கிரிவலம் வாரா கால்களால் என்ன பயன்?



*பழநி மகிமை - 6*

தன்னை வழிபட்டவர்கள் உள்ளத்தைப் பழநியாண்டவன் பழுக்க வைக்கிறான். பழநி மலை
மீது ஏறிச்சென்று அவனை வழிபட்டால்தான் நற்கதி கிடைக்குமென்றில்லை. அவன்
ஞானதண்டாயுதபாணியாகக் குடிகொண்டுள்ள ஞானமலையாம் பழநியை வலம் வந்து மனமார
வணங்கினாலே மனம் பழுத்து விடும். ஒரு பழம் காரணமாக உமையம்மையோடு சிவபெருமானும்
சேர்ந்து மலைக்கு வந்ததனால் “பைங்கயிலை போலும் பழநியே” என்று மாம்பழக்
கவிசிங்கராலும், ‘காசியின் மீறிய பழநி’ என்று அருணகிரியாராலும் போற்றப்பட்ட
பெருமை உடையது பழநி. திருவண்ணாமலையைப் போன்றே பழநி மலையை யும் சிவசொரூபமாகக்
காண்கிறார் பாலசுப்ரமண்ய கவிராயர்.




*'புவனி விண் அளக்கரும் பொலிவு கொண்டு மாதவர் புகழ் சத்தி ஓர் இடம் தரித்து
ஓரீ இநவை தவிர் குமரவேள் நடுவண் பைசுலால்சிவமலை சிவனையே சிவணி நின்றது.'*

(பூமியில் உள்ளவர்களாலும், ஆகாயத்தில் உள்ளவர்களாலும் அளந்தறிதற்கரிய பொலிவைக்
கொண்டு, பெரிய தவத்தை உடைய முனிவரால் புகழப்படுகின்ற சக்தி மலையையும் தன்
பக்கத்திற்கொண்டு, குற்றங்களை விட்டு நீங்கிய குமாரக் கடவுள் நடு இடத்தே
இருத்தலால் சிவமலை எனும் அந்த மலை சிவபெருமானைப் போன்றே நின்றது.)

மற்றொரு பாடலில், “சிறந்த சூரியனும் சந்திரனும் தன்னிடத்தில் மருவப் பெற்று,
பரிசுத்தமான வேலாயுதத்திற்குத் தலைவராகிய சுப்ரமண்ய கடவுளும் தோன்ற
நிற்றலினால் சிவபெருமானது நெற்றிக்கண்ணையும் போன்றது சிவசைலம்” என்றும்
பாடுகிறார். இத்தகு பெருமை வாய்ந்த மலையைச் சுற்றி நடந்து வந்து வணங்குவதும்
ஒரு தனி இறையனுபவம் தான். பழநி கிரிவலப்பாதை சுமார் 2 1/2 கிலோ மீட்டர் தூரம்
கொண்டது. பாத விநாயகரை வணங்கிய பின் எதிரிலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர்
கோயிலுக்குச் சென்று நமக்குப் ‘பழம் நீ’ எனும் பெரிய தத்துவத்தைக் காட்டிய
அம்மையையும் அப்பனையும் வணங்கிப் பின்னர் கிரிவலம் செல்வது உத்தமம்.

இக்கோயில் வாயிலுக்கு எதிரே கல்லாலான அழகிய மயில் சிற்பம் கொண்ட மண்டபம்
உள்ளது. இதேபோன்று மேலும் மூன்று மண்டபங்கள் கிரிவலப் பாதையில் திசைக்கு
ஒன்றாக அமைந்துள்ளன. ஐப்பசி மாதம் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது
இம்மண்டபங்களை ஒட்டி சூரசம்ஹாரம் நடைபெறும். தங்க மயில் வாகனத்தில் சுவாமி
எழுந்தருளி சூரசம்ஹாரம் செய்வார். இத்திருவிழாவின்போது கிரிவீதியைச்
சுற்றிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.அம்மையப்பரையும், மயில்
வாகனத்தையும் வணங்கி வடக்கு கிரி வீதியில் நடக்கத் துவங்கும்போது ஒரு
திருப்புகழ்ப் பாடல் நினைவிற்கு வருகிறது.








