*அங்கயற்கண்ணி என்னும் அருட்பெருங்கடல் – 6**கருணை வெள்ளம் அவள் கடைக்கண்
பார்வை*
*மீனாட்சி பாலகணேஷ்*
எத்தனை எத்தனையோ அடியார்கள், ஞானிகள் அன்னை பராசக்தியின்
திருவுருவ வடிவைப் போற்றிப் பாடியுள்ளனர். சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி,
ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம் போன்ற ஒவ்வொரு நூலிலும் உயர்ந்த, வித்தியாசமான
கற்பனைகளைக் கண்டு பக்தர்கள் உள்ளம் நெகிழ்வர். ஆனந்த சாகர ஸ்தவம் என்ற நூலும்
அவ்வாறே அதை இயற்றிய அடியவர் நீலகண்ட தீட்சிதரின் கற்பனைக்கேற்ப அழகான கருத்து
வளங்கள் கொண்டு விளங்குகின்றது. அதைத் தமிழில் ‘இன்பமாகடல்’ ஆக்கித் தந்த
கவியரசு திரு நடேச கவுண்டர், மூலநூலின் அழகை அழகு தமிழில் இன்னுமே
மெருகேற்றித் தமிழர்களாகிய நம் அகம் குளிரக் குளிர வழங்கியுள்ளார்.
[image: appaia and neelakanda deekshithar]
இவ்வகையில் அடுத்து வரும் பாடல், கற்பனை வளமும், கவிதை நயமும்
கொண்டு திகழ்கின்றது.
“நான்மாடக் கூடல் நகரில் உறையும் மீனாட்சியே! தாம்பூலத்தை
உள்ளடக்கி இருப்பதால் உன் கன்னம் உப்பி விளங்குகின்றது; அந்தப் பளபளக்கும்
கண்ணாடி போன்ற கன்னத்தில், உன் காதோலையில் உள்ள முத்தின் ஒளி படுகின்றது;
அப்போது உண்டாகும் நிழலானது எவ்வாறு உள்ளது தெரியுமா? மிக்க உயர்வானதும்,
தனக்கு ஈடு இணை இல்லாததுமான அந்தப் பரம்பொருளை உணர்த்தும் பிரணவ எழுத்தை
(ஓம்) வெளிவிடாமல் உன் வாய் அடக்கி வைத்துள்ளது போல இருக்கின்றது,”
என்கிறார். அழகான தத்துவம் பொதிந்த பாடல் இது.
*தாம்பூலம் உள்ளடக்கித் தடித்திலங்கும்*
* கவுளின்மிசைத் தாடங் கத்தின்*
* ஆம்பூர்ண ஒளிமுத்தின் நிழலென்ற*
* பெயராலுன் ஆம்பல் செவ்வாய்*
* மேம்பூர்ணம் ஆகி இரண்டற்ற பரம்*
* பொருளெழுத்தை வெளிவி டாமல்*
* ஓம்பா நிற்கின்றது………………………. (84).*
சிறிது சிந்தித்துப் பார்த்தால் காதின் வடிவம் ஓங்காரத்தை ஒத்துள்ளது எனத்
தெளியலாம். அதனுடன் சேர்ந்த காதோலையுடனான நிழல் அன்னையின் கன்னத்தில் ஓங்கார
வடிவில் விழுகின்றது. ஆகவே, அன்னை பிரணவ எழுத்தைத் தன் வாயில் உள்ளடக்கி
வைத்துள்ளாள் என உயர்வாகக் கூறுகிறார்.
அடுத்து கண்களை வர்ணிக்கின்றார், “தாயே, காதின் வரை
நீண்டுள்ளனவும், செவ்வரி படர்ந்ததுமான உனது கண்கள், எனக்கு இம்மையில் எல்லாச்
செல்வங்களையும் தரும்; மறுமையில் தேவேந்திர பதவியையும் கூடத் தரும்; ஆனாலும்
அவற்றால் கர்ண அளவினைக் கடக்க மாட்டாமை வியப்பாக உள்ளது,” என்கிறார் (85).
