பர்மாவில் செட்டியார்கள்
அருணகிரி <http://solvanam.com/?author_name=arunagiri> (courtesy: solvanam)
நகரத்தார்கள் பர்மாவில் அநியாய வட்டி விதித்தார்களா?
இந்நிலையில், ஒரு விஷயம் குறிப்பிட்டாக வேண்டும். வட்டி என்பதே தவறு என்பது
எல்லாவிதப் பொருளாதார சித்தாந்தத்திலும் அபத்தமான கருதுகோள்தான். மார்க்ஸ் கூட
தொழில்துறையில் வட்டியின் பங்கை அங்கீகரிக்கிறார். வட்டி என்பது
உற்பத்தியிலும், தொழில் விரிவிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதே சமயம்
ஒருவரது பொருளாதார இக்கட்டான நிலையை உபயோகப்படுத்திக்கொண்டு அவரது சொத்துகளைப்
பிடுங்கும் நோக்கத்துடன் அவருக்கு மிக அதிக வட்டியில் வழங்கப்படும் கந்து
வட்டி போன்ற கடன் வகைகள் (usury) எல்லா சமூகத்தாலும் வெறுப்புடனேயே
பார்க்கப்பட்டன. ஆனால் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் எவ்விதத்திலும்
இப்படிப்பட்ட நாணயமற்ற கடன் வழங்கலில் ஈடுபடவில்லை.
செட்டியார்கள் உண்மையில் சீனா, பர்மிய லேவாதேவிக்காரர்களின் வட்டி விகிதத்தை
விட குறைந்த வட்டி விகிதத்திலேயே கடன் வழங்கினார்கள். அன்றைய பர்மாவின்
செட்டியார்கள் வழங்கிய கடன் வட்டி வீதம் வருமாறு (*ஷான் டர்னல் ஆய்வறிக்கை*):
- நிலம், அசையா சொத்துக்களுக்கெதிராக தரப்படும் கடனுக்கு வட்டி —-ஆண்டுக்கு* 9-
15* சதவீதம்
- நகை, விலையுயர்ந்த உலோகங்கள் –—ஆண்டுக்கு* 12-15* சதவீதம்
- பிணையுடன் (collateral) கூடிய கடன் பத்திரங்கள் – ஆண்டுக்கு *12-15*
சதவீதம்
- பிணை இல்லாத கடன் பத்திரங்கள்- ஆண்டுக்கு* 15-24* சதவீதம்
முதல் பார்வைக்கு இது அதிகம் போல் தெரியலாம். ஆனால் அந்த காலகட்டத்தில்
(1929-இல்) பிரிட்டிஷ் காலனிய வங்கியின் வட்டி வீதம் 7லிருந்து 10 சதவீதமாக
இருந்தது. நடப்பு வட்டியாக டெபாசிட்டுகளுக்கு தர வேண்டிய வட்டி பிரிட்டிஷ்
வங்கியின் வட்டியை விட இரண்டு அல்லது மூன்று புள்ளிகள் அதிகம். ஆக, இதுவே
குறைந்தது 10 சதவீதம் என்று ஆகிறது. செட்டியார் வங்கிகளின் வேறெந்த செலவும்
கணக்கில் கொள்ளப்படாத நிலையில், மேற்காட்டிய சதவீதங்களின் அடிப்படையில்
செட்டியார்களின் கடனுக்கான வட்டி விகிதம் எவ்விதத்திலும் அதிக வட்டி என்று கூற
முடியாது.
இதே காலகட்டத்தில் பிற இனத்தவர் தந்த கடன்களுக்கான வட்டி விகிதம் என்ன?
- பர்மிய லேவாதேவிக்காரர்களின் ஒரு வருடத்திற்கும் குறைவான குறைந்த காலக்
கடனுக்கான வட்டி, மாதத்துக்கு 8-10 சதவீதம் இருந்தது.
- சீனர்கள் அளித்த கடனுக்குச் சராசரியாக 20 சதவீத வட்டி வசூலிக்கபட்டது.
- பர்மிய நில உரிமைக்காரர்கள் அதில் விவசாயம் செய்தோருக்கு விதை வாங்கவும்,
உரம் வாங்கவும் கடன் தந்த தொகைக்கு வட்டியாக ஆண்டுக்கு 40லிருந்து 60 சதவீதம்
போடப்படது.
