*ஜயதேவர்*
ஆர். கிருஷ்ணசாமி

வெகுண்ட அரசனின் வாயிலிருந்து கொடூரமான வார்த்தைகள் வெளிவந்தன. அதனைத்
தடுத்தாட்கொள்ள ஜயதேவர் எண்ணினார். ஆச்சரியத்துடன் அரசனைப் பார்த்தார்.
பதிலேதும் கூறவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. அரசியின் செயலினால்
துன்பத்திற்கு உள்ளானவள் பத்மாவதி. பத்மாவதியின் பிரிவினால் சோகமடைந்தவர்
ஜயதேவர். ஆகவே பதிலேதும் கூறாமல் ஜயதேவர், பத்மாவதியைப் பார்த்தார்.
அப்பார்வையின் பொருளை உணர்ந்தார் பத்மாவதி. இதுவன்றோ தாம்பத்ய ஒற்றுமை! கணவன்
நினைப்பதன் பொருள் அறிந்து செய்பவள் பத்தினியாவாள். இதனை நிரூபிக்கிறது இந்தச்
சம்பவம்.

பத்மாவதி பதிலளித்தாள் “அரசே! தங்களுடைய உள்ளக் குமுறலை நாங்கள் அறிவோம். அரசி
இதுநாள் வரை எங்கள் இருவரையும் மிகுந்த பரிவோடும், பணிவோடும் போற்றி
வந்திருக்கிறார். ஆனால் என்னை அரசிக்கு சோதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன்
ஏற்பட்டது? சிறிது சிந்திக்க வேண்டும். நான் சொன்ன வார்த்தைகள் அரசியை நன்கு
பாதித்துவிட்டன. அரசன் பள்ளத்தில் விழுந்து விட்டான் என்று அவளுக்கு கிட்டிய
செய்தி. அவளைத் துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. அந்தச் சமயத்தில் அவளைத்
தேற்றியிருக்க வேண்டும். நான் கண்டித்தேன். அதனால் நிலை இழந்த அரசி எனக்குச்
சோதனையிட்டாள். கணவன் இறந்த செய்தி கேட்டாலே மனைவியின் மரணம் சம்பவிக்க
வேண்டும் என்று கூறுவது சுலபம். அதன்படி நடைபெற மனைவிக்கு முற்பிறவி பாக்கியம்
இருக்கவேண்டும். அதை விடுத்து அரசியை நான் கடிந்தது அவளுடைய பதிவிரதைத்
தன்மையையே சந்தேகிக்கும்படி அமைந்துவிட்டது. இது எந்த அளவிற்கு அவள் மனத்தை
பாதித்தது என்பதற்கு அவள் என்னைச் சோதித்ததிலிருந்தே புலப்படுகிறது. குற்றம்
அவளுடையதல்ல. என்னுடையதுதான். பக்குவப்படாத மனத்தைச் சோதித்திருக்கக் கூடாது.
இருப்பினும் நடந்தது யாவும் அவன் செயல். இவை யாவற்றிற்கும் காரணமானவன்,
திருவிளையாடல் புரிந்தவன் அந்த மாயக் கண்ணனேயாவான். அரசியும் தன் செயலுக்கு
தண்டனை அநுபவித்து விட்டாள். நான் இறந்த நிலையில் இருப்பதைப் பார்த்த அவள்
மனம், துடிதுடித்தது. தன்னை இச்செயலிலிருந்து விடுபடுத்திக் கொள்ளப்
பாடுபட்டது. அந்தத் துடிப்பும், துன்பமுமே சரியான தண்டனையாக அமைந்துள்ளது.
வேறு தண்டனை ஏதும் தேவையில்லை. அவளை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவே
எங்கள் இருவரின் விருப்பமும்” என்ற நீண்ட உரைய்க் கோரிக்கையாக வைத்தாள்.

பத்மாவதியின் அறிவு பூர்வமான வார்த்தைகளைக் கேட்ட அரசன் வியந்தான். “இதுவன்றோ
உத்தமத் தம்பதியின் செயல்பாடு! தனக்கு துன்பம் இழைத்தவருக்கும் நலன்
செய்தலன்றோ உத்தமப்பண்பு.”

“இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”

என்ற குறளுக்கிணங்க ஜயதேவர் - பத்மாவதி செயல்பட்டது இன்றும் மனித சமூகத்திற்கு
ஒரு பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை. பத்மாவதியின் வார்த்தைகளைக் கேட்டு
அதன்படி அரசியை மன்னித்து ஏற்றுக் கொண்டான். பெரும் சங்கடத்திலிருந்து தன்னைக்
காப்பாற்றிய பத்மாவதியின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டாள் அரசி.

