*ஜயதேவர்*
ஆர். கிருஷ்ணசாமி

தான் எழுதும் போது அது இறைவனின் செயல்தான் என்பதை உணர்ந்தாலும், தகுந்த சமயம்
வரும்போது மாயையானது ஒரு சந்தேகத்தை உண்டுபண்ணுகிறது. ஜயதேவர் திடமனம்
படைத்தவர்தான். இருப்பினும் அந்தத் திடமனத்திலும் ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்தி,
தன் திருவிளையாடலைத் தொடங்கினான் பரந்தாமன். அந்தச் சரணங்கள் எதைக்
கூறுகின்றன? கண்ணன் இராதையின் மென்மையான பாதங்களைத் தன் சிரசில் வைத்துக்
கொள்கிறான் என்பதாகும். இதனை நினைத்த ஜயதேவர் தன்னையே நொந்து கொண்டார். என்ன
சிரமப்பட்டாலும் அந்த வரிகள் மனத்தை விட்டு அகலவில்லை. புதிய எண்ணங்கள் ஏதும்
தோன்றவில்லை “இறைவா! நீதான் எனக்கு ஒரு வழிகாட்ட வேண்டும்.” என்று எண்ணியவராக
எழுதுகோலையும் சுவடியையும் பூஜை அறையில் இறைவனின் திருவடிகளில்
சமர்ப்பித்துவிட்டு குளிக்கச் சென்றார்.

இவை யாவற்றையும் நடத்துபவன் கண்ணன் அல்லவா? செயல்பட ஆரம்பித்தான். தன்
மனத்துள் கண்ணன் கூறினான். “ஜயதேவா! உன் உண்மையான பக்தியை நான் அறிவேன். என்
மேல் உள்ள அபார அன்பினால் உன் எண்ணத்தில் சிறிது அஞ்ஞானம் ஏற்பட்டுவிட்டது.
நீயா எழுதுகிறாய்? உன் எண்ணத்தைத் தூண்டுபவனும் நான்தான். உன்னை
எழுதவைப்பவனும் நான்தான். இதனை அறியாமல் ஏன் நீ சங்கடப்படுகிறாய்? என் இராதை
சக்தியின் வடிவம். அந்த சக்தி இல்லாமல் என்னால் எவ்வாறு இயங்கமுடியும்?
எங்களுக்குள் உயர்வு தாழ்வு என்பது கிடையாது. இதனை ஏன் நீ அறியவில்லை. உனக்கு
அதனைத் தெரியப்படுத்தவே இந்தத் திருவிளையாடல் நடைபெறுகிறது. பின்னால் இதனை நீ
அறியும்போது கதறுவாய், கெஞ்சுவாய். உன்னையே நிந்தித்துக் கொள்வாய். உன்னிடம்
உள்ள “நான்” என்ற எண்ணம் அகலும். இறைவனை பிரும்மஸ்வரூபமாகக் கண்ணனாகக் கண்டு
உனது முதல் பாட்டிலேயே உணர்த்திய பிறகு இந்த அறியாமை ஏன்? சிந்தித்து செயல்பட
வேண்டும். உன்னை அவ்வாறே செயல்பட வைக்கிறேன்.”

