மாமதுரை போற்றுதும்..மாமதுரை போற்றுதும்..

என்னடா? வாரந்தோறும் ஞாயிறு அன்று, ஞாயிறு போற்றுதும்..ஞாயிறு போற்றுதும்
என்றுதானே பதிவிடப் படும்.

அது என்ன?   மாமதுரை போற்றுதும். என்ற வினாக்கு விடை :

இன்று இரவு விஜய் தொலைக்காட்சியின் நீயா? நானா? முதலில் தெரிவித்த தலைப்பு .
"மதுரையின் தொன்மை குறித்து விவாதிப்போம்" என்று தெரிவிக்கப்பட்டது.

பாத்திமாக் கல்லூரியின் வாசலில், 18.06.2015 மாலை நான்கு மணிக்கு என்று
தெரிவிக்கப்பட்டு, பின்னர் மாலை 06.30 மணி என்று கூறப்பட்டது. நிகழ்ச்சி
தொடங்கிய நேரமோ சுமார் 07.40 மணிக்கு.

திருவாளர்கள் முத்துகிருஷ்ணன், குணா, ஆத்மார்த்தி,  *தூங்கா நகரம் பட
இயக்குனர் *கெளரவ், அமெரிக்கன் கல்லூரியின்  பேராசிரியர்கள்,
அழகுபாண்டி  நடிகர் சண்முகராஜா மற்றும் சில வழக்கமான நீயா? நானா? அமர்வில்
வரும் ஆஸ்தான  நபர்கள்  முழுதும்  முதல் வரிசையின் ஆக்கிரமிப்பில்..
அழைக்கப்பட்ட மதுரை  மக்கள் சுமார் நாற்பது நபர்கள் இருபுறமும் இரண்டாவது
மற்றும் மூன்றாவது வரிசையில் அமர வைக்கப்பட்டோம்.

முதலில், நெறியாளர் கோபிநாத் சென்னையிலேயே படம்பிடிக்கப்பட்டு வந்தாலும்,
நீயா? நானா? நிகழ்வில் மதுரைப் பகுதியைச் சார்ந்தோரே அதிகம்
கலந்துகொண்டதாகவும், ஏன் அம்மக்கள் இருக்கும் மதுரையிலேயே படப்பிடிப்பை
நடத்தலாமே என்று எண்ணி இந்த பாரம்பரியமிக்க பாத்திமாக் கல்லூரியில்
நடத்திட  வந்துள்ளோம். என்று கூறிவிட்டு  முதலில், மதுரையின் அழகு என்ன? என்ற
கேள்வியைத் தொடுத்து மூன்றாவது வரிசையில், அமர்திருந்த பங்கேற்றவர்களை நோக்கி
மைக் தரப்பட்டது.

ஒவ்வொருவரும், மதுரையின் சிறப்பை கூறிட முனையும் முன்னரே, அது இல்லை. வேற வேற,
மைக்கை அடுத்தவரிடம் கொடுங்கள் என்று பயணித்தது. கோபிநாத் இரண்டாம் - மூன்றாம்
வரிசையில் பங்கேற்றறோரின்  கருத்துக்களை உள்வாங்கிடவே மறுத்தார்.

முதலில், மதுரையின் அழகு குறித்து பார்ப்போம்.

1. மதுரைக்கு அழகு அன்னை மீனாக்ஷி - சொக்கநாதர் திருக்கோவில் அழகு.

2. கோவிலை சுற்றி சதுர  வடிவில் அமைந்த தெருக்கள் அழகு.

3. ஆண்டுமுழுதும் நாள்தோறும்  ஒரு திருவிழா நடைபெற்று வரும், ஆடி வீதிகள்,
சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகள் என
வடிவமைக்கப்பட்ட அழகு.

4. மதுரை மண்ணின் மக்கள் மனசை போன்ற "மல்லிகையின்" மனம் அழகு.

5.மதுரைக்கே உரித்தான "ஜில்..ஜில்.ஜிகர்தண்டா" அழகு.

6.வீரம் சொரிந்த பெண்ணின் நளினம் அழகு.

