*ஜயதேவர்*
ஆர். கிருஷ்ணசாமி

கீத கோந்தத்தில் பல அஷ்டபதிகள் இருந்தாலும் 24 அஷ்டபதிகள்தான் பிரசித்தமாகப்
பேசப்படுகின்றன. இந்த 24 அஷ்டபதிகளும் 12 சர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டு இதில்
24பிரபந்தங்கள் அடங்கியதாகப் பெரியவர்கள் கூறுவார்கள். முதல் அஷ்டபதியில்
கிருஷ்ணபரமாத்மாவின் திவ்விய லீலைகள் அவதாரங்களாக வருணிக்கப்படுகின்றன. கண்ணனை
அவர் ஓர் அவதாரமாகக் காணவில்லை. பரம்பொருளே கண்ணன் என அநுபவித்தார். ஆக இறைவன்
எடுத்த பத்து அவதாரங்களும் பரப்ரம்ம ஸ்வரூபன் கண்ணனே என ஓர் உயரிய தத்துவத்தை
வெளிக்காண்கிறார். ஆகவே இந்த பத்து அவதாரங்களும் கண்ணனின் லீலைகளாகக்
காணப்படுகின்றன. தன்னுடைய முதல் அஷ்டபதியில் கண்ணனின் அவதாரத்தைத் தவிர்த்து
பத்து அவதாரங்களை வருணிக்கிறார். கிருஷ்ணரின் இடத்தில் பலராம அவதாரம்
கூறப்படுகிறது. இதனால் ஜயதேவரின் பார்வையில் கண்ணன் மூலபுருஷனென்றும், அதன்
தோற்றமே மற்ற அவதாரங்கள் என்றும் உயரிய தத்துவத்தினை விளக்கி, ஞான
மார்க்கத்திற்கு இது ஓர் உபாயம் எனக் காண்பிக்கிறார். புத்தாவதாரத்தை ஒரு
கருணை அவதாரமாகக் காட்டுகிறார். இது புராணங்களிலிருந்து சிறிது மாறுபட்டதாகக்
காணப்படுகிறது. இரண்டாவது அஷ்டபதியில் இறைவன் வேறு, இறைவனால் படைக்கப்பட்டவை
வேறு என்ற எண்ணம் இருப்பது தவறு என்பதை உணர்த்தவே ராதை என்னும்
கதாபாத்திரத்தைக் கையாளுகிறார். இந்தப் பாத்திரத்தின் படைப்பை மிக உயர்ந்த
எண்ணத்தைக் கொண்டு காணவேண்டுமென உறுதியாகக் கூறுகிறார். எந்தப் புராணத்திலும்
ராதையைப் பற்றிக் குறிப்பு இல்லை. ஆனால் கோலோக விருத்தாந்தத்தில் ராதையின்
கலியாணத்தைப் பற்றிக் கூறுவதாகச் சொல்லப்படுகிறது. ஆக ராதையின் வாழ்க்கை
விவரங்கள் கூறப்படாவிட்டாலும் ராதையும், கண்ணனும் இணைவது கூறப்படுகிறது.
இதனைத் தன் கவிநயத்தோடு ஜயதேவர் அஷ்டபதியில் விளக்குகிறார். இங்கு இறையன்பே
காதலாகக் கனிகிறது. அந்தக் காதல் ஜீவனாக உள்ள எல்லா உயிர்ப் படைப்புகளையும்
இதற்கெல்லாம் காரணமாக உள்ள இறைவனோடு இணையவைக்கிறது. இது ஒரு ஜீவாத்மாவை,
பரமாத்மாவோடு இணையவைக்கும் சாதனமாகத் திகழ்கிறது. இதனை எவ்வாறு சிருங்காரக்
காவியம் எனக் கூறமுடியும்? இதற்கு இன்னொரு விளக்கமும் அளிக்கப்படுகிறது.

கண்ணனுக்கு பதினாயிரம் கோபிகைகள் தொடர்பு இருப்பினும் அவன் ஒரு
பிரும்மசாரியாகத்தான் விவரிக்கப்படுகிறான். எவ்வளவு நெருக்கமாக கண்ணன்
கோபிகைகளுடன் பழகினாலும் அவன் மனம் எவ்விதச் சலனமும் அடையவில்லை. ஆகவே
கண்ணனின் காதல் யாவும், கருணையின் வெளிப்பாடே ஆகும்.