கண் காதளவு ஓடுகிறது; ஆனால் காதைத் தாண்டாது என்பது பொருள்.
இதில் வியக்க என்ன உள்ளது? இதில் உள்ள சிலேடை மிக சிலாக்கியமானதாம். கர்ணன்
பெரும் கொடையாளி என்பது உலகறிந்தது. அன்னையின் கண்கள் அவனுடைய கொடையின்
அளவினை மீற இயலவில்லையே எனவும் பொருள் கொள்ளலாம். இது ஒரு நயமாகும்.
“*தனம் தரும், கல்வி தரும்…… அபிராமி கடைக் கண்களே*,” என்ற
பாடலும், “*தாயே! தீர்க்கமான கருநெய்தல் மலர் போன்ற உன் கண்பார்வையால் தொலை
தூரத்தில் உள்ள தீனனாகிய என்னையும் நீராட்டி வை. அதனால் நான் செல்வந்தனாகி
விடுவேன்,*” என்ற சௌந்தர்ய லஹரி ஸ்லோகமும் இங்கு சிந்திக்கத் தக்கன.
மகான்கள் அனைவரும் ஒத்த கருத்துடையவர்களாக விளங்குவது புரியும்.
“கற்குவியல்கள் போல நெருடலானதும், யாருமே நுழைய முடியாத
அடர்த்தியானதுமான (உபநிடதங்கள் என்னும்) காட்டின் மேல் நிலவு போலப்
பொழிவதனால் யாருக்கு என்ன பயன்? எண்ணற்ற பிறவிகளெனும் கோடையால் வருந்தும்
என்மேல் உன் கண்ணொளியாகிய நிலவைச் சிறிது தூவ மாட்டாயோ,” என்கிறார் (86).
மீனாட்சியின் கடைக்கண் ஒளி, தண்மையானது. ஆறுதல் தருவது. அது
எப்போதும் உபநிடதங்களின் மேல் தான் பாய்ந்து கொண்டிருக்கிறதாம். அதாவது
உபநிடதங்கள் அவள் அருளை விளக்குகின்றனவாம். இந்த உபநிடதங்கள் நன்கு
கற்றாருக்கே விளங்குமாதலால் அவற்றைக் கடினமான கற்குவியல் செறிந்த காட்டிற்கு
ஒப்பிட்டார். அவற்றின் மேல் அன்னையின் கண்ணொளி பாய்வதால் பயனில்லை; ஆனால்
வெப்பத்தால் வருந்துவோர் மேல் பட்டால் அவர்கள் இன்பம் எய்துவார்கள் என்பது
கருத்து.
[image: Kama_Shiva]
“சிவனால் எரித்து அழிக்கப்பட்ட மன்மதனை உனது கருணை மயமான கண்
மீண்டும் உயிர்ப்பித்தது எனக் கூறுவது உனக்குப் புகழாகுமா? அசையும் பொருள்,
அசையாப் பொருள் என அனைத்தையும் படைத்து, அவற்றிற்கு, அறம், பொருள், இன்பம்,
வீடு என்னும் நான்கு பேறுகளையும் வழங்கும் பெருமையுடைய உனது கண் இதைச் செய்தது
எனக் கூறினால் அது அக்கண்ணின் பெருமையைக் குறைத்துக் கூறியதாகும் அல்லவோ?,”
எனக் கேட்கிறார்.
* ………………………………..*
* சரவசரம் முழுதாக்கிச் சதுர்விதமாம்*
* பயனளிக்கும் தகைய கண்செய்*
* அரியசெயல் இது என்னில் குறைவுறக் கூ*
* றியகுற்றம் ஆகும் தாயே. (87)*
உலகைப் படைப்பது அன்னையின் கண்ணே என்பார் தீட்சிதர். “சோமன் (
சந்திரன்) உலகைப் படைப்பான் என வேதம் கூறுகின்றது; அதில் சோமன் என்பது
சோமலதை என்னும் கொடியைக் குறிக்கும் என அறிவில்லாதவர்கள் கூறுவார்கள்.
