*பழநி மகிமை - 2*

அருணை முனிவருக்கு அதிசயம் அநேகம் காட்டிய அழகிய பழநிக்கு, அதற்குரிய பெயரும்
அதிசயிக்கும் வண்ணம்தான் அமைந்தது. பழநி என்றதுமே நாரதரின் மாதுளங்கனித்
திருவிளையாடல்தான் நினைவுக்கு வரும். ‘‘தெய்வம், குரவன், அரசன், திருமுன்பு
செல்வோர் மெய்வந்த அன்னார் அருள் வேண்டி விரும்பியதேதேனும் கைவந்த பெற்றுச்
செலீர் கண்தவர்” என்ற குசேலோபாக்கியான வாக்கின்படி, நாரதரின் மகதி யாழின்
கீதத்தைக் கேட்டு மகிழ்ந்து பிரம்மதேவர் அவருக்குத் தந்த மாதுளங்கனியை
சிவனுக்குக் காணிக்கையாக எடுத்துக்கொண்டு கயிலை சென்றார். (இக்கனியை மாங்கனி
என்று கூறுவோரும் உண்டு.)





*‘‘உவகாரி, அன்பர்பணி கலியாணி, எந்தை இடம்உறை நாயகம் கவுரி சிவகாமிஒளிரானையின்
கரமில் மகிழ் மாதுளங்கனியைஒரு நாள் பகிர்ந்த உமை அருள்பாலா”*
- என்று திருப்புகழிலும்,




*‘‘முண்டகச் சது மறையவன் முடி முறை துளக்கிவண்டிருக்கையி லிருந்த மாதுளங்கனி
ஒன்றைப்பண்டு நல்கினன் பரமனுக் கென்றனன் பதுமத்தண்டர் கோனுநங் கருத்தும் அற்றே
என அறைந்தான்” *

- என்று பழநிப் புராணம் திருஆவினன்குடிச் சருக்கத்திலும்
குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து சிவபெருமானுக்குத் தரப்பட்டது மாதுளங்கனியே
என்பது புலனாகிறது. ஞானம் ஞானத்தையே விரும்பும் என்பதால் ஞான தொப்பை அப்பனும்,
ஞான பண்டித சாமியும் அந்த ஞானக் கனியையே விரும்பினர்.


*‘‘அடியார்கள் கருதா வகைக்கு வரம் அருள் ஞான தொப்பை” (‘இரு நோய்’
திருப்புகழ்)‘‘ஞான பண்டித சாமி நமோ நம” (‘நாத விந்து’ திருப்புகழ்)*

ஆனால், சிவபெருமானோ அகில உலகங்களையெல்லாம் நொடிப்பொழுதில் வலம் செய்பவருக்கே
இக்கனி வழங்கப்படும் என்று ஒரு போட்டியை அறிவித்தார். குமரன் கோல மயில் மீது
ஏறி உலகை வலம் வந்தான். அதற்குள் ‘அம்மையப்பருள் அகில உலகமும் அடக்கம்’ என்று
கூறி விநாயகர் அம்மையப்பனை வலம் வந்து கனியைப் பெற்றுக்கொண்டு போய் விட்டார்.
உலகை நொடியளவில் வலம் வந்த முருகப்பெருமான் அண்ணன் கையில் கனியைக் கண்டதும்
கோபமுற்று சிவகிரி மீது ஏறி நின்றான். இந்நிகழ்வை அருணகிரிநாதர்,






*‘‘படியில் பெருமித தகவுயர் செம்பொற்கிரியைத் தனிவலம் வர, அரன் அந்தப்பலனைக்
கரிமுகன் வசமருளும் பொற்பதனாலேபரன் வெட்கிட உளம் மிகவும் வெகுண்டு, அக்கனியைத்
தரவிலையென அருள் செந்திற்பழநிச் சிவகிரிதனிலுறை கந்தப் பெருமாளே’’*