இந்த நிலையில்தான் கண்ணன் கோபிகைகளோடு ஆனந்தமாக அவர்களுடைய அன்பை ஏற்றுச்
செயல்படுகிறான். இந்த அன்புச் செயலை கோபிகைகளோடு கண்ணன் சல்லாபமாக இருக்கிறான்
என ராதையின் தோழி ராதையிடம் தெரிவிக்கிறாள். ராதையாக இருக்கும் ஜீவன் அப்பரமனை
(கண்ணனை)க் காணத் துடிக்கிறது. அவளுடைய மனம் தவிக்கிறது. என் கண்ணனைக்
காண்பதெப்போது எனத் துடித்துக் கொண்டிருக்கிறது. இப்படித்தான் ஒவ்வொரு ஜீவனும்
இறைவனோடு இணையத் துடிக்கவேண்டுமென நினைவூட்டுகிறார் கவி. நாலாவது அஷ்டபதி
யாவும் இறைவனின் கோரிக்கையை வருணிக்கிறது. அலகிலா விளையாட்டுடைய அப்பரம்பொருள்
இம்மாய உலகைச் சிருஷ்டி செய்து பல விளையாட்டுகளைச் செய்வதற்கு ஒப்பாக இதனைக்
கூறலாம். இது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அதிசய வேடிக்கை. இதையே ஜயதேவர்
கண்ணனின் கோரிக்கையாகச் சித்திரிக்கிறார். இதனை “கேசவ கேளி ரகஸ்யம்” எனக்
குறிப்பிடுகிறார். இந்த ரகசியத்தின் குறிக்கோளே மனம் இறைவனோடு ஒடுங்குவது
ஆகும். இத்துடன் முதல் சர்க்கமும் இதனுள் அடங்கிய நான்காவது பிரபந்தமும்
நிறைவு பெறுகிறது.

ஐந்தாவது அஷ்டபதியில் ராதைக்குக் கண்ணன்பால் கோபமும், ஆத்திரமும் ஏற்படுகிறது.
ராதை, கண்ணன் தனக்குத்தான் என்ற இறுமாப்புடன் இருக்கிறாள். இந்த எண்ணத்தை
அகற்றவே கண்ணன் விளையாடுகிறான். நல்ல படிப்பினையைப் புகட்டுகிறான்.
எவ்விடத்தில் கோபமும், பொறாமையும் இருக்கின்றனவோ அங்கு கண்ணன் இருக்கமாட்டான்
என்பதை உணர வைக்கிறான். இருப்பினும் என்ன செய்வதென்று அறியாது ராதை
தவிக்கிறாள். இது ஒவ்வொரு ஜீவாத்மாவின் தவிப்பு ஆகும். இறைவன் தன்
அடியார்களைச் சோதிக்கிறான். இந்தச் சோதனைகள் யாவும் தன்னை அண்டியவரைத்
தூய்மைப்படுத்தவே என எண்ணுதல் அவசியம். அடியார்களை ஆண்டவன் சோதிப்பது
அவர்களுடைய மனத்தில் உள்ள அழுக்கை அகற்றுவதேயாகும். அந்தச் சமயத்தில்
அடியார்களின் மனம் இறைவனுடைய குணாதிசயங்களை எண்ணி எண்ணி வேண்டும்போது மன
அழுக்கெல்லாம் விலகிவிடும். அந்தச் சமயத்தில் இறைவன் எவ்வாறு செயல்படுவான்
என்பதை ஆறாவது அஷ்டபதி விளக்குகிறது. பல வகையிலும் தருமத்தை அனுஷ்டித்து, அதன்
பலன்களை இறைவனுக்கே அர்ப்பணித்து, அதன் விளைவால் இறைவனே கருணை கொண்டு குருவின்
வடிவாக அவதரித்து மன அழுக்குகளை அகற்றி சீடனை சீலனாக்குகிறார். இதனை
ஆதிசங்கரர் கூறும்போது “எவருடைய புத்தி கனிந்துள்ளதோ மற்றும் உள்ள
குணங்களிலிருந்து விடுபட்டு நிர்மலமாக உள்ளதோ இறைவனே அவர்களிடம் குரு
வடிவெடுத்து பேரறிவைப் புகட்டுகிறான். எந்தச் சீடனுடைய உள்ளம் தெளிவாகவும்
தூய்மையாகவும் இருக்கின்றதோ அவனுக்குத்தான் குரு பேரறிவைப் புகட்டுகிறார்.
இதற்கு ‘சக்திபாடனம்’ என்று கூறுவார்கள். இதன் மூலம் குரு தன்னுடைய சக்தியை
சீடனுடைய உடலுக்கும் புத்திக்கும் மாற்றுகிறார். இந்த அறிவுப்பரிமாறல், கண்
வீச்சாலும், ஸ்பரிசத்தாலும், எண்ணத்தாலும் ஏற்படும். குஞ்சு ஆமைகள் தங்களுடைய
தாய்மார்களின் நினைப்பினால் வளர்கின்றன. அதேபோல் தாய் ஆமைகள் தன் குஞ்சுகளைப்
பற்றி நினைக்கும்போது அக்குஞ்சுகள் வளர்கின்றன. தூரம் ஒரு பொருட்டல்ல. எண்ணமே
இயங்கும் சக்தியாகிறது. மீன்கள் தன் தாய்மார்களின் கண் வீச்சினால் வளர்கின்றன.
பறவைகளோ, தன் தாய்மார்களின் ஸ்பரிசத்தினால் வளர்கின்றன. இங்கு எண்ணம், பார்வை,
ஸ்பரிசம் மூன்றுமே வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளன. இவ்வாறு ஜந்துக்களே அறிவு
புகட்டும் பாதையில் இயங்குகின்றன என்று காணும்போது இறைவனையே தன்னுள் அடக்கிய
குருவினால் முடியாததுதான் என்ன?