இவை யாவும் நடந்தது கண்ணனின் திருவிளையாடல்தான். ஜயதேவரின் பிறப்பு
அரசபோகத்தில் வாழ்வதற்கில்லை. இதனை அரசனுக்கு அறிவிக்க வேண்டும் என்று
தீர்மானித்த ஜயதேவர் “மன்னா! உன் உபசரிப்பும், பரிவும் என்னை வெகுவாக
மகிழ்ச்சி அடையச் செய்கிறது. ஆனால் என் மனமோ எந்நேரமும் கண்ணனையே நினைத்து
உருகிக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்தச் சூழ்நிலையில் ஆடம்பரமான வாழ்க்கையை
அனுபவிப்பதில் எனக்கு நாட்டமில்லை. என் கண்ணன் இஷ்டப்படி இன்னும் எத்தனையோ
என்னைச் செய்யத் தூண்டுகிறது. என் எண்ணத்தைக் காவியமாக எழுத்தில் வடிக்க
வேண்டுமென என் மனம் கூறுகிறது. அம்மாதிரியான செயல்களில் ஈடுபட எனக்குத் தனிமை
தேவை. ஆகவே எனக்கு என் கிராமத்துக்குச் செல்ல அனுமதி அளிக்கவேண்டும்.” என்றார்.

ஜயதேவரின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் மனம் வருந்தினான். என் குருநாதரை
என்றும் என்னுடனே வைத்துக் காக்க வேண்டும் என எண்ணியது வீணாகிவிட்டதே.
குருநாதர் தீர்மானம் செய்தால் அதில் உறுதியாக இருப்பதுதான் அவருடைய குணம்.
ஆகவே நிச்சயம் அவர் அரண்மனையில் மேலும் இருக்கமாட்டார் என்று தீர்மானித்தவராக,
ஜயதேவரின் வேண்டுகோளுக்கு இசைந்தார்.

நல்ல நாளாகப் பார்த்து வேண்டிய பொருள்களையெல்லாம் கொடுத்து வழியனுப்ப
நினைத்தார். ஆனால் ஜயதேவரோ தனக்குப் பொருளேதும் வேண்டாமென்று நிராகரித்தார்.
பொருளோடு வந்து தனக்கு நேர்ந்த கதியினைப் பற்றி நினைவு படுத்தினார். பொருளைத்
தடுத்தாலும், அரசனின் மற்ற ஏற்பாடுகளை மறுக்க முடியவில்லை. ஒருநல்ல தேரைக்
கொண்டு வரச்சொல்லி தன் குருதம்பதியை அதில் இருக்கச் செய்து வீரர்கள் துணையோடு
வழியனுப்பி வைத்தார்.

அரசனின் அன்பைக்கண்டு பெருமிதம் கொண்ட ஜயதேவர், அரசனையும் அரசியையும் மனமாற
வாழ்த்தி அவர்களின் அரசு திறம்படச் செயல்பட ஆசிகள் கூறினார்.

ஏற்கெனவே கூறியது போல் கண்ணனின் எண்ணம் ஜயதேவரின் மனம் முழுவதும் ஆட்கொண்டது.
கிராமத்திற்கு வந்தது முதல் அவர் பிரமை பிடித்தவர் போல் காணப்பட்டார். உலக
இயல்புகளில் நாட்டமில்லாது அப்பரம்பொருளையே எண்ணி அவர் மனம் ஏங்கியது. அவருடைய
அன்புத் தெய்வமான கண்ணன் எந்நேரமும் தன் மூச்சில், தன் இயக்கத்தில் முழுமையாக
இருக்க வேண்டும் என முயன்ற நேரங்களில் எல்லாம் பல்வேறு காட்சிகள் தோன்றலாயின.
அக்காட்சிகள் யாவும் கண்முன்னே நடப்பது போன்ற உணர்வு. அது மாதிரியான தோற்றம்
நனவாக இருக்கும் நேரத்தில் கனவாகக் காணும் சம்பவங்கள். கனவும், நனவும் நன்றாக
இணைந்து ஜயதேவரை கண்ணனின் அனுபவத்திற்கே இட்டுச் சென்றன. அக்காட்சிகளில்
கண்ணன் ஜீவாத்மாவாகவும், பரமாத்மாவாகவும், குருவாகவும் மாறிமாறி
காட்சியளித்தான். இதன் பொருள்தான் என்ன? ஜீவாத்மா, பரமாத்மா, குரு ஆகிய
மூன்றிற்கும் உள்ள தொடர்பு தான் என்ன? யோசித்து, யோசித்துக் களைப்படைந்தார்.
விடை தெரியவில்லை. கண்ணனையே வேண்டினார்.

