வழிபாட்டில் தேங்காய்
டாக்டர். டி. செல்வராஜ்.

பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது ஏன்? ஒரு முறை பிள்ளையார் தம் தந்தையான
சிவபெருமானைப் பார்த்து “உம் தலையையே எனக்குப் பலி கொடு” எனக் கேட்டாராம்.
எல்லாவற்றையும் விட உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் செய்தால் பிள்ளையாருக்கு
விருப்பம் மிகுதியாகிறது. எனவே, சிவபெருமானைப் போன்றே மூன்று கண்களுடைய
தேங்காயைப் படைத்து அருளினார் அவர். அந்தத் தேங்காயைப் பிள்ளையாரின் திருமுன்
நாமும் உடைத்து அர்ப்பணம் செய்கிறோம்.



தேங்காய் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த பொருள். அது விநாயகர் வடிவமுடையது;
அவருடைய கையில் வீற்றிருக்கிறது. யானைக்கும், யானை முகத்தவனுக்கும்
பிடித்தமானது தேங்காய்.
இந்து சமயத்தில் வழிபாட்டிற்குரிய பொருள்கள் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
சிந்தித்துப் பார்த்தால் அந்தப் பொருள்களின் பின்னணியில் பற்பல
உட்பொருள்களும், தத்துவப்பொருள்களும் மறைந்திருப்பதைத் தெளிவாக உணரமுடிகிறது.
உதாரணமாக, தேங்காய் பல வகை வழிபாடுகளுக்கு மிகத் தேவையானது. தேங்காய் இல்லாத
முக்கிய வழிபாடே இல்லை என்று கூடக் கூறலாம். தேங்காயை மையமாகக் கொண்ட ஆன்மிகக்
கருத்துகள் சில உள்ளன. அவற்றைத் தொகுத்துக் காண்போம்.


*தென்னை மரங்கள்:*
தமிழகத்தின் தென் பகுதியை நோக்கிச் செல்லச் செல்லத் “தென்னை” மரங்கள் அதிகமாக
விளைகின்றன. அதனால் அதற்குத் “தென்னை” என்ற பெயர் அமைந்தது. தென்னையின் எல்லா
உறுப்புகளும் மக்களுக்குப் பயன்படுகின்றன. குறிப்பாக, தேங்காய் ஒரு நல்ல உணவு;
அரிய மருந்து; உடலுக்கு நன்மை தருகிறது. அதை இறைவனாக வழிபட்டால் அல்லது இறை
வழிபாட்டிற்குப் பயன் படுத்தினால் உயிருக்கு நன்மை அளிக்கிறது. எனவே, தேங்காய்
இல்லற வாழ்விலும், இறைமை வாழ்விலும் மிக முக்கியமானது.


தென்னையின் இனமான பனைமரம் திருவோத்தூர், பனங்காட்டூர், பனையபுரம்,
திருப்பனந்தாள் முதலான பல தலங்களில் தலவிருட்சமாகக் காணப்படுகிறது. தென்னை
கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்டாலும், அது தலவிருட்சமாக இருப்பது மிக
அபூர்வம்.


வழிபாட்டில் தேங்காய் - காரணங்கள்:
இயல்பாக, இறைவனை வழிபடப் பூவும், நீரும் போதும். “புண்ணியம் செய்வார்க்குப்
பூவுண்டு நீருண்டு” என்பது திருமூலர் வாக்கு. புண்ணியம்=பூசை. பூசைக்குத்
தேங்காயைப் பயன்படுத்தச் சில காரணங்கள் உள்ளன.


தேங்காயும், வாழையும் எங்கும், எப்போதும், எளிதில் கிடைக்கின்றன. இவற்றிற்குப்
பருவ வரையறை இல்லை. எனவே, இறை வழிபாட்டிற்குத் தகுந்தவை.


அரசு, ஆல், அத்தி, வில்வம், துளசி முதலியன தெய்விக மூலிகைகள். இந்த வரிசையில்
தென்னையும் சேரத்தக்கது. இளநீர் மருத்துவ குணமுடையது. சிறப்பாக மருந்து செய்ய
ஓர் அடிப்படைப் பொருளாகத் செவ்விளநீர் திகழ்கிறது.


தேங்காயும், வாழையும் பாரம்பரிய வளர்ச்சியைச் சுட்டும் சின்னங்களாம்.


