*அவர்கள் வந்த காரணத்தை விளக்கினர். திருமால் இந்திரனிடம், தேவேந்திரா! திருப்பாற்கடலை கடைந்தபோது நீ உனது ஆயுதத்தை ததீசி முனிவரிடம் கொடுத்து வைத்தாய். ஆனால் அதை திரும்ப வாங்க மறந்துவிட்டாய். நீ வருவாய் என காத்திருந்த மகரிஷி வராமல் போனதால் அந்த ஆயுதங்களை விழுங்கிவிட்டார். அவை அனைத்தும் அவரது முதுகுத்தண்டில் சென்று சேர்ந்துவிட்டது. அந்த மகரிஷியிடம் வேண்டி அவரது முதுகுத் தண்டை பெற்று அதை ஆயுதமாக பயன்படுத்தி போரிட்டால் விருத்திராசுரன் மடிவான்.ஆனால் முதுகுத் தண்டை உனக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டால் மகரிஷி இறந்துவிடுவார். இனி அதை பெறுவது உன்னுடைய வேலை என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினார்.*
*தேவேந்திரன் ததீசி முனிவர் தவம் செய்துகொண்டிருந்த ஆசிரமத்திற்கு சென்றார். அவன் வந்த காரணத்தை அறியாத முனிவர் அவனை வரவேற்றார். ததீசி முனிவருக்கு இந்திரன் தான் கொண்டு வந்த மங்கலப் பொருட்களை சமர்ப்பித்தான். பெரியவர்களைப் பார்க்க வெறும் கையுடன் செல்லக்கூடாது. பழம், பூமாலை முத லானவற்றை வாங்கிச் செல்வது உத்தமம். தேவேந்திரன் அதையே செய்திருந்தான். அவன் வந்த காரணத்தை ததீசி முனிவர் கேட்டார். தேவேந்திரா! திடீரென என்னைத் தேடி வந்த காரணம் என்ன?என்றார். ஒருவரிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், முதுகுத்தண்டை கேட்பது என்றால்... முதுகுத்தண்டை சாதாரணமாகவா எடுக்க முடியும்? உயிர் பிரிந்தால் தானே அது சாத்தியம்... இருந்தாலும், நாராயணன் இப்படி சொல்லியிருக்கிறார் எனச்சொல்லி, அவரிடம் விஷயத்தை விளக்கினான் தேவேந்திரன். * *ததீசி முனிவரின் முகம் பிரகாசமானது. இப்படி ஒரு பாக்கியம் எனக்கா? தாராளமாக என் முதுகெலும்பை எடுத்துக் கொள் தேவேந்திரா. தேவர்களைப் பாதுகாக்க என் முதுகுத்தண்டு உதவுமென்றால் அதை விட வேறு என்ன பேறு எனக்கு வேண்டும்? என்று அகம் மகிழச் சொன்னார். உனக்காக உயிரையும் கொடுப்பேன் கண்ணே! என்று காதலன் காதலியிடமும், கணவன் மனைவியிடமும் வசனம் வேண்டுமானால் பேசலாம். ஆனால், அதற்கு தயாராக இருப்பவர்கள் எத்தனை பேர்? ததீசி மனப்பூர்வமாக சம்மதித்தார். பத்து உயிர் வாழ்வதற்கு ஒரு உயிர் போகிறது என்றால் அதுபற்றி கவலைப்படவே கூடாது. இங்கோ! முப்பத்து மூன்று கோடி தேவர்களின் உயிர், முனிவரின் முதுகுத்தண்டில் இருக்கிறது என்பதால், அவர் உளப்பூர்வமாக சம்மதித்தார். உடனடியாக, அவர் யோகாவில் ஆழ்ந்தார். அவரது பிராணன் பிரிந்தது. பிறருக்காக உயிர் விட்ட அந்த ஆவியை வானத்தில் இருந்து புஷ்பக விமானம் வந்து ஏற்றிக்கொண்டு சிவலோகம் நோக்கிச் சென்றது. இந்திரன், முனிவரின் முதுகுத்தண்டுடன் சென்று, விருத்திராசுரனுடன் போரிட்டான். அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அசுரப்படைகள் முழுமையாக அழிந்து விட்டன. விருத்திரனுக்கு ஆச்சரியம். இப்படியும் ஒரு ஆயுதமா? இனியும் இவன் முன்னால் நின்றால் உயிரிழக்க நேரிடும் என்றெண்ணிய அவன் கடலுக்குள் போய், அங்கே ஏற்கனவே மறைந்திருந்த அசுரர்களுடன் போய் இணைந்து கொண்டான். தேவேந்திரன் பிரம்மாவிடம் ஓடினான். கடலுக்குள் மறைந் தவனை எப்படி பிடிப்பது என்று யோசனை கேட்டான். மகரிஷி அகத்தியரால் மட்டுமே அது முடியும். காவிரியையும், தாமிரபரணியையும் தன் கமண்டலத்துக்குள் அடக்கியவர் அவர். அவரைச் சந்தித்தால் இதற்கு விடிவு பிறக்கும், என்றார். இந்திரன் அகத்தியரைத் தேடிச் சென்று நமஸ்கரித்து, வந்த விஷயத்தைச் சொன்னான்.