சான்றோர் அவ்வாறு கூற மாட்டார்கள். ஏனெனில் இதன் பொருள், சோமசுந்தரனாகிய
பெருமானின் இடப்பாகம் அமர்ந்துள்ள உனது கண்ணாகிய சந்திரனே உலகைப் படைக்கிறது
என வேதங்களால் குறிக்கப் பட்டதாம்.”
சிவபிரானின் இரு கண்களும் சூரியன், சந்திரன் எனப்படும்; இதில்
அன்னை இடப்பாகம் அமர்ந்தவள் ஆதலால் இடது கண் அவளுடையது எனக் கொள்ளலாம்.
பின்னும் கூறுவார்: “உன்னுடைய உதார குணம் மிகுந்த கண்களுக்கு இந்த
அகன்ற உலகு ஒரு ஊசிமுனை அளவினதாகவும், மேருமலை ஒரு அணு அளவினதாகவும்
காணப்படும். அத்தகைய கொடைத்தன்மை வாய்ந்த தடங்கண்களின் அருட்பார்வை
கிடைக்கப் பெற்றதனால் நாங்களுமே மிகவும் துன்பம் நிறைந்த பிறவிப் பெருங்கடலை
ஒரு சிறு குழியாக மதிக்கிறோம்,” என்கிறார் (89).
மிகப் பெரியவற்றை மிகச் சிறியனவாக மதிப்பன அம்மையின் கண்கள்;
ஏனெனில் அவள் கண்கள் கொடுப்பதில் (கொடையில்) நிகரற்றது என்பார்.
அடுத்து மிக அழகுபட விழிகளின் முந்நிறத்தை வருணிக்கிறார்.
“சரஸ்வதியின் இருப்பிடமானதால் கற்பூரம் போல வெண்மை நிறம் கொண்டும், லட்சுமி
உறைவதால் தாமரை மலரின் மகரந்தம் போலச் சிவந்த நிறம் கொண்டும் உறுதியாக
அடைக்கலம் புகுந்தவர்களின் சித்தத்தில் உள்ள அழுக்கைத் துடைத்த காரணத்தால்
கருமை நிறமும் கொண்டு உனது பெரிய மலர்க்கண்கள் விளங்குகின்றன,” என்கிறார்.
*‘கலைமாதுக்கு உறைவிடமா இருப்பதனால்*
* கற்பூர வெண்மைத் தாகி*
* அலைமாதின் கூட்டுறவால் கல்லாரத்து*
* தாது அனைய செம்மைத்தாகி*
* நிலையாகச் சரண் அடைந்தார் மனமாசு*
* துடைத்து அசித நிறத்தது ஆகி*
* மலைமாதே மீனாட்சீ நினது தட*
* மலர்விழி தான் வயங்கும் மாதோ’ (90).*
(கல்லாரம்= செங்கழுநீர்; தாமரை; அசிதம்- கறுப்பு; அழுக்கு)
நீண்டு அகன்று வெண்மை, செம்மை, கருமை எனும் மூன்று நிறங்களையும்
கொண்டிருப்பது கண்ணுக்கு இலக்கணம் ஆகக் கூறப்படும். இங்கு அன்னை மீனாட்சியின்
கண்கள் கல்வி, செல்வம் இரண்டையும் வாரி வழங்கி, கருமையான பாவங்களையும்
போக்கும் தன்மையன என்பது பொருள்.
ஆதிசங்கரரும் சௌந்தர்ய லஹரி 53-ம் ஸ்லோகத்தில் அன்னையின்
கண்களை இவ்வாறே மூன்று நிறங்கள் கொண்டதென தியானிக்கிறார்.