சிவனுக்கு மூன்று கண்கள் இருப்பதைப் போலத் தேங்காய்க்கும் மூன்று கண்கள்
இருப்பது, அதற்குரிய கூடுதல் சிறப்பு; மிக முக்கியமான சிறப்பு.
வழிபாட்டுக்குப் பயன்பட இது முக்கிய காரணம்.


குறிப்பிட்ட இறைவனைக் குறிப்பிட்ட மலர்களால் வழிபட வேண்டும் என்ற வரம்பு
உண்டு. சிவ வழிபாட்டிற்கு ஆகும் மலர் கொன்றை; ஆகாதது தாழை. தேங்காயைப்
பயன்படுத்த இத்தகைய வரம்புகள் இல்லை. இதனை இந்து சமயத்தவர் அனைவரும்
பயன்படுத்துகின்றனர்.


*தேங்காயின் நால்வகைப் பருவங்கள்:*
தேங்காய்க்கு, குரும்பை, இளநீர், தேங்காய், கொப்பரை என்ற நால்வகைப் பருவங்கள்
உள்ளன.

குரும்பை, வழிபாட்டிற்கு எந்த வகையிலும் பயன்படாது.


அபிடேகத்திற்கு ஏற்றது இளநீர். அர்ச்சனைக்குத் தக்கது தேங்காய். ஆகுதிக்கு
உகந்தது கொப்பறை.


குரும்பை இளநீராக மாறும் அற்புதமான பருவத்தில் அதற்கு மூன்று கண்கள்
முகிழ்க்கின்றன. அப்போது முதல், இளநீர் வழிபாட்டுக்குரிய பொருளாக
உயர்வடைகிறது. மென்மேலும் பக்குவப்படுகின்ற தேங்காயும், கொப்பரையும் பற்பல
முறைகளில் வழிபாட்டிற்குப் பயன்படுகின்றன.


மக்கள் இரு கண்களுடன், நன்கு பக்குவப்பட்ட பின்னர் அகக்கண் அல்லது ஞானக்
கண்ணைப் பெறுகின்றனர். இந்த முக்கண்களைத் தேங்காயின் முக்கண்கள்
குறிப்பிடுகின்றன.


இளநீர் முதலிய மூன்றையும் வழிபாட்டுப் பொருள்களாகப் பயன்படுத்த அவற்றின்
பக்குவ நிலையைக் கவனிப்பது முக்கியம். அவற்றின் செவ்வியறிந்து பயன்படுத்த
வேண்டும். இதே போல, பக்குவமுடைய மனமே இறைவனை வழிபடத்தக்கது. பக்குவ
நிலையறிதல், தேங்காய்க்கும், மனத்திற்கும் பொது. பக்குவம் குலைந்தால்
தேங்காயும், மனமும் அழுகிவிடும்.

வழிபாட்டில் இளநீர்:
தாளுண்ட நீரைத் தலையாலே தரும் தென்னை நன்றியுணர்வின் அடையாளம் அல்லவா? அந்த
இளநீர் உலகத்திலேயே மிகச் சுவையான, மிகத் தூய்மையான ஒரே நீர். இயற்கையின்
வரப்பிரசாதம். இது அபிடேகப் பொருள்களில் ஒன்று.
சிலநேரங்களில், இறைவனுக்கு அபிடேகம் செய்யத் தேங்காய்த் துருவலையும்
பயன்படுத்துகின்றனர். தேவையானால், இளநீரை அர்ச்சனைக்கும் பயன்படுத்தலாம்.


*வழிபாட்டில் தேங்காய் - தேங்காயை உடைத்தல்:*
தேங்காய் இறைவனுக்கு ஓர் அர்ச்சனைப் பொருள். அழுகல் முதலிய எந்தக் குறையுமற்ற,
கச்சிதமாக உடையக் கூடிய நெற்றுத் தேங்காயே வழிபாட்டிற்கு உகந்தது. பூசை
நேரத்தில் இறைவனின் திருமுன் தேங்காயை “உடைத்தல்” என்பது பழங்காலம் முதல்
இருந்துவரும் ஒரு வழிபாட்டு முறை. தேங்காயை வணங்கி, அதைத் தீபம் அல்லது
தூபத்தில் காட்டி, உடைத்து, அதன் குடுமியைக் களைந்து, எந்தக் குற்றமும் அதில்
இல்லாமையை உணர்ந்து, வெண்பருப்பு இறைவனைத் தரிசிக்குமாறு வைத்து, அர்ச்சனை
செய்து, கற்பூர தீப ஆராதனை காட்டுவது முறை. தேங்காயை உடைக்காமல், வழிபாடு
பூரணமாவதில்லை; முழு நிறைவு பெறுவதில்லை.


