செந்தமிழ் இயல்பனைத்தும் உரைத்த செவ்வேள்


*பழநி மகிமை - 7*

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பழநித் தலப் பகுதிகளில் நிலத்தடி நீர்
மிகுதியாகச் சுரந்த காரணத்தினால் ஓங்கி உயர்ந்த மலையின் மீதிலும், அங்கிருந்த
சுனைகளிலும் மடுக்களிலும் நீரோட்டம் அபரிதமாக இருந்திருக்கிறது. எனவே அங்கு
காணப்பட்ட வாழைத்தோட்டங்களும், தென்னஞ்சோலைகளும், பலா  மரங்களும் மற்றும்
மலர்த்தோட்டங்களும் நிறைந்து செழுமையுடன் காட்சி அளித்திருக்கும். இந்த
உண்மையை மக்கள் மனத்திலும் நாவிலும் நீங்கா இடம்  பெற்ற பல அழகிய பாடல்கள்
வலியுறுத்துகின்றன. அருணகிரியாரின் பெரும்பான்மையான பழநிப் பாடல்களில்
பழநியின் இயற்கை வளம் பற்றிய குறிப்புகள்  சிறப்பிடம் பெற்றுள்ளன.




*‘கொண்டல் சூழும் அம் சோலை மலர் வாவி கயல்கந்து பாய நின்றோடு துவர்
பாகையுதிர்கந்தியோடகஞ் சேர் பழநி வாழ்குமர’(‘பஞ்ச பாதகன்’ - திருப்புகழ்)*

(மேகம் சூழ்கின்ற அழகிய சோலைகளும், மலர்கள் நிறைந்த குளங்களும், மீன்கள்
குதிரைப் பாய்ச்சலாகப் பாய்வதனால் நின்று அசைகின்ற துவர்ப்புச் சுவை  கொண்ட
பாக்குகளை உதிர்க்கின்ற பாக்கு மரங்களும் தன்பால் விளங்குகின்ற பழநியம்பதியில்
வாழ்கின்ற குமரனே!)




*‘பலவின் முதுபழம் விழைவு செய்தொழுகியநறவு நிறைவயல் கமுகடர் பொழில்
திகழ்பழநிமலை வரு புரவல’( தகரநறுமலர் - திருப்புகழ்)*

(பலா மரத்தின் முற்றிய பழங்களினின்றும் கண்டோர் விரும்புமாறு ஒழுகிய தேன்
நிரம்பப் பெற்ற வயல்களும் பாக்கு மரங்கள் நெருங்கிய சோலைகளும் சூழ்ந்து
விளங்குகின்ற பழநிமலை மேல் எழுந்தருளியுள்ள, எப்பொருட்கும் இறைவனே!) மேற்கூறிய
அளவுக்கு தற்போது ஊரில் செழுமை காணப்படாவிட்டாலும் சில  தன்னார்வத் தொண்டு
நிறுவனத்தினர் மலையைப் பசுமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், மலை
மேல் மருந்தாக நிற்கும் தண்டபாணித் தெய்வம்  இன்றும் பெருமை குன்றாமல்
கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறான்.




*‘மருளார் பிறவித்துயர் தீர மருந்தொன்றுண்டு; மாநிலத்தேஇருளார் வினைகள் இயலாமே
இதயத் தெளிவு தரு மருந்து; பொருளார் பரமன் அருட்கனலில் பூத்த மருந்து;
பழநிமலைமுருகா முருகா எனு மருந்து முத்தி மருந்து காண் மனமே’*

- என்று பாடுகிறார் கவியோகி சுத்தாநந்த பாரதியார். ‘மனமே! இந்த உலகில் மயக்கம்
நிறைந்த பிறவித் துன்பம் நீங்க, இருண்ட வினைகள் செயல் புரியாத  வண்ணம் இதயத்
தெளிவு தரும் மருந்து ஒன்று உண்டு. அது சத்தியப் பொருளாம் சிவபெருமானின் அருள்
நெருப்பில் பூத்து பழநிமலையில் இருக்கின்ற முருகன்  எனும் மருந்தாகும். இதைத்
தெரிந்து கொள்வாயாக’ என்று கூறுகிறார். கிரிவலம் வந்து பாத விநாயகரை மீண்டும்
வணங்கும்போது அவருடனிருக்கும் நாகரைத் தரிசிக்கிறோம்.