பர்மிய குறுகியகாலக் கடன் அநியாய வட்டிக்குள் அவர்களைத்தள்ளும். சீன
லேவாதேவிக்காரர்களின் வட்டி விகிதமும் அதிகம். அதே சமயம் கிராமங்களில் ஏஜெண்ட்
நெட்வொர்க்கும், செட்டியார்கள் அளவுக்குக் கிடையாது.
விரைவில் கிடைக்கக் கூடிய கடன் (1 மணிநேரத்தில்!), எல்லா நேரங்களிலும்
திறந்திருப்பது (வருடத்தில் நான்கு நாட்கள்தான் விடுமுறை), அணுக எளிதாக
இருப்பது, குறைந்த வட்டி விகிதம்- ஆகியவை செட்டியார்கள் வங்கியை பர்மிய
விவசாயிகளுக்கு நெருக்கமாக்கியது. சாதாரண பர்மிய விவசாயிக்கோ, சிறு தொழிலில்
முனையும் பர்மியருக்கோ பிரிட்டிஷ் இம்பீரியல் வங்கியின் கடன் என்பது கனவில்
கூட எண்ண முடியாத ஒன்று. நாட்டுக்கோட்டை செட்டியார்கள்தான் அந்த இடத்தை
நிரப்பியவர்கள். செட்டியார்களின் ஏஜெண்டுகள் வழியாக வங்கி வசதியே இல்லாத
தொலைதூர சிறுகிராம பர்மிய விவசாயியும் கடன் பெற முடிந்தது. கீழ்பர்மாவில்
ஒவ்வொரு 5000 பர்மியருக்கும் ஒரு செட்டியார் வங்கி ஏஜெண்ட் இருந்தார். பர்மிய
லேவாதேவிக்காரர்களுடனோ அல்லது சீன லேவாதேவிக்காரர்களுடனோ ஒப்பிடும்போது
ஒப்பீட்டில், குறைவான வட்டி விகிதத்தின் பேரில் செட்டியார்களின் வங்கி கடன்
வழங்கியது.
[image: bch]
பலிகடாக்களான பர்மாவின் செட்டியார்கள்
இவ்வாறு பிற லேவாதேவிக்குழுக்களால் இயலாத அளவுக்கு குறைந்த வட்டியில்
செட்டியார்கள் கடன் தரமுடிந்தமைக்கு காரணம் நாட்டுக்கோட்டை செட்டியார்களின்
*சாதிக்கட்டுமானம்*. சாதிக்கட்டுக்குள் கொடுக்கல்-வாங்கல் வழியாகவும்
ஊரிலிருந்து ஏஜெண்டுகளின் இறக்குமதி வழியாகவும் செலவழிக்காது சேமிக்கும்
குணமுள்ள குடும்ப அமைப்பாலும் ரிஸ்க்-ரிவார்ட் என்கிற இரண்டையுமே
பரவலாக்கியது. அதன் வழியாக செட்டிகள் வழங்கும் கடனுக்கு ரிஸ்க் ஒட்டுமொத்தமாக
கீழிறங்கியது. அதனால் மற்ற குழுக்களை விட குறைந்த வட்டியில் பர்மிய
செட்டியார்களால் தொழில்களுக்கு கடன் வழங்க முடிந்தது. இது பர்மிய லேவாதேவிக்
குழுக்களின் கடும் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது.
1930-இல் உலக பொருளாதாரம் ஒட்டுமொத்தமாகச் சரிந்தபோது வங்கித்தொழில் பெரும்
சரிவை அடைந்தபோது, கடனுக்கு ஒத்தியாக வைக்கப்பட்ட நிலம் செட்டியார்கள் கையில்
வந்தது, ஆனால் அவர்கள் நில உடமையாளர்கள் அல்ல. எனவே அவர்களது சரிந்த
பொருளாதாரம் நிமிரவேயில்லை.
ஜப்பான் பர்மா மீது படையெடுத்தபோது அஸ்ஸாம் நோக்கித் தப்பி கால்நடையாய் வந்த
கூட்டத்தில் மடிந்த ஒரு லட்சம் பேர்களில் செட்டிக் குடும்பங்கள் பல அடங்கும்.
