*அங்கயற்கண்ணி என்னும் அருட்பெருங்கடல் – 5**அன்னையின் வடிவழகை தியானித்தல்*

*மீனாட்சி பாலகணேஷ்*

             அன்னையின்  ஸ்பரிசத்துக்கும் அவள் மடியில் கிடப்பதற்கும் ஏங்கும்
ஒரு சிறு குழந்தையாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு வேண்டியபடி மேலும் நீலகண்ட
தீட்சிதர் கூறுவார்: “பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் மற்ற
பெரியோர்களும் குழந்தைகளாக மாற்றி மாற்றி உனது மடியில் வளரும் பேறு பெற்றனர்;
எனக்கும் அந்த பாக்கியம் கிட்டுமோ? மந்த புத்தியை உடைய கடைசிக் குழந்தை மேல்
தான் தாய்க்குப் பாசம் அதிகமாக இருக்கும் என உலகத்தவர் கூறுவர் அல்லவோ?” (67)
[image: அபிராமி பட்டரும் அம்மையும்]

அபிராமி பட்டரும் அம்மையும்

             அபிராமியம்மை பதிகத்திலும் பட்டர், ‘அத்தனை உலகங்களுக்கும் நீ
தாயென்றால் நானும் உன்  இளைய குழந்தையன்றோ? என்னை உன் மடிமேலிருத்திப்
பாலூட்டி, முன்றானையால் முகம் துடைத்து, நான் பேசும் மழலைச் சொற்களைக்
கேட்பாயோ?’ என்கிறார்.

            ‘மணிகர்ணிகையில் நான் உயிர் விடுங்கால், உன் மடிமீது என் தலையை
எடுத்து வைத்துக் கொண்டு, என் களைப்பு நீங்கும்படிக்கு உனது முன்றானையால்
இளங்காற்று வரும்படி நீ வீச, விச்வேஸ்வரனாகிய சிவபிரான்  பிரணவ மந்திரத்தை என்
செவியில் உபதேசிக்கும் பேறு கிட்டுமோ அம்மா?” என அடுத்த பாடலில் கேட்பார்.

                        *தப்பலிலாத் தயையுடைய தாயே உன்*

*                             மடிமேல் என் தலையை வைத்தே*

*                   எய்ப்பற மெல் உத்தரியத்தால் இளங்கால்*

*                             வரவீச இறைவன் மேலாம்*

*                   மெய்ப்பொருள் மந்திரம் செவியில் கருணையினால்*

*                             விளம்ப உயிர் விடும் நற்பேற்றை*

*                   இப்பிறவி தன்னில் மணிகருணிகையில்*

*                             பெறுவேனோ இமையச் செல்வீ (68)*

            (எய்ப்பு- களைப்பு; இளங்கால்- இளம் காற்று)

            இதற்குப் பொருள், ‘காசியில் உயிர் விடுவாரை அம்பிகை தன் மடிமேல்
கிடத்திக் கொள்ள, விச்வேஸ்வரன் அவர்களுக்குப் பிரணவ உபதேசம் செய்வான்,’ என்று
கூறுவர். காசியில் உயிர் விட வேண்டும் என்பது தீக்ஷிதரின் பெரும் விருப்பம் என
அறியலாம்.

            தான் பெரிதும் போற்றும் அன்னையின் திருவுருவின் உயர்வை இன்னும்
விளக்குகிறார். “அரைஞாண் கயிற்றினால் சுற்றிக் கட்டப்பட்ட பொன்னாடையால் அழகு
வாய்ந்த  உள்ளாடையின் அழகினால் எடுத்துக் காட்டப்படும் சோபையை உடையதாயும்,
சிவபிரானுடைய உயர்ந்த மஞ்சத்துக்கு அலங்காரமானதும், எண்ணற்ற பல உலகங்களுக்கு
ஆதாரமானதும், பாம்பின் ஒளி பொருந்திய படம் போன்றதுமான உனது நிதம்பப்
பிரதேசத்தை (திருவரைப் பிரதேசத்தை) நான் என் உள்ளத்தே தியானிக்கிறேன்,”
என்கிறார் (69).

            உள்ளாடை, அதன் மேல் சேலை, சேலை மீது காஞ்சி அணிவது பண்டைக்
காலத்து மகளிர் மரபாம்.