உடைக்கவும் வேறு மங்கலச் செயல்களுக்கும் பயன்படுகிற தேங்காயைத் தேர்ந்து
எடுப்பதற்குப் பல வழிமுறைகளைப் பழைய நூல்கள் வகுத்துள்ளன. இவற்றுள்
இக்காலத்திற்குப் பொருத்தமான சில கருத்துகளைக் காண்போம்.


1.தேங்காய், மிக இளையதாகவும், மிக முற்றியதாகவும் இருக்காமல் செம்பாகமாக
இருக்க வேண்டும்.

2.விரும்பிய அளவிற்கு, அது சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கலாம்.

3.கலசத் தேங்காய், கும்பத் தேங்காய், முகூர்த்தத் தேங்காய் முதலியவற்றை மிக்க
கவனத்துடன் தெரிவு செய்ய வேண்டும்.

4.தேங்காய் இயல்பான வடிவத்துடன் இருக்க வேண்டும்.

5.அதற்குக் குடுமி வேண்டும்.

6.குடுமியைக் களைந்த பின், மூன்று கண்கள் தெளிவாகத் தெரிய வேண்டும்.

7.கூடிய வரை ஒரே அடியில் உடையக் கூடியதாக இருக்க வேண்டும்.

8.தேங்காயின் வடிவம் மிக நீண்டு இருக்கக்கூடாது.

9.அது நாறக்கூடாது.

10.அதன் ஓடு வழவழப்பாக இருக்கக்கூடாது.

11.ஓடு முறுக்கிக் கொண்டு, கோணலாக இருக்கக்கூடாது.

12.பின்னப்பட்டும், உடைக்கும் முன்பே கீறலும், பிளவும் உள்ளதாகவும்
இருக்கக்கூடாது.

13.நீர் வற்றி இருக்கக்கூடாது. நீர் வற்றிய கொப்பறையைப் பூரண ஆகுதியாக மட்டும்
பயன்படுத்தலாம்; அர்ச்சனைக்குப் பயன்படுத்துவதில்லை.


வீட்டிலும், கோவிலிலும் தேங்காய் உடைக்கப்படும்போது, அது செம்மையாக உடைபட
வேண்டும் என்று பக்தர்கள் ஆர்வத்துடனும், ஆசையுடனும், பக்தியுடனும்
கவனிப்பார்கள். பூசையின் பயனையும், வாழ்வின் எதிர்கால நிகழ்வுகளையும் உடைந்த
தேங்காயின் பகுதிகள் உணர்த்துகின்றன என்று முழுவதும் நம்புகின்றனர்.

அவை தெரிவிக்கும் மங்கல, அமங்கலக் குறிப்புகள் வருமாறு:-

மங்கலக் குறிப்புகள்:

1.உடைத்த தேங்காயில் பூ இருப்பது மிக மங்கலம்.

2.நூல் பிடித்தால் போல், சரிபாதியாக உடைவது மிகச்சிறப்பு.

3.பகுதிகளில் ஏற்ற இறக்கம் இருப்பதால் தவறில்லை.

4.தொட்டில் போல் உடைந்தால் மகப்பேறு கிடைக்கும் என்பர்.

5.குடுமிப்பகுதி மற்ற பகுதியை விடச் சற்றுப் பெரிதாக உடைவது நல்லது.

6.ஓடு சிதறி, முழுத் தேங்காய், கொப்பறையைப் போல விழுந்தால், அதைச் சரி
பாதியாய்ப் பிளந்து படைக்கலாம்.


தேங்காய் நீரைப் பாத்திரத்தில் பிடித்து அதைத் தீர்த்தமாகப் பயன்படுத்தலாம்.
உடைந்த தேங்காய் மூடிகளை மீண்டும் இணைத்துப் பொருத்தக் கூடாது. தேங்காய் ஒரே
அடியில் இரு பகுதிகளாக உடைவது மிக நல்லது.


அமங்கலக் குறிப்புகள்:
1.உடைந்த தேங்காய், ‘தேரை மோந்தும்’, அழுகியும் இருப்பது குற்றம்.