- என்று பழநியிலும்,




*‘‘இனிய கனி கடலை பயறொடியல் பொரி அமுது செயும் இலகு வெகு கட விகட தடபார
மேருவுடன்இகலி முது திகிரி கிரி நெரிய வளை கடல் கதறஎழுபுவியை ஒரு நொடியில்
வலமாக ஓடுவதும்’’*

-என்று சீர்பாத வகுப்பிலும் பாடுகிறார். பழநிமலனும் பழநிமலையும் குழந்தையைத்
தேடி சிவகிரி வந்து சமாதானம் செய்தனர். ‘‘நீயே ஒரு ஞானப்பழமாயிற்றே! உன்னையே
விநாயகனிடம் கொடுத்தோம் பழம் நீ” என்று கூறியதால் சிவகிரி, பழநி என
அழைக்கப்படலாயிற்று. (உருபியல் சூத்திர முறைப்படி ‘ம்’ எனும் மெய்யெழுத்து
மங்கி ‘‘நீ’’ என்பது ‘‘நி’’யாகக் குறுகியது. இத்திருவிளையாடலின் உட்கருத்து
உணரத்தக்கது. விநாயகர் நினைத்தால் நொடியில் உலகை வலம் வந்திருக்க முடியாதா?
அம்மையப்பருள் உலகமே அடக்கம் என்று முருகப்பெருமானுக்குத் தெரியாதா?

நாரதரும், அம்மையப்பரும் நிகழ்த்திய மாதுளங்கனித் திருவிளையாடலின் உட்கருத்து
என்ன? இந்நாடகம், நமக்களிக்கப்பட்ட ஓர் அருளுபதேசம் எனலாம். கனியைத்
தரவில்லையென்று கோபித்தவன் போன்று, கயிலையினின்றும் நீங்கி, தென்னாட்டிலுள்ள
திருஆவினன்குடியில் ஓங்கி உயர்ந்து நின்ற சிவகிரி மீது எழுந்தருளினான்
சிவகுமரன். அவனைப் பின் தொடர்ந்து அம்மையப்பனும் அம்மலைக்கு வந்ததால் அம்மலை
மேலும் மேன்மை உடையதாயிற்று. சிவத்திற்கு இரு தன்மைகள் உண்டு:


*1. எல்லாம் சிவத்துள் ஒடுங்கியிருக்கிறது; 2. எல்லாவற்றிற்குள்ளும் சிவம்
தங்கியிருக்கிறது. *

அம்மையப்பருள் பிரபஞ்சமே அடக்கம் என்பதை நமக்கு எளிதாகப் புரிய வைக்க,
விநாயகர் பெற்றோரை வலம் வந்தார். புவனத்தில் பார்க்கும் இடந்தோறும்
அம்மையப்பரே நீக்கமற நிறைந்திருக்கின்றனர் எனும் உண்மையை உலகோருக்கு உணர்த்த,
முருகப் பெருமான் பிரணவ மயிலில் ஏறி நொடியளவில் உலகைச் சுற்றி வந்தார்.





*‘‘வடவரையின் முகடு அதிர ஒரு நொடியில்வலம் வரு மரகத மயில் வீரா!’’ (‘கடலைபொரி’
திருப்புகழ்)‘‘பார்திசை வான முற்றும் பரியென நடாத்த லுற்றான்மேருத் தடவரை இடிய
கலாபம் வீசி ஏகிற்றுத் தோகை மஞ்சை’’(கந்தபுராணம்)*

