*அங்கயற்கண்ணி என்னும் அருட்பெருங்கடல்* *–* *2*

*மீனாட்சி பாலகணேஷ்*
*அன்னையிடம் பூரண சரணாகதி*

            விண்ணப்பங்களும் சரணாகதி பற்றிய கருத்துக்களும் தொடர்ந்த வண்ணம்
உள்ளன! நீலகண்ட தீட்சிதரவர்கள் அன்னை மீனாட்சியிடம் ஒரு குழந்தை போல் உரிமை
கொண்டு, தமது மனம் விழையும் வேண்டுகோள்களை அவள் திருவடிகளில் வைக்கிறார்.
தாயிடமின்றி வேறு எவரிடம் நம் கோரிக்கைகளைக் கொண்டு செல்வதாம்?
[image: மணிகர்ணிக காட், காசி]

மணிகர்ணிக காட், காசி

எல்லா இந்துக்களுக்கும் காசியில், புண்ணிய கங்கை நதிக்கரையில் உள்ள ஒரு
துறையான மணிகர்ணிகையில் உயிர் விட வேண்டும் என்ற ஒரு அவா உண்டு. தீட்சிதரும்
இதற்கு விதிவிலக்கல்ல. அம்மையிடம் மிகுந்த ஆர்வத்துடன் கேட்பார்: “தாயே!
உன்னால் எனக்கு இங்கேயே முத்தி அளிக்க இயலும் என்பதை யானறிவேன்; இருப்பினும்
என்னுடல் மணிகர்ணிகையில் முடிவுபெற உன்னிடம் வரம் வேண்டுகிறேன். ஏன் தெரியுமா
அம்மா? பெரும்பொருளும் உயர்ந்த உள்ளமும் படைத்த செல்வந்தர்கள் தம் அடியவர்கள்
பால், அவர்கள் வேலை செய்யாவிடினும் கருணை காட்டுவார்கள்; அது போன்று என்
வேண்டுகோளுக்கிசைந்து நீயும் எனக்கு ஈண்டே முத்தியை அளிப்பாய். அது
அவர்களுக்குப் பெருமையே ஆகும். அதே போன்று அடியார்களுக்கும் பெருமை தரும்
செயல் எது தெரியுமா? பணிகளைத் தவறாமல் செய்து கூலி பெறுவதே; அப்பணியாள் போல,
காசிக்குச் சென்று முத்தி பெறுதல் தான் என் விருப்பம்.”

                        *அடியேனுக்கு ஈண்டேநீ அளித்திடுவாய்*

*                             முத்தியது எனினும் ஆக்கை*

*                   முடிவுமணி கருணிகையில் பெறுமாறு*

*                             வேண்டுகின்றேன் முடியாச் செல்வர்*

*                   தடையேதும் இல்லாமல் அடியார்பால்*

*                             தயைபுரிதல் தமக்குச் சால்பாம்*

*                   அடியார்க்கும் சால்புதம் பணிகள்வழு*

*                             வாதுஆற்றல் ஆகும் தாயே  (26)*

            இவ்வாறு வேண்டிக் கொண்டாலும் அவருக்கு ஒரு ஐயம் தோன்றுகிறது.
வேதம் முதலிய சாத்திரங்களைக் கற்றுத் தேர்ந்து, ஞானம், கர்மம், பக்தி ஆகிய
நெறிகளில் ஒழுகவோ, சாத்திர நெறிகளில் ஒழுகவோ தனக்கு இயலாது என முன்னமேயே
அன்னையிடம் அறிவித்து விட்டார்.  ஆனால் அந்த நெறிகளில் நிற்காதவர்களும்
காசிக்குச் சென்று உயிர் நீத்தால் முத்தி பெறலாம் எனப் புராணங்கள் கூறுமாம்.
ஆகவே தீட்சிதருக்கும் அந்த ஆசை எழுகின்றது. மிகுதியாகப் புண்ணியம்
செய்தவர்களுக்கே காசியில், வாராணசியில் சென்று வாழ்ந்தாலும் விரைவில்
உயிர்விடும் பேறு வாய்க்கும்; தன்னைப் போன்ற பாவிகளுக்கு நீண்ட  நாட்கள்
கழித்தே அப்பேறு வாய்க்கும். ஆகவே, அந்த ஆசையை அன்னையிடம் எடுத்துரைத்து வரம்
பெற முயலேன்; முத்தி பெற அன்னையிடம் சரணாகதியடைவதை அன்றி வேறு வழி தனக்கில்லை
என்பார். எத்துணை தெளிவான சிந்தனை!