“*சிவனுடைய அன்பிற்கு உரியவளே! அழகுக்காகத் தீட்டிக் கொள்ளப்பட்ட
மையினால் இன்னும் தெளிவாகக் காணப்படும் உன்னுடைய கண்கள் மூன்றும் பிரளய
காலத்தில் உன்னிடம் ஒடுங்கி விட்ட பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் எனும் தேவர்களை
மீண்டும் தோற்றுவிப்பதற்கு நீ மூன்று குணங்களையும் உன் கண்களில் தரித்துக்
கொண்டாற் போல் காணப்படுகின்றன.”*
மூன்று நிறங்கள் மூன்று குணங்களுக்கு அடையாளமானவை; படைப்புக்
கடவுளான பிரம்மா ரஜோ குணத்தைக் கொண்டவர் (சிவப்பு நிறம்); காக்கும் கடவுளான
திருமால் சத்துவ குணத்தைக் கொண்டவர் ( வெண்மை நிறம்); அழிக்கும் கடவுளான
ருத்திரன், தமோ குணத்தைப் பிரதானமாகக் கொண்டவர் ( கருமை நிறம்). மூன்று
நிறங்களும் இம்மூன்று குணங்களுக்கு அடையாளம். தன்னிடமிருந்து உலகைப் படைக்கத்
துவங்கும் பொழுது அன்னை பராசக்தி முதலில் இந்த மும்மூர்த்திகளையும்
தன்னிலிருந்து தோற்றுவிக்கிறாள் என்பது தாத்பரியம்.
செவியினுடன் போர் செய்யும் மீனாட்சியின் கண்கள் கருணை வெள்ளம்
பெருகும் ஆறு; அதில் எழுதி உள்ள மையினால் வரைந்த கோடானது, அந்த ஆற்றின்
கரையில் படிந்துள்ள பாசி போன்றதாகும் என்பார் (91).
கண்களையும், அக்கண்களின் கடாட்சத்தையும் இத்தனை வருணித்த பின்பு,
தீட்சிதர் தாம் முன்பே கூறிய வண்ணம், “நான் உன் திருவுள்ளக் கருணை ஒன்றினையே
நம்பியுள்ளேன். உன் கண்களை நான் நம்புவதற்கில்லை! ஏன் தெரியுமா? பெரிய பெரிய
உலகங்களை எல்லாம், படைத்தல், காத்தல், அழித்தல் என்ற வெவ்வேறு தொழில்களைச்
செய்யும் உனது கடைக்கண்கள் ஓரியல்பிலே நில்லாதவை அல்லவோ? அவற்றை எங்ஙனம்
நம்புவதாம்?” எனக் கூறுகிறார் (92).
முந்தைய பாடலில் கண்டது போல, படைத்தும், காத்தும் அழித்தும்
தொழில் செய்யும் போது கருணை நிறைந்த அன்னையின் கண்கள் அந்த அந்தக்
குணங்களில் ( ரஜோ, தமோ, சத்துவம்) பொருந்துவதால் அவை ஓரியல்பு அற்றவை;
ஸ்திரமான குணம் அற்றதனால் அவற்றை எதற்காக நம்புவது என்பார். ஆதலால் தேவியின்
கண்களில் குடியிருக்கும் கருணையையே நம்புகிறேன் என்பார்.
பின் கூறுவார்: “சிவபிரானது கல்யாண குணங்கள் அனைத்தும் ஒரு
பாகமாகவும் அவனுடைய பெருங்கருணை மட்டுமே இடப்பக்கத்தில் மற்றொரு பாகமாகவும்
அமைந்துள்ளது. எல்லாக் கல்யாண குணங்களும் சேர்ந்து திரண்டு வலப்பாதியாக ஆண்
வடிவத்தில் அமைந்துள்ளன. கருணை என்னும் பெருங்குணமே உன் வடிவாய் அவனது
இடப்பாதியாய் விளங்குகின்ற உண்மையை உன்னைத் தரிசித்ததால் நான் இன்று தான்
தெரிந்து கொண்டேன்.”