இரண்டுமாதங்கள் நடந்து இந்தியாவிற்குள் நுழைந்தபோது அவர்களை மகிழ்ச்சியாய்
வரவேற்று உணவும் இருப்பிடமும் தந்து காத்தவர்கள் வங்காளிகளும், மார்வாரிகளும்
ஆவர்.
ஆனால் பர்மிய சுதந்திரத்துக்குப்பின் எல்லா காலனிய நிலங்களிலும் வெற்றிகரமாக
இருந்த ”அன்னிய” இனக்குழுக்கள் வெறுப்புடன் பார்க்கப்பட்டன. இலங்கை, பர்மா,
நைஜீரியா போன்ற நாடுகளின் இந்தியர்கள் குறிப்பாக கடும் அவதிக்குள்ளானார்கள்.
பர்மாவில் இந்த செட்டியார் வெறுப்புக்கு தூபம் போட்டு வளர்த்தவர்கள்
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். (இதற்கு பிரிட்டிஷ் ப்ராட்டஸ்டண்ட் மனோவியலில் ஊறி
இருந்த யூத வெறுப்பு மறைகாரணமாய் இருந்திருக்கலாம். 1943-இல்
வங்காளப்பஞ்சத்தின்போது, இந்திய வங்காள வியாபாரிகளை சர்ச்சில் வெறுப்புடன்
யூதர்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். செட்டியார்களைப்போன்றே யூதர்களும்
லேவாதேவித் தொழிலிலும் வியாபாரத்திலும் முன்னின்ற குழு என்பது கவனிக்கப்பட
வேண்டியது).
நிலத்தை ஒத்திக்கு வைத்து கடன் வாங்கச் சட்டம் இயற்றியதில் தொடங்கி, ஐரோப்பிய
வங்கிகளைப் பெருவியாபாரிகளுக்கான கடன் மையமாக மட்டுமே வைத்திருந்து பெரும்பணம்
ஈட்ட வழி செய்தது வரை பிரிட்டிஷ் காலனீய அரசு, பர்மிய சிறு விவசாயிக்கு அவரது
உழைப்பிற்கான எந்த ஒரு உத்தரவாதத்தையும் பாதுகாப்பையும் அளிக்கவில்லை. அரிசி
உற்பத்தியில் எந்த ரிஸ்கையும் காலனி அரசு எடுக்கவில்லை. அதற்கான ரிஸ்க்
முழுவதையும் நகரத்தார்கள்போன்ற இடைவங்கிக்குழுக்கள்மீது சுமத்தியது. ஆனால்
செயலூக்கம் மிக்க நகரத்தார்களின் தொழில் முனைப்பும், பர்மியர்களின் உழைப்பும்,
வளமான கீழ் பர்மாவும் இணைந்து அந்நிலத்தை ஆசியாவின் அரிசிக் களஞ்சியம் ஆக்கின.
அதே சமயம் 1930-இல் உலகப்பொருளாதாரம் பெருவீழ்ச்சி அடைந்து அதன் விளைவாய்
பர்மியப் பொருளாதாரம் அடி வாங்கியபோது, அதே காலனி அரசு பர்மியர்களின்
கோபத்திற்கு, இந்திய வியாபாரிகளையும், நகரத்தார் வங்கிகளையும் காரணமாய்
காட்டித்தரத் தொடங்கியது.
வெள்ளையரால் சுரண்டப்பட்டு ஜப்பானால் மிதிபட்டிருந்த பர்மிய மக்களின்
கோபத்திற்கு இரண்டாம் உலகப் போருக்குப் பின் கிடைத்த வசதியான பலிகடாவாக
செட்டியார்கள் ஆனார்கள். பர்மாவில் செட்டியார்களின் வங்கித்தொழில் பரவலாவதற்கு
முன் சிறுதொழில், சிறுவிவசாயக்கடன் என்பது மிகக் கடுமையான வட்டிகள்
தருபவர்களுக்கே சாத்தியப்பட்டவையாய் இருந்தன. ஆனால் *கடும் உழைப்பு, தெய்வ
நம்பிக்கை, குடும்ப அமைப்பு, சேமிப்பு, பேராசையின்மை ஆகிய குழு குணங்களின்
வழியாக செட்டியார்கள் பர்மிய லேவாதேவித்தொழிலில் வென்றனர்.* சிறு தொழில்
வளத்தைப் பரவலாக்கினர். சிறு விவசாயிகள் கூட கடன் வாங்கிப் பயிரிட்டு,
விளைச்சலை விற்று, கடனை அடைத்து, குடும்பம் வளர்த்து, கண்ணியத்துடன் வாழ
முடிந்தது.
