*ஜயதேவர் * ஆர். கிருஷ்ணசாமி (Amman Dharisanam Nov.2009)
நடைபெற்ற அதிசயத்தில் ஒரு படிப்பினை அடங்கியிருந்தது. இறைவனைக் காண்பது அரிது. அவன் ஊனக் கண்களுக்குப் புலப்படமாட்டான் என்ற உண்மையை நன்கு அறிந்தவர் பெரியவர். ஆகவே சேணியப் பெண் கண்ணனைத் தான் காண்பதாகக் கூறியதை பெரியவர் நம்பவில்லை. “இந்தப் பெண்ணுக்கு பித்துப் பிடித்திருக்கிறது. என் கண்களுக்குத் தென்படாத கடவுளை இவள் எவ்வாறு காணமுடியும்? என் நித்தியப் பணியையும் விட்டு, இவள் பேச்சைக் கேட்டு வந்தது அறிவில்லாதது” என்று எண்ணிய நேரத்தில் அதிசயிக்கத்தக்க வகையில் ஓர் அசரீரி வாக்கு எழுந்தது. அந்த வாக்கினைப் பெரியவரும் கேட்டார். “பெரியவரே! நீ யாரைக் காண முடியாது என்று தீர்மானமாக இருக்கிறாயோ அந்த எண்ணம் போல் இறைவன் உன் கண்களுக்கும் புலப்படமாட்டான். ஆனால் முழு உள்ளுணர்வாலே என்னை நித்தம் உள்ளன்போடு போற்றும் இப்பெண்ணின் பெருமையை உணர்த்தவே இந்தத் திருவிளையாடல். அப்பெண்ணுக்குத் தரிசனம் கொடுத்தது, கொடுத்துக் கொண்டிருப்பது யாவும் உண்மையே. அதேபோல் “தான்” என்னும் அகந்தையோடு, உலகப் பற்றும் உள்ள உம் கண்களுக்குப் புலப்படாததும் உண்மையே. உலகப்பற்றும் அகந்தையும் உள்ளவர்களுக்கு இறைவன் தரிசனம் கிட்டுவதில்லை. ஆகவே உனக்கு இனி தரிசனம் கிட்டவேண்டுமானால் அந்தப் பக்குவத்தை அடைய முயற்சி செய்யும். வெற்றி கிடைக்கும் வரை தரிசனம் கிட்டாது.” இவ்வார்த்தைகளைக் கேட்ட பெரியவர் பதறிப்போனார். “என் அறியாமையை இச்சேணியப் பெண் எனக்குக் காட்டிவிட்டாள். இனி நான் ஈசன் அளித்த வாக்கினைப் பின்பற்றி என் வாழ்நாளை நடத்துவேன். இறைவன் தரிசனம் கிட்டப் பாக்கியம் இருந்தால் பெறுவேன்.” எனக் கூறியவராக அப்பெண்ணைக் கண்டு வாயாரப் புகழ்ந்தார். “பெண்ணே! நான் இனி உன் குரு என்று கூறுவதை விட உன் பெருமை அறிந்தபின், நீ எனக்கு சிஷ்யை என்ற பெருமையோடு செல்கிறேன்.” அவர் கூறிய வார்த்தைகள் யாவும் அப்பெண்ணுக்கு விளங்கவில்லை. அதிசயித்து அவர் முகத்தையே பார்த்தபடி திகைத்து நின்றார். இந்தச் சம்பவம் பக்தியின் சிறப்பினை எடுத்துக் காட்டுகிறது. ஜயதேவரின் அஷ்டபதியின் குறிக்கோளே இந்தப் பக்தியின் பெருமையை எடுத்துணர்த்துவதேயாகும். 12ஆவது அஷ்டபதியில் இராதையின் தோழி அவளை ஒரு லதா கிருகத்தில் (கொடிகள் வளர்ந்த மண்டபம்) இருக்கச் செய்து கண்ணனிடத்தில் சென்று இராதையின் தாபத்தைத் தெரிவித்தாள். இது எவ்வாறு இருக்கிறது என்றால் ஒரு சீடனின் தாபத்தை குருவானவர் உணர்ந்து எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுவது போல் அமைந்துள்ளது. 