7.திரைத்துறையை சார்ந்தோரின் பார்வையால், இரத்தம் தோஞ்சப்  பூமி என்று தவறாக
சித்தரிக்கப்பட்ட, இம்மதுரையில்தான்,  மகாத்மா காந்தி அவர்கள்
சுட்டுக்கொல்லப்பட்டு உயிர் துறந்தபோது அணிந்திருந்த இரத்தம் தோஞ்சச்  சட்டையை,
அமைதியைப் போதிக்கும் வண்ணம் தாங்கி  பாதுகாத்து வரும், காந்தி நினைவிடம்
 அமைந்துள்ளது ஒரு அழகு.

8.நான்மாடக் கூடல் என்று பெயர்பெற்ற மதுரையில் நான்கு புறமும், ஒவ்வொரு
திசையிலும் தோரணவாயிலாக,  எழில் சூழ அமையப்பெற்ற யானை மலை, பசுமலை, நாக மலை,
அழகர் மலை அழகன்றோ.

9. அழகு முருகனின் அறுபடை வீடுகளில், இரண்டு படை வீடுகள் திருப்பரங்குன்றம்
மற்றும் பழமுதிர்ச்சோலை அமையபெற்ற அழகு.

10. முத்தமிழ் வளர்த்த மதுரையம்பதி என்பதால், வைஷ்ணவப் பெரியோர்
ஆழ்வார்கள், போற்றிப் பாடிய  108 திருப்பதிகளில், மூன்று திருப்பதிகள் (அழகர்
கோவில் - கள்ளழகர் திருக்கோவில்,   திருமோகூர் - காளமேகப் பெருமாள்
திருக்கோவில், கூடலழகர் பெருமாள் திருக்கோவில்) அமையப்பெற்றது  அழகன்றோ.

11.கோடிக்கணக்கான மக்கள் சென்று வரும் திருப்பதிக் கோவிலை நிர்மாணித்து -
கட்டித்தந்த திருமலை நாயக்கர் மன்னனின் கனவில் வந்து, 'நீ நித்தமும் என்னைத்
தொழ மதுரையிலேயே எழுந்தருளிகிறேன்' என மொழிந்து பிரசன்ன
வெங்கடாச்சலபதியாக  காட்சி தந்து கட்டப்பட்ட தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாச்சலபதி
  திருக்கோவில் அமைந்துள்ள அழகு.

12.எந்த ஒரு சுற்றுலாத்தலங்களுக்கும் குறிப்பிட்ட சீசனில் மட்டும் குவியும்
வெளிநாட்டினர் போன்று இல்லாது, ஆண்டு முழுதும், நாள்தோறும் வெளிநாட்டு
சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழும் மன்னர் திருமலை நாயக்கர் மஹால், வண்டியூர்
மாரியம்மன் தெப்பக்குளம், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சமணர்கள்
தங்கி வாழ்ந்த சமணப்படுகைகள் என அடுக்கிடும் வகையில் அமைந்துள்ளதும் அழகன்றோ.

13. நாடகத்தமிழை வளர்த்த சுவாமி சங்கரதாஸ் பிறந்து, நாடகக் கலைகள் வளர்த்து,
அது இன்றும் தொடரும் அழகோ அழகு.

14. மதுரை புரோட்டாக் கடைகளில், இரவில் போடப்படும் முட்டைப் புரோட்டா
தருணத்தில் வரும் இசை, 'டண்டண் - டண்டண் - டண்டண்' என்ற இசை இலயம் இன்று தமிழ்
சினிமாக்களின் குத்துப்பாடல்களின் இசையாக ஒலிப்பது அழகன்றோ.

15. அக்காமக்கா - மாமு மச்சி மாப்பிள்ளை - சித்தப்பு பெரியப்பு -  அண்ணே தம்பீ
என்று சாதிப் பார்க்காது உறவுமுறைக்  கூறி வாழும் "பாசப்பயபுள்ளைக" நிறைந்த
வாழ்க்கை முறை அழகன்றோ.

16. அலுவலகம் சென்றாலும், வீட்டில் இருக்கும் உள்ள மனநிலையை தரும்வகையில்,
எந்த ஒரு பிரச்சினை என்றாலும், வீட்டுக்கு  சென்றடையமுடியும் என்ற
தன்னம்பிக்கை தரும் மதுரையின் அமைப்பு ஒரு அழகன்றோ.