யோக மூர்த்தியாக விளங்கும் முருகப்பெருமானுக்கும், நாகருக்கும் உள்ள ஆதார
தத்துவத்தை காஞ்சி மஹா பெரியவர் மிக அழகாக விளக்கியருளியுள்ளார். ‘‘யோகம்
என்பது பிராண மூலத்தைக் கண்டுபிடித்து அதோடு சேர்கிற வழி; பிராணசக்தி என்பது
சரீரத்தில் மூலாதாரம் என்கிற இடத்தில் குண்டலினி எனும்  சர்ப்பரூபத்திலேயே
இருக்கிறது. நமக்கெல்லாம் அதன் அகசக்தி தெரியவேயில்லை. அது குண்டலாகாரமாகச்
சுருட்டிக்கொண்டு தூங்குகிற பாம்பாகவே  இருக்கிறது. தூங்கும் பாம்பைத் தட்டி
எழுப்புவதற்காகத்தான் யோக சாதனைகள் இருக்கின்றன.

சுப்பிரமணியர் யோக ஸ்வரூபம். அதனால்தான் அவரை எப்போதும் பாம்போடு சேர்த்துப்
பேசுகிறோம். ‘வாஸுகி தக்ஷகாதி ஸர்ப்ப ஸ்வரூபதரணாய’ என்று  முத்துஸ்வாமி
தீக்ஷிதர் ‘ஸ்ரீ ஸுப்ரமண்யாய நமோஸ்தே’ என்ற கிருதியில் குறிப்பிட்டுள்ளார்.
நாகர் பிரதிஷ்டை, சஷ்டியில் நாகராஜபூஜை என்றெல்லாம்  சுப்ரமண்யரை உத்தேசித்தே
செய்கிறோம்’ என்பது பெரியவா கூறும் விளக்கம். எனவேதான் மலையேறத் தொடங்கும்
இடத்தில் நாகப் பிரதிஷ்டை  செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

மலைமீதுள்ள தண்டபாணியின் திருமேனி போகர் எனும் சித்தரால் ஆக்கப்பட்டது. அதன்
காலம் சரியாக நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், நம் மனதைக்  கொள்ளை கொள்ளும்
பழநிமலைக் கோயில் எடுப்பிக்கப்பட்ட காலத்தைக் குறிக்க மட்டும் சில சான்றுகள்
உள்ளன. போகரது கோயில் சேர மக்களின் பேரன்பைப்  பெற்ற காரணத்தால் சேரமான்
பெருமான் மிக மகிழ்ந்து மலைக் கோயிலைக் கட்டினான். மலை ஏறும்போது நம்மை
எதிர்கொள்ளும் முதல் சந்நதி சேர  விநாயகருடையது. சேர அரசன் குதிரை மீது
விளங்குகின்றான்.

தம்பிரான் தோழனாகிய சுந்தரர் வெள்ளை யானை மீது கயிலாயம் செல்ல, அவர் தோழராகிய
சேர அரசன் தமது குதிரையின் மீது அவரைப்பின் தொடர்ந்து  சென்று, இருவரும்
கயிலையில் ஈசன் அருளைப் பெற்றனர் என்று ஏற்கனவே பார்த்தோம். அவ்விருவரின்
காலம் 9ம் நூற்றாண்டென ஆராய்ந்துள்ளனர். ஆதலால்  சேரமானால் கட்டப்பட்ட ஆலயம்,
நாளடைவில் பாண்டியர்களாலும் மற்ற பல அரசர்களாலும் பக்தர்களாலும்
புதுப்பிக்கப்பட்டும் பிற்காலத்தில் பல நூதன  மண்டபங்கள் கட்டப்பட்டும் இன்று
காணப்படுகின்ற அளவுக்குப் புதுமைப் பொலிவு கொண்டுள்ளது.