2.சிதறுகாய் போலத் தூள் தூளாக உடைவது குற்றம்.

3.குறுக்கில் உடையாமல் நெடுக்கில் உடைவது குற்றம்.

4.தேங்காய் நீர் நாறுவது குற்றம்.

5.தேங்காயை உடைக்கும்போது கை விட்டு நழுவி அப்பால் போய் விழுவது அபசகுனம்.


தேங்காய்ப் பிரசாதத்தை, உடைத்து அனைவருக்கும் தர வேண்டும். அல்லது சுத்தமான
சைவ உணவு வகைகளைச் சமைக்கப் பயன்படுத்தலாம்.


சனிக்கும், காளிக்கும் அர்ச்சனை செய்த தேங்காயைக் கோவிலுக்கு அல்லது
மற்றவர்களுக்குக் கொடுத்துவிடுவது நல்லது என்பர்.


தத்துவப் பொருள்கள்:
1. தேங்காய்-மும்மலம்; நீர்-உயிர். தேங்காயின் மட்டை, நார், ஓட்டுப்பகுதிகள்
என்ற மூன்றும் மும்மலங்கள் ஆகும். இவை படிப்படியே களையப்பட்டவுடன், இறுதியில்
அகங்கார ஓடும் நொறுங்க, உடனே வெண்மைத் தூய்மை பிரகாசிக்கிறது. நீர் இறைவன்
திருமுன் அர்ப்பணிக்கப்படுகிறது. இது ஒரு கருத்து.


2. தேங்காய் ஓடு-அகங்காரம்; தேங்காய்ப் பருப்பு-ஞான உணர்வு. இறைவனின்
திருக்காட்சியை உயிர் பெறாதபடி இடையில் இரும்புத் திரையாய் இருப்பது
அகங்காரமே. அகங்கார “ஓடு” உடைந்தால், உயிர், ஞான உணர்வைப் பெற்று இறைவனைத்
தரிசிக்கிறது. இது வேறு கருத்து.


3. தேங்காய்-இதயம்; மூன்றாம் கண்-ஞானக் கண்; வெண்மை-சத்துவகுணம். “சத்துவ
குணத்துடன் சஞ்சலமில்லாமல், ஞானக்கண்ணால் இறைவனைத் தரிசிக்கும்போது, தோன்றும்
பக்தி உணர்வுகளை இதயம் உணர்கிறது.” என்ற உட்பொருளைத் தேங்காய் உணர்த்துகிறது
என்பது மற்றொரு கருத்து. இவ்வாறே தேங்காய் உடைப்பதைப் பற்றிப் பல
உட்கருத்துகள் நிலவுகின்றன.


சிதறு தேங்காய்:
தேங்காய் சிதறித் தூளாகும்படி தரையில் அடிப்பது “சிதறு தேங்காய்.” சிதறிய
தேங்காய்ப் பகுதிகளை, பலர் எடுத்துக் கொள்ளும்படி ‘கொள்ளை’விடுவது சூறைத்
தேங்காய். நான்கு திசைகளிலும் சிதறும்படி தேங்காயை அடிப்பது ‘சதுர்த்தேங்காய்.’
தேங்காயைச் சூறை விட்டு, அர்ச்சனை செய்து வழிபடும் வழிபாடு விநாயகருக்கு
மட்டுமே உரியது. இந்த வழிபாட்டு முறை தமிழகத்தில் மட்டுமே காணப்படுகிறது.
விநாயகரிடம் பிரார்த்தனை செய்துகொண்டு சிலர் 108 தேங்காய்களைச் சூறை
விடுவதுண்டு.


சிதறிய தேங்காய்ச் சிதறல்களைத் தொகுத்து எடுக்கும் உரிமை சிறுவர்களுக்கே
உரியது. உண்மைதான். குழந்தைப் பிள்ளையாரின் பிரசாதத்தில் பிள்ளைக்
குழந்தைகளுக்கல்லவா உரிமை இருக்க வேண்டும்?


தத்துவப் பொருள்:
சிதறுகாய் அகங்காரத்தின் முடிவையும், தியாகத்தின் தொடக்கத்தையும் ஒருங்கே
தெரிவிக்கிறது. சிறுவர்கள் சிதறல்களைத் தொகுப்பது, சூறைக்காயை உடைப்பவர்,
மறைமுகமாகச் செய்கிற தர்மமாகும். எனவே, இறைவன் திருமுன் அகங்கார மண்டையோடு
உடைய வேண்டும்; அமுதமயமான அறிவு நீரை அர்ப்பணிக்க வேண்டும் என்பன சிதறு
தேங்காய் அறிவிக்கும் உட்கருத்துகளாம்.