அதுபற்றி கவலை வேண்டாம், என அருள் பாலித்த அகத்தியர், அந்தக் கடலருகே சென்று உளுந்து அளவுக்கு மாற்றி, அதை உள்ளங்கையால் அள்ளி பருகி விட்டார். வற்றிப் போன கடலுக்குள் அசுரர்கள் அங்குமிங்கும் ஓடினர். விருத்திராசுரனை நோக்கி முதுகுத்தண்டை வீசினான் தேவேந்திரன். அது அவனை விரட்டிச் சென்று தலையைக் கொய்தது. குரு நிந்தனை மிகவும் பொல்லாதது. எப்படி தெரியுமா? விருத்திராசுரன் மடிந்த அடுத்தகணமே கொலைப் பாவமான பிரம்மஹத்தி அவனைத் தொற்றிக் கொண்டது. குருவை ஒருமுறை அவமதித்ததால், அவன் தொடர்ந்து அவஸ்தைகளை அடைந்து வந்தான். இன்னும் அது தீர்ந்தபாடில்லை. நாராயணன், பிரம்மா ஆகியோர் இருந்தும், இரண்டு மகரிஷிகளின் உதவி இருந்தும் இப்படி ஒரு நிலை. அதனால் தான் தெய்வத்துக்கு முன்னதாக குருவுக்கு ஸ்தானம் கொடுத்தார்கள் பெரியவர்கள். கொலைப் பாவம் காரணமாக, இந்திரனுக்கு சித்த பிரமை ஆகி விட்டது. அவன் தரையில் உருண்டு புரண்டு அரற்ற ஆரம்பித்தான். பின்னர், ஒரு தாமரைத் தண்டுக்குள் சென்று அதனோடு ஐக்கியமாகி விட்டான். இப்போது தேவலோகத்தில் தலைமைப் பொறுப்பு காலியாகி விட்டது. தேவேந்திரன் போன இடம் தெரியவில்லை. இதனால் நகுஷன் என்ற தேவனை இந்தப் பதவியில் தேவர்கள் அமர்த்தினர். நகுஷன் பதவிக்கு வந்தவுடன் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டான். இந்திரப்பதவியில் இருக்கும் எனக்கு இந்திராணி சொந்தமாக வேண்டும் என்று வாதம் செய்ய ஆரம்பித்து விட்டான். இந்திராணிக்கு பல வகைகளிலும் தொந்தரவும் கொடுத்தான். இந்திராணி அதற்கு படியவில்லை. ஒருநாள் இந்திராணியை தன் அந்தப்புரத்துக்கு இழுத்து வாருங்கள் என்று காவலர்களுக்கு உத்தரவு போட்டான். இந்த விஷயம் தேவகுருவிற்கு தெரிந்து விட்டது. ஆஹா... நம்முடைய பிடிவாதத்தால் இந்திராணிக்கு களங்கம் வரலாமா? அவளது கற்புக்கு பங்கம் வந்தால் நான் தானே பொறுப்பு, என்று முடிவெடுத்து, தேவலோகம் சென்றார். இந்திராணி அவரது பாதங்களில் விழுந்து, தன் கணவர் மீது கொண்ட கோபத்தை மறந்து விடும்படியும், தன் கற்பிற்கு பாதுகாப்பு கேட்டும் மன்றாடினாள். அவளது கண்ணீர் பிரகஸ்பதியைக் கரைத்தது. குரு பலம் குறைந்தவர்கள், நவக்கிரக சன்னதியில் உள்ள குருவிடம், கண்ணீர் விட்டு மன்றாடினால், இரக்க குணமுள்ள குரு, சோதனைகளைக் குறைப்பார் என்பது இதில் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல். குருதேவர், அவளை சமாதானம் செய்து, ராணி! கவலை படாதே. நகுஷன் உயர்பதவியில் இருக்கிறான், அவன் மாபெரும் வீரன் வேறு, அவனை அவ்வளவு எளிதில் யாராலும் அடக்க முடியாது. அந்த பராக்கிரமசாலியை அடக்க ஒரு உபாயம் சொல்கிறேன் கேள். அவனை ஒரு தங்கப்பல்லக்கில் அமர்ந்து, ஏழு ரிஷிகள் அதனை தூக்கி வர