‘‘அங்கிங்கெனாதபடி எங்கும்’’ எனும் தாயுமானவர் வாக்கை இங்கு நினைவுகூறலாம்.
அண்ணன், சிவத்துள் அனைத்தையும் கண்டார்; தம்பியோ அனைத்துக்குள்ளும் சிவத்தைத்
தரிசித்தார் எனும் பேருண்மையை இந்நாடகம் நமக்கு விளக்குகிறது. அம்மையப்பர்
முருகப்பெருமானை நோக்கி, ‘பழம் நீ’ என்று கூறியதன் உட்பொருளையும் உணர்ந்து
அனுபவிக்கலாம். சரியை, கிரியை, யோகம் எனும் மூன்று படிகளைக் கடந்தே ஞானம்
எனும் உச்சியை அடைய வேண்டும். அரும்பைப் போன்றது சரியை. உதாரணமாக,
கோயிலுக்குச் சென்று வழிபடுதல், கோயில் வளாகத்தைத் தூய்மையாக்குதல் போன்ற
செயல்கள்.

மொட்டாக வந்து மலர்தலை ஒத்தது கிரியை. அதாவது, முறையாக  மந்திரோபதேசம் பெற்று
உருவ வழிபாடு செய்தல். காயைப் போன்றது யோகம். இது மானசீக அல்லது அருவ வழிபாடு
செய்வதைக் குறிப்பது. எல்லாம் கடந்த பேரின்ப நிலையை அடைவதே ஞானம். காய்
கனிந்து பழமாவதைப் போன்றது இது. காயாக இருக்கும்போது மனத்தில் ஆணவமாகிய
துவர்ப்பும், கோபமாகிய புளிப்பும் நிறைந்திருக்கும். அதுவே பழமாகும் போது,
இனிப்புச் சுவையை மட்டுமே கொண்டதாக விளங்கும். காம, குரோத,  லோப, மோக, மத,
மாச்சரியம் எனும் அறுபகைகளற்ற மனமே ஞானத்தை அடையத் தகுதியானது.

ஞானப்பழம் ஞானமலையில்தானே கிடைக்கும்!  இதை உணர்த்தவே ஞானப்பழமாகிய முருகன்,
ஞானப் பண்டிதனாக பழநிமலை மேல் நிற்கிறான். ஒவ்வொருவரும் சரியை, கிரியை, யோகம்
எனும் மூன்று படிகளோடு நின்றுவிடாமல்,  ஞானமாகிய இறுதி நிலையை அடைவதையே
வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்பது உள்ளீடு. ஒருவரைப் பார்க்கும்
போது, ‘சென்ற காரியம் காயா? பழமா? என்று கேட்கிறோம். பழம் என்பது வெற்றியையும்
பூரணத்துவத்தையும் குறிக்கும். ‘‘கடைச்சிறியேன் உளம், பூத்துக் காய்த்ததொரு
காய்தான் விளக்க முறப் பழுத்திடுமோ?’’ என்பது ராமலிங்க அடிகளாரின் ஏக்கம்!

‘காசியின் மீறிய பழநி’ என்று பாடுகிறார் அருணகிரிநாதர். காசி என்பது
ஆக்ஞாஸ்தலம்; புருவ நடுவைக் குறிக்கிறது. அங்கு வீற்றிருப்பவர் சதாசிவ
மூர்த்தி. அவர் ‘பழம் நீ’  என்று சுட்டிக்காட்டிய மூர்த்தி, ஞானதண்டாயுதபாணி.
ஆக்ஞையில் அமர்ந்த சதா சிவப்பெருமான் ‘பழநி’ என்று உணர்த்தியதால் பழநி
காசியினும் மேம்பட்டது என்று இதற்கு உரை கூறுகிறார் வாரியார் சுவாமிகள்.