13ஆவது அஷ்டபதி இராதையின் எதிர் பார்ப்பினை விளக்குகிறது. அதிகப் பாசம் இருந்தால், பிரிவு, மனத்தில் பல சந்தேகங்களை எழுப்பும். இராதைக்கும் அம்மாதிரி சந்தேகங்கள் மனத்தில் எழுந்தன. “கண்ணன் தன்னை மறந்து வேறு கோபிகைகளோடு சென்று விட்டிருப்பானோ? அப்படியும் நடக்குமா?” என 14ஆவது அஷ்டபதியில் எண்ணுகிறாள். கண்ணனின் நினைவாகவே இருக்கும் இராதை, கண்ணனையே மனத்தில் நினைத்தவளாக அவனது ஸ்வரூப குணங்களை வர்ணிக்கிறாள். அதே சமயம் சகியானவள் கண்ணனின் நிலைமையை இராதையிடம் கூறுகிறாள். “கண்ணன் உன்னை வந்து பார்ப்பதாக முதலில் கூறி, அதன் பின் மற்ற கோபிகைகளோடு சல்லாபமாக இருப்பது முறையா?” என தோழியிடம் கேட்கிறாள். இராதை கண்ணனைக் கோபமாக ஏசுகிறாள். அந்த ஏச்சுப்பேச்சிலும் மரியாதை இருக்கிறது. சிலேடையாகவும் புகழ்ச்சியாகவும் அமைகிறது. இதைத்தான் “நிந்தாஸ்துதி” எனக் கூறுகிறார்கள். இப்படி பிரிவினால் வாடும் இராதையின் துக்கத்தைப் போக்கக் கண்ணன் கருணையோடு செயல்பட்டான். ஓர் இரவு கழித்து, மறுநாள் காலை சூரிய உதயத்தில் கண்ணன் இராதையைச் சந்திக்க ஆயத்தமானான். அந்தச் சந்திப்பால் ஏற்பட்ட வேதனைகள் தான் எவ்வளவு? இது அவசியமா? என ஜயதேவர் எண்ணினார். அந்தச் சமயம் இராதையின் மன நிலை தான் என்ன? “கண்ணன் தன்பால் ஓரவஞ்சனையாகச் செயல்படுகிறான். என்னைப் போல் மற்ற கோபிகைகள் கண்ணனை நேசிப்பார்களா? ஏன் கண்ணன் என்னை மறந்து மற்றவர்களோடு சல்லாபமாக இருக்கிறான்? எல்லாம் அறிந்த கண்ணனுக்கு என்னுடைய பாசம் தெரியாததா? இருந்தும் என்னிடம் பாராமுகமாக இருப்பது எனக்குக் கோபத்தை உண்டுபண்ணுகிறது” இந்த எண்ணங்கள் யாவும் கண்ணனிடம் உள்ள பாசத்தால் இராதைக்கு ஏற்பட்டன. உண்மையில் இராதைக்கு மற்ற கோபிகைகளிடம் பொறாமை ஏதுமில்லை. அவர்களுக்கும் கண்ணன் சொந்தம் தான். ஆனால் நான் காட்டும் பாசம் கண்ணனுக்கே உரியது. தன்னையே கண்ணனுக்கு அர்ப்பித்துள்ள ஆத்ம நிவேதனமாகும். இது ஓர் உயர்ந்த நிலை. கண்ணன் வந்துவிட்டான். இராதைக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனால் அவை யாவற்றையும் மனத்தில் அடக்கி, கண்ணனைக் கோபித்தாள். ஏசினாள். “நீ நேற்றிரவு யாரிடம் காலத்தைக் கழித்தாயோ அங்கேயே செல்.” எனக் கோபமாகக் கூறினாள். கண்ணன் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் இராதை அதை ஏற்கவில்லை. இவளை விட்டுத்தான் பிடிக்க வேண்டுமெனத் திரும்பவும் கண்ணன் மறைந்தான். இராதை கண்ணனின் பிரிவினால் வாடினாள். இது 17ஆவது அஷ்டபதியாகும். 18ஆவது அஷ்டபதியில் இராதை தன்னையே நொந்து கொள்கிறாள். தன் துக்கத்தையும், அறியாமையையும், தன் தோழியிடம் கூறினாள். “புத்திமோசம் போய் கோபத்திற்கு இடங்கொடுத்து என் பிரானநாதனைப் பிரிந்து நிற்கிறேன். அவனை என் வார்த்தைகளால் கடிந்து பேசித் துரத்தி விட்டேன். இனி திரும்பி வருவானோ நான் அறியேன்.” என வருந்தினாள். இவளுடைய உண்மையான புலம்பலைக் கேட்ட தோழிக்கு இவளைச் சரிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மிகவும் சிரமப்பட்டு இவளுடைய விரகதாபத்தை எடுத்துக் கூறி கண்ணனை அழைத்து வந்தால். அவனை உபசரித்து ஏற்றுக் கொள்ள வேண்டாமோ? மாறாக தன்னிடம் கண்ணன் அதிக பாசம் கொண்டுள்ளான் என்ற பெருமிதத்தில் அவனை