*ஜயதேவர்*
ஆர். கிருஷ்ணசாமி

மகான்கள் அடிக்கடி கூறும் வார்த்தைகள் “எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும்.
இதற்கு ஈசன் கணேசன் அருளவேண்டும். எல்லாரும் நன்றாயிருக்க வேண்டும். இதற்கும்
ஈசன் கணேசன் அருளவேண்டும்.” என்பதாகும். எல்லா மகனீயர்களும், ஞானிகளும்
மக்களின் நலனையே விரும்புவர். ஆசாபாசத்திற்கு அப்பாற்பட்டு வாழும் இவர்களுக்கு
விருப்பு-வெறுப்பு, கோபம், பொறாமை போன்ற எண்ணங்கள் ஏற்படா. தனக்கு தீங்கு
செய்பவர்களுக்கும் நன்மை செய்வார்கள். “பகைவனுக்கு அருள்வாய்” என்று பாரதி
பாடினார். வள்ளுவரும் இதே கருத்தைக் கூறும்போது “தீங்கிழைப்பவன் நாண நன்னயம்
செயல்” எனக் குறிப்பிடுகிறார். ஜயதேவர் இதற்கு விதிவிலக்கல்லர் என்பதைக்
காட்டுகிறார். தன்னைக் கொல்ல வந்தவர்களுக்கும் நல்லது செய்ய முற்படுகிறார்.
இதனால்தான் அடியார்கள் சிறந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். எந்தத்
தவற்றுக்கும் பிராயச்சித்தம் உண்டாம். ஆனால் அடியார்களைப் பழித்தால் தண்டனை
நிச்சயம். இதை இறைவனாலும் தடுக்க இயலாது.

ஜயதேவரை “குற்றம் புரிந்தவன்” என்று இகழ்ந்த இவர்கள் நால்வருக்கும் நேர்ந்த
கதி கொடூரமாக அமைந்தது. ஜயதேவரை இகழ்ந்த நேரத்தில் அவர்கள் நின்றிருந்த பூமி
பேரிரைச்சலுடன் இரண்டாகப் பிளந்து நால்வரும் பூமியினுள் சென்று விட்டார்கள்.
இதைக் கண்ட காவலர்கள் திக்பிரமை பிடித்து நின்றார்கள். அதன்பின் அவர்கள் அரசனை
அணுகி நடந்தவற்றைக் கூறினர். அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. அரசனின் மனத்தில்
பல கேள்விகள் எழுந்தன. துறவிகள் உடைகளில் வந்தவர்கள் உண்மையான துறவிகளா?
அவர்கள் ஏன் குருதேவரை இகழ வேண்டும்? சிறு எறும்புக்கும் தீங்கிழைக்காத நம்
குருநாதர் தவறு எதுவும் செய்தாரா? நம் குருநாதருக்கும் எதிரிகள்
இருக்கிறார்களா? இறைவன் ஏன் இவ்வாறு திருவிளையாடல் புரியவேண்டும்?” இந்த
எண்ணங்கள் யாவும் அரசனைத் தடுமாற வைத்தன. இதைப் போக்க ஒரே வழிதான் உள்ளது.
குருநாதரையே கேட்டுவிடுவோம் என்று தன் மனக் கிலேசங்களை குருநாதரிடம்
தெரிவித்தார். சிரித்தவாறே ஜயதேவர் பதிலளித்தார். “அரசே! எனக்கு இன்னும் போதிய
பக்தி வரவில்லை. அப்படி ஒரு பூரணமான பக்தி இருந்தால் உம் மனத்தில் இவ்வாறான
கிலேசங்கள் தோன்றா. ஆக இவை யாவற்றிற்கும் காரணம் என் பாபங்கள் தாம். அநியாயமாக
அவர்களை அழைத்து வரச் சொல்லி அவர்கள் உயிரைப் பறித்து விட்டேன். அந்த இடத்தில்
அத்துறவிகளுக்கு பிராணத் தியாகம் ஏற்பட்டு விட்டது. அதனால் அந்தப் பூமியே
புனித பூமியாகிவிட்டது. அரசே! என்னை உடனடியாக அங்கே அழைத்துச் செல்லுங்கள்”
என்றார் பரபரப்பாக. அரசருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இருப்பினும்
குருவின் வார்த்தைகளை மீற மனமில்லை. துணிவுமில்லை. ஆகவே அரசர், ஜயதேவரை
அழைத்துக் கொண்டு பூமி பிளவுபட்ட இடத்திற்குச் சென்றார். இங்கு இறைவன் மற்றொரு
திருவிளையாடலைப் புரிந்தான். அடியார்களோடு இன்புற விளையாடுவது இறைவனின்
விருப்பம். ஆதலால் அங்கு ஓர் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. அது எல்லாரையும்
திக்கு முக்காடச் செய்தது.