* ‘‘கூறுடையாளும், குன்றாக் குணப் பெரும் குன்றும், ஞானப் பேறுடைப் பழ(ம்)நீ
யென்னப் பெயரதும் அருளி எங்கள் ஆறுமாமுகவன் வைகும் நகரமும் அன்று தொட்டு வீறு
தொல் பழநியென்றே விளம்பின உலக
மூன்றும்’’                                                        - பழநி தல
புராணம்.*

ஒருவரது ஊர்ப் பெயரைக் கூறி, அவ்வூருக்கு அப்பெயர் அமைந்த காரணத்தைக்
கேட்டால், விதவிதமான விளக்கங்களைக் கூறுவார்கள். ஆனால்,  பழநி என்றதுமே சிறு
குழந்தைகள் கூட அப்பெயர்க் காரணத்தைக் கூறிவிடுவார்கள். அம்மையப்பரது
திருவாக்கினின்றும் தோன்றிய ஒரே காரணத்தால் மலைப் பெயராகிய ‘பழநி’ என்பது
ஊரின் பெயராகவே நிலைத்து விட்டது. பழநி எனும் ஊர்ப்பெயரை பழனி என்று எழுதும்
வழக்கமும் நடைமுறையில் உள்ளது. ‘பழனம்’ எனும் சொல் வயல்களைக் குறிக்கும்.
வயல்வளம் நிறைந்த ஊராக இருப்பதனால் ‘பழனி’ என்று கூறும் வழக்கம்
உண்டாயிருக்கலாம்.





*‘‘பழனம் உழவர் கொழுவில் எழுதுபழைய பழநி அமர்வோனே’’(‘கரிய பெரிய’
திருப்புகழ்)‘‘பழன வயல்கள் கமுகு கதலி பனசை உலவபழநி மருவு பெருமாளே’’ (பனசை -
பலா)*

- என்று பாடுகிறார் அருணகிரிநாதர். அவர் பாடிய திருப்பழநி வகுப்பிலும்,
பழனியின் வயல்வளம் விரிவாகப் பாடப்பட்டுள்ளது.






*‘‘செந்தளிரை முந்துபடம் என்றுள மருண்டு நிறைசந்தன வனம் குலவு மந்தி குதி
கொண்டயல்செறிந்த கமுகின் புடை பதுங்கிட வளைந்து நிமிர் மடல்சாடவேசிந்திய
அரம்பை பலவின் கனியில் வந்து விழமென்கனி உடைந்த சுளை விண்ட நறை கொண்டு
சிறுசெண்பக வனங்கள் வளர் தென்பழநியம்பதியின் முருகேசனே’’*

(செந்தளிரைப் பாம்பின் படம் என்று அஞ்சிய குரங்கு, கமுகின் மடல் மேல் குதிக்க,
மடல் தாக்கியதால் வாழை, பலாப்பழத்தின் மேல் விழ,  உடைந்த பலாப்பழத்தின்
சாற்றில் ஊறி, சிறு செண்பக வனங்கள் வளர்கின்ற பழநியில் வாழும் முருகேசனே!)
பழனி என்பதற்குப் புலவர் சே.த.ராமலிங்கம் பிள்ளை அவர்கள் கூறும் விளக்கம் மிக
அருமையானது. ‘‘இருவினை ஒப்பு - மலபரிபாகம் பெற்று பக்குவமடையும் ஆன்மாவில்,
திருவருட்சக்தி பதிவிற்கு ஏற்ற அன்பர்கள் இதயமாகிய வளமான வயல் இடத்தைக்
குறிப்பது இதன் தத்துவம் எனலாம்.

அல்லது பழனியை வழிபடுவோர் இதயங்களெல்லாம் சிவஞான பண்டிதனின் அருள் எனும் பயிர்
தழைக்கும்; வளமிக்க வயல்களாக மாறும் என்றும் கொள்ளலாம் என்பது அவர் கருத்து.
பழநியின் ஒரு பழைய பெயர் ‘சித்தன் வாழ்வு’ என்பதாகும். பழநிக்கு இப்பெயர்
உண்டென்பது திருமுருகாற்றுப்படைக்கு நச்சினார்க்கினியார் எழுதிய உரையினால்
தெரிய வருகிறது. பழநியைச் சுற்றிய மலைச் சாரல்களில் ஏராளமான சித்தர்கள்
வசித்து வந்த காரணத்தினாலும் இப்பெயர் உண்டாகியிருக்கலாம்.