            தான் வேண்டுவது என்னதென்பதில் மிகத் தெளிவாக இருப்பது தான்
உயர்ந்த அடியார்களின் அடையாளம்.

            இறக்கும்போது மன அமைதியுடன் சென்றால் தான் நற்கதி கிட்டும்; ஆகவே
தனக்கு மன அமைதி எவ்வாறு கிடைக்கும் எனக் கவலையுடன் அன்னையை வினவுகிறார்: “என்
இதயமானது செருக்கு (மதம்), மாற்சரியம் ஆகியவைகளான உடனிருந்து கெடுக்கும்
பகைவர் வசம் அகப்பட்டுள்ளதே! ஓட்டை உடலோ எனில் நரைதிரையுடன் எண்ணற்ற நோய்கள்
பொருந்தி வருந்துகின்றது; மனைவி மக்கள் ஈட்டி வைத்துள்ள பொருள்களில் தான்
கருத்தாக உள்ளனர். ஆகவே உள்ளத்தில் உறுதியும், உடலில் வலிமையும்
இல்லாதொழிந்தனவே தாயே! மன அமைதியுடன் இறந்தால் அன்றோ நற்கதி பெற இயலும்?
எனக்கு இப்போதே மன அமைதி இல்லையே; இறக்குங்காலத்து எங்ஙனம் வரும்?”என்பார்.
இது உலகத்து மாந்தர் அனைவருக்கும் பொருந்துவது தான்; ஆயினும் நம்மில் எத்தனை
பேர் இதை உணர்ந்து எவ்வாறு இதிலிருந்து மீள்வது எனச் சிந்திக்கிறோம்?

            *தெள்ளுமன அமைதிஅந்தோ சேருவதுஎவ்*

*                   வாறுஎனக்குச் செகன்மா தாவே  (28)*

இதையே அபிராமி பட்டரும்,

*‘ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி தளர்விலதோர்*

*                   கதியுறு வண்ணம் கருது கண்டாய்!’*

என வேண்டுவார்.
[image: அபிராமி பட்டரும் அம்மையும்]

அபிராமி பட்டரும் அம்மையும்

            ‘தயிர்க்கலத்தின் இடைப்பட்டுச் சுழலும் மத்தைப் போல் எனது ஆவி
கலக்கங்களில் அகப்பட்டுச் சுழல்கிறது; பிறப்பு, அதனுடன் வரும் பந்தங்கள்,
இறப்பு, அதன்முன் நிற்கும் பாசங்கள் என்பன தயிர் அன்னவை; எனது ஆவி (உயிர்)
ஆகிய மத்து இதனுள் சுழன்று சுழன்று அலைந்து தவித்துத் தளர்வடையும்.
இவற்றிலிருந்து என்னை விடுவித்து நற்கதி அடைய நீ திருவுளம் கொள்ளம்மா,’
என்கிறார். எவை எவைகளால் இத்தளர்வு வருகிறதென மேற்கூறிய வரிகளில் தீட்சிதர்
பட்டியலிடுகின்றார்.

            ‘இந்தப் பிறவி இன்பம் மிகுந்தது என எண்ணி மகிழ்ந்து பெருமிதம்
கொள்பவர்கள் இவ்வுலகில் மிகுந்துள்ளனர்; அவர்களது மகிழ்ச்சிக்கும்
திருப்திக்கும் குறைவேயில்லை; நானோ எனில் அரைகுறையான ஞானம் பெற்றதனால்
வாழ்வில் மிகுதியான துன்பத்தையே அடைகின்றேன்,’ எனவும் வருந்துகிறார் நீலகண்ட
தீட்சிதர்.

