ஜயதேவர்
ஆர். கிருஷ்ணசாமி

அரசனுடைய மனக்குமுறலைக் கேட்ட ஜயதேவர் புன்முறுவலோடு பதிலளித்தார். “மன்னா!
உன்னுடைய குமுறல்கள் யாவும் நியாயமானதே. குற்றவாளிகளைத் தண்டிப்பது மன்னனின்
தருமம். அந்தத் தருமத்தைக் கடைப்பிடித்து நீ குற்றவாளிகளைத் தண்டிக்கத்
துடிக்கிறாய். ஆனால் எனது தருமமோ, எனக்குத் தீங்கிழைத்தவருக்கும் நன்மை
செய்வதேயாகும். திருடர்கள் அவர்கள் தொழிலைச் செய்தார்கள். அது தருமமான தொழில்
அல்ல. அதனுடைய வினைப்பயனை அவர்கள் அநுபவிப்பார்கள். தாங்கள் செய்த தவற்றினை
உணரும் காலம் அவர்களுக்குக் கிட்டும். அவர்களுக்கு அன்று தண்டனை
அளிக்கப்படும்.

இப்பொழுது ஒரு குட்டிக் கதையைக் கூறுகிறேன் கேள். ஒரு சமயம், ஒரு பெரியவர்
ஆற்றங்கரை ஓரமாகச் சென்று கொண்டிருந்தார். அங்கு அவர் ஒரு காட்சியைக் கண்டார்.
ஒரு தேள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அனைத்து ஜீவராசிகளிடத்தும்
அன்பு செலுத்தும் பெரியவர் அந்தத் தேளைக் காப்பாற்ற நினைத்தார். விரைந்து
சென்று தேளை நீரிலிருந்து எடுத்து தரையில் போட்டார். மகிழ்ச்சியில் துள்ளியது
அதனால் தேள் மறுபடியும் நீரில் விழுந்தது. மூடனான தேளை எடுத்து திரும்பவும்
தரையில் விட்டார். ஆனால் தேள் மறுபடியும் நீரில் விழுந்தது. ஒவ்வொரு முறையும்
தரையில் தேள் வந்தவுடன் அது பெரியவரைக் கொட்டியது. பல முறை தேள் கடிபட்டாலும்
பெரியவர் அத்தேளிடம் காருண்யம் காட்டினார்.


இந்த விசித்திர விளையாட்டை அவ்வழியே வந்த வழிப்போக்கன் கண்டான். பெரியவரிடம்,
அவருடைய செய்கையை விளக்கவேண்டுமென வேண்ட அப்பெரியவர் அழகாக பதிலளித்தார்.”
தருமத்தின் செயலை யாராலும் தடுக்க இயலாது. எல்லா ஜீவராசிகளிடத்தும் கருணை
காட்டுவது என்னைப் போன்ற ஞானிகளின் தருமம். என்ன நேரினும் இந்தத் தரும குணத்தை
எங்களால் மாற்றிச் செயல்பட முடியாது. எங்களைப் போன்ற ஞானிகளின் ஜீவகாருண்ய
குணத்தை யாராலும் மாற்ற முடியாது. எல்லாம் ஈசன் செயல் என்ற எண்ணத்தோடு
செயல்படுபவர்கள் நாங்கள். ஆகவே தவித்த தேளைக் காப்பாற்றுவது என்பது என்
இயற்கையான குணம். அதேபோல் கொட்டுவது என்பது தேளின் இயல்பான குணம். தர்மத்தின்
இயல்பால் ஏற்படும் பழக்கம் மனித வர்க்கம் உள்ளவரை இருக்கும். அதனை மாற்ற,
படைத்த இறைவனுக்கே அதிகாரம் இல்லை. ஆக, கருணையின் வடிவான இறைவனின் எண்ணத்தை
எந்நேரமும் நெஞ்சில் இருத்தி, அவன் எண்ணமாகவே ஆகியபின், என்னிடம் கருணையைத்
தவிர வேறு எண்ணத்திற்கு இடமில்லை. ஆக தேளின் குணம் அறிந்தும் அதைக்
காப்பாற்றுவது என் தருமகுணம். அதே போல் அந்தத் தேளின் குணமோ, தனக்கு ஆபத்து
என்ற நிலையில் கொட்டுவது இயல்புதானே? ஆகவேதான் என் குணப்படி நடந்து
கொள்கிறேன். தேளும் அதன் குணப்படி நடந்து கொள்கிறது. இதில் ஆச்சரியப்பட என்ன
இருக்கிறது? ஆக உண்மையைப் புரிந்து கொள். அவரவர் தருமப்படி அவரவர்
செயல்பட்டால் அங்கு மகிழ்ச்சியே தவிர துன்பத்திற்கு இடமில்லை. தேள்
கொட்டியதால் எனக்குத் துன்பம் ஏதுமில்லை. என் இயல்புப்படி நடந்து கொள்வதில்
எனக்கு மகிழ்ச்சியே.” அதைக் கேட்ட வழிப்போக்கன் விக்கித்து நின்றான்.
தருமத்தின் நிலைப்பாடு கண்டு ஆச்சரியப்பட்டான்.