‘‘நல்லம்பர் நல்ல குடியுடைத்து சித்தன் வாழ்வு இல்லந்தொறு மூன்று
எரியுடைத்து...’’ என்பது ஔவையாரின் பாடல். பழநியில் அந்தணர்கள் வேத
வித்துக்களாய் விளங்கி வீடுதோறும், ஆகவனீயம், தாட்சணாக்கியம், காருகபத்யம்
என்ற முத்தீக்களை வளர்த்தனர் என்பது பொருள். சித்தன் என்பது முருகனின்
நாமங்களுள் ஒன்று என்று நச்சினார்க்கினியார் கூறுகிறார். மேலும் ஸ்ரீசுப்ரமண்ய
ஸஹஸ்ரநாமாவளியின் 898ம் நாமம் ‘ஓம் சித்தாய நம:’ என்பதாம். முருகனது
பரம்பரையும் சித்தர் பரம்பரை என்றே கூறலாம்.

அவனது தந்தையார் சோமசுந்தரர் மதுரையில் சித்தராக வந்து ஏழைகளின் வீடுகளில்
பொன்னும் தானியமுமாக நிரப்பினார். மக்கள் உடற்பிணிகளை நீக்கினார். பாண்டிய
மன்னன் அவர் நிஜமான சித்தர்தானா என்றறியச் சோதனை செய்தபோது, கல்யானையைக்
கரும்பு தின்ன வைத்தார். இதே போன்று, திருப்பூவனமென்ற தலத்தில், ஹேமநாதை என்ற
நர்த்தகிக்காக ரசவாதம் செய்து வீட்டிலிருக்கும் இரும்பு, செம்பு, வெள்ளி
இவற்றை உருக்கி, பொன்னாக மாற்றி, அவள் விருப்பப்படி உற்சவமூர்த்தி செய்ய
உதவினார்.

என வேதான் ‘‘சீலமேத்திய சித்தப்பிரசித்தரான அருணகிரிநாதர் பழநிப் பாடலொன்றில்
‘முக்கண் சித்தருக்குப் புத்திர’ என்று முருகனைப் பாடுகிறார்.  பெருமை வாய்ந்த
சித்தரின் புத்திரரான முருகனும் பெரும் சித்தன்தான்!’’ மேலும், ‘‘செச்சை உலாவு
பதத்தினர் மெய்த்தவர் வாழ்வு பெறத்தகு சித்த விசாக’! என்றும், ‘‘வெற்றியுள்ள
குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக்க மகிழ் வித்தக சித்த’’ என்றும் பாடியுள்ளது
குறிப்பிடத்தக்கவை. இந்திரியங்களை வென்ற சித்தர்களின் சித்தத்தில் உறைபவனும்
முருகப் பெருமானே எனவும் கூறலாம். அடுத்து பழநித் திருநாமத்தின் மகிமையை
காணலாம்.

*சித்ரா மூர்த்தி*


<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
குரல்: TMS
வரிகள்: எம்.பி. சிவம்
இசை: டி.கே. புகழேந்தி


*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்குமுற்றிய வினை தீருமே!*
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே!!
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)

குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு
குறைகள் யாவும் போகுமே!
அவர் குடும்பம் தழைத் தோங்குமே!
சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால்
சகல பயம் நீங்குமே!!
(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)

அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்
அருகில் ஓடி வருவான்!
அன்பு பெருகி அருள் புரிவான்!
அந்தக் கருணை உருவான குருபரன்
என்றுமே கைவிடாமல் ஆளுவான்!!
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
காரியம் கைகூடுமே!
பகை மாறி உறவாடுமே!
சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி
மேன்மை உயர்வாகுமே!!
(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)

https://www.youtube.com/watch?v=XVeDdb5I4Ao

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



*v **a n a k k a m**  S u b b u*

 [image: Miles Otoole]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to