பூக்கட்டு மண்டபம் என அழைக்கப்படும் மண்டபத்தில் நம் கண்களைக் கவர்கிறார்
கண்ணப்ப நாயனார். காளத்தி நாதருக்காகத் தன் கண்ணைப் பிடுங்கி அப்பும்  அந்தத்
திருவுருவம் நம் மனதை உருக்குகிறது. கூடவே அருணகிரிநாதரின் அழகிய பாடல்
வரிகளும் நினைவுக்கு வருகின்றன: ‘இதவிய காண் இவை ததையென  வேடுவன் எய்திடும்
எச்சில் தின்று லீலாசம் ஆடும் தூயவன் மைந்த!’ (வதன சரோருக - திருப்புகழ்)




*‘‘கூசாது வேடன் உமிழ்தரு நீராடி ஊன் உண் எனும் உரை கூறாமன் ஈய அவன் நுகர் தரு
சேடம் கோதாம் எனாமல் அமுது செய் வேதாகம் ஆதிமுதல்  தரு கோ லோக நாத’*

(சிறிதும் அருவறுப்படையாமல் வேடனாகிய கண்ணப்பன் வாயினின்றும் உமிழ்ந்த நீர்
அபிஷேகத்தைப் பெற்று, ‘இந்த ஊண் சுவையானது, இதை உண்டருள்’  என்று சொல்லி
நிரம்பக் கொடுக்க, அவ்வேடன் எச்சில் செய்து கொடுத்த பாக்கி, குற்றமுள்ளது
என்று பாவிக்காமல் அமுது செய்தவரும், வேத ஆகமங்களுக்கு  ஆதி முதல்வரும் ஆன
சிவபிரான் பெற்ற தலைவனே!) கண்ணப்பர் தவிர, சூரசம்ஹார சுப்ரமண்யர், பைரவர்,
பைரவி, தெய்வயானை திருமணக்கோலம், வீரவாகு  தேவர் என்றும் உருவச் சிலைகளைக்
காணலாம்.

மலையைச் சுற்றிலும் அருள் மேகங்களை நாடி நிற்கும் மயில் சிற்பங்களைப் போன்ற
ஒரு சிற்பத்தை இங்கும் காணலாம். ‘‘மயில் நீல நிறம், நாத தத்துவத்தின்  நிறமும்
நீலமே. முருகன் செந்நிறம், ஞானக் கனலின் தத்துவ நிறம் செம்மை. ஆதலால் நாதம்
சூழ்ந்து கடந்த ஞானம் ஆவான் தண்டபாணி’ என்கிறார் புவலர்  சே.த.ராமலிங்கம்.

*‘‘திந்தி திமி தோதித் தீதித் தீதி*

*தந்த தன தானத் தானத்தான*




*செஞ்செணகு சேகு தாளத்தோடு நடமாடும்செஞ்சிறியகால், விசாலத் தோகை,துங்க அனுகூல
பார்வை, தீர செம்பொன் மயில் மீதிலே எப்போது வருவாயே’’*

- என்று கேட்கிறார் அருணகிரியார். மயிலின் அழகைப் பருகிய வண்ணம் வரும்போது,
முருகனின் இச்சா சக்தியான வள்ளியின் தனிச்சந்நதியைக் காணலாம். ‘சுக  குரமகள்
மணாளன் என மறைபலவும் ஓதி தொழ முது பழநி மேவு பெருமானே’ (ஒருவரை ஒருவர் -
பழநித் திருப்புகழ்) பதினெட்டாம் படியில் காவல்  தெய்வமான கருப்பண்ண சாமியும்,
கன்னிமார்களும் எழுந்தருளியுள்ளனர். இங்கிருந்து தான் மலை ஏறுவதற்குரிய
செப்பனிடப்பட்ட திருப்படிகளின் எண்ணிக்கை  துவங்குகின்றது. புதிய படிக்கட்டுப்
பாதை 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டது என்று ஆலயக்
குறிப்பேடு ஒன்று கூறுகிறது.

பழைய பாதையின் ஒரு பகுதியை இன்றும் கருப்பண்ண சாமி சந்நதியின் எதிரே காணலாம்.
விழாக்காலங்களில் யானை இவ்வழியே செல்கிறது. தொடர்ந்து படி  ஏறிச்செல்லும்போது,
பாதி வழியில் இடும்பன் கோயில் வருகிறது. இங்கு சற்று இளைப்பாறினால்,
வையாபுரித் துரை திருவுருவம், இடும்பன் சந்நதி, குரா மரம்,  குராவடிவேலன்
சந்நதி, கும்பினி வேலாயுதசாமி சந்நதி ஆகியவற்றைக் காணலாம். மெய்யான அன்பு
செய்து வேலன் அருள் பெற்றவர்களுள் வையாபுரித் துரை  என்ற வள்ளலும்
குறிப்பிடத்தக்கவர்.

பழநியாண்டவர் மீது பெரும் பக்தி பூண்டிருந்த இவர், காலையும் மாலையும் மலை
ஏறிச் சென்று வேலவனைத் தரிசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒரு  சமயம்
வெளியூர் செல்ல வேண்டி வந்தபோது இறைவன் தரிசனம் தடைபடுமே என்று மிகவும்
ஏங்கினார் வையாபுரி. இறைவன் அவர் கனவில் தோன்றி ‘‘நீ  நினைத்தபோது உனக்குக்
காட்சி தருவோம்; வையாபுரி என்ற குரலும் கேட்கும்’’ என்று கூறி மறைந்தார்.
தினசரி வழிபாட்டில், கண்டராதித்த சோழனுக்கு தன்  சிலம்பொலி கேட்க வைத்த
சிவபிரானின் குமாரனல்லவா! வையாபுரிக்கும் அவ்வண்ணமே அருள் புரிந்தான் பழநி
ஆண்டவன்.

அகத்தூய்மையுடன் வரும் பக்தர்கள் புறத்தூய்மை பெற எண்ணி ஊரில் பெரும் ஏரியை
வெட்டினார் வையாபுரி. இதுவே இன்று குராவடிவேலன் சந்நதியிலிருந்து  நாம்
தொலைவில் காணும் வையாபுரிக் குளம். அது இன்று மழைக்காலத்தில் மட்டுமே நிறைந்து
காணப்படுகிறது. பக்தர்கள் ‘வையாபுரிக்கு அரோஹரா’ என்ற  கோஷத்துடன் படி
ஏறுகின்றனர். இடும்பன் கோயிலை ஒட்டி சுமார் மூன்று அடி உயரத்தில் ஜமீன்
பட்டத்து உடையுடன் தலைப்பாகையும் அணிந்து இரு  கைகளையும் மார்பில் வைத்து
வணங்கும் வையாபுரித் துரையின் சிலையைக் காணலாம்.

இடும்பன் சந்நதியை அடைந்து மெய்மறந்து நிற்கின்றோம். முருகன் விரும்பி அமர்ந்த
சிவகிரியை நமக்காகச் சுமந்து கொண்டு வந்தவனும் குராவடியில்
முருகனின் திருக்காட்சி பெற்ற பேறுடையவனல்லவா இடும்பன்! ‘அடியார்கள் பால்,
தயிர், தேன், சர்க்கரை, மலர் ஆகிய பொருட்களை உன்னைப் போல்  காவடியாக்கி
கட்டிக்கொண்டு வந்து முதலில் உன்னை வழிபட்ட பின்னரே என்னை வழிபடவேண்டும்’
என்று கூறி அவனுக்கு மலையில் நிரந்தரமான கந்த  சாயுஜ்ய பதவியை அளித்த
குராவடிக் குமரனையும் இங்கு தரிசிக்கலாம். குரா மரத்தையும், குராவடிவேலவனையும்
பக்தியுடன் வலம் வந்து வணங்கு கிறோம்.  குரா மரத்தின் பெருமையைப் பாடும்
அருணகிரியார்,



*‘‘கொந்துவார் குரவடியினும், அடியவசிந்தை வாரிஜ நடுவினு, நெறிபலகொண்ட வேத
நன்முடியினு மருவிய குருநாதா!’’*

- என்று பாடுகிறார். முருகன் விரும்பி உறையும் அடி, நடு, முடி ஆகிய இம்மூன்று
இடங்களுள் குரா மர நிழலை அவன் போற்று வதாகக் குறிப்பிடுகிறார்.  (கொந்து =
பூங்கொத்துகள்) (திருத்தணித் திருப்புகழ்) ‘குராப் புனையும் குமார’ -
தேவலோகப் பெண்ணான தெய்வயானை, பாரிஜாத மலரையும், பூலோக வாசியான  வள்ளி குரா
மலரையும் தொடுத்து மாலையாக முருகப்பெருமானுக்கு அணிவித்தனர் என்கிறது குரா
மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட திருவிடைக்கழித் தல  வரலாறு. ‘குராப் புனை
தண்டையந்தாள் தொழல வேண்டும்’ (கந்தர் அலங்காரம்) குரா மலர், ஞானாசிரியன் உபதேச
காலத்தில் தரிப்பதாகலின், ‘‘யானே பரம  குரவன்’ என விளக்க குராமலர் மாலையை
அணிகிறான் முருகன் என்பது குகஸ்ரீ ரசபதி அவர்களது விளக்கம்.

இத்தகு மகிமை வாய்ந்த குரா மரத்தின் மீது பழநியில் பக்தர்கள் ஆணி அடித்துப்
படங்கள் மாட்டி வைத்திருக்கும் காட்சி மனத்தை மிகவும் வருத்துகிறது. அடுத்ததாக
நாம் பார்ப்பது, தெற்கு நோக்கிய கும்பினி வேலாயுதசாமி. கும்பினிக்காரர்கள்
என்றழைக்கப்பட்ட ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சந்நதி என்கின்றனர்  ஒரு சாரார்.
‘அது அகஸ்தியர் வழிபட்ட முருகன். கும்பமுநி என்பது திரிந்து கும்பினி
என்றாயிற்று’ என்கின்றனர் மற்றொரு சாரார். எப்படியானாலும் சரி,  நம்முடைய
வேலாயுதனல்லவா, அவனையும் வணங்கி, அகஸ்தியர் வழிபட்ட சிவலிங்கத்தையும்
வணங்குகின்றோம்.

காசியில் சிவபெருமானை வணங்கிய அகஸ்தியருக்கு செந்தமிழ் மொழியையும், சிவஞானத்
தையும் போதித்தவர் சிவபெருமான் என்கிறது தொல்காப்பியம்.  திருவாவினன்குடிச்
சாரலில் தவம் செய்து கொண்டிருந்த அகஸ்தியருக்கு, முருகன் ஞான தேசிகனாகக்
காட்சியளித்து, வேண்டிய வரம் அளிப்பதாகக் கூறினான்.  ‘‘உனது தந்தை எனக்கு
அருளிய செந்தமிழ் இயல்பனைத்தும் விரித்து உரைத்தருள்க’’ என்று வேண்டினார்
அகஸ்தியர்.

அவ்வாறே கந்தவேள் அருளிச்செய்த செந்தமிழ்ப் பிரிவான இயல், இசை, நாடகம் எனும்
மூன்றையும் கொண்ட அகத்தியம் எனும் அருந்தமிழ் இலக்கணத்தை  சூத்திர வகையாகச்
செய்து வடவேங்கடம் முதல் கன்னியாகுமரி வரையிலான தமிழகமெங்கும் தன் தமிழ் மணம்
பொங்கச் செய்து தனது பன்னிரண்டு  மாணாக்கர்களுக்கும் அதனைக் கற்பித்தார்
அகஸ்திய முனிவர். பழநி ஆண்டவன் அகஸ்தியருக்குத் தமிழின் விரிவிலக்கணம் அருளிச்
செய்ததை அருணகிரியார்  பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.













*‘‘இயலும் இசைகளும் நடனமும்வகை வகை சத்யப்
படிக்கினிதுஅகஸ்தியர்க்குணர்த்தியருள் தம்பிரானே’’(விகட பரிமள
திருப்புகழ்)‘‘குறுமுநிவன் இருபொழுதும் அர்ச்சித்து முத்திபெறஅறிவு நெறி
தவநிலைகள் செப்புத் தமிழ்க் கினியகுரு குமர பழநி வளர் வெற்புத் தனில திகழு
பெருமாளே’’ (சிறுபறை  - பழநித் திருப்புகழ்)‘‘செந்தமிழில் உனையே வணங்கு
குருநாதர்தென்றல்வரை முநிநாதர் அன்றுகும்பிட நல்லருளே பொழிந்ததென்பழநி மேல்
உகந்த பெருமாளே’’(மந்திரமதன - திருப்புகழ்)*

பழநித் தல புராண அகஸ்தியச் சருக்கத்தில், கவிராயர் மேலும் விரிவாகக்
கூறுகிறார்:






*‘‘ஓது இரண்டையும் உறழ்ந்து தந்திடில், இருநூற்று ஒரு பத்தாறுபேதமாய் நடப்பன
உயிர் மெய்யும் பெற்றியின் வருஞ்சார்புநீ தெரிந்திடென்று அவற்றுள
விரிநிகழ்த்திட நீடு அதிகாரம்கோதில் ஐந்து என வரன்முறை உணர்த்தி, வேல்குழகன்
ஏகினன் கோயில்’’*

இச்செய்யுளின் பொருளாவது: சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டையும், மெய்
பதினெட்டையும் பெருக்கிச் சேர்க்கின் இருநூற்றுப்பதினாறு வகையாக நடக்கும்
அவ்வெழுத்துகள் உயிர் மெய் எனப்படும். அத்தன்மையாகப் பிறக்கும்
சார்பெழுத்துகளை நீ உணரக் கடவாய் என்று அவற்றின் விரிவனைத்தையும் தெரிவித்து,
பெரிய அதிகாரம், குற்றமில்லாத எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்தாக
வைத்து அவற்றையும் உபதேசித்து கந்த கடவுள் திருக்கோயிலுக்கு எழுந்தருளினான்.
‘‘செந்தமிழ் நாளும் ஓதி உயர்ந்திட ஞானமுறு செங்கனிவாயில் ஓர் சொல் அருள்வாயே’’
என்று நாமும் பழநி ஆண்டவனைப் பிரார்த்தித்த  வண்ணம் தொடர்ந்து படியேறுகிறோம்.

மனத்தை ஒருமுகப்படுத்தி, பழநி ஆண்டவனை எண்ணத்தில் இருத்திப் படியேறும்போது,
நமது முன் கன்ம வினைகள் இடைமறித்து அதைக் கலைக்கும். ‘‘பாழ்த்த  கன்மங்கள்
போராடுதே’’ என்று வருந்துவார் தாயுமானவர். இதைச் சரியென்று நிரூபிப்பது போல்
பக்தர்களைப் படிகளில் கூட்டம் கூட்டமாய்க் குரங்குகள்  வழிமறிக்கும். கையில்
கோல் கொண்டு போவோரைக் கண்டதும் ஒதுங்கி வழிவிடும். வைராக்கியத்தைத் தடியாகவும்
மனத்தைக் குரங்கென்றும் கூறும்  தத்வார்த்தத்தை இதில் காணலாம். ‘தளராமை எனும்
ஒரு தடி கொண்டு அடிக்கவோ வலியிலேன்; வாய் கொண்டு உரைத்தலரிது; என் செய்கேன்?

வள்ளல் உன் சேவடிக் கண் மன்னாது (நிலைபெறாது) உழலும் என் மனம், பேய் கொண்டு,
கள்ளுண்டு, கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன்குரங்கோ?’  என்றார் வள்ளலார்.
அருணகிரிநாதர் காலத்திலும் பழநிப் படிகளில் குரங்கினங்கள் ஓடி மகிழ்ந்திருந்தன
போலும்! ‘கரியினை’ எனத் துவங்கும் பழநிப் பாடலில், ‘‘பரிமளப் பாகலில் கனிகளைப்
பீரி நற்படியினிட்டே குரங்கினமாடும் பழநி’ (நறுமணமுள்ள பலாப்பழங்களைக் கீறி
அவற்றைப் படிகளில் போட்டுக் குரங்குக்  கூட்டங்கள் விளையாடும் பழநி) என்று
பாடுகிறார் அருணகிரியார்.

*சித்ரா மூர்த்தி*

-- 

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



[image: 31338159]    *v **a n a k k a m**  S u b b u*         [image:
31338047]

[image: GATO CACHETON]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to