*ஜயதேவர்ஆர். கிருஷ்ணசாமி*

*வாழ்க்கை அறநெறிப்படி இருக்க வேண்டுமென வாழ்ந்து காட்டினான் இராமன். எப்படி
வாழ்க்கையில் இருக்க வேண்டுமென போதித்தான் கண்ணன். கண்ணனின் போதனைகளும்,
இராமனின் வாழ்க்கை வழிமுறையும் மனித சமுதாய மேம்பாட்டுக்கு இரு கண்களாக
அமைகின்றன. நம்மிடையே வாழ்ந்த மகான்களும், மகானீயர்களும் இவ்வாறே வாழ்ந்து
காட்டினார்கள். அந்த வகையில்தான் ஜயதேவரும் பத்மாவதியும் தங்களின் வாழ்க்கையை
நடத்தினார்கள். இதற்கு இறைவன் ஒரு காவலனாக அமைந்து, அவர்களுடைய செயல்களில்
உற்ற நற்பயன்களைப் பிரகாசிக்க வைத்தான்.*

*பத்மாவதி, அரசியார்க்கு நல்ல பல அறிவுரைகளைக் கூறும்போது பதிவிரதா தர்மத்தின்
பெருமையினை எடுத்துக் கூறினாள். அதை அரசியரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவள் மனத்தில் ஒரு சந்தேகம் எழுந்தது. “பத்மாவதி எனக்கு குரு ஸ்தானத்தில்
அமர்ந்து போதனைகள் செய்கிறார். பல போதனைகள் மனத்திற்குத் தெளிவையும்
அமைதியையும் அளிக்கின்றன. ஆனால் இவர்கள் பதிவிரதா தர்மத்தில் கணவனுக்கு
ஒருகேடு என்றால் மனைவியும் அதனை அனுபவிக்க நேரிடும் என்று கூறுவதும், கணவன்
மறைந்தால் அதே நேரத்தில் மனைவியின் ஆவியும் பிரியும் எனக்கூறுவதும்
ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லையே. இது உண்மையிலேயே நடக்கக் கூடியதா?
என்றெல்லாம் எண்ணங்கள் எழ, அங்கு குருவின் வார்த்தைகளில் என் மனம்
சந்தேகப்படுகிறது. இது நியாயமானதாக எனக்குத் தென்படுகிறது. ஆகவே இதை
சோதித்துத்தான் பார்க்கவேண்டும்.” என எண்ணினாள்.*

*“குருநாதரின் வார்த்தைகளைச் சந்தேகிப்பது மகாபாபமாகும். அதனால் அதை ஏற்றுக்
கொள்ள முடியவில்லை என்றார். அது அவனுடைய அறியாமையின் காரணம். அந்த அறியாமையை
நீக்கக் கூடியவர் குரு ஒருவர்தான். அதையே நம்ப மறுத்தால் பாப விமோசனம் என்பதே
கிட்டாது. இதனை வெகு அழகாக இறைவன் இவர்கள் வாழ்க்கையில் நடத்திக் காட்டினான்.
இது அரசிக்கு மட்டும் புகட்டப்பட்ட பாடமில்லை. மனித சமுதாயத்திற்கே
புகட்டப்பட்ட பாடமாகும். திருவிளையாட்டினை இறைவன் ஜயதேவர் மூலமாகத்
தொடங்கினான்.*

*ஜயதேவர் அரசனிடம் தன் மனத்தில் எழுந்த ஒரு விருப்பத்தைத் தெரிவித்தார்.
“அரசே! உம் கருணை மிகுந்த உள்ளத்தை நான் பெரிதும் பாராட்டுகிறேன். உம்
ஆன்மிகப்பற்றும், கண்ணன் பால் நீர் கொண்ட தூய்மையான அன்பும் உம்மையும் இந்த
நாட்டையும் செழிப்பாகவும், செழுமையாகவும் வைத்திருக்கிறது. எல்லா மக்களுக்கும்
ஆன்றோர்களுக்கும் வெகுமதி அளித்து கௌரவிக்க வேண்டும். ஒரு வேள்வி தொடங்கி அதன்
முக்கிய அம்சமாக இதனைச் செய்தல் சிறப்பாகும். இதுவே இறைவனுக்கும் நீர்
காட்டும் நன்றியறிதலாகும்.” ஜயதேவரின் விருப்பத்திற்கு உடன் சம்மதம் தெரிவித்த
மன்னன் பெரியதொரு வேள்வி செய்ய உத்தரவிட்டான்.*