நெய்த் தேங்காய்:
தேங்காயில் நெய்யை நிரப்பி, அதனால் வழிபடுவது, சிறப்பாக ஸ்ரீஅய்யப்பனுக்கே
உரியது. ஸ்ரீஅய்யப்பன் பக்தர்கள் கடும் விரதமிருந்து கட்டுகிற “இருமுடியில்”
முதல் முடியில் முக்கியமாக இடம் பெறுகிறது நெய்த்தேங்காய். தேங்காயின்
நீருக்குப் பதிலாக நெய் நிரப்பப்படுகிறது. தேங்காய்-உடம்பு; நெய்-உயிர் அல்லது
பக்தி. நெய் ஸ்ரீஅய்யப்பனுக்கு அபிடேகம் செய்யப்பட்டு, பிரசாதமாக
வழங்கப்படுகிறது.

தேங்காய் சபரிமலைத் திருக்கோவிலில், எப்போதும் எரிகிற பெரிய ஓம குண்டத்தில்
எறியப்படுகிறது. நெய் (உயிர்) இறைவனுடன் சங்கமமாகிறது; தேங்காய் (உடம்பு)
எரியில் அடக்கமாகிறது.


உயிர், உடம்போடு தோன்றுவதன் பயன், அது இறைனுடன் ஒன்றுதலே என்ற அடிப்படைத்
தத்துவத்தை நெய்த்தேங்காய் தெரிவிக்கிறது.


கலசத்தேங்காய்:
லட்சுமி வழிபாட்டுடன் தொடர்புடையது கலசத் தேங்காய். வரலட்சுமி விரதத்தின்போது
கலசத்தின் மீது வைக்கப்படுவது, கலசத்தேங்காய்.


ஒரு கலசத்தில் நூலை வரிசையாகச் சுற்றி, அதில் அரிசி அல்லது நீரால் நிரப்பி,
ஐந்து மாவிலைகளை அமைத்து, கலசத்தின் மீது நாருடைய அல்லது நாரில்லாத தேங்காயைப்
பொருத்துகின்றனர். தேங்காய்க்கு மஞ்சள் குங்குமமிட்டு, மலர்களாலும்,
நகைகளாலும், துணிகளாலும் மிகவும் தெய்விகக் கவர்ச்சி பொங்க
அலங்கரிக்கிறார்கள். கலசத்தில் லட்சுமியின் முகத்தைப் பொருத்துகின்றனர்;
அல்லது மஞ்சளால் முகத்தை உருவாக்குகின்றனர். இதற்கென்றே வெள்ளி, பொன்னாலான
லட்சுமியின் முகம் உள்ளது.


வாழையிலையில் அரிசியைப் பரப்பி அதன்மீது வைக்கப்படுகிற கலசம் மிகப்
புனிதமானது. லட்சுமிகரமானது. பக்தியில் ஆர்வம் இல்லாதவர்களும் ஆசையோடு
வழிபடத்தக்க அமைப்புடையது.


ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர் அவர்கள் கலசத் தேங்காயை ‘ஞானபலம்’ என்று
குறிப்பிடுகிறார்கள்.

கலசம்-மனம்; நூல்-பிரேமை; நீர்-மகிழ்ச்சி; மாவிலை-இறைவனடி.

“மனமாகிய கும்பத்தின்மேல், இறைவனடி பொருந்தியிருக்க, தேங்காய் என்ற ஞானபலம்
அதிகமாகிறது” என்பது கருத்து. அதாவது, கலசம் நல்ல தூய நீரால்
நிறைந்திருப்பதைப் போல், மனம் நல்ல தூய எண்ணங்களால் நிறைந்திருக்க வேண்டும்.
கலசத்திலும், நீரிலும் மாவிலை இருப்பதைப் போல, மனத்திலும், எண்ணங்களிலும்
எப்போதும் இறைவனின் திருவடிகளே நிலைத்திருக்க வேண்டும். அப்போது ஞானபலம்
பெருகி இறைக் காட்சியைத் தருகிறது.