“கண்ணா! இதென்ன திருவிளையாடல்? என் கண் முன்னே மாறுபட்ட காட்சியினைக்
காட்டியதின் பொருள்தான் என்ன? அவர் மனத்திரையில் கண்ணனின் பதிலாக கண்ணன்
கூறுவது போன்ற ஒரு தோற்றம் நிழலாடுகிறது. கண்ணன் தன் பெருமையினைக் கூற ஒரு மகா
காவியத்தை உருவாக்குவது போல் எண்ணமளிக்கிறான். அக்காவியத்தின் முக்கிய மூன்று
கதாபாத்திரங்கள் ஜீவாத்மா-பரமாத்மா-குரு. தன்னையே கண்ணனாகவும், ராதையை
ஜீவாத்மாகவும் சகியை குருவாகவும் சித்திரிக்கிறது ஜயதேவரின் மனம்.
ஜீவாத்மாவாகிய ராதையையும் பரமாத்மாவையும் கண்ணனும் இணைத்திருக்க, அதன்பின்
இருவரும் பிரிகின்றனர். சகியின் உதவியால் ராதை, கண்ணனைத் திரும்பப்
பெறுகிறாள். சுருக்கமாகக் கூறவேண்டுமானால் இதுதான் “கீத கோவிந்த”த்தின்
உட்கருத்தாகும். எட்டு வரிகளோடு கூடியதாக ஜயதேவரின் மனத்திலிருந்து எழுந்த
காட்சிகள் எழுத்து வடிவு பெற்றபோது, இது ஒரு மகாகாவியமாக வெளிப்பட்டது. எட்டு
வரிகளைக் கொண்டதால் இதற்கு “அஷ்டபதி” எனப் பெயர் சூட்டப்பட்டது. இப்படி
எழுதப்பட்ட அஷ்டபதியின் பெருமையை மகனீயர்கள் உணர்ந்து, இதனைப் பிரகாசமடையச்
செய்தனர். இன்றும் அஷ்டபதிகள் தெய்வச் சந்நிதியில் பாடப்பட்டு வருகின்றன.
முக்கியமாக குருவாயூரப்பன் சந்நியில் அஷ்டபதி பாடுவது சிறப்பு பூஜை
அம்சமாகும். இந்த அஷ்டபதிகளில் இசையைத் தவிர வேறு முக்கியமான செய்திகள்
அடங்கியுள்ளன. அஷ்டபதியைப் பற்றிய உண்மையை அறியாதவர்கள் அநேகர். இதனை ஒரு
சிருங்கார காவியமாக எண்ணுகின்றனர். இக்காவியத்தில் மேலெழுந்தவாரியாகக்
காணும்போது சிருங்கார பாவமே வெளிப்பட்டாலும் இது உன்னதமான ஒரு வேதாந்தத்தை
வெளிப்படுத்துகிறது. ஜயதேவருடைய வாழ்க்கைப் பின்னணியைக் காணும்போது,
ஜயதேவருக்கும் சிருங்காரத்திற்கும் வெகு தூரம் எனலாம். இக்காவியத்தை, ஜயதேவர்
எழுதிய முறையைக் காணும்போது இறைவனே உடனிருந்து இக்காவியத்தின் பெருமையினை
உலகுக்குக் காட்டியதாக இவருடைய வாழ்க்கை வரலாறு தெரியப்படுத்துகிறது.
ஜயதேவரின் வாழ்க்கை லட்சியமே, அஷ்டபதியை எழுதி உலகுக்கு அளிப்பது தானோ என
எண்ணத் தோன்றுகிறது.

அப்படி எழுதப்பட்ட அஷ்டபதி வடநாட்டை விட தென்னாட்டில் அதிகமாக வழக்கத்தில்
உள்ளது. காமனைக் கடந்தவன் கண்ணன். ஆயிரம் கோபிகைகளோடு ஆடினாலும், அஷ்ட
மகிஷிகளை மணந்தாலும் கண்ணன் ஒரு பிரும்மச்சாரி எனப் புராணங்கள் பகருகின்றன.
அப்படி இருக்க, காமத்தை உணர்த்தும் சிருங்கார ரச காவியத்தைக் கண்ணன் ஏற்பானா?
‘அஷ்டபதி’ என்பது இறைத்தத்துவத்தை விளக்கும் அற்புத காவியம். பரமாத்மாவோடு
ஜீவாத்மா இணையும் ஒரு மங்களமான கலியாண நிகழ்ச்சி. இறைவன் ஒருவன் ஜீவாத்மாக்கள்
அநேகர்; அந்த அநேகம் ஏகத்தோடு இணைவதுதான் ஈசனின் திருவிளையாடல். அதனைப் படம்
பிடித்துக் காண்பிப்பதுதான் ‘அஷ்டபதி’. ஜீவாத்மாவை, பரமாத்மாவோடு இணைக்க ஒரு
கருவியாக இருப்பவர் குரு. இந்த அதிசய தத்துவத்தை ஜயதேவர் உணர்ந்து ஓதுகிறார்.
அதுவே அறிவாகிறது. அதுவே பிரும்மமாகிறது. அதுவே தானாக இருந்து இயங்குகிறது.
அப்படிப் பெருமை வாய்ந்த காவியத்தின் சில பெருமைகளைக் காணலாம்.

தொடரும்...

<https://www.youtube.com/watch?v=EyLeeJgYNwA>
https://www.youtube.com/watch?v=EyLeeJgYNwA

<https://www.youtube.com/watch?v=EyLeeJgYNwA>

<https://www.youtube.com/watch?v=EyLeeJgYNwA>

<https://www.youtube.com/watch?v=EyLeeJgYNwA>

<https://www.youtube.com/watch?v=EyLeeJgYNwA>





*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



   *v **a n a k k a m**  S u b b u*

*  .*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to