17. மதுரை வாழ் மக்கள், ஒவ்வொரு திரைப்படங்களையும் அக்குவேறு ஆணிவேராக
பிரித்து மேய்ந்து, அப்படங்களின் டி.சி.ஆர் (டெய்லி கலெக்சன் ரிப்போர்ட்) எகிற
 வைக்கும் ஆற்றலும்  ஒரு அழகன்றோ.

18.நீண்டு பரந்துவிரிந்த வைகைக் கரை அழகன்றோ. இப்படி அழகாய் பற்றி விவரிக்கவே
நெடுந்தொடர் போன்று "நீயா? நானா?' நிகழ்ச்சி பயணிக்க முடியும்.

ஆனால், முத்துக்குமார் இட்லி சுற்று விற்கும் கைம்பெண்களை பற்றி கூறி அது அழகு
என்று சொல்லிட, இது இதுதான் நான் எதிர்பார்த்தது என்று கோபிநாத் சிலாகிக்க,
இரட்டைக்குவளை முறை, சாதீய மோதல்கள் என முத்துக்குமார் "ப்யுடரிசம்" நிறைந்த
ஊர் என்று ஆரம்பித்து, தலைப்ப திசைமாறிப் பயணித்தது.
அழைக்கப்பட்டவர்களின்  கருத்துக்கள்
ஏற்க மறுக்கப்பட்டன.

பின்னர், கவுரவ் - குணா ஆகியோர் சசிகுமார் - பாலா - அமீர் போன்றவர்களால்,
தமிழ்ப்படங்களில்,  மதுரை சிதைந்து விட்டதாக கூறி , சாதியாம் குறித்த விவாதமாக
மாறி அருகில் இருந்த பெண்கள் எல்லாம், என்ன இப்படி 'மொக்கப் போடுறானுக' என
புலம்பல் ஒலிக்க ஆரம்பித்தது.

அதை எனக்கு அருகில் அமர்ந்திருந்த அன்பர், மதுரைக்கே உரிய கோபத்துடன்
கத்திவிட்டார். உடனே, கோபிநாத், என்னிடம் இன்னும் 1800 கேள்விகள் உள்ளன
இருங்கள் என்று அமைதிப்படுத்த வேண்டிய சூழ்நிலை.

பின்னர் உலகமயமாக்கல் வந்தபின்னர் மதுரையின் பழமை மாறிவிட்டதா? அதனால கிட்டிய
பலன் என்ன? பாதிப்பு என்ன? என்று கேள்விகளை நோக்கி பயணித்தது.

உண்மையிலேயே மதுரையின், உலகமயமாக்கல் நடவடிக்கைகள் ஏதும்  நடைபெற வில்லை என்ற
உண்மையை கூறாது   பழமை மாறவில்லை, அதே குறுகிய சந்துகள், உட்கட்டமைப்பு
வசதிகள் பெருக்கிட இயலாத விதிமுறைகள்  உள்ளன என்று அக்கருத்துக்களையும்
கீழ்வரிசை விருந்தினர்களிடம் மட்டும் உரையாட அனுமதிக்கப்பட்டது.

மதுரையில் கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட மாற்றம் என்றால், பன்னாட்டு விமான
முனையமாக்கிட, மதுரை விமான நிலையத்தை , மதுரை அஞ்சாநெஞ்சர் அண்ணன் அழகிரி
அவர்கள் மத்திய அமைச்சராக இருந்து ஆற்றிய  புதிய விரிவாக்கம் மட்டுமே என்பதை
கூறிட தவறி விட்டனர். அருணகிரி என்ற அரிமா நண்பர், அரவிந்த் கண் மருத்துவமனை
ஆசியாவிலேயே   மிகப்பெரிய ஒன்று, அங்கு பன்னாட்டு மருத்துவர்களும் வந்து
மேல்படிப்பு மேற்கொள்ளும் விவரங்களை கூறிட முனைந்தபோது அதற்கும் தடை.

பாதிப்புக்கள் குறித்து பேசும் போது கல்வியை வளர்த்த மதுரையில், தற்போது தரமான
கல்வி நிலையங்கள் உருவாகவில்லை  என்று கீழ்வரிசையில் இருந்தோர் அங்கலாய்த்தனர்.