காவலர்களை ஜயதேவர் அழைத்து, “காவலர்களே! அந்த அடியார்கள் இந்த இடத்தில்தானே
பூமிக்குள் சென்றார்கள்? இதனைப் பார்த்தால் பூமிபிளந்து பள்ளம் கண்ணுக்கெட்டிய
தூரம் வரை சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் இருக்கும் இடம் புலப்படவில்லையே!
காவலர்களே! உங்களால் கீழே இறங்கிப் பார்க்கமுடியுமா?” எனக் கேட்டார்.
இதைக்கேட்ட காவலர்கள் அரசனைப் பார்த்தார்கள். அதன்பின் “குரு பெருமானே! பூமி
வெடித்து இவர்கள் உள்ளே சென்றது கணப் பொழுதில் நடந்து விட்டது. இந்தப் பிளவின்
ஆழம் கண்ணுக்கெட்டிய வரை சென்று கொண்டிருக்கிறது. மனிதச் செயலின் ஆழத்தைக்
கணக்கிடலாம். தெய்வச் செயலின் ஆழத்தைக் கணக்கிடமுடியாது. இது இறைவனின்
செயலாகும். இதற்குள் இறங்க முற்பட்டால் நாங்கள் எங்களை இழக்க வேண்டுமே தவிர
வேறு வழியில்லை. அவர்கள் இறைவனால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனத்
தீர்மானித்தான். தண்டனை அளித்தான். இது இறைவனின் செயல். ஆகவே எங்களால் இந்த
ஆழமான பள்ளத்தில் இறங்குவது சாத்தியப்படாது.” என்று பதிலளித்தனர்.

அவர்களின் நீண்ட உரையைக் கேட்ட ஜயதேவர் புன்முறுவல் பூத்தார். அரசனோ தன்
காவலர்கள் பேசியதை ஆமோதிப்பத்துபோல் காணப்பட்டார். ஆனால் ஜயதேவரின் எண்ணம்
வேறுவிதமாகச் சென்றது. ‘இந்நிகழ்ச்சி என்னால் அல்லவா நடந்தது? என்னைக் கண்டு
அஞ்சித்தானே இவர்கள் தங்கள் முடிவினைத் தேடிக் கொண்டனர்? இந்நால்வரின்
இழப்புக்கு நான் தான் காரணம். இது தெய்வச்செயலோ அல்லது அவர்கள் கர்மவினையோ எது
எவ்வாறிருந்தாலும் இவர்களுடைய முடிவிற்கு நான் காரணமாகிவிட்டேன். ஆகவே
நான்தான் இதற்கு பிராயச்சித்தம் தேடவேண்டும்.’ இவ்வாறு எண்ணியவராக அரசரிடம்
கூறினார். “அரசே! நடந்தது நடந்துவிட்டது. இதற்கான பிராயச்சித்தத்தை நான்தான்
செய்யவேண்டும். அதற்கு என்னை நான் தயார்படுத்திக் கொண்டுவிட்டேன். இனி நடக்கப்
போகும் நிகழ்ச்சியைப் பற்றி யாவரும் கவலைப்பட வேண்டாம். மனம் குமுறவேண்டாம்.
உங்கள் பணிகளைத் தொடர்ந்து செய்யுங்கள். இறைவனிடம் உண்மையான பக்தியோடு
வாழுங்கள்.” என்று சொல்லிவிட்டு பள்ளத்தின் அருகே அழைத்துச் செல்லச் சொன்னார்.
அரசனும் பின் தொடர்ந்தான். அப்போது ஒரு திடுக்கிடும் நிகழ்ச்சி நடந்தது.
இறைவனை எண்ணியபடியே பள்ளத்திற்குள் விழுந்துவிட்டார். அப்போது அவர் “இறைவா!
என்பால் தன் அன்பை நாடிவந்தவர்களை நீ அழைத்துச் சென்று விட்டாய். இதனால் உன்
அடியார்களுக்கு அவப்பெயர் கிட்டும். அடியாருக்கு அவப்பெயர் கிட்டினால் அது
உன்னையே சாரும். உனக்கு அவப்பெயர் ஏற்பட நான் காரணமாகக் கூடாது. ஆகவே
அவர்களுடன் நானும் உன் திருவடிகளை நாடுகிறேன்.” என்று கூறினார்.

இவருடைய வார்த்தைகள் அரசனை நெகிழ வைத்தன. “என் குருநாதர் அடியார்கள் மீது
எவ்வளவு கருணை உள்ளத்தோடு செயல்படுகிறார்! என் குருவை இழந்து வாழவும்
வேண்டுமா? ஆகவே என்னையும் இறைவன் அழைத்துச் செல்லட்டும்.” எனக் கூறி அவரும்
பள்ளத்தில் விழுந்துவிட்டார். இதனைக் கண்ட காவலர்கள் அரண்மனைக்கு விரைந்தனர்.
அதே நேரத்தில் அரண்மனையில் பத்மாவதி அம்மையார் அரசியுடன் இருந்த வேளையில்
காவலர்கள் “முதலில் ஜயதேவர் பள்ளத்தில் விழுந்து மாய்ந்துவிட்டார்.” என்பதைக்
கூறியவுடன் அந்த எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது. பத்மாவதி அம்மையார் காதில்
இச்செய்தி விழுந்தவுடன் அவர் எந்த நிலையில் இருந்தாரோ அதே நிலையில் கற்சிலை
போல் உயிரற்று இருந்தார்.

