அக்காலக் கடிதப் போக்கு வரத்து (நன்றி டாக்டர் எஸ் ஜெயபாரதி எழுதிய புத்தக
வித்தகர் ரோஜா முத்தையா பாகம் 3)
பர்மா, வியட்நாம், இலங்கை, மலாயா, சுமாத்ரா முதலிய நாடுகளில்
செட்டிநாட்டுக் காரர்கள் வர்த்தகம் செய்தனர். அப்போதெல்லாம் கப்பல்
போக்குவரத்துத்தான். கடிதங்கள் சாதாரணமாக பர்மா, மலாயா போன்ற நாடுகளுக்கு
பத்துநாட்களில் சேரக்கூடும்.
சுமாத்ராவுக்கும் சைகோனுக்கும் இன்னும் அதிக நாட்கள் பிடிக்கும்.
பலர் அந்தக் காலத்தில் மாதமொருமுறை கடிதம் எழுதுவதை
வழக்கமாக வைத்திருந்தார்கள்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு கப்பலிலும் ஆட்கள் வந்து
போய்க்கொண்டேயிருந்தனர். ஆகவே அவர்களிடம் நேரில் சொல்லியனுப்பப்படும்
தகவல்களும் உண்டு.
இதனை 'ஊர்த்தாக்க' என்பார்கள்.
"ஏங்கிறேன்....ஊர்லர்ந்து என்னமாச்சும் தாக்க மோக்க
உண்டா?" என்று விசாரித்துக்கொள்வார்கள்.
தனிப்பட்ட தாக்கல், பொதுத்தாக்கல் என்று வகைவகையாக அவை
விளங்கும்.
கடிதங்கள் அந்தக் காலங்களில் அவ்வளவு ரகசியமானவையல்ல.
பிரைவேட் கடிதங்கள் வந்தால் சந்தேகப்படுவார்கள். "மேப்படியாரு என்னத்தையோவ்ல்ல
பொத்தி பொத்தி வச்சுக்கினு படிச்சிக்கினே இருக்காஹ", என்று ஒருவருக்கொருவர்
சொல்லிக் கொள்வார்கள்.
சில கடிதங்களின் மேல் உறையில் 'இன்னார் மேல்பார்த்து
இன்னாரிடம் குடுக்க வேண்டியது', என்றுகூட எழுதியிருப்பார்கள். 'இன்னாருக்கு
இன்னார் படித்துச் சொல்ல
வேண்டியது', என்றும்கூட எழுதப்பட்டிருக்கும். படிக்கத் தெரியாதவர்களுக்காக
அப்படி எழுதியிருப்பார்கள்.
இந்த மாதிரியான கடிதங்கள் - 1910-ஆம் ஆண்டு கடிதங்கள்
உட்பட பல கடிதங்களைச் சேகரித்து வைத்திருந்தார்.
அந்தக் காலங்களில் செட்டிநாட்டு வர்த்தகர்கள் சென்ற
இடங்களை 'டாப்பு' என்று குறிப்பிட்டார்கள். 'வர்மா டாப்பு, மலாயா டாப்பு,
செய்கோன் டாப்பு' என்றெல்லாம் அந்தந்த இடங்களை அழைத்தார்க்கள். டாப்பு என்பது
வர்த்தகமையம் போன்றது.
இந்த மாதிரியான டாப்புகளில் முதலிடம் வகித்தது 'வர்மா
டாப்பு' என்ப்பட்ட பர்மாதான். அதற்கு அடுத்த நிலையில்தான் மற்ற இடங்கள்
இருந்தன.
பர்மாவுக்குச் சென்ற கப்பல்களில் பிரபலமாக இருந்து
அரோண்டா ARONDA என்னும்
கப்பல். கடிதங்களும் அதன்மூலம் சென்றிருக்கின்றன.
*அரோண்டாக் கப்பல்*
*அரோண்டாக் கப்பல் பயணிகள் ஞாபகார்த்தமாக *
*வைத்துக்கொள்ள விற்கப்பட்ட *
*அரோண்டா போஸ்ட்கார்டு*
முத்தையா செட்டியார் ஒரு கடித உரையை எடுத்துக்காட்டினார்.
விளக்கமும் சொன்னார்.
"இது ரொம்பவும் விசேஷமான காயிதம். இதுல இந்தக் கவருல
பாருங்க. 'Salvaged from Aronda' - அப்பிடீன்னு சாப்புக் குத்தீருக்கு,
பாருங்க. அது முதல் உலகயுத்தத்துல பர்மாவ்லேர்ந்து அனுப்புன காயிதம்.
தோன்ஸேயிலேர்ந்து
தேவகோட்டைய்ல ஒரு புள்ளிக்கு வந்த காயிதம். அந்தத் தபாலெல்லாம் 'அரோண்டா'ங்குற
கப்பல் மூலமா அனுப்பியிருக்காஹ.
"அதுல குண்டப் போட்டுட்டாங்க்ய. கப்பலும் முழுகிப்போச்சு.
அப்பறம் கொஞ்சநாள் கழிச்சு, கடலுக்குள்ள முழுகிப் பாத்து இந்தத் தபாலெல்லாம்
இருந்த பைஹள அப்பிடியே வெளியில எடுத்துக்கினு வந்துட்டாஹ. அப்பறம் அந்தத்
தபாலையெல்லாம் அந்தந்த ஆளுஹகிட்ட பங்கடவா ஒப்படைச்சுட்டாஹ. பாருங்க,
வெள்ளக்காரனோட சாமார்த்தியத்த. எவ்வளவு கருக்கடையாச் செஞ்சுருக்காங்க்ய!"
அந்தக் கவர்கூட்டைக் க்லோஸப்பில் படம் எடுத்துக்கொண்டேன்.
*கடலுள் மூழ்கியும் உடையவரைத் தேடி வந்தடைந்த கடிதம்*
--
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
*v **a n a k k a m** S u b b u* [image: ,,i,, ^_^ ..i..]*.*
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.