வேண்டும் என்றும், அவ்வாறு என்னை (இந்திராணி) காண வந்தால், நான் உமது மனைவியாவேன், என்று சொல்லியனுப்பு, என்றார். குருவின் கட்டளையை ஏற்ற இந்திராணியும் அவ்வாறே செய்தாள். நகுஷன் சப்தரிஷிகளை வரவழைத்தான். ஏ ரிஷிகளே! என்னை இந்திராணியின் இருப்பிடத்துக்கு பல்லக்கில் அமர்த்தி தூக்கிச் செல்லுங்கள், என உத்தரவு போட்டான். பல்லக்கு புறப்பட்டது. அவர்களில், ஒரு ரிஷி மட்டும் சற்று மெதுவாகச் சென்றதால், மற்றவர்களும் மெதுவாக நடக்க வேண்டியதாயிற்று. நகுஷன் பல்லக்கில் இருந்தபடியே, மெதுவாகச் செல்பவன் யார்? என்று ஒருமையில் கத்தினான். அந்த முனிவர் அவனை எட்டிப்பார்த்தார். ஓ அகத்தியரா! இந்தக் குள்ளனால் தான் தாமதமா? அகத்தியரே! என் அவசரம் உமக்கென்ன தெரியும்? இந்திராணியை அடைய வேண்டும் என்ற விரகம் தாளாமல் அவதிப்படும் என்னைக் கொஞ்சமாவது புரிந்து கொண்டீரா? பருந்தைக் காணும் பாம்பு எப்படி வேகமாக ஊர்ந்து செல்லுமோ அதைப் போல் பல்லக்கை வேகமாகச் சுமந்து செல்லுங்கள், என உத்தரவிட்டான். அகத்தியர் சாதாரணமானவனரா? தன்னை அவமதித்த அந்த காமாந்தகாரனை விடுவாரா? நகுஷா! நீதிமுறை பிறழ்ந்து நெறிகெட்ட வார்த்தைகளைப் பேசினாய். உன் மோகத்தைத் தீர்க்க சப்தரிஷிகளான எங்களை பாம்பு போல் விரைந்து செல்லச் சொன்னாயே! அடேய், அந்தப் பாம்பாகவே நீ மாறுவாய். இப்போதே இறப்பாய்! என்று சாபமிட்டார். பெரியவர்கள் நம்மைச் சுமப்பவர்கள். குடும்பத்தில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்து, அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு, இளையவர்களை வளர்ப்பவர்கள். அவர்களை நாம் மதிப்புடன் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் நகுஷனைப் போல் கடும் சாபத்துக்கு ஆளாகி, நம்மையே இழந்து விடுவோம். அகத்தியரின் சாபம் பொய்க்குமா? உடனடியாகப் பலித்து விட்டது. நகுஷன் பாம்பாக மாறி பல்லக்கில் இருந்து விழுந்து படமெடுத்து தன்னைச் சுற்றி நின்ற காவலர்களை கடிக்கச் சென்றான். உடனே காவலர்கள் அதைக் அடித்தே கொன்று விட்டனர். பாம்பு இறந்தது. அகத்தியரால் நகுஷன் மாண்ட செய்தி இந்திராணியை எட்டியது. தனது கற்புக்கு களங்கம் வராமல் காப்பாற்றிய அகத்தியரை அவள் மனதார வணங்கினாள். பின்னர் தேவகுரு பிரகஸ்பதி, தாமரை தடாகத்தில் மறைந்திருந்த இந்திரனைத் தேடிச் சென்று அவனை வரவழைத்தார். குரு பார்க்க கோடி நன்மை ஆயிற்றே! இந்திரன் தான் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு அவரது பாதங்களைப் பற்றிக்கொண்டான். குருவே! அடியேன் தங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்ததன் விளைவை அனுபவித்து விட்டேன். தங்களுக்கு அவமானம் விளைவித்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் என் மனைவியின் மானத்தைக் காப்பாற்றினீர்கள். தங்கள் கிருபை வேண்டும், என பிரார்த்தித்தான். பின்னர் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக பூலோகம் சென்று அங்குள்ள புனிததீர்த்தங்களில் நீராடும்படியும், தேவர்கள் எல்லோருமே அங்கு செல்லலாம் என்றும் ஆலோசனை சொன்னார். அதன்படி இந்திரனின் தலைமையில் புஷ்பக விமானத்தில் