குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. திருமண உறவை அடியோடு அறுத்துக்கொள்ள ஆயிரக்கணக்கான தம்பதிகள் வழக்கு தொடுத்து "டைவர்ஸ்' பெறக் காத்திருக்கின்றனர்.
பொருளாதார வேட்கையும், நாகரீக மோகமும் நகர வாசிகளின் நரக வாழ்க்கையை ஏறத்தாழ இயந்திர மயமாகவே மாற்றி விட்டன. முன்னோர்களால் காலங்காலமாகப் பேணிப் பாதுகாக்கப்பெற்று வந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் உறவுக் கூடுகள் உடைந்து நொறுங்கி வருகின்றன. குடும்பத்தைக் கடந்து, மனித உறவுகளை உறுதிப்படுத்துவதாகத் தற்போதைய நாகரீக வாசிகளின் வாழ்க்கை முறை இல்லை. சமூகம் சார்ந்த வாழ்க்கை தடம் புரண்டு, பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை தலைதூக்கி உள்ளது. சிக்கன வாழ்க்கை முறை செலவழிக்கும் வாழ்க்கை முறையாக மாறி வருகிறது. "அவரவர் குடும்பம், அவரவர் வாழ்க்கை' என, வெறும் வரவு - செலவு கணக்காக மட்டுமே உறவு முறைகள் பார்க்கப்படுகின்றன. விளைவு, தனிக்குடும்ப வாழ்க்கை; அதனால், தலைதூக்கும் பிரச்னைகள். தகராறுகளை தங்களுக்குள் பேசித் தீர்த்து கணவன் - மனைவி உறவைத் தொடர முடியாமல் கோர்ட் படியேறும் அவலம். பெற்றோர், அக்காள், தங்கைகளின் உறவை அறுத்து தனிக்குடித்தன முறைக்குப் பலரும் மாறிவிட்டதால், சிறுசிறு தவறுகளைச் சுட்டிக் காட்டவும், அறிவுரை கூறி நல்வழிப்படுத்தவும் அருகில் பெரியவர்கள் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் முதியோர் இல்லங்களில் தஞ்சம் அடைந்திருக்கும் அவல நிலையால் இந்தத் தொல்லை. *உடையும் உறவுகள்:* கூட்டுக்குடும்ப முறையில் இருக்கும் சுய கட்டுப்பாடுகள், தனிக்குடித்தனம் நடத்தும் தம்பதியினரிடம் குறைந்து வருவதை, கோர்ட்டுக்கு வரும் வழக்குகள் உறுதிப்படுத்துகின்றன. வேலைக்குச் செல்லும் கணவன், மனைவி இடையே ஏற்படும் ஈகோ, தமது துணை தவிர்த்து பிறருடனான கள்ள உறவு, நடத்தையில் சந்தேகம், பாலியல் உறவில் நிலவும் மனக்குறைகள் என, பல விதமான காரணங்களுடன் அதிக வழக்குகள் கோர்ட்டுக்கு வருகின்றன. கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்து வழக்கைக் கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர். விவாகரத்து தவிர, ஜீவனாம்சம் கேட்பு, குழந்தை பராமரிப்பு குறித்த வழக்குகளும் அதிகம் தாக்கலாகின்றன. ஆண்களை விட பெண்கள் தான் விவாகரத்து, ஜீவனாம்சம் கேட்டு அதிக அளவில் வழக்கு தொடர்கின்றனர். கணவரின் கள்ளத்தொடர்பு, மாமனார் - மாமியார் "டார்ச்சர்', தனிக்குடித்தனம் நடத்த வராதது, போன்ற காரணங்கள் விவாகரத்து கோரும் பெண்கள் தரப்பில் கூறப்படுகின்றன. இதேபோல், மனைவி நடத்தை மீது சந்தேகம், கள்ள உறவு, ஈகோ உள்ளிட்ட காரணங்களை ஆண்கள் முன் வைக்கின்றனர். இளம்தம்பதிகள் பெரும்பாலும், விவாகரத்து தீர்மானத்துடன்தான் கோர்ட் படியேறுகின்றனர். வழக்கு விசாரணை துவங்கும் முன், கணவன் - மனைவிக்கு தனித்தனியே "கவுன்சிலிங்' நடத்தி, "முடிவை மாற்ற' அறிவுரை வழங்கப்படுகிறது. ஆனாலும், முடிவில் மாற்றமின்றி "டைவர்ஸ் ஒன்றே குறி' என்ற ரீதியில் உறுதியாக உள்ளனர். இதனால், வழக்குகள் விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்படுகின்றன. மற்ற துறைகளில் பணியாற்றுவோரை காட்டிலும், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றுவோர் அதிகளவில் விவகாரத்து மனு தாக்கல் செய்கின்றனர். சிலர் திருமணமாகி சில மாதங்களிலேயே உறவை முறித்துக் கொள்ளும் தீர்மானத்தில் இறங்கிவிடுகின்றனர். நவ நாகரீக உலகில் மாறி வரும் குடும்பக் கலாச்சாரப் போக்கு கவலையளிப்பதாக உள்ளது. தனது துணைக்கு துரோகமிழைத்து வேறு துணையை நாடுவது, பிரச்னை தலை தூக்கும்போது தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போகும் மேம்பட்ட மனப்பாங்கு இல்லாதது, தேவையற்ற "ஈகோ' வை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவையே விவாகரத்து கோரும் வழக்குகள் அதிகரிக்க முக்கிய காரணம். விவகாரத்து பெறுவோர், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிக் கவலைப் படுவதாக தெரியவில்லை. இதனால், சமூகச் சூழலும் மாறும் அபாயமிருக்கிறது . இந்த நிலையில் நம் குழு நல்ல முறையில் விவாதித்து அறிஞர்கள் துணையுடன் வழக்கறிஞர்கள் வழிகாட்டுதலுடன் நல்ல உள்ளங்களின் ஒத்துழைப்புடன் செயல்பட்டால் மிகப் பெரிய மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. நமக்குத் தேவை ஒற்றுமை. நல்லவர்கள் வல்லவர்கள் அதிகமாக இருக்கும் இந்தக் குழுவில் ஒற்றுமை மேம்பட்டால் நம் சமூகம் பழையபடி சிறப்பாக வாழ வழி வகை செய்யலாம். <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* [image: 😎] *v **a n a k k a m** S u b b u* [image: 😎] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