தருமம் தலைகாக்கும்; தலைமுறையையும் காக்கும்; அவன் முன்னோர்களை நற்கதிக்கு
இட்டுச் செல்லும். இதுதான் தருமத்தின் வலிமை. இந்த உண்மையைத்தான்
புராணங்களும், இதிகாசங்களும் புகட்டுகின்றன. ஆகவே மேலும் என்னை ஏதும்
வற்புறுத்த வேண்டாம். எனக்குத் துன்பம் அளித்தவர்களின் விவரத்தையும் கேட்க
வேண்டாம். விசாரணை ஏதும் தேவையில்லை.” என்றார் ஜயதேவர்.

இதைக் கேட்ட கிரௌஞ்ச மன்னன் தன்னை மறந்து திகைத்து நின்றான். “இவ்வளவு
துன்பத்திலும் இவருடைய கருணை சிந்தனை விவரிக்க இயலாது. என் குருநாதர்
மும்மூர்த்திகளின் அவதாரம். இவரைப் போற்றிப் பணிவதுதான் என் தருமமாகும்.” என
எண்ணிய மன்னன், ஜயதேவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தான்.
விரைவில் ரணங்கள் ஆறி கை, கால் இழந்த நிலையிலும் மகிழ்ச்சியோடு காணப்பட்டார்.
இப்படி சுகபோகத்தில் ஜயதேவரை இருக்கவிடுவானா இறைவன்? இதுவரை தான் நீரில்
மிதந்து வந்ததும், அதன்பின் காப்பாற்றப்பட்டதும், பகவன்தாஸால் பணிவிடை
செய்யப்பட்டதும், பகவன்தாஸ் பொற்கிழி கொடுத்து அனுப்பியதும் திருடர்களால் அவை
யாவும் அபகரிக்கப்பட்டு கை, கால் இழந்ததும் திரைப்படக் காட்சிபோல் ஞாபகம்
வந்தது.

‘என்னைக் காணாது பத்மாவதி தன்னந்தனியாக என்ன கஷ்டப் படுகிறாளோ? உணவுக்கு என்ன
பாடுபடுகிறாளோ? ஊர் மக்கள் அவளை எவ்வளவு நாள்தான் காப்பாற்றுவார்கள்?
முறைப்படி கைபிடித்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, வாழ் நாள் துணைவியாக
ஏற்றவளைத் தவிக்க விடுவது முறையா?’ என தனக்குள்ளேயே புலம்பினார். மனைவியைப்
பார்க்க வேண்டுமென துடித்தார்.

அதே சமயம் பத்மாவதியின் நிலை என்ன? அவளைக் கணவனுடன் சேர்த்து வைக்க வேண்டாமா?
இறைவன் செயல்பட ஆரம்பித்தான்.


கணவனை விட்டுச் சிறிது காலம் பிரிந்தபின் தன் கணவர் இறைவன் அருளால்
நன்றாகத்தான் இருப்பார் என்ற நம்பிக்கையில் வாழ்நாளைக் கழித்து வந்தாள்
பத்மாவதி. ஊர் மக்களால், நாளடைவில் துன்பங்கள் வரலாயின. “உலை வாயை மூடலாம்;
ஊர் வாயை மூட முடியாது.” என்பது பழமொழி. அதற்கிணங்க ஊர் மக்கள், ஜயதேவரைப்
பற்றி மாறுபட்ட கருத்துகளைக் தெரிவித்தனர். சிலர் அவர் இயற்கை எய்திவிட்டார்
எனக் கூறினர். மற்றும் சிலர், “ஜயதேவரோ முற்றும் துறந்த ஞானி ஆகவே துறவறம்
பூண்டிருப்பார். இனி கிராமத்துக்குத் திரும்பமாட்டார். என்றார்கள் மற்றும்
சிலர். கணவனை இழந்து சுமங்கலியாக வாழ்வது தருமமாகாது” என்றனர். சிலர், “ஒரு
பெண்மணி தன்னந்தனியாக வாழ்வது சாத்தியமாகாது. இவள் என்ன செய்யப்போகிறாளோ?”
எனக் கவலைப்படுவதுபோல் பாசாங்கு செய்தனர். ஆனால் பத்மாவதியோ மனம் தளராது
திடமாக வாழ்ந்து வந்தாள். அவளுடைய மனத்தில் ஒரு நிச்சயமான எண்ணம்
நிலைத்திருந்தது. என் கணவர் எந்நேரமும் இறைவனின் தியானத்திலேயே இருப்பவர்.
எனவே அவருக்கு ஒன்றும் நேரிடாது. என் கணவர் என்னைக் கைவிடமாட்டார் என்ற
திடநம்பிக்கையுடன் இருந்தாள். அந்த நம்பிக்கையானது ஊரார் வார்த்தைகளைப்
புறக்கணிக்கச் செய்தது. இருப்பினும் நாள்கள் வேகமாகச் சென்றன. இந்தக் கால
தாமதம் அவள் உள் மனத்தை உறுத்த ஆரம்பித்தது.