            சிறு குழந்தை; வயிற்று வலியால் வாடுகிறது; அதனிடம், “இது எதனால்
வந்தது? இந்நோய்க்கு என்ன காரணம்? உன் வலியின் அளவு என்ன?” என்றெல்லாம்
கேள்வி கேட்டால் அதற்கு பதில் கூற முடியாது அல்லவா? நோய் நாடும் வைத்தியன்
தான் நோய் முதலையும் நாடிக் கண்டறிய வேண்டும்! பின் தக்க வைத்தியம் செய்து
குழந்தையின் நோயை நீக்க வேண்டும். அது போலவே குழந்தைகளாகிய நமக்கு
அன்னையாகிய மீனாட்சி தான் நம் துயரங்களின் காரணத்தையும் அவற்றைப் போக்கும்
வழியையும் கண்டறிந்து, நமது பிறவிப் பிணி நீங்க வழி காட்டியருள வேண்டும்.

                        *‘பவரோகம் அறவேறு  மருந்தேது?*

*                   பழவினைகள் தொடராமல் உன்னை பஜிக்க*

*                   சிவகாம சுந்தரி!’*

எனும் பாபநாசம் சிவனின் முகாரி ராகப் பாடல் நினைவுக்கு வருகிறதே!

[image: பாபநாசம் சிவன்]

பாபநாசம் சிவன்

   ‘நான் மிக்க மனக் கலக்கத்தில் உள்ளேன்; இப்போது செய்ய வேண்டியது என்ன
என்பதையும் அறிய இயலாமல் இருக்கிறேன்; அதைச் செய்து முடிக்க வழியையும்
அறிகிலேன்; இவ்வாறு செய்ய வேண்டும் என உணரவும் திராணியற்று இருக்கின்றேன்
தாயே! நற்கதி அடைய நான் என்ன செய்வேன்?’ என தீட்சிதர் தன் இயலாமையைக் கூறிக்
கலங்குகிறார்.

                        *இவ்வண்ணம் இருக்குமியான் இப்பொழுதைக்கு*

*                             எனக்கேற்றது இதுவென்று ஓரேன்*

*                   இவ்வண்ணம் இதைமுடிப்பது எனஅறியேன்*

*                             கருவியிது எனவும் தேறேன்*

*                   அவ்வண்ணம் நிலைநாட்டப் பிரமாணம்*

*                             அதுகாட்டும் ஆற்றல் இல்லேன்*

*                   உய்வண்ணம் என்செய்வேன் உலகினுக்கோர்*

*சான்றாகி உறையும் தாயே  (31)*

(*பிரமாணம்*– சான்று; *சான்று*– சாட்சி)

            நீலகண்ட தீட்சிதர் மன்னர் திருமலை நாயக்கரிடம் அமைச்சராகப்
பணிபுரிந்தவர். அன்னை அங்கயற்கண்ணியிடம் மீளா அன்பு பூண்டவர். மன்னர் இவரிடம்
என்ன தான் பெருமதிப்பு வைத்திருந்தாலும் ஒரு சிறு பொழுதில் அவரைப் பற்றித்
தவறாக மதிப்பிட்டு, மிகவும் அவமானகரமான தண்டனையும் கொடுக்கத் தீர்மானித்து
விட்டார். ‘மீனாட்சி அன்னையே எல்லாம்’ என இருந்த தீட்சிதருக்கு இப்படிப்பட்ட
அரச சேவகம் ஒரு உறுத்தலாகவே இருந்திருக்க வேண்டும்; அன்னையின் அடிக்குப் பணி
செய்து அவளிடம் சரணாகதி அடைவதே உய்யும் வழி என எண்ணுபவர் அவர். அதனால்
இச்சமயம் அரசர் கொடுக்கவிருந்த தண்டனையைத் தமக்குத் தாமே கொடுத்துக்
கொள்கிறார் அவர். மக்களிடம் மிக்க செல்வாக்கு மிகுந்த அரசருக்குப் பழி வர
வேண்டாமே என்பதே அவரது எண்ணம்.  பின் அவர் அன்னையிடம் முறையிடுவதெல்லாம்
தனக்குத் தெளிந்த அறிவைத் தந்து முத்திப் பேரின்பத்தை அளிக்க வேண்டியே. உலக
இன்பங்கள் தனக்குத் தேவையில்லை என்பதில் உறுதியாக உள்ளவர் தீட்சிதரவர்கள்.