கண்ணனின் எண்ணங்கள் வரப்போகும் நிகழ்வுகளின் விளைவினைத் தெள்ளத்தெளியக்
காட்டியது. ஜயதேவரைப் பக்குவப்படுத்தவே இந்தத் திருவிளையாடல். ஜயதேவர்
குளிக்கச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் வாயில் கதவு தட்டப்பட்டது. பத்மாவதி
அம்மையாருக்குத் தயக்கம். ‘இப்பொழுதுதான் குளிக்கச் சென்றார். ஏன் இவ்வளவு
சீக்கிரம் திரும்பிவிட்டார்? உடல் நிலை சரியில்லையா, அல்லது ஏதேனும் பொருளை
விட்டு விட்டுச் சென்றுவிட்டாரா?’ இவ்வளவு எண்ணங்களுடன் கதவைத் திறந்தார்.
எதிர்பார்த்தபடி தன் கணவனைக் கண்டாள் பத்மாவதி. அவருடைய களைப்பான முகத்தைக்
கண்டு கவலையுற்றார். “சுவாமி! மிகுந்த களைப்போடு காணப்படுகிறீர்கள். இன்னும்
குளிக்கவில்லை. இன்று ஏகாதசி என்பது நீங்கள் அறிந்ததே. ஏன் இவ்வாறு
குளிக்காமல் இருக்கிறீர்கள்?” என்று கணவனிடம் விசாரிக்க ஜயதேவர் அளித்த பதில்
மேலும் பத்மாவதியைத் திடுக்கிடவைத்தது. “பத்மாவதி! என் உடல் தளர்ச்சியாக
இருக்கிறது. அவசரப்பட்டு தலையில் எண்ணெயை வைத்துக் கொண்டுவிட்டேன். மிகவும்
பசியாக இருக்கிறது. ஏதாவது இருந்தால் சாப்பிடக் கொண்டு வருகிறாயா? என்று
கேட்டார். பத்மாவதிக்கு இது தன் கணவன்தானா? என்ற சந்தேகம் எழும் வகையில்
ஜயதேவரின் நடவடிக்கைகள் காணப்பட்டன. பதறிப்போய் பதில் கூறினாள்: “ஐயனே! இன்று
என்ன திதி தெரியுமா? இன்று ஏகாதசி. தாங்கள் விரதம் கொள்ளும் நாள். இன்று
பல்லில் பச்சை ஜலம் கூட விடமாட்டீர்கள். அதிசயமாக இன்று குளிக்காமல்
சாப்பிடவேண்டும் எனக் கூறுகிறீர்கள். ஏகாதசி யன்று சாப்பிடுவது பாபம். அன்று
தலைக்கு எண்ணெய் வைப்பது அதைவிடப் பாபம். இந்த இரண்டு பாபங்களையும் தெரிந்து
கொண்டே தாங்கள் செய்ய வேண்டுமா? உங்களது மனநிலை சரியில்லை. புத்தியும் சீராக
இல்லை.” என்றாள்.

இவை யாவும் காதுகளில் விழாதது போல் ஜயதேவர் இருந்தார். தான் கேட்டவற்றையே
திரும்பவும் கேட்டார். பத்மாவதிக்கு என்ன செய்வதென்று தெரிவில்லை. கண்ணை
மூடிக்கொண்டு கண்ணனை வேண்டினாள். “கண்ணா! கணவரின் காரியங்களில் துணை போவது
மனைவியின் கடமை. அதேபோல் கணவரை அறவழிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டியவளும்
அவருடைய மனைவியே. இன்று இவர் செய்யும் செயல்கள் சாஸ்திர விரோதமாகக்
காணப்படுகின்றன. இதனைச் செய்வதற்கு நானும் ஒரு காரணமாகிவிட்டேன். இறைவா! கணவன்
சொல் தட்டுவது பாபம். ஆகவே அவருடைய கட்டளையை மீற விரும்பவில்லை. ஆக என்
தவறுகளை மன்னித்தருள்வாயாக.” என வேண்டியவளாக வீட்டினுள் சென்று பாலும் பழமும்
இறைவனுக்கு நிவேதனம் செய்ய வைத்துள்ளேன் அதனைக் கொடுக்கிறேன். பாலுக்கும்
பழத்திற்கும் தோஷமில்லை” என்று தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு பாலும்,
பழமும் கொண்டு வந்து கணவனிடம் கொடுத்தாள்.