நாளுக்கு நாள் இந்த உறுத்தல் அதிகமாக அதிகமாக கடைசியில் இறைவனையே சரணடைய
முனைந்தாள். காலையில் எழுந்து தன் நித்திய பணிகளைச் செய்தாள். கணவர் இருந்தால்
அவள் அவருக்கு என்னென்ன பணிவிடைகளை எல்லாம் செய்வாளோ அவை அனைத்தையும்
கண்ணனுக்குச் செய்தாள். கணவனிடத்தில் கண்ணனைக் கண்டாள். கண்ணனுக்குச் செய்யும்
பணிவிடை யாவும் கணவனுக்கு என தூய எண்ணம் கொண்டாள். கணவன் எந்நேரமும் கண்ணன்
எண்ணத்தில் இருக்கிறான். அந்த எண்ணமே பத்மாவதியால் தன் கணவனை கண்ணனாக
அநுபவிக்க முடிந்தது. இது உண்மைதான் என்பதை பிற்காலத்தில் ஒரு நிகழ்ச்சி மூலம்
கண்ணனே திருவிளையாடல் நிகழ்த்திக் காண்பித்தான். இந்நிலையில், கண்ணனிடம் தன்
கணவன் சீக்கிரம் திரும்பி வரவேண்டுமென வேண்டினாள். தன் பக்தையின்
வேண்டுகோளுக்கு இறைவன் செவி சாய்த்தான். தன் இல்லத்தில் கண்ணனுக்கு ஆராதனை
செய்து அமுதளித்து மானசீகமாகத் தானும் உண்டு கண்ணயர்ந்தாள். அவளது அரை
நினைவில் வாசல்கதவு தட்டும் சத்தம் கேட்டது. கணவர் தான் வந்து விட்டார் என
விரைந்து வாசலுக்கு ஓடினாள். கதவைத் திறந்தவள் கண்ட காட்சி அவளைத் திகைக்க
வைத்தது. காட்சியைக் கண்டவள் தன்னை மறந்த நிலையில் நின்றாள்.

எந்நேரமும் கண்ணனையும், கணவனையும் நினைத்து ஆவலுடன் வாசலுக்கு வந்தவளுக்கு
ஏமாற்றமும் திகைப்பும்தான் ஏற்பட்டது. வாசலில் நின்றவரைப் பார்த்தபின்
பத்மாவதியின் மனத்தில் பலவிதமான கற்பனை ஓட்டங்கள் ஓடின. “இவர்கள் ஏன்
இந்நேரத்தில் வரவேண்டும்? இவர்கள் ஏன் ஜயதேவரைத் தேடிவந்தார்கள்? ஏதேனும்
குற்றம் நடந்துவிட்டதா? என் கணவர் தூய்மையானவர்; நேர்மையானவர்; கருணாமூர்த்தி;
தன்னைத் துன்புறுத்தியவனையும் அன்போடு அரவணைக்கும் குணமுள்ளவர்; அவர்
யாருக்கும் தீங்கு செய்யமாட்டார். அப்படி இருக்க இவர்கள் வாயிலில் வந்து
நிற்கின்றனரே, இவர்கள் யார்? எதற்காக இந்த இல்லத்தைத் தேடி
வந்திருக்கிறார்கள். ஐயனே! கண்ணா! நற்செய்திதான் எனக்கு அளிக்க வேண்டும்.
கணவனில்லாது பல துன்பங்களை அநுபவித்து விட்டேன். இனியும் என்னால் சோதனைகளைத்
தாங்க இயலாது. உன்னையே சரணடைந்தேன். என்னைக் காப்பாற்றுவதும் ஆட்கொள்வதும் உன்
கடமை. எனக்கு ஒரு நல்ல செய்தியைக் கொடுத்து என் கணவனோடு என்னைச் சேர்த்துவை.”
என மனத்திற்குள்ளேயே பல்வேறு எண்ணங்களை ஓடவிட்டாள்

இப்படியெல்லாம் பத்மாவதியை எண்ண வைத்த அவர்கள் யார்? யார் வாசலில் வந்து
நின்றனர்?                                       தொடரும்...
https://www.youtube.com/watch?v=zH3gjTTUlF0

     <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


[image: Sonja A]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



   *v **a n a k k a m**  S u b b u*

*  .*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to