மற்றொரு கருத்து: கலசம்-உடம்பு; நூல்-நரம்புகள்; நீர்-உயிர் அல்லது மனம்;
மாவிலைகள்-தெய்வத்தின் அருளை உயிருக்கு மாற்றும் சாதனம்; தேங்காய்-தெய்வம்.
தெய்வ மூர்த்தமாகவே கலசத் தேங்காயைக் கருதி, அதைச் சிறப்பாக
அலங்கரிக்கிறார்கள். கலசத் தேங்காயின் உயர்ந்த மதிப்பு இங்கு கருதத்தக்கது.
அது தெய்வமாகவே கருதப்படுகிறது.
வரலட்சுமி பூசையில் மட்டுமல்லாமல், யாக சாலைகளில் விநாயகர், மற்றும் நவகிரகப்
பூசைகளிலும் கலசங்கள் பல, பயன்படுகின்றன.


பூரண கும்பம்:
கலசத்திற்கும் பூரண கும்பத்திற்கும் அதிக வேறுபாடு இல்லை. சிறிய செம்பைப்
பயன்படுத்துவது கலசம்; பெரிய செம்பு அல்லது குடத்தைப் பயன்படுத்துவது பூரண
கும்பம்.


பூரண கும்பத்தில் வீற்றிருக்கிறவள் லட்சுமி; அதைக் கையில்
ஏந்திக்கொண்டிருப்பவளும் அவளே. கோவில் முதலான இடங்களுக்கு வருகை தருகிற
சான்றோர் முதலியவர்களைப் பூரண கும்பத்துடன் வரவேற்பது வழக்கம். பூரண கும்பம்
மங்கலத்தின் சின்னம்; அதன் விளிம்பில் பொருத்தப்படும் தேங்காய் இறைவன்
திருமேனி. கும்பத்தில் ஆவாகனம் செய்யப்படுகிற இறைவனுக்குக் ‘கும்பமூர்த்தி’
என்பது பெயராம்.


கும்பாபிடேகத்தில் தேங்காய்:
கும்பத் தீர்த்தத்தில் இறைவனை ஆவாகனம் செய்து, யாகம் நடத்தி, மந்திர
உருவேற்றி, அந்தக் கும்பத் தீர்த்தத்தை இறைவனின் மூர்த்தம் முதலியவற்றின் மேல்
அபிடேகம் செய்வதே கும்பாபிடேகம்.


1.தானியம்-ஆசனம்; 2.கும்பம்-இறைவனின் திருமேனி; 3.நூல்-நரம்புகள்;
4.நீர்-ரத்தம்; 5.அதனுள் போடப்படுகிற பொன்-உயிர்; 6.தேங்காய்-திருமுடி.
கும்பத்தேங்காய் இறைவனின் திருமுடியாய்த் திகழ்கிறது. அதாவது கும்பமும்,
தேங்காயும் இணைவது இறைவனின் முழுவடிவமாம்.


முகூர்த்தத் தேங்காய்:
திருமண வீடுகளில், வரவேற்பு நுழைவாயிலில், குலையுடன் கூடிய வாழைமரத்தில்,
தேங்காய்க் குலையையும் கட்டுவது சந்தான அபிவிருத்தியின் அடையாளங்கள். மற்றும்,
செல்வ வளப்பத்தின் சான்றுகள். நாருடன் அமைந்த, எந்தக் குற்றமும் இல்லாத
முகூர்த்தத் தேங்காய்க்கு மஞ்சள், குங்குமமிட்டு அதில் தாலியைச் சுற்றி
வைக்கின்றனர். தேங்காய் ஒரு தெய்வம்; அதனுடன் சம்பந்தமுடையது தாலி.
சபையோர்க்குத் தாலியைக் காட்டப்படுகிறபோது, அவர்கள் தேங்காயை வணங்குகிறார்கள்;
தாலியை வாழ்த்துகிறார்கள். ஆகவே, தேங்காய்-ஒருதெய்வம், அல்லது தெய்வத்திற்கு
நிகரானது; வழிபடத்தகுந்தது.


திருமணத்திற்கு வந்தவர்களுக்கு முடிவில் அன்பளிப்பாகத் தரப்படுவதும் ஒரு
தேங்காய்தான். இது நன்றியுணர்வை எடுத்துக் காட்டுகிறது.