*வேள்வி மிகச் சிறப்பாக நடந்தது. அதனைத் தானே முன் நின்று நடத்தி வைத்தார்
ஜயதேவர். வேள்வியின் இறுதியில் எல்லாருக்கும் வெகுமதி அளிக்கப்பட்டது.
இதுமாதிரியான வேள்வியைப் பற்றிக் கேள்வியுற்ற நான்கு திருடர்கள், வெகுமதியைப்
பெறவேண்டும் என்ற ஆசையால் தங்களை சந்நியாசிகள் போல் வேஷம் போட்டு வேள்வி
நடக்கும் யாகசாலைக்கு வந்தனர். அதில் நான்கு திருடர்கள் ஜயதேவரின் கை கால்களை
வெட்டியவர்கள். வெகுமதிகள் வாங்க சந்நியாசிகளும் ஏழை மக்களும் வரிசையாக
நின்றனர். இந்தத் திருடர்களும் அந்த வரிசையில் இடம் பெற்றனர். மன்னனுக்கு
அருகில் அமர்ந்திருந்த ஜயதேவரும் ஒவ்வொருவரையும் வாயினால் வாழ்த்தி அரசர்
வெகுமதி அளிப்பதைப் போற்றி, மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார். இந்தத்
திருடர்களும் அரசனுக்கு வெகு அருகிலேயே வந்துவிட்டனர்.*

*அப்பொழுதுதான் அவர்கள் ஜயதேவரைக் கண்டனர். அரசனுக்கு அருகில் மகிழ்ச்சியோடு
வாழ்த்திக் கொண்டிருந்த ஜயதேவரைப் பார்த்ததும், அவர் யார் எனக் கண்டு
கொண்டனர். அவர்களில் ஒருவன் கூறினான். “அங்கே கை, கால் இழந்து காணப்படுபவரைப்
பாருங்கள். நம்மால் காட்டில் துன்புறுத்தப் பட்டு அவருடைய கை, கால்களை
வெட்டியது கவனத்தில் வருகிறதா? அவருடைய உடைமைகளைக் கொள்ளை அடித்தோம். அவரோ
இங்கு இராஜபோகத்தில் இருக்கிறார். நம்மை இனம் கண்டு கொண்டால் நம் தலைகளுக்கு
ஆபத்து. இங்குள்ள நிலவரங்களைப் பார்த்தால், இந்த வேள்வியும் வெகுமதி விழாவும்
நம்மைப் பிடிக்கத்தான் என்ற சந்தேகம் எழுகிறது.” இதைக்கேட்ட மற்றொரு கூட்டாளி
இதனை ஆமோதித்து “நாம் இங்கு மிகவும் உஷாராக இருக்க வேண்டும். நாம் அவர்
அருகில் சென்று தான் வெகுமதி வாங்க வேண்டும். அருகில் சென்றால் ஜயதேவருக்கு
நாம் யார் என்று தெரிந்துவிடும். அதற்குப்பிறகு நம் கதியை எண்ணிப் பார்க்கவே
உடல் நடுங்குகிறது. ஆகவே வெகுமதியும் வேண்டாம். அவர்களின் பார்வையில் படவும்
வேண்டாம். மிகவும் சாமர்த்தியமாக இங்கிருந்து அகன்று விடவேண்டும். தப்பிச்
செல்வது தான் சிறந்த வழியாகும். நம் உயிர்களும் காக்கப்படும்.”*

*இதைக்கேட்ட மற்றவர்களும் அதனையே சிறந்த வழி என ஆமோதித்தனர். ஆகவே மெதுவாக
வரிசையிலிருந்து விலகி, முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றனர். ஓர் அடி கூட
எடுத்து வைத்திருக்க மாட்டார்கள். அவர்களை நோக்கி ஒரு குரல் எழுந்தது.
அந்தக்குரல் அவர்களை அழைத்தது. அது ஜயதேவரின் குரல்! அவர்கள் திடுக்கிட்டனர்.
எவ்வளவோ பாதுகாப்பாக இருந்தபோதிலும் ஜயதேவர், தங்களை இனம் கண்டு
கூப்பிடுகிறாரே எனத் திகைத்தனர். குரல் வந்தவுடன் அரசனின் காவலர்கள் உடனடியாக
அத் திருடர்களை நோக்கி வந்தனர். “ஐயா! உங்களை அரசர் அழைக்கிறார். ஜயதேவர்
உங்களை அழைத்து வரும்படி ஆணையிட்டுள்ளார். ஆகவே என்னுடன் வாருங்கள்” எனப்
பணிவாக அவர்களிடம் கூற, அவர்கள் மேலும் திகைத்தனர்.*

*எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து விடுபட வேண்டுமென்ற குயுக்தியான
எண்ணத்துடன் அவர்களில் ஒருவன் “காவலர்களே! உங்கள் அரசர் நம்பியிருக்கும்
ஜயதேவர் ஒரு உண்மையான பக்தர் அல்லர். அவரை எங்களுக்கு ஏற்கெனவே தெரியும்.
நாங்கள் பக்கத்து நாட்டிலிருப்பவர்கள். இந்த ஜயதேவர் ஒரு பெருங்குற்றத்தைச்
செய்து நாட்டிலிருந்து கடத்தப்பட்டவர். அவருக்குத் தண்டனை அளிக்கும் வகையில்
அரசர் இவருடைய தலையைத் துண்டித்துவிட ஆணையிட்டார். அந்த ஆணையை நிறைவேற்ற
எங்களிடம் ஒப்படைத்தார். இவரிடம் பச்சாதாபப் பட்டு நாங்கள் கை, கால்களை
மட்டும் வெட்டி எங்கள் அரசரிடம் காண்பித்து இவரைக் கொன்று விட்டதாக அரசரை நம்ப
வைத்தோம். எங்கள் மேல் உள்ள கோபத்தால், எங்களை இனம் கண்டு கொல்வதற்காக இந்த
உத்தியை கையாளுகிறார். நாங்கள் தவறு ஒன்றும் செய்யவில்லை. அங்காவது அரசரின்
ஆணைகளைத்தான் நிறைவேற்றினோம் அதுவும் எங்களின் உயிரைப் பணயம் வைத்து இவரைக்
காப்பாற்றினோம். அந்தத் தவற்றை இப்போது உணருகிறோம்.*

*மாட்டிக்கொண்டு விடுவோமே என்ற அச்சத்தால் நாட்டைவிட்டு அகன்று, துறவிகள்
வேடம் பூண்டு அலைகிறோம். ஆகவே ஜயதேவரை அங்கிருந்து போகச் சொன்னாலன்றி எங்களால்
அங்கு வர இயலாது. உங்கள் அரசரிடம் போய்ச் சொல்லுங்கள்.”*

*இவ்வாறு கூறியதைக் கேட்ட காவலர்கள் வியந்தனர். நம் குரு பெருமானை இவ்வாறு
தவறாகப் பேசுகிறார்களே இதைப் போய் அரசரிடம் கூறினால், “குருவை இகழ்ந்தவர்களை
ஏன் விட்டு விட்டுவந்தாய்? அங்கேயே தண்டிக்க வேண்டியது தானே?” என
கோபிப்பார்கள். ஆகவே இவர்களை சமாதானப் படுத்தி அரசரிடம் அழைத்துச் செல்வதுதான்
சரியென எண்ணி “துறவிகளே! தங்களுடைய வார்த்தைகளைப் பொய் எனக் கூறவில்லை. ஆனால்
ஒன்று மட்டும் உறுதி. எங்கள் குருநாதரைப் பற்றி அவதூறாகக் கூறுபவர்கள் அழிந்து
விடுவார்கள். தாங்கள் வேறு யாரையோ மனத்தில் கொண்டு தவறாக எங்கள் குருநாதரைப்
பற்றிக் கூறுகிறீர்கள். எங்கள் குருநாதர் கருணையின் இருப்பிடம். எந்நேரமும்
கண்ணனையே கவனத்தில் கொண்டவர். எவ்விதத் தவறும் செய்யமாட்டார். அவர்
குற்றமற்றவர். ஆகவே தவறாகத் தாங்கள் கூறியதை அப்போதே மறந்து விட்டோம். தயை
கூர்ந்து எங்களைப் பின் தொடர்ந்து வரவேண்டும்.”*

*காவலர்களின் சாதுரியமான பேச்சு திருடர்களிடையே வேறுவிதமாகப்பட்டது. இவர்கள்
சாதுரியமாகப் பேசி மன்னரிடம் அழைத்துச் சென்று, தம் உயிர்களை
எடுத்துவிடுவார்கள். இவர்களின் பிடியிலிருந்து விடுபடுவது தான் சிறந்த
வழியாகும். கோபமாகக் கூறினர்: “எங்களின் வார்த்தைகளை நம்பாது ஒரு குற்றவாளியை
குரு என்று கூறி எங்களை அவமதிக்கின்றீர்கள். உண்மை அறியாது நீங்கள் செய்த
இச்செயலுக்கு நிச்சயம் பலன் பெறுவீர்கள். உங்கள் குருவிற்கு உயிர்ப் பிச்சை
அளித்தது எங்கள் தவறு. அதற்காக நாங்கள் வருந்துகிறோம். உங்கள் அழைப்பை ஏற்க
இயலாது. போய் வாருங்கள்.” என்று கூறிய வேளையில் ஒரு பயங்கரமான நிகழ்ச்சி
நிகழ்ந்தது. எல்லாரும் ஸ்தம்பித்துப் போயினர். இது மனிதனால் நிகழ்த்தக்
கூடியதில்லை. இறைவனால் தான் முடியும். அந்த நிகழ்ச்சி தான் என்ன?*

* https://www.youtube.com/watch?v=i4cTw5MmaY8*
<https://www.youtube.com/watch?v=i4cTw5MmaY8>

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


[image: Jocel]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



   *v **a n a k k a m**  S u b b u*

*  .*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to