            பின்னும் தொடர்ந்து, “பதினான்கு உலகங்களையும் உனது கர்ப்பத்தில்
(இடுப்பில்) வைத்துக் காப்பாற்ற நீ திருவுள்ளம் கொண்டபடியால் பொன்மயமான
பருத்த இந்த ஒட்டியாணம் என்னும் பட்டிகை  பொன்மதில் போல உனது இடுப்பைச்
சூழ்ந்து இவ்வுலகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது என நான் எண்ணுகிறேன்,”
என்பார் (70).

            மீனாட்சி அன்னையின் திருவரை எல்லா உலகங்களையும் தன் அகத்தே
வைத்துக் காப்பது. அவற்றிற்கு ஒரு மதில் போல அவள் அணிந்துள்ள உதர பட்டிகை
எனும் இடையணி விளங்குகிறது என்பார்.

[image: kumarguruparar]

            குமரகுருபரனாரும் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில், *‘தொந்தி
சரிந்திட உந்தி கரந்தொளிர் சூல் உடை ஆல் அடை,’* எனப் பாடுவார். (கர்ப்பம்
உற்ற ஆலிலையைப் போன்ற அடிவயிற்றுப் பிரதேசம்).

            “அன்னையே, அலைகின்ற பிறவியாகிய கடலினைக் கடந்து கரையேறியவர்கள்
(முக்தி அடைந்தவர்கள்) கூட உனது முலைப்பாலுக்கு ஆசைப்பட்டு முத்துமாலைகளாக
உனது மார்பை அலங்கரித்துள்ளனரே! வெம்மை மிகுந்த பிறவி என்னும் சுரத்தினால்
வாய் உலர்ந்துள்ள அடியேங்களாகிய நாங்கள் அந்தப் பாலை விரும்புவது வியப்பாகுமோ
அம்மா?”

                        *‘அலைபிறவிக் கடல் கடந்த முத்தவினம்*

*                             தாமும்பால் அருந்தும் ஆசை*

*                   தலையெடுத்து உன் தன தடத்தை அகலாமல்*

*                             புரண்டு அலைப……….. (71)*

            இவ்வரிகள் இரட்டுற மொழிதலாகும்; அலைகள் பிறக்கும் கடல்கள் தந்த
முத்துக்களின் கூட்டம் என்பது ஒன்று; இன்னொன்று, பிறவியாகிய கடலினைத் தாண்டி
முக்தி என்னும் கரை சேர்ந்த முக்தர்களின் கூட்டம் என்பது! தேவியின்
திருமுலைப்பால் ஞானமயமானது என்பது இன்னுமொரு*சௌந்தர்யலஹரிப் *பாடலினாலும்
விளங்கும். “திராவிடக் குழந்தையாகிய ஞானசம்பந்தன் உன் முலைப்பாலைப்
பருகியல்லவோ சிறந்த கவிஞனாகி விட்டான்” என்பார் சங்கரர்

.[image: Thirukkadaiyur_Gopuram_Appar]

            “நீண்ட நாட்கள் கெட்டலைந்து காணாமல் போயிருந்த குழந்தை
நல்வழியில் திரும்பி விட்டான் என என்னைக் கண்டு பேரன்பு கொண்ட உள்ளத்தவளாகிய
அன்னையின் முலையிலிருந்து சுரக்கும் பால் துளிகள் போல இந்த முத்துமாலை
காணப்படுகின்றது,” என வியக்கிறார் தீட்சிதரவர்கள் (72).

            நீண்ட நாட்கள் பிரிந்திருந்த குழந்தையைக் கண்டால் தாய் மிகவும்
மகிழ்ந்து பால் சுரப்பாள் என்பர். கர்ணனைத் தன் மகன் என அறிந்ததும்
குந்திக்குப் பால் சுரந்த வரலாற்றை இங்கு நினைவு கூரலாம்.

            அடுத்து வரும் பாடல்களில் அவளுடைய திருக்கரங்கள், அவை ஏந்தியுள்ள
மலர்க்கணைகள் இவற்றைப் போற்றுகிறார்.

            “தேவியின் கையில் இருக்கும் கரும்பு வில்லை மக்களின் மனோமயமாக
அமைந்தது எனச் சான்றோர்கள் சொல்கின்றனர்; அது உண்மையெனில், என் மனம்
அவ்வில்லின் கீழ் ஊன்றப்படும் நுனியில் இருக்கட்டும். ஏனெனில் அதன்
கீழ்நுனியைத் தன் கால் பெருவிரலால் அழுத்திக் கொண்டு வில்லை அவள்
நாணேற்றும்போது அவள் பாதம் என் மனத்தில் பதியும் அல்லவா?” எனவும்
வேண்டுகிறார் (73).