ஏசலாமோ? இது முறையாகுமா? இதற்குத் தண்டனையாகத்தான் கண்ணன் மறைந்து விட்டான். இவளுடைய உண்மையான தாபத்தை கண்ணன் அறியாதவனா? இப்போதும் இவளிடமுள்ள அந்தக் கோப குணத்தை அழிக்க வேண்டுமென எண்ணி மறைந்தானோ? தெரியவில்லை. இருப்பினும் இராதையைக் காணாது கண்ணன் இருப்பானா? நிச்சயம் வருவான் என எண்ணினாள். ஆனால் அதே சமயம் இராதையைத் தூண்டினாள். “கண்ணன் வராவிட்டால் உன் முயற்சிகள் யாவும் வீணே. அதை நினைத்துப்பார்.” என்றாள். இவை யாவும் வரப்போகும் பாடல்களுக்கு அஸ்திவாரமாக அமைகின்றன. “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” என்று கூறுவது போல கண்ணனுக்காக அன்போடு மனம் கனிந்து கண்ணீர் மல்கி அழைத்தால் நிச்சயம் வருவான் என்பதை இராதையும் அறியமாட்டாளா? பாசம் கண்களை மறைத்து விட்டது. 19ஆவது அஷ்டபதி பெருமைவாய்ந்த ஓர் அஷ்டபதி. ஜயதேவரின் காவியம் முழுவதுமே இறையருளால் ஏன்? இறைவனாலேயே எழுதப்பட்டது. ஜயதேவர் ஒரு காரணப் பொருளாகத்தான் இருந்தார். இருப்பினும் இந்த அஷ்டபதியில் இறைவனே ஒரு சரணத்தை எழுதியதாகக் கூறப்படுகிறது. இன்று கூறப்படும் சமத்துவம். பெண்ணுரிமை யாவும் கண்ணன் காட்டிய வழியாகும். இந்த அஷ்டபதி பெண்ணினத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. 19ஆவது அஷ்டபதி “வதளியதி கிஞ்சதபி” என ஆரம்பிக்கிறது இங்கு ‘மாலினி’ என்னும் நாயகியாக வருணிக்கப்படுகிறான் கோபாலன். அன்று முழுவதும் வராமல் மாலையில் இராதை இருக்குமிடத்திற்கு வந்தான். கண்ணனைக் கண்டவுடன் இராதையின் மனத்தில் இயற்கையான ஒரு கோபம் தோன்றியது. ‘என்னைப் புறக்கணித்து, மறைகிறானே! இது என்ன விளையாட்டு?’ இவனைக் கோபிக்க வேண்டுமென என் மனம் துடிக்கிறது. கோபித்தால், கண்ணன் திரும்பவும் மறைந்து விட்டால் என்ன செய்வது? இது தர்மசங்கடமான நிலையாகும் என மனம் நொந்தாள். தயக்கம் மேலோங்கித் தயங்கிக் கொண்டிருக்கும் இராதையைக் கண்ணன் சமாதானப் படுத்தினான். பல அன்பான வார்த்தைகளால், இராதையிடம் தனக்குள்ள அன்பை எடுத்துக் கூறினான். இதை வெளிப்படுத்தும்போது ஜயதேவரின் எண்ணங்கள் ஓர் இடத்தில் வந்து தடைபட்டு நின்றது. ஏழாவது சரணத்தில் இந்தத்தடை ஏற்பட்டது. அன்பின் மேலீட்டால், கண்ணன் இராதையின் மெதுவான பாதங்களைப் பற்றுகிறான் என எண்ணம் வந்தது. பற்றின பாதங்களைக் கண்ணன் தன் தலையில் வைத்தான். இப்படி எண்ணிய ஜயதேவர், ‘ஐயகோ! இது என்ன அபசாரம்? கண்ணனின் சிரசில் இராதையின் பாதங்களா? இது எப்படி நியாயமாகும்?’ எழுதுவதை என்றெண்ணி நிறுத்தினார். அங்கு ஒரு தெய்வத் திருவிளையாடல் நடந்தேறியது என்ன அந்தத் திருவிளையாடல்? தொடரும்... Jayadeva Ashtapadi - 1 || Dr.M.Balamurali Krishna || https://www.youtube.com/watch?v=1f3Ko0mpgjo <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *v **a n a k k a m** S u b b u* * .* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