இதனைச் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி சுவாமிகள் தன்னுடைய
சம்பாஷணையில் அழகாகக் கூறுகிறார். “குருவினுடைய பார்வை சீடன்பால் ஞானத்தைப்
புகட்ட வேண்டுமென்றால், சீடன் பக்குவமடைந்தவனாக இருத்தல் அவசியம். அந்தப்
பக்குவம் அவனுடைய பல பிறவிகளில் சேர்க்கப்பட்ட அனுபவங்களின் பரிணாமமேயன்றி
இப்பிறவியில் எடுத்ததாகக் கூறமுடியாது. குருவிற்குச் சேவை செய்வது மகத்தான
செயலாகும். சேவை மட்டுமே சீடனைப் பக்குவப்படுத்தாது. உபதேச மந்திரங்களால்
மட்டும் சீடன் பக்குவப்படமாட்டான். சீடனிடம் அறிவு பெறுவதற்கான எண்ணம்
மேலோங்கி இருந்து அவன் தன் முயற்சியால் (தர்மப்படி வாழ்க்கை நடத்தி தர்மங்கள்
கூறியபடி செயல்பட்டு ஸ்ரவணம் (தர்மத்தைக் கேட்டல்) மனனம் (அறிவைப் புகட்டி
மந்திரங்களை உச்சரித்தல்) நிதித்யாஸனம் (இவை இரண்டையும் தன்னுள் இருத்தி,
மனம், வாக்கு, காயம் ஒன்று சேர இறையாண்மை கொள்ளுதல்) ஆகிய பயிற்சிகளின் மூலம்
பக்குவப்படுத்தப்படுகிறான். ஆக இருளைப் போக்குபவர் குரு. இருளை அகற்றினால்
வெளிச்சம் புலப்படும்.

இந்த அரிய தத்துவத்தை ஜயதேவர் எட்டாவது, ஒன்பதாவது அஷ்டபதிகளில் கூறுகிறார்.
ஜீவன் (ராதை) இறைவனைக் (கண்ணன்) காணத் தவிக்கிறது. துக்கப்பட்டுக்
கொண்டிருக்கும் ஜீவனுக்கு பரமனின் இணைப்பு தேவை என ‘சகி’ (குரு) உணருகிறார்.
‘சகி’ யான குரு பரமனிடம் சென்று ஜீவன் தவிக்கும் நிலையை எடுத்துரைக்கிறார்.
பத்து மற்றும் பதினோராம் அஷ்டபதிகள் ‘சகி’யின் பிரார்த்தனைகளாக இறைவனிடம்
சேர்ப்பிக்கப்படுகின்றன. ராதையின் நிலைமையை உருக்கமாகத் தோழி கண்ணனிடம்
கூறுகிறாள்.

உண்மையான அன்புக்குக் கட்டுப்பட்டவன் கண்ணன் என்பதை இந்த இரண்டு அஷ்டபதிகளும்
தெரிவிக்கின்றன. ஆக கண்ணனின் ஒப்புதல் கிடைத்துவிடுகிறது. பக்தையின் நெஞ்சத்தை
மேலும் வாட்ட விரும்பவில்லை கண்ணன். சகியிடம் கூறுவான் “கோபாலன் உன் வரவை
எதிர்பார்த்து இருக்கிறான்.” என்று சொல்ல, இதன் பொருளே பக்தையின் எண்ணம் ஈசன்
பால் முழுமையாக ஆட்கொண்டபின், குருவும் தன் சீடனை ஏற்று அவனுக்கு ஈசுவர
பதவிக்கு வழிகாட்டுகிறார். பக்குவப்பட்ட சீடனுக்கு பரம அனுபவத்தைக்
கொடுக்கிறார். இப்படி மேன்மையான வேதாந்தப் பொருளை அடக்கிய பாடல்களாகப் பத்து
மற்றும் பதினோராம் அஷ்டபதிகள் அமைந்துள்ளன.

மேலும் இவர்களுடைய சந்திப்பு எவ்வாறு என்பதை அடுத்த அஷ்டபதிகள் விளக்குகின்றன.

தொடரும்...
https://www.youtube.com/watch?v=nDWYs_TBXoA

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>

[image: M C]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



   *v **a n a k k a m**  S u b b u*

*  .*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to