர் எடுத்தார்.


1961 ஆம் ஆண்டு மாடி வீட்டு ஏழை என்ற படத்திற்கான கதை, வசனம் எழுதி இயக்க
முனைந்தார்.  காலம் செய்த கோலம் அவர் பங்கு தாரராகவும் கையொப்பமிட்டு மக்கள்
திலகம் எம். ஜி. ஆர். அவர்களை வைத்துப் படம் எடுக்க ஆரம்பித்தார்.  எம.ஜி.
ஆருக்கும் சந்திர பாபுவுக்கும் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சனைகளால்
சந்திரபாபுவின் பெயர் கெட்டுப் போனதுடன் அவரைப் பெரும் கடனாளியாக்கியது.
 அவரது சொத்துக்களை விற்க வேண்டிய நிலை வந்தது.  நொடித்துப் போனான் என்று
தெரிந்ததும் பலரும் அவரை ஒதுக்க ஆரம்பித்தனர்.  நடிக்கும் வாய்ப்பும்
அருகியது.  குடி அதிகமானது.  அதனுடன் சந்திரபாபு தேடிப் போக வில்லை என்றாலும்
சில பெண்கள்அவரைத் தேடிப் போய் அவர்களுடன் அவரது கூடா நட்பு அவரை சிதைத்து
சின்னா பின்னமாக்கியது.


தட்டுங்கள் திறக்கப்படும் என்ற அற்புமான படத்துக்கு கதை எழுதி இயக்கினார்
சந்திரபாபு. மிகவும் ரிஸ்கான காட்சிகளிலெல்லாம் அதிக ரிஸ்க் எடுத்து
நடித்திருந்த போதும்  படம் தோல்வியைத்தழுவியது.  படத்தின் நீளம் கொஞ்சம்
அதிகமாக இருந்ததால் சர்சார்ஜ் கட்ட வேண்டிவரும் என்று தயாரிப்பாளர்கள்,
சந்திரபாபு உழைத்து தன் திறமையைக் கொட்டி எடுத்த காட்சிகளை அவருக்குத்
தெரியாமலேயே குறைத்தனர்.  கிளைமாக்ஸ் காட்சி பெருமளவு பாதிக்கப் பட்டது.
 விநியோகஸ்தர்களிடம் நல்ல விலைக்கு விற்று விட்டனர்.


இந்தப் படத்தின் தோல்வியால் பெரும் இழப்புகளைச் சந்தித்தார் சந்திரபாபு.
 ஏற்கெனவே படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார் சந்திர பாபு என்ற பெயர்
இருக்க அவர் சொந்தப் படங்களில் மட்டுமே நடிப்பார் மற்றபடங்களில் நடிக்க
மாட்டார் என்ற வதந்தி பரவியதால் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போக பழையபடி
ஒருவேளைச் சோற்றுக்கே தடுமாறும் நிலை வந்து விட்டது.

பத்து ரூபாய் கடன் கேட்டால் கூடக் கொடுக்க ஆளில்லை.  வீட்டில் மின்சாரக்
கட்டணம் கட்டாமல் மின் விசை துண்டிக்கப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து
பட்டினியாகக் கிடக்கும் அவல நிலை வந்தது.


மிகப் பெரிய கலைஞன், தனக்கென்று ஒரு நடன அசைவை உருவாக்கி மேற்கத்திய நடனத்தை
மிக அழகாக ஆடி, தனது தனித்த குரலாலும் ஆங்கிலம் கலந்த நாட்டுப்புறப் பாடல்
ஓசைுயடன் கூடிய பாடல்களைப் பாடி அவை இன்றளவும் உலகம் முழுதும் உள்ள
இரசிகர்களால் மிகவும் விரும்பிக் கேட்கும் வண்ணம் எல்லோருடைய மனத்திலும்
இடம்பிடித்தவன் ஊருடன் ஒத்து வாழத் தெரியாமல் திரையில் மட்டுமல்ல
வாழ்க்கையிலும் நடித்தால் தான் இங்கு உயரலாம் என்பது அறியாமல்
குடித்துக்குடித்து உடல் நிலை கெட்டு முன்போல் நடனமாட இயலாமல் உடல்
வலுவிழந்து,  மார்ச் மாதம் 8 ஆம் தேதி 1974ல் இறைவனடி சேர்ந்தார்.


ஹாலிவுட் நடிகனாகத் திகழ்ந்திருந்தால் உலகம் அவரது நடிப்பைத் தலையில் வைத்துக்
கொண்டாடியிருக்கும்.  ஒரு உண்மைக் கலைஞனை உருக்குலைத்திருக்காது.  மனதில்
பட்டதை அப்படியே பேசி,  ரசித்ததை உடனே பாராட்டி, சரியாக இல்லை என்றால் அவர்
எவ்வளவு பெரியவர் என்றாலும் கவலைப்படாமல் விமரிசித்து, புகழின் உச்சியில்
இருந்த போதும் வறுமைப்பிடியில் சிக்கிச் சிதைந்த போதும் தனது இலக்கான நல்ல
உயரிய நடிப்பை வெளிப்படுத்தத் தயங்காமல், முழு ஈடுபாடுடன் திகழ்ந்த அந்த அரிய
கலைஞனது இயல்பு தமிழ் சினிமா உலகத்தினரால் ஜீரணிக்க இயலாததால்
புறக்கணிக்கப்பட்டு புண்படுத்தப்பட்டது.


மிகப் பெரிய போராட்டத்துக்குப் பின்பே திரையுலக வாய்ப்பைப் பெற்று மிகக்
குறுகிய காலத்திலேயே அளப் பெரிய சாதனைகள் செய்து மறைந்தவர் சந்திரபாபு.


தன் சொந்த வாழ்வின் தீரா சோகங்களை தனக்குள் புதைத்துக் கொண்டு, திரை
முன்னிருக்கும் மக்களை மகிழ வைத்த மகத்தான நடிகர்.


அதிரடியான கருத்துக்களை துணிச்சலுடன் வெளியிட்டு, பலரின் முகத் திரைகளைக்
கிழித்தெரிந்த தைரியசாலி.


சத்தியத்தை மதித்து சத்தியம் பேசி உண்மையாக வாழ்ந்தாலும் தேவையற்ற கெட்ட
பழக்கங்களால் கேட்டைத் தேடிக் கொண்டவர்.

வசதியும் வறுமையும் மாறி மாறி வர கொண்ட கொள்கையிலும், இலக்கிலும் மாற்றுக்
கருத்துக்களை புகுத்திக் கொள்ளாமல் அதிகாரங்களுக்கு அடிபணியாமல், அஞ்சா
நெஞ்சுடன் வாழ்ந்த ஒரு கலைஞனின் வாழ்வு நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் ஏராளம்.


https://www.youtube.com/watch?v=-8Uhn22tUP8


https://www.youtube.com/watch?v=IA1s8rwx9R8


https://www.youtube.com/watch?v=56vqU9lnxF8

    <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


[image: Jay Jay]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



  *v **a n a k k a m**  S u b b u*
*  .*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to