            “கொடிய பாவங்களைச் செய்தவர்களைத் தண்டிக்க மிகுந்த சினம்
கொண்டு, இந்த மலர்க்கணையால் உங்களை அடிப்பேன் என ஓங்கியவாறு நின்றாயே தாயே!
இது தான் நீ அளிக்கும் அதிக பட்ச தண்டனை என்றால், உன் கருணையை எவ்வாறு சொல்ல
இயலும்?” (74)

            தம் குழந்தைகள் எத்தகைய தவறு செய்தாலும் தாய் அவர்களைப் பெரிதாகத்
தண்டிக்க மாட்டாள் என்ற பொருள் பட அபிராமி பட்டரும், *‘பஞ்சஞ்சு மெல்லடியர்
அடியார் பெற்ற பாலரையே*,’ என்பார்.

            மீனாட்சியைக் கையில் பாசம் அங்குசங்களைத் தரித்தவளாகத்
தியானிப்பவர்கள் எல்லா உலகங்களையும் அடக்கித் தம் வசப்படுத்திக்
கொள்கின்றனர். கரும்பு வில்லும் மலரம்புகளும் ஏந்தியவளாகத் தொழுபவர்கள்
உலகத்தையே புரந்தளிக்கும் வல்லமை பெற்ற அரச போகத்தை அடைகிறார்கள் என
அம்மையைத் துதிப்பதின் இம்மைப் பலனை விளக்கினார் ( 75).

            புண்ணியம் படைத்த உண்மையான ஞானச் செல்வர்கள் என்ன செய்வார்களாம்
தெரியுமா? அம்மையின் கைப் பாசத்தையும் அங்குசத்தையும் தியானித்து விருப்பு,
வெறுப்பு இவை அற்றவர்களாகி வாழ்வர். கரும்பு வில்லையும் மலர்க்கணைகளையும்
தியானிக்கும் அடியார்கள் தம் மனதை ஐம்புல இன்ப துன்பங்களில் விழுந்து விடாமல்
காத்துக் கொள்கிறார்கள். இவை மறுமைப் பயன்களாகும் (76).

            இவ்வாறு தியானிப்பதன் உண்மைப் பயனை உணர்ந்த ஞானச் செல்வர்களை
தீட்சிதர்,*‘திருந்திய மெய்யுணர்ந்த திருவாளர் நின் கை பொருந்திய கரும்புச்
சிலை மென் மலர்க்கணை தமை நினைந்து தம்முளத்தை விடயாந்த கூபம் விழாது
அகற்றுவாரே,’* என உயர்த்துவார்.

            அடுத்து அடியவர் தீட்சிதரின் மனம் அன்னையின் முகமெனும் நிலவில்
லயித்து நிற்கிறது.

            “உலகத்து உயிர்கள் உடம்பை விட்டு நீங்கினால் மனம் முதலில்
சந்திரனை அடைகிறது என வேதங்கள் கூறுகின்றன. என் மனமோ இப்பொழுதே உனது
தருமுகம் ஆகிய சந்திரனைச் சென்றடைந்து அதை விட்டு நீங்காமல் உறுதியாகத் தங்கி
விட்டது,” என்கிறார் (77).

            தாம் தேவியின் திருமுகத்தை இடைவிடாது தியானிக்கின்றதை இவ்வாறு
கூறுகிறார்.

            “வித்யா மயமான உனது பல்வரிசையின் வெண்மை ஒளியின் சிறப்பினை
இத்தகையது எனச் சொல்லக்கூடியவர் யார்? ஏனெனில் அதிலிருந்து பிறந்த சரஸ்வதி
வெண்ணிறம் கொண்டவள். அவளுடைய அனுக்கிரஹத்தால் கவிஞர்களுக்கு விளைகின்ற பெரும்
புகழும் அதை விடவும் வெண்ணிறம் கொண்டதாம்.” (78).

            தேவியின் பல்வரிசை வித்யா மயமானது. இந்த வித்தையிலிருந்து
தோன்றிய கலைமகளும் வெண்ணிறம் கொண்டவள். கல்வியால் கலைஞர்களுக்குப் புகழ்
உண்டாகும் என்பது இதனால் விளக்கப்பட்டது.