அங்கே என்ன நடந்தது? மக்கள் யாவரும் “அரசனும் குருநாதரும் பள்ளத்தில்
மறைந்தனரே” எனக் கதறினார்கள். “அரசனையும் இழந்தோம். குருவையும் இழந்தோம்.
இந்நாட்டிற்கு இனி கேடுதான் விளையும். இறைவா! இது என்ன சோதனை? மன்னனை இழந்து
நாங்கள் வாழவேண்டுமா?” எனத் தங்கள் உயிர்களையும் தியாகம் செய்ய முன்வந்தனர்.

இதுவரை எல்லாவற்றையும் நடத்தி திருவிளையாடல் புரிந்த பரமேஸ்வரன் ‘இனியும்
வாளாவிருப்பது உசிதமல்ல. குருநாதரின் பெருமையையும் அரசனின் பக்தியையும்
இவ்வுலகுக்குக் காட்டவேண்டும், என்று எண்ணியவராக, அரசனுக்கும், ஜயதேவருக்கும்
அருள்பாலித்து அவர்களை மீட்டு வெளிவரச் செய்தான். இறைவன் பார்வதி சமேதராய்
அவர்களுக்குக் காட்சியளித்தான். குருதேவருக்கும் அரசனுக்கும் ஏற்பட்ட
மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் ஆரவாரம் செய்தனர்.
ஆடிக் குதித்தனர். ஆனால் ஜயதேவர் மட்டும் அமைதியாகக் காணப்பட்டார். அவரும்
அறியாமல் அவர் கால்கள் இரண்டும் இயல்பாய் இயங்கின, என்பதையும் உணராது ஈசனைப்
பார்த்து ஆனந்தக் களிப்போடு இருந்தார். என்றுமே ஜயதேவர் அழியும் தன் உடலைப்
பற்றிக் கவலைப் பட்டவர் அல்லர். ஆகவே அவருக்கு கால்களை இழந்தபோதும்
வருத்தமில்லை. திரும்பிப் பெற்ற போதும் ஆனந்தக் கூத்தாடவில்லை. இந்த
அவயவங்களைத் திரும்பப் பெற இறைவனை வேண்டவும் இல்லை. இது இறைவனின் சித்தம் என
இறைவனுக்கே அர்ப்பணித்துவிட்டார். இதுவே ஞானிகளின் சீரிய பண்பு. சுகதுக்கங்களை
சமமாகவே காணும் பேற்றை பெற்றவர்கள். அவர்கள் மனம் அந்தப் பரம்பொருளோடு இணைந்து
அதனையே எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கும்.

அரசனும், மக்களும் ஈசனின் கருணை பற்றிப் புகழ்ந்து நாமங்களைப் பாடிக் கொண்டு
அரண்மனை நோக்கிச் சென்றனர். ஜயதேவரும் அந்தப் பஜனையில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டார். ஜயதேவரும், அரசனும் வரும் செய்திகேட்டு அரசி மகிழ்ச்சி கொண்டார்.
இச்செய்தியை பத்மாவதிக்குத் தெரிவிக்க விரைந்தார். அங்கே அவர் கண்ட காட்சி!
பத்மாவதி சிலையாக உயிரற்று இருந்தார்.

‘அய்யகோ! கணவர் இறந்தார் என்ற சொன்ன செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் இவ்வாறு
இவர் உயிர் பிரிந்து விட்டதே. அன்று இவர் பதிவிரதா தர்மத்தை ஏளனமாக
நினைத்தோமே. அதன் பலன் தான் என்ன என்று எனக்குப் புத்தி புகட்டத் தன் உயிரை
மாய்த்துக் கொண்டாரோ. இப்போது என்ன செய்ய? அரசன் கேட்டால் என்ன பதில் சொல்ல
முடியும்? குருதேவர் கேட்டால் என்ன செய்வேன்? ஆகவே இவரை மறைத்து வேறு இடத்தில்
அவர்கள் கண்படாது செய்து விட்டால் பிறகு மெதுவாக இதைப் பற்றிக் கூறலாம், என
நினைத்துச் செயல்பட்டார்.

தொடரும்...
https://www.youtube.com/watch?v=Mmk5O-vHgiE

-- 

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


[image: Lizza S]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



   *v **a n a k k a m**  S u b b u*

*  .*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to