தேங்காய்ப் “பூரணம்”:
தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்கக் கூடாது என்பதால் சில கோவில்களில் தேங்காயை
உடைக்க அனுமதிக்க மாட்டார்கள். உதாரணமாக, திருவரங்கத்தில், வழிபாட்டுக்குரிய
தேங்காய் உடைக்கப் படுவதில்லை. உடைத்தால் அந்தச் சப்தம், சயனித்து அறிதுயில்
புரிகிற அரங்கனை எழுப்பிவிடுமாம். எனவே, இத்தலத்தில் தேங்காய்த் துருவல்
நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.


விநாயகருக்கு மிகவும் விருப்பமானது “எருக்கனாம் கொழுக்கட்டை” என்பது.
எருக்கன்-ஆம்-கொழுக்கட்டை; விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை என்று
பொருள் தருகிறது. இதில் வைக்கப்படுகிற பூரணம்-தேங்காய்த்துருவல், வெல்லம்,
எள், ஏலக்காய் முதலிய சுவை மிக்க பொருள்களின் கலவை.


பூரணம்-நிறைவானது. வெள்ளையான மாவுப்பகுதி தூய மனம்; அதில் நிறைந்துள்ள
தேங்காய்த் துருவல் பூரணம், மனம் முழுவதும் நிறைந்துள்ள தூய பக்தி. எருக்கனாம்
கொழுக்கட்டையின் தத்துவம் இதுதான். மனம் நிறைந்த பக்தியுடன் இறைவனைத் தொழுவதே
மிகச் சிறந்த வழிபாட்டு முறையாகும். இதைக் “கொழுக்கட்டை” தெரிவிக்கிறது.
தேங்காய் “பூரணமாகிறது” விநாயகருக்கு உகந்ததாகிறது.


தேங்காயை உருட்டி, வழிபட்டுப் பிரதட்சணம் செய்வதுண்டு. சுட்ட தேங்காயைப்
படைப்பது சில மாவட்டங்களில் காணலாகும் வழிபாட்டு முறை. மேலும், திருட்டி
கழிக்கவும், திருட்டி பரிகாரமாகவும் தேங்காய் பயன்படுகிறது.


கொப்பரைத்தேங்காய்:
அறவே நீரற்ற தேங்காய் கொப்பரையாகும். முற்றிய எல்லாத் தேங்காய்களும்
கொப்பரையாவதில்லை. பல அழுகிவிடும். ஏதோ ஆயிரத்திலொன்று கொப்பரையாகலாம். நீர்
வற்றி உள்ளேயே உலர்ந்த தேங்காய் கொப்பரையாகிறது.


தேங்காய்ப் பருப்பு, அகப்பற்றான நீரை அகற்றிவிட்டது; அந்த நீரின் சுவையையும்,
சக்தியையும் பறித்துக் கொண்டது. புறப்பற்றான ஓட்டை விலக்கிவிட்டது; அதனோடு
கொண்ட பற்றுத் தொடர்பினை முறித்துக் கொண்டது. கொப்பரையும் அதன்
ஓடும்-விளாம்பழமும் அதன் ஓடும்போல்-புளியம்பழமும் அதன் ஓடும் போல-பற்றற்று
விளங்குகின்றன. இந்தக் கொப்பரைத் தேங்காயைப் “பூரண ஆகுதி”யாகப்
பயன்படுத்துகின்றனர்.


வேள்வியாகத்தில் பழங்கள், தானியங்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள் முதலிய பல
பொருள்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. முடிவாக-நிறைவாக-பூரணமாக ஒரு
பட்டுத்துணியில் கொப்பரைத் தேங்காயைக் கட்டி அக்னியில் இடுகின்றனர். இளநீரை
விட, தேங்காயை விட, கொப்பரைத் தேங்காயே அதன் பற்றற்ற நிலையின் காரணமாக “பூரண
ஆகுதி” ஆகிற முழுத்தகுதியை உடையதாம்.


மேற்கண்ட கருத்துகள் அனைத்தையும் தொகுத்துக் கண்டால் தேங்காய் ஓர் இறைவனாகவே
கருதப்படுகிறது என்பதும், இறைவனை வணங்க ஒரு சிறந்த சாதனமாகப் பயன்படுகிறது
என்பதும், வழிபாட்டில் தேங்காய்க்கு முதலிடமும், முக்கிய இடமும் உண்டு
என்பதும் நன்கு விளங்குகின்றன.

-- 

    <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


[image: Sally K]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



   *v **a n a k k a m**  S u b b u*

*  .*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to