            *‘சுத்தவித்தையே முளைத்தாற் போன்று விளங்கும் இரு பல்வரிசைகளை
உடையவள்,*‘ என லலிதா சஹஸ்ர நாமமும் போற்றும்.

            “வெண்ணிறம் பெற்று விளங்கும் உன் பல்வரிசையானது, பொன் நிறமாகப்
பழுத்து வெடித்த மாதுளம் பழத்தின் விதைகள் போன்று சிவந்த நிறம் பெற்று
விளங்குவதற்குக் காரணம் என்ன தெரியுமா தாயே? ரஜோ குணம் எனப்படும் இரசத குணம்
நிறைந்த மனத்தினன் ஆகிய நான் அப்பல் வரிசையை இடைவிடாது போற்றி வழிபடுவதால்,
எனது மனச் சிவப்பின் கூட்டுறவால் பற்களும் சிவந்து விளங்குகின்றன என
நினைக்கிறேன்,” என்கிறார் (79).

            குணங்கள் மூன்று வகை- சத்துவம், இராசதம், தாமதம் எனும் அவை முறையே
வெண்மை, செம்மை, கருமை எனும் நிறத்தன என நூல்கள் கூறும். இவற்றுள் இராசதம்
காமக்குரோதங்களுக்கு இடமானது. அத்தகைய தன் மனத்துடன் அன்னையின் பல்வரிசை
சம்பந்தப்பட்டதால் அது சிவந்து காணப்பட்டதாம்.

            அடுத்து அன்னையின் புன்முறுவலைப் பற்றிக் கூறுவார்: “தாயே! உனது
புன்முறுவலின் சரிபாதி  ( சிவபிரான்) தான் திரிபுரங்களையும் எரித்தது என்றால்
மற்றொரு பாதியும் அந்த ஆற்றல் கொண்டது என்பதில் ஒரு தவறும் இல்லையே! ஆகவே
அந்த மற்றொரு பாதிப் புன்முறுவலைத் தியானித்து, நாங்கள் எடுத்து வந்துள்ள
முப்புரங்களாகிய காரண தேகம், சூட்சும தேகம், ஸ்தூல தேகம் என்பனவற்றின் வலிமையை
நாங்கள் வெல்லுவோம்,” என்கிறார்.

                        *அம்பாவுன் புன்சிரிப்பில் செம்பாதி*

*                             புரம் மூன்றும் அழித்தது என்றால்*

*                   வம்போ மற்றொரு பாதி தானும் அந்த*

*                             வல்லமையை வாய்ந்தது என்றால்*

*                   எம்பாவ பந்தவினை எடுத்து வரும்*

*                             காரண சூக்கும தூலத்தாம்*

*                   வெம்பாவப் புரவலியை அம்முறுவல்*

*                             ஒளிநினைந்து வெல்லுவோமே! (80)*

            (*செம்பாதி*– சரிபாதி; *வம்பு*– புதுமை)

            பராசக்தியின் புன்முறுவலைத் தியானித்தால் மற்றொரு வகையான
முப்புரங்களை அழிக்கும் ஆற்றல் கிட்டும்; அவை காரண, சூட்சும, ஸ்தூல
தேகங்களாகும்.

            இதனைத் திருமூலரும் பின்வருமாறு கூறுவார்:

                        *அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்*

*                   முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்*

*                   முப்புரம் ஆவது மும்மல காரியம்*

*                   அப்புரம் எய்தமை யாரறி வாரே! (திருமந்திரம்)*

            சிவபிரான் தன் சிரிப்பினால் பொன், வெள்ளி, இரும்பினாலாகிய மூன்று
கோட்டைகளை அழித்தான் என அச்செயலின் உட்கருத்தினை உணராதவர்கள் கூறுவர்; ஆனால்
இறைவனால் அழிக்கப்பட்ட முப்புரம் என்பது உயிர்களைப் பிணித்துள்ள ஆணவம்,
கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் காரியமாகிய செயல்களைத் தான்.

            அவளுடைய புன்னகையைத் தியானித்தால் வீடுபேறடையலாம் என்பது திண்ணம்.
அடியார்கள் வேண்டுவதெல்லாமும், தேடுவதெல்லாமும் முத்தி அடைய வேண்டும்
வழிமுறைகளைத் தானே!