            அதனால் தான் தனது இரங்கத்தக்க நிலையை இன்பமாகடல் (என்கின்ற
ஆனந்தசாகர ஸ்தவம்) எனும் இந்நூலில் அவர் கூறும் பொழுதில், படிப்போர்
உள்ளங்கள் உருகிக் கண்களில் நீர் பெருகும். சரணாகதியின் அங்கங்களில் ஒன்றான
கார்ப்பண்யம்- அடியாரின் எளிமையான இரங்கத்தக்க நிலை இதில் விளங்குகிறது.

                        *‘நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது*

*                   ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம்; எனக்கு உள்ளவெல்லாம்*

*                   அன்றே உனதென்று அளித்து விட்டேன்; ‘* (அபிராமி
அந்தாதி-95)-

இதுவே பூரண சரணாகதி.

            அடுத்தடுத்த பாடல்களில் தீட்சிதர் அன்னை மீனாட்சியிடம் தனது பூரண
சரணாகதியை திரும்பத் திரும்ப உறுதி செய்து வேண்டுகிறார்.

            “எனக்கு நன்மை தருவதை நான் அறியேன்; அதை அடையும் வழியையும்
அறியேன்; நான் மிக எளியவன் தாயே! சாஸ்திர விதிகளை அனுசரிப்பதற்கும் இயலாதவனாகி
இருக்கிறேன். அந்தோ! நான் என்ன செய்வேன்? உன்னையன்றி வேறு யார் எனக்கு நன்மை
செய்வார் உள்ளனர்? உன் திருவடிகளே தஞ்சம்,” என்பார்.

                        *எனக்கினியது அறியேன்நான் அதைஅடையும்*

*                             வழிஅறியேன் எளியேன் அந்தோ!*

*எனக்குவிதி விலக்கறிந்து நடப்பதற்கும்*

*                             இயலாதே, என் செய்கேனோ?*

*                   எனக்கினிய தயைத்தாயே! எவ்வுலகும்*

*                             தரும் தாயே! எழில் மீனாட்சி!*

*                   எனக்கு இனியார் இனி யார்? மற்று உன் சரணே*

*                             சரணாக எய்தினேனே (32)*

            (*விதி*– செய்யத்தக்கது; *விலக்கு*– செய்யத் தகாதது; *இனியார் இனி
யார்?-* இரக்கம் கொண்டவர்கள் யார்?; *சரணே சரணாக-* திருவடிகளே புகலிடமாக)

            தமது இயலாமையைக் கூறி அன்னை மீனாட்சியின் திருவடிகளில் தஞ்சம்
புகுகின்றார். இதுவே சரணாகதி எனப்படும்.

                        *‘ஊரிலேன் காணி இல்லை உறவு மற்றொருவர் இல்லை*

*                   பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி*

*                   காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்*

*                   ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகருளானே.’*

(ஆழ்வார் பாசுரம்). ‘அடியவரின் துன்பங்களைக் களைபவர் உன்னையன்றி யார்?’
எனத்தனது இயலாமையைக் கூறிக் கதறி முறையிட்டுச் சரண் புகுகின்றார் தொண்டரடிப்
பொடி ஆழ்வார்.

            “கற்ற கல்வியின் பயன் உன்னைச் சரண் அடைதல் தாயே! நான் வேதங்களை
ஒரு சிறிதும், சைவ ஆகமங்களை ஒரு சிறிதும், பின்பு சாஸ்திரங்கள், மந்திரங்கள்
என ஒரு சிறிதும் கற்றுள்ளேன். ஆகையால் எல்லா உயிர்களுக்கும் நீயே இரங்கி
அருள்பவள்; உன்னிடமே சரணாகதியடைய வேண்டுமென்ற அறிவு கொண்டு உன்
திருப்பாதங்களைப் பற்றிக் கொண்டேன்,” என்கிறார்.

                                    *‘……………………………*

*ஏதங்கள் அறச் சகல உயிர்களுக்கும்*

*                             இரங்கி அருள் ஈவாள் நீ, உன்*

*                   பாதங்கள் புகலடைதல் வேண்டுமெனும்*

*                             மதி இவற்றின் பயனால் பெற்றேன் (33)*

            தான் கற்ற கல்வி சிறிதே ஆனாலும் அது தான் தனக்கு இந்த நன்மதியைத்
தந்தது என்கிறார்.