1930-க்கு முந்தைய பர்மிய பொருளாதாரம் செட்டியார்கள் இல்லாமல் இல்லை.
இவர்களின் உடைமையைத்தான் சோஷலிசப் புரட்சி என்ற பெயரில் பர்மிய அரசு
அடாவடியாகப் பறித்து விரட்டியது. 1964-இல் இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக
விரட்டப்பட்டனர். அந்தச் சாபம் பர்மாவை அடுத்த கால் நூற்றாண்டுக்கு கம்யூனிஸப்
பிடியில் தள்ளியது. பொருளாதாரம் திவாலானது. ஏழ்மையில், உரிமைகள் பறிக்கப்பட்ட
பரிதாபத்தில், வாழ்வாதார அவலத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.
பிற வணிகர்கள்
பிற வணிகர்கள்
ஆங்கிலேய ஆதிக்கத்தின் பரவலாக்கத்தின் போது செட்டிகளும் தங்கள் வியாபாரத்தை
பரவலாக்கினர். சரி. இந்தியாவில் பிற சாதிகளும் வட்டித் தொழிலில்
ஈடுபட்டிருந்தது. அவர்களுக்கும் சாதிக்கட்டமைப்பு இருந்திருக்கும். அவர்கள்
ஏன் இவ்வாறு பரவவில்லை?
வியாபாரத்திலும், வட்டித்தொழிலிலும் மார்வாரிகள், அகர்வாலிகள் (கயஸ்த
பிராமணர்கள் கூட) ஈடுபட்டிருந்தார்கள். இவர்களுக்கும்- குறிப்பாக
மார்வாரிகளுக்கு- நகரத்தார்கள் போலவே சாதிக்கட்டுமானம் இருந்தது. ஓரளவுக்கு
பர்மாவிலும் ஈடுபட்டார்கள், ஆனால் செட்டியார்கள் அளவுக்கு அல்ல. இதற்கு
முதன்மைக்காரணம், இவர்கள் பெருகி வந்த வட இந்திய வணிகத்தில் முதலிலேயே
நுழைந்து நிலைத்தவர்கள். செட்டியார்கள் பர்மாவில் பெற்ற early entrant
advantage இவர்கள் வட இந்தியாவில் பல்வேறு வணிகத்திலும் பெற்றிருந்தனர்.
உண்மையில் செட்டியார்கள் பர்மாவில் நுழைவதற்கு முந்தைய வணிகம் (உப்பு, அரிசி,
தானியங்கள் ஆகியவை) இந்த வட இந்திய சாதிகளிடம் கொள்முதல் செய்வதைச் சார்ந்தே
இருந்தது. (பிரிட்டிஷ் அரசு குறிப்பேடுகளில் அவர்களது உப்பளங்களிலிருந்து
நேரடியாகக் கொள்முதல் செய்த சாதிகளில் செட்டியார்கள் குறிப்பிடப்படவே இல்லை).
செட்டியார்கள் இந்த பிற சாதிகளுக்கு கீழ் தட்டில் இருந்த வணிகர்கள்-
இடைத்தரகர்களில் கீழடுக்கு- எனவே லாபத்தின் அளவு குறைவு, ரிஸ்க் அதிகம்.