            ஆகவே தீட்சிதர் தொடர்ந்து பாடுகிறார்: “மீனாட்சி! உன்
புன்முறுவல் எப்படிப்பட்டது தெரியுமா? உன் அடியானாகிய நான் படும் துன்பங்களை
உணர்ந்து நீ உள்ளம் நெகிழ்வதால்  உருகியோடும் வெண்ணெய்க்கு ஒப்பானது;  உனக்கு
மீளா அடிமையாகி, எப்போதும் உன்னை உள்ளத்தில் இருத்தி வழிபடுபவர்களின் அகத்து
இருளை ஓட்டும் ஒளி பொருந்தியது; நன்மை எல்லாம் தந்து அகத்து இருளை ஓட்டும்
அது எனக்கு நலம் தரட்டும்.” (81).

            அடுத்து அன்னையின் தாம்பூலத்தை யாசிக்கிறார்; ஆனால் இவர் ஏற்கெனவே
தாம்பூலம் பெற்றவர் என்றே நாம் கருதும் வண்ணம் அழகிய இந்த *‘ஆனந்த
சாகரஸ்தவம்’* எனும்
நூலை இயற்றியுள்ளாரே! இவர் எத்துணை பெரிய யோகியாக இருந்திருக்க வேண்டும் என
வியக்கிறோம். இதனை *‘இன்பமாகடல்’* என மொழி பெயர்த்த திரு. நடேச கவுண்டருமே
அன்னையின் அருட் கடாட்சம் பெற்ற மற்றொரு யோகியாராவார். இவர்களது திருவடிகளை
வணங்கித் தொடர்கிறோம்.

            “அன்னையின் திருமுகத் தாமரை அற்புதமான இயற்கை மணம் வீசுகின்றது;
அத்துடன் இணைந்து அவளது திருவாய்த் தாம்பூலமும் கற்பூர மணம் பரப்புகிறது. அதன்
சாறு ஆகமங்கள் எல்லாம் புகழும் ஞானத்தின் சாரமாகும்; அதனைக் கருணை கொண்டு என்
வாயில் நீ உமிழ வேண்டும் தாயே!” என வேண்டுகிறார் (82).

                        *“அருமைமிகு ஆகமங்கள் அனைத்துமுரை*

*                             ஞானத்தின் சாரம் தன்னைக்*

*                     கருணையினால் என் வாயாம் காளாஞ்சி*

*                             தனில் உமிழ்க………………,”* என்கிறார்.

            தீட்சிதர் கூறுவது போல, தேவியின் தாம்பூலச் சாறு ஆகம சார
மயமானதாகும். அந்தச் சாற்றினை உண்டு மூகனாயிருந்த ஒருவன் ‘மூக பஞ்சசதி’
பாடியதையும் திருவானைக்காக் கோவில் ஊழியன் ஒருவன் காளமேகக் கவியானதையும் நாம்
அறிவோமன்றோ?

            மீனாட்சியின் மூக்குத்தி என்னும் திரு ஆபரணம் மிகவும் உயர்வானது.
பாமரர் முதல் பண்டிதர் வரை இதனைப் பற்றிப் புகழ்ந்துரைத்துள்ளனர். நீலகண்ட
தீட்சிதர் இதனை ஒரு அபூர்வமான கருத்தைக் கொண்டு தியானிக்கிறார்.

            “பலநாள் முயற்சியால் வசப்படுத்தப்பட்ட முனிவர்களது மனதினில்
நிலைபெற்று ஒளி வீசுகின்றதும், உனது சண்பக மொக்குப் போன்ற திருநாசியில்
பொருந்தி ஒளிவீசுகின்றதுமான மூக்குத்தி, அஞ்ஞானப் பெருவெள்ளம் எனும் இரவின்
முடிவைக் குறிப்பதற்காக எழுந்தருளும் விடிவெள்ளி என்று தெளிவாய்க் கூறலாமே,”
என்கின்றார் (83).

            பலகாலம் தவம் செய்தவர்களுக்கே மனம் வசப்படும். தியானம் கைகூடும்.
அன்னை மீனாட்சியின் திருநாசியைத் தியானிக்கும் போது அதில் விளங்கும்
மூக்குத்தியின் ஒளி நம் நெஞ்சில் தோன்றுமாயின், அந்நெஞ்சின் அஞ்ஞான இருள்
விரைவில் தீரும் என்பது இதன் பொருளாகும்.

(வளரும்)

***********************************************


<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


[image: Inline image 20]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



[image: Kedarmal D]*v **a n a k k a m**  S u b b u*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to