அதனைப் பார்த்த ஜயதேவர் கோபத்தோடு கூறினார். “என்ன பத்மாவதி! பசி அதிகமாக
இருக்கிறது என்றேன். நீ பாலும் பழமும் கொண்டு வந்துள்ளாய். இது என் பசிக்குக்
காணாது. மேலும் என் பூஜைக்காக வைத்திருந்த பழத்தையும், பாலையும்
உபயோகித்துவிட்டால், இன்று ஆண்டவனுக்கு ‘ஏகாதசி’ ஆகிவிடும். வீட்டில் சோறு
இல்லையா? கொண்டுவா.” என்று கூச்சலிட்டார். பத்மாவதி நடுங்கி விட்டாள்.
பயத்தோடு கூறினாள். “நாதா! இன்று ஏகாதசி. பூரண உபவாசம் இருப்பவர் தாங்கள். ஏன்
இவ்வாறு விபரீதமாக நடந்து கொள்கிறீர்? இன்று வீட்டில் உலை வைக்கவில்லை. சமையல்
ஏதும் செய்யவில்லை. ஆகவே சமையல் செய்து உங்களுக்கு உணவு அளிக்கிறேன்.” இதனைக்
கேட்ட ஜயதேவர் “நீ சமைத்துப் போடும் வரை என் பசி தாங்காது. நேற்றைய சோறு
ஏதாவது இருந்தால் அதனைப் போடு. என்னுடன் பேசி நேரத்தை வீணடிக்காதே.” என்று
கூறினார்.

“ஐயோ! இது என்ன அனாசாரம் ஏகாதசி தலையில் எண்ணெய்; உண்ணப் பழைய சோறு. என்ன
விபரீதம் நடக்க உள்ளதோ? இறைவா! என்னை ஏன் இவ்வாறு சோதிக்கிறாய்?” என்று
மனத்துக்குள்ளேயே கதறியவளாக உள்ளே சென்று இலை எடுத்து, பழைய அமுதினைப்
படைத்தாள். மிகவும் உற்சாகத்துடன் அதனை உண்டார் ஜயதேவர்.

“பத்மாவதி! இன்றுதான் நான் ருசியோடு சாப்பிட்டேன். உன் கையினால் இட்ட இந்த
அன்னம் அமுதாக இருந்தது. கை கழுவத் தண்ணீர் கொண்டுவா!” என்று ஜயதேவர்
கூறியதைக் கேட்ட பத்மாவதி, ‘இவர் சாப்பிட்ட இடத்தில் கை கழுவ மாட்டாரே! இன்று
என்னதான் நடக்கிறது?’ என எண்ணினாள். அவள் சென்ற சமயம் பூஜை அறையில் சத்தம்
கேட்டது. தான் சாப்பிட்ட கையைத் துடைத்து, தலையில் உள்ள எண்ணெயால் உடலையும்
தேய்த்துக் கொண்டார். பிறகு ஏட்டுச் சுவடியை எடுத்து ஏதோ எழுதினார். பத்மாவதி
பதறினாள். “சுவாமி! குளிக்காமல், கை கழுவாமல், எண்ணெய்க் கையோடு பூஜை அறையில்
ஏட்டுச் சுவடியை எடுத்து எழுதுகிறீர்கள். என்ன ஆயிற்று உங்களுக்கு?” என்று
இவள் நினைக்க ஜயதேவர் கூறினார்: “பத்மாவதி! உன் பதிபக்தியை நான் பெரிதும்
பாராட்டுகிறேன். கணவன் சொல்லைத் தட்டாது சாஸ்திர விரோதமான செயல்களாக நீ
எண்ணினாலும், எனக்கு மதிப்பு கொடுத்து அவற்றைச் செய்தாயே! உன்னை எவ்வாறு
பாராட்டுவது? நீ ஓர் உத்தம பத்தினியாக இருக்கிறாய். எனக்கு அது பெரும்
மகிழ்ச்சியைத் தருகிறது. இதனுடைய பலன் இன்றே உனக்குக் கிட்டும். தலையில்
எண்ணெய் வைத்து நேரமாகிவிட்டது. அதிகநேரம் ஊறினால் உடலுக்குப் பாதிப்பு
ஏற்படும். ஆகவே நான் உடனே ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு, நித்திய
சம்ஸ்காரங்களைச் செய்து விட்டு வந்து விடுகிறேன்.” என்று கூறியவராக வெளியே
சென்றார்.