*'மவுன உபதேச சம்பு, மதி அறுகு வேணிதும்பை   மணிமுடியின் மீதணிந்த மகதேவர்மன
மகிழவே அணைந்து ஒரு புறமதாக வந்த   மலை மகள் குமார, துங்க வடிவேலாபவனி வரவே
உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து   படி அதிரவே நடந்த சுழல்வீராபரமபதமே செறிந்த
முருகன் எனவே உகந்து   பழநிமலை மேலமர்ந்த பெருமாளே'*

 (‘அவனிதனிலே ’ - திருப்புகழ்) (பரமபதம் = மோட்ச வீடு) வடக்கு கிரி வீதியில்
பயணிகள் தங்குவதற்காக தண்டபாணி நிலையம், கார்த்திகேயன் விடுதி மற்றும் சிறு
குடில்கள் உள்ளன. ‘இடும்பன் குடில்கள்’  எனப் பெயரிடப்பட்டிருக்கும்
நுழைவாயிலின் உள்ளே சென்றால் ‘பிரம்ம தீர்த்தம்’ எனும் மிகப் பழைமையான
தீர்த்தத்தைக் காணலாம். பாதுகாப் பிற்காகச் சுற்றுச்சுவர்களும்,
படிக்கட்டுகளும் கட்டப்பட்டுள்ளன. சில படிகள் இறங்கிச் சென்றால் பிரம்மன்,
திருமால், சிவன் ஆகியோர் தத்தம் வாகனங்களுடன் குடிகொண்டிருக்கும் சிறு
கோயில்களைத் தரிசிக்கலாம். (மழையின்மை காரணமாக இக்குளத்திலும் நீர்
மிகக்குறைந்த அளவே காணப்படுகிறது.

‘‘பிரம்மன், தேவர்கள் தன்னை நெருங்கிவரச் சென்று, பொறிகளை உடைய அக்னி கொண்டு
செய்த குண்டம்;  குமரக் கடவுளுடைய அருள் மிகுந்த நல்ல பூக்களை உடையது;
கந்தர்வர்கள், தேவர்கள், முனிவர்கள் மற்றும் அஷ்டதிக் பாலர்கள் நீராடிய பெருமை
உடைய பிரம்ம தீர்த்தத்தில் நீராடுபவர்கள் முக்தி அடைவர்’’ என்பது பழநித்தல
புராணக் குறிப்பு. பழனியில், இதுதவிர 'சூசிமுக தீர்த்தம், தேவ தீர்த்தம், அமுத
தீர்த்தம், ஞான தீர்த்தம் என மேலும் நான்கு தீர்த்தங்கள் உள்ளன என்பர்.
இவையின்றி சண்முக நதி, சரவணப் பொய்கை, பிரம்ம தீர்த்தம், வள்ளிசுனை, அர்ஜுனன்
பொய்கை ஆகிய பஞ்ச தீர்த்தங்களும் உள்ளன என்று கூறுவதும் உண்டு.

இடும்பன் குடில்களைத் தாண்டிச் செல்லும்போது, இடப்புறம் இடும்பன் மலைக்குச்
செல்லும் சாலை பிரிகிறது. இடும்பன் காவடியாகச் சுமந்து கொண்டு வந்த
சக்திகிரியே இடும்பன் மலை எனப்படுகிறது. மலையை ஒட்டி 2000ம் ஆண்டு
அமைக்கப்பட்ட பழநி புறவழிச்சாலை செல்கிறது.  இச்சாலையில் சிவகிரிப்பட்டி
என்றும் பழைய ஆயக்குடி என்றும் கூறப்படும் தலத்தில் புராதனமான இடும்பன் கோயில்
அமைந்துள்ளது. (மலை மேல் உள்ள இடும்பன் கோயில் பிற்காலத்தில்
கட்டப்பட்டதுதான்) இடும்பன் குளத்தை ஒட்டி பெரிய பாறைகளின் மீது கல்
தூண்களுடன் விளங்குகிறது இப்புராதனக் கோயில்.