            இது சரணாகதியின்  அங்கங்களில் ஒன்றான *‘கோப்த்ருத்வ வரண*ம்’
எனப்படும்.- அதாவது சரண் புகுபவன் தன்னைக் காக்க வல்லாரைத் தேர்ந்து
கொள்ளுதல் – அறிந்து கொள்ளுதல் எனப்படும். இங்கு மீனாட்சி அன்னையே தன்னைக்
கடைத்தேற்ற வல்லவள் என உணர்ந்து தெளிவுற்றேன் என்கிறார் தீட்சிதர்.

         [image: manikkavasagar 1]   இதையே மாணிக்க வாசகரும், கோயில்
திருப்பதிகத்தில்,

*‘தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைச்*

*                             சங்கரா ஆர் கொலோ சதுரர்.’*

அறிவினால் உன்னை அடைய வேண்டும் என அறிந்து, வேண்டி உன்னைப் பெற்றேன்; விலையாக
என்னைக் கொடுத்தேன்; யார் இதில் திறமைசாலி எனச் சிறு குழந்தை மகிழ்வது போலத்
தானும் இறைவனை அடைந்ததை எண்ணி உள்ளம் பூரிக்கிறார். பின்பு,

                        *‘தேசுடை விளக்கே செழுஞ்சுடர்  மூர்த்தீ*

*                             செல்வமே சிவபெருமானே*

*                   ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்*

*                             எங்கு எழுந்து அருளுவது இனியே’* ( பிடித்த
பத்து)

எனத் தான் இறைவனைத் தான் தேர்ந்து கொண்டதைக் கூறி ஆனந்தக் களிப்பெய்துவார்.

            ஒரு சின்னஞ்சிறு குழந்தை; பசியால் அழுகின்றது; தனக்குப் பால்
வேண்டும்; தாய் தான் அதைத் தரக் கூடியவள் எனக் கூட அறிய இயலாத பச்சிளம் மகவு;
உடனே தாய் அதன் தேவைகளைத் தான் முதலில் கவனிப்பாள்; சிறிது வளர்ந்து அறிவு
வரப் பெற்ற மற்ற குழந்தையைப் பொறுத்திருக்கச் சொல்லிப் பிற்பாடே கவனித்து
உணவளிப்பாள். அக்குழந்தையும் பொறுத்திருக்கும். அது போலவே, ‘நான்
இத்தகையவன்; பிரம்மம் இத்தகையது; அதனை இவ்வாறு அடைதல் வேண்டும் என ஆகமங்கள்
கூறுகின்றன, என உணராதவர்களே (சின்னஞ்சிறு குழந்தை போல) உன்னால் முதலாவதாக
ஆட்கொள்ளத் தக்கவர்கள். நான் நீ என்னைக் காப்பவள் என அறிந்துள்ளதால் நான்
இரண்டாம் தரத்தவன் ஆகிறேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறுவார்.

            மேலும், “நீ என்னிடம் நீ பணி கொள்வது இவன் எனது அடியவன் என்னும்
உரிமையின் காரணத்தால் தான்; ஆகவே நான் எப்படி உன்னிடம் என்னை இவ்வாறு வேலை
வாங்கு எனக் கேட்க இயலும்? நீ இட்ட பணியினை நான் செய்வேன்,” என்கிறார்.

            *‘என் கடன் பணி செய்து கிடப்பதே’*

எனும் அப்பர் பெருமான் கருத்து இங்கு சிந்திக்கத் தக்கது.[image:
thirunavukuarasar]

            ‘என் அறிவின் அளவே ஒழுக்கத்தின் அளவும்,’ எனத் தன்னை முன்னிலைப்
படுத்திக் கூறுவதன் மூலம், உலகில் நாம் அனைவரும் மேற்கொள்ளும்
ஒழுக்கங்களுக்கான காரணத்தை உணர வைக்கிறார்.

            *‘வேண்டத் தக்கது அறிவோய் நீ*

*                   வேண்ட முழுதும் தருவோய் நீ*

*          ………………………………………..*

*          வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்*

*                   அதுவும் உந்தன் விருப்பு அன்றே’*

என்னும் மணிவாசகரின் திருவாசகப் பாடல் இதே கருத்தினை பூரண சரணாகதியாக விளக்கி
அருளுகிறது.

-- 

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


[image: Inline image 1]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



[image: Kedarmal D]*v **a n a k k a m**  S u b b u*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to