*சம்புவின் தன் களங்கமறு பெருங்கருணை*
* தானே ஓர் பாகமாகும்*
* நம்புபிற குணங்கள் எல்லாம் திரண்டே மற்*
* றொருபாகம் நண்ணும் என்னும்*
* செம்பொருளின் நுண்மையினை நின்வடிவம்*
* செம்பாதி தெரிசித்து இன்றே*
* அம்பிகையே அறிந்து கொண்டேன்*
* அணியாலவாய் அமர் அங்கயற் கண்ணாளே (93)*
சிவனது அருளே சத்தியாகும் என்பது பலப்பல ஆன்றோர்கள் கூறுவது.
*‘அருளது சத்தியாகும் அரன் தனக்கு அருளை இன்றித்*
* தெருள் சிவமுமில்லை; அந்தச் சிவமின்றிச்
சத்தியில்லை,’* என்பது
சிவஞான சித்தியார்.
அன்னையின் கஸ்தூரிப் பொட்டுக்கு அடுத்து ஒரு அழகான உவமை
கூறுகிறார்.
“தேவர்கள் அனைவரும் உன் புருவங்கள் அசைந்து இடுகின்ற கட்டளைகளை
அறிந்து நிறைவேற்றுவதற்காகக் காத்திருக்கின்றனர்; அதனால் அவர்கள் பார்வைகள்
எல்லாம் ஒன்றாகத் திரண்டு உனது இரு புருவங்களின் நடுவே பொருந்தி
விளங்குகிறது; அது நீ விரும்பி இட்ட கஸ்தூரிப் பொட்டு போலப் பொலிகிறது,”
என்கிறார் (94).
தேவி இட்ட பணியை அவள் கண்ணசைவின் குறிப்பறிந்து தேவர்கள்
நிறைவேற்றுகின்றனர். ஆகவே அவள் புருவ அசைப்பை விட்டுப் பெயராது நின்றது
அவர்களது பார்வை.
இந்தப் புருவ அசைப்பின் குறிப்பறிந்து தேவர்கள் பணிபுரிவதை
சௌந்தர்ய லஹரியும் 24-ம் பாடலில் சிறப்பிக்கின்றது. படைத்தல், காத்தல்,
அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களையும் முறையே பிரம்மா,
விஷ்ணு, ருத்திரன், ஈசானன், சதாசிவன் ஆகிய தேவர்கள் மூலம் தேவி நடத்துகிறாள்.
ஆகவே எல்லாரையும் நொடி நேர அசைப்பினால் தெரிவிக்கப்படும் தனது
புருவக்கொடிகளின் கட்டளைப்படி அவள் நடத்துகிறாள் என்பதாகும்.
‘பல சந்திரர்களின் அமுதத் துளிகளைச் சேர்த்துப் பண்ணியது போல
உனது திருமுகம் விளங்குகிறது. அவற்றின் உள்ளிருந்த களங்கம் எல்லாம் ஒன்று
திரண்டு உன் முகத்தின் பின் கூந்தல் எனும் பெயர் கொண்டு பொருந்தி நின்றன என
எண்ணுகிறேன்,” என வியக்கிறார் (95).
‘மேலும் இந்திர நீலக்கல்லின் காந்தி பொருந்திய உனது கூந்தலில்,
களங்கமற்ற பளிங்கு போன்ற பிறை படிகின்றது; அப்போது அந்தக் கூந்தலின் நீல ஒளி
அதன் மீது படிகின்றது; ஆகவே அப்பிறை வளமான கருமையாய், கருங்குவளை இதழ் போல
விளங்குகிறது. இது, தமது குணம் மறைந்து தாம் சேர்ந்த இடத்தின் குணமே ஒருவரிடம்
மேலோங்கி நிற்கும் எனத் தெரிவிப்பதைப் போல உள்ளது,” என்கிறார் (96).
(வளரும்)
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
[image: Inline image 1]
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
[image: Kedarmal D]*v **a n a k k a m** S u b b u*
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.