பத்மாவதியின் மனம் மிகவும் வேதனைப்பட்டது. தன் கணவர் இவ்வாறு நடந்து கொள்வது
ஏன் என்று தெரியாது மனம் கலங்கினாள். ஏதாவது விபரீதம் நடப்பதற்குத் தான்
சூசகமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றதோ, என்று பூஜை அறைக்குச் சென்றாள். தன்னை
மறந்தாள். பகவான் கண்ணனின் பாதங்களில் விழுந்தாள். விக்கி விக்கி அழுதாள். அதே
சமயம் வாசல் கதவு தட்டும் சப்தம் கேட்டது. என்ன திரும்பவும் குளிக்காமல்
திரும்பி வந்துவிட்டாரோ? வேறு யார் இந்த நேரத்தில் வருவார்கள்? என்று மனத்தில்
நினைத்துக் கொண்டே வாசல் கதவைத் திறந்தவள், கண்ட காட்சியில் விக்கித்து
நின்றாள். எதிரே தன் கணவர் குளித்து நெற்றியில் திலகமிட்டு ஒரு புதிய பொலிவோடு
காணப்பட்டார். பத்மாவதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. விழித்து நின்றாள்.
ஜயதேவர் பத்மாவதியின் நிலையைப் பார்த்து சிறிது சஞ்சலத்துடன் ஏதோ பேச
ஆரம்பித்தார். ஆனால் பத்மாவதியின் எண்ணங்களோ வேறு பாதையில் சென்றன.
“இப்பொழுதுதானே வெளியே சென்றார். ஆற்றங்கரைக்குச் சென்று குளித்துவர குறைந்தது
ஒருமணி நேரமாவது ஆகும். ஆனால் இவர் உடனடியாகத் திரும்பி வந்துவிட்டாரே. இவரது
ஆடைகளும் உலர்ந்து காணப்படுகின்றன. இன்று இங்கு என்னதான் நடக்கிறது?”

ஜயதேவர் கூறினார் “என்ன பத்மாவதி! என்னை வாசலிலேயே நிற்க வைத்து திகைத்து
நிற்கிறாய்? சிறிது நகர்ந்து கொள். உள்ளே செல்ல வேண்டும். என்னைப் பார்த்து
திகைத்து நிற்காதே. நான் உன் கணவர் ஜயதேவர்தான். கவலை வேண்டாம். உள்ளே போக வழி
விடு.”

ஜயதேவருடைய வார்த்தைகள் பழக்கப்பட்ட சப்தமாக இருந்ததால், பத்மாவதி தன்
பிரமையிலிருந்து விலகி சுய நினைவுக்கு வந்தாள். உடனேயே கணவரை அன்புடன்
வரவேற்றாள். ஜயதேவரும் உள்ளே சென்றார். பூஜை அறைக்குச் சென்று அதன் கதவுகளைத்
திறந்தார். அவர் அங்கு கண்ட காட்சி அவரைத் திகைக்க வைத்தது. கோபமுற்றார். பூஜை
அறையில் பூஜைக்கான எந்த ஆயத்தமும் செய்யப்படவில்லை. ஏட்டுச் சுவடிகள் கலைந்து
காணப்பட்டன. பூஜை அறையிலே யாரோ வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார். மேலும்
கோபம் அதிகமாயிற்று. “பத்மாவதி!” என்று உரக்கக் கூவினார். அவர் வாயிலிருந்து
சூடான வார்த்தைகள் வந்தன. அதன் பின் நடந்தது என்ன?

தொடரும்...

Jayadeva Ashtapadis Vol-2 By Dr. M.Balamuralikrishna

https://www.youtube.com/watch?v=QqRs5qkwC84

[image: Lissy Lis]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



   *v **a n a k k a m**  S u b b u*

*  .*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to