ஆனால், கனமான பெயின்ட் பூசப்பட்டு, சுவர்கள், தூண்களின் அழகும், அவை மீதிருந்த
எழுத்துகளும் வெகுவாக மறைந்து விட்டன. பாலமுருகன், பாலகிருஷ்ணன், ரிஷப
வாகனத்தில் உமையுடன் வீற்றிருக்கும் சிவகிரி நாதர் மற்றும் இடும்பன், கடம்பன்
ஆகியோரது திருவுருவச் சிலைகளை இங்கு காணலாம். இடும்பன் அருகில்
வைக்கப்பட்டிருந்த மரத்தாலான ஒரு பெரிய கதையை எடுத்து நம் தலையில்  வைத்து
பூசாரி ஆசீர்வதித்த செயல் மிக விநோதமாக இருந்தது! இடும்பன் கோயிலுக்கருகில்
உள்ள இடும்பன் குளம் மிகப் பெரியது.

இக்குளத்தில் நீர் நிரம்பினால் பழநி ஊருக்கே தண்ணீர் தட்டுப்பாடு வராது என்று
எண்ணத் தோன்றியது. கோயில் வாசலிலிருந்து தொலைவிலுள்ள மலைத்தொடர்களின் அழகைக்
கண்டுகளிக்க முடிகிறது. குளத்தை அடுத்துள்ள பரந்த நிலம் ஒரு காலத்தில் பெரிய
விவசாய நிலமாக இருந்ததாகக் கூறுகின்றனர் உள்ளூர்வாசிகள். இடும்பன் மலை
அடிவாரத்திலிருந்து மலை உச்சி வரை செல்ல படி வழிப்பாதை, மின்விளக்கு,
மலைக்கோயில் சுற்றுப்பிராகார விரிவாக்கம், குடிநீர் வசதிகள் முதலியன
செய்யப்பட்டு 10-2-2000 அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

அடிவார இடும்பன் கோயிலிலிருந்து திரும்பவும் கிரிவலப் பாதை வந்தடைந்து
தொடர்ந்து நடப்போம். பழநியம்பதியில் நடக்கும் விழாக்களுள் ஒன்று அக்னி
நட்சத்திர விழா. சித்திரை மாதத்தில் கடைசி ஏழு நாட்களும், வைகாசி மாதத்தில்
முதல் ஏழு நாட்களும் கிரிவலம் வந்து வழிபாடு ஆற்றுதல் இவ்விழாவின் முக்கிய
சிறப்பாகும். பூமியின் வெப்பம் மிகவும் அதிகரிக்கும் அக்னி நட்சத்திர
நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வந்து அக்னியில் தோன்றிய சிவகுமரனை
வணங்குகின்றனர். இக்காலத்தில் மல்லி, முல்லை, இருவாட்சி ஆகியவை பூத்துக்
குலுங்குவதால் இறைவனின் அருளாட்சியையும் உணரலாம்.



*'சுரலோக, பரிமள கற்பகாடவி வரி அளி சுற்றுபூ உதிர் பழநி மலைக்குள் மேவிய
பெருமாளே'                                            - பழநி திருப்புகழ்*

(தேவருலகில் இருக்கின்ற, வாசனை வீசுகின்ற கற்பகக்காட்டில் வரிகளுடன் கூடிய
வண்டுகள் சூழ்ந்து மொய்ப்பதனால் மலர்கள் உதிர்கின்ற பழநி மலை மீது
வீற்றிருக்கின்ற பெருமை மிகுந்தவரே!)



*'செற்றை வரும் பழமை, சோலை, இஞ்சி திகழ்வரை மேல்செல்தை வரும் பழநிக் கந்தா!
தேற்றிடு!'                                           - கந்தர் அந்தாதி.*

(செற்றை எனும் மீனினம் உலவும் வயலும், சோலையும் மதிலும் திகழ்கின்ற மலையின்
மேல் மேகம் தவழ்கின்ற பழநி வாழ் கந்தனே! அபயம் தந்தருள்!) அதிகாலை வேளையில்
மலையைச் சுற்றி வீசும் காற்று, உடலுக்கும், உள்ளத்திற்கும் ஒரு சேரப்
புத்துணர்ச்சி அளிக்கும் சஞ்சீவிக் காற்று என்பதா லேயே நம் முன்னோர்கள்
அவ்வேளையில் கிரிவலம் செல்லும் முறையை வகுத்திருந்தனர். 'இயற்கை வாயிலாக
இறைவனைக் காணல் வேண்டும் என்ற எண்ணம் நெஞ்சில் நிறைந்து நிற்றல் வேண்டும்'
என்பர் திரு.வி.க. நடந்து செல்லும்போது நம் வலதுபுறத்தில், கடப்பம், மா, பலா,
நாகலிங்கம், அரசு, ஆல், வேம்பு போன்ற பலவித மரங்களைக் காணலாம்.