,ஆனால்,  உண்மையான கந்து வட்டிக் கொடுமை, சிறிசு முதல் பெரிசு வரை உழைக்கும்
சௌராஷ்டிரா மக்களின் உழைப்புத் ,திறன், இழந்துவரும் அன்யோன்யம் குறித்து வாய்
திறக்க விடவில்லை.

மதுரையைவிட நீங்கள் பார்த்து பொறாமைப் படும் ஊர் எது என்ற வினாவுக்கு பலரும்
கோவை என்று (அதுவும் கீழ்வரிசை நண்பர்கள்) மொழிய அது மட்டும் கேட்டவர்,
ஈரோடு என்று நான் கத்தியும் காதில் வாங்கி கொள்ளவில்லை.

ஏனெனில், கோவை எப்போதுமே மதுரையை விட சீதோஷ்ண நிலையிலும் சரி, தொழில்
வளர்ச்சியிலும் சரி, பொருளாதாரத்திலும் உயர்ந்தநிலையில் இருந்த ஊர்.
ஆனால், மதுரையைவிட கீழ் நிலையில் இருந்த ஈரோடு இன்று மதுரையை விட செழிப்பாக
பொறாமைப்படும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதை ஒப்பிட அனுமதிக்க வில்லை.

இறுதியாக, கீழ்வரிசைகாகரார்கள் எல்லோரும் வரிசைக்கட்டி,மதுரையின் பெருமை
என்றால் அது 'அமெரிக்கன் கல்லூரி' என்று சொல்லி வைத்தார்போல் விளம்பரதாரர்
நிகழ்ச்சி போன்று ஆக்கி விட்டனர்.

ஏனோ, பட்டிமன்றத்துக்கு கட்டியம் கூறிய தியாகராசர் கலைக் கல்லூரி, அரசியலில்
பல சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களை தந்த மதுரைக் கல்லூரி, உலகம்முழுதும்
வியாபித்திருக்கும் தியாகராசர் பொறியியல்  கல்லூரி டோக் மூதாட்டி கல்லூரி,
மதுரை மருத்துவக் கல்லூரி குறித்து  மறந்தது ஏனோ?

சின்னக்கலைவாணர் விவேக், வைகைப்புயல் வடிவேலு காமெடிக்கு பின்னர் ஊடகங்களில்
நகைச்சுவை நிகழ்ச்சிகள் பெருமை.  மகாகவி பாரதியார் பணியாற்றிய பெருமை,
இரமண மகரிஷி  படித்தது, இன்னிசைப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பிறந்த ஊர் என்ற
பெருமைகளை பட்டியலிட மறந்தது ஏனோ?


"ஏன்? எங்களை அழைக்க வேண்டும், பொதுவான கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டு,
கோபிநாத்தின் கருத்துக்களை மட்டும் திணிக்கும் களமாக "நீயா? நானா?"
மாறிவருகிறது" என்று என்  அமர்ந்திருந்த ஒரு ஆசிரியை புலம்பி தள்ளி விட்டார்.

இரவு 11.20 மணியளவில் நிகழ்ச்சி படப்பிடிப்பு முடிந்து வெளிய வந்த போது பல
இளம்பெண்கள், இளைஞர்கள் 'நீயா? நானா?' என்றத் தலைப்பை இனி கோபிநாத்தின் 'நானே!
நானா?' என்று மாற்றிக் கொள்ளட்டும்என  புலம்பி கொண்டது இன்னும் காதில்
ஒலித்துக் கொண்டுள்ளது.

 அப்போது எனது செவிகளில், நமது வேல்முருகன், சுப்ரமணியபுரம் படப்பாடலில்
பாடிய,
"மதுர குலுங்க  குலுங்க" பாடல் வரிகளில் பரிணமித்த மதுரையின் மாண்புகள்
ஒலிக்க..

மாமதுரை போற்றுதும்..மாமதுரை போற்றுதும்.. என்று முணுமுணுத்துக் கொண்டே  எனது
இரு சக்கர வாகனத்தில் பயணிக்கத் தொடங்கினேன்.


 *​Shared by K.Raman.​*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to