1857க்குப்பிறகு ராணுவ, வணிக காரணங்களுக்காக வட இந்திய ஊர்களில் சாலைகள் அதிக
அளவில் செப்பனிடப்பட்டன, புதிய வழித்தடங்கள் திறந்தன, இதனால் அத்தனை உறுதியான
மரக்கட்டைகள் கொண்டு பலமான இழுவண்டிகள் தேவை என்பது இல்லாமலாயிற்று, இதன்
காரணமாக 30-40 ரூபாய்க்கு ஒரு வண்டி வாங்கலாம் என்கிற நிலை, அதே பணத்துக்கு 3
வண்டிகள் வாங்கலாம் என்று ஆகியது. இது மேலும் பல “அமெச்சூர்” சாதிகளை வட
இந்திய வியாபாரத்திற்குள் இழுத்தது. செட்டியார்கள் வியாபாரத்திற்கு போட்டி
அதிகமாகியது. செட்டியார்கள் அடிப்படையில் வியாபாரிகள். வியாபாரத்தைவிட குறைந்த
ரிஸ்கில் அதிக லாபம் கிடைக்கும் சூழல் அமையும்போது கடனுக்கு வட்டி
தருகிறார்கள். பாஸ்கர சேதுபதி ராஜாவுக்கு இவ்வாறு கடன் தந்து கடனை அடைக்க
முடியாமல் போய் கிராமங்களை அவர்களுக்கு எழுதித்தந்திருக்கிறார். (முதலீட்டின்
மேல் வரும் வருமானமே, அவர்களுடைய முழுமுதற் குறிக்கோளாக இருந்தது.)
இந்தப் பின்னணியில் இந்திய வணிகத்தை விடவும் அதே முதலீட்டை வைத்து வெளிநாட்டு
வணிகத்தில் போட்டாலோ அல்லது (பெரும் முதலீட்டு வசதியற்ற வெளிநாடுகளில்
போட்டாலோ) இந்திய வணிகத்தை விட அதிக லாபம் வரும் என்பதால் மலேசியா, இலங்கை,
பர்மா என்று போகிறார்கள். மார்வாரி போன்ற வட இந்திய வணிக சாதிகளைப் பொறுத்தவரை
இப்படிப்பட்ட நெருக்கடியில் அவர்கள் இல்லை. அவர்களது முதலீட்டுக்கு
பெரும்பாலும் இந்திய வணிகத்திலும் இந்திய லேவாதேவித்தொழிலிலுமே கணிசமான லாபம்
கிடைத்தது. ஏனென்றால் அவர்களுக்கு வட இந்திய துறைமுகங்களில் பல நூற்றாண்டுகளாக
நேரடி வியாபாரத் தொடர்புகள் இருந்தன. இந்த தொடர்புகளால் வணிக இடர்ப்பாடுகளின்
தன்மையைக் கணிக்க முடியும். இறக்குமதிப் பொருட்களை நேரடியாக ஒட்டுமொத்தக்
கொள்முதல் செய்யவும், விவசாய சாதிகளிடமிருந்து தானியங்கள், அரிசி ஆகியவற்றை
நேரடியாகக் கொள்முதல் செய்யவும் அவ்ர்களால் முடிந்தது. இதில் கிடைக்கும் லாபம்
இதற்கடுத்த தட்டுகளில் வணிகம் செய்த செட்டியார்களுக்குக் கிடைப்பதை விட
அதிகம். ரிஸ்க் குறைவு. செட்டியார்கள் பர்மாவில் நேரடியாக விவசாயிகளுடன்
தொடர்பு வலை ஏற்படுத்தியது இதுபோன்ற நேரடிக் கொள்முதல் சந்தையைக்
கைப்பற்றத்தான். இதனால்தான் பர்மிய விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பு
ஏற்படுத்திக் கொண்டார்கள். வங்கித்தொழிலில் அதிக லாபம் கிடைக்கவே,
விவசாயக்கடன், தொழில்கடன் என்று வளர்ந்தார்கள். வட இந்திய வியாபார சமூகங்களின்
முதலீட்டுக்கு இப்படிப்பட்ட அழுத்தம் அப்போது ஏற்படவில்லை. வட இந்திய
சந்தையிலேயே அவர்களுக்கு போதுமான “leverage” இருந்தது. (20-ஆம் நூற்றாண்டின்
துவக்கத்தில் ஏற்பட்டது, ஆனால் அப்போது இந்த வெளிச்சந்தைகளில் செட்டியார்கள்
உறுதியாக நிலைத்து விட்டிருந்தார்கள்.)
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
இக் கட்டுரையின் விமரிசனங்கள்
அடுத்துத் தரப்பெறும்.
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
*v **a n a k k a m** S u b b u* [image: ! ! ! Poooo Bear ! ! !]*.*
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.