தவிர சித்தர்கள் வளர்த்த பல மூலிகைச் செடிகளும் உள்ளன என்று கூறுவர். எனவே
பழநி மலையே மருந்து; நவபாஷாணங்களால் உருவாக்கப்பட்டு மலை மேல் மருந்தாகவே
நிற்பவன் தண்டபாணி. முன்னொரு காலத்தில் பெரியாவுடையார் கோயிலைச் சுற்றி வில்வ
வனமும், திருஆவினன்குடியில் நெல்லி வனமும், மலையைச் சார்ந்த பகுதியில் கடம்ப
வனமும் இருந்ததாகக் கூறுவர்.





*'மயிலேறும் ஐயன் காலுக்கு அணிகலம்வானோர் முடியும்  கடம்பும்''தகட்டிற் சிவந்த
கடம்பையும் நெஞ்சையும் தாளிணைக்கே புகட்டிப் பணியப்
பணித்தருள்வாய்.'                                         - கந்தர்
அலங்காரம்.*

அக்னி நட்சத்திர விழாவின்போது முருகனைக் குளிர்விப்பதற்காகப் பக்தர்கள் பல
நதிகளிலிருந்தும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு சென்று மலைமேலுள்ள முருகனுக்கு
அபிஷேகம் செய்கின்றனர். இதனைத் தீர்த்தக் காவடி என்பர். இத்தகைய நீர்
அபிஷேகத்தினால் முருகன் திருவுருவச்சிலை மேலும் உறுதிப்படுவதாக ஆன்றோர்கள்
கூறுகின்றனர். தீர்த்தக்குடமானது தலையிலே சுமந்து செல்லப்படுகிறது. மனித
உடலின் சிறந்த சக்தி ஊற்றான ஸஹஸ்ரார சக்ரம் எனும் நரம்புத் தொகுதி தலைமேல்
உள்ளதால் தீர்த்தக்குடம் தலையிலே சுமக்கப்படுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

பழநி மலையிலும் கிரிவலப் பாதையிலும் எண்ணற்ற விநாயகர் கோயில்கள்
காணப்படுகின்றன. இதற்குக் காரணமான ஒரு சம்பவத்தையும் உள்ளூர் வாசிகள்
கூறுகின்றனர். பண்டைக் காலத்தில் பண்டாரங்கள் மலைமீது தமக்கென பிரத்யேக அறைகள்
கட்டி வைத்திருந்தனர். அவை அனைத்திலும் விநாயகர் திருவுருவச்சிலைகள் இருந்தன.
பின்பு நடந்த கோயில் சீரமைப்பின்போது இவ்வறைகள் இடிக்கப்பட்டு விநாயகர்
சிலைகள் அகற்றப்பட்டன. இவற்றுள் சிலவற்றை மலைமேல் வள்ளி சுனை அருகே காணலாம்.
கனமான சில சிலைகள் மலைமேலிருந்து உருட்டிவிடப்பட்டு கீழே கொண்டுவரப்பட்டனவாம்.

மலையில் சுமார் 64 விநாயகர் சிலைகள் உள்ளன என்று ஒரு கணக்கு உள்ளது. பல
சிலைகள் கிரிவலப் பாதையில் பிர திஷ்டை செய்யப்பட்டுள்ளன. பஞ்சமுக விநாயகர்,
தலைவலி தீர்க்கும் விநாயகர், நினைத்தது முடிக்கும் விநாயகர், தென் கைலாயகிரி
நின்ற விநாயகர், ஆத்ம சித்தி விநாயகர் மற்றும் பல பெயர்களைக் கொண்ட விநாயகர்
கோயில்களைக் கிரிவலப் பாதையில் காணலாம். மயில் மண்டபங்கள் தவிர, அழகு
நாச்சியம்மன், காளிகாம்பாள், வனதுர்க்கை, கனக துர்க்கை, வீர துர்க்கை, ஐயப்பன்
கோயில்கள் மற்றும் பல பெரியோர்களது ஆசிர மங்கள் ஆகியவையும் கிரிவலப் பாதையில்
அமைந்துள்ளன.

*சித்ரா மூர்த்தி*

,,,[image: Inline image 2]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



    *v **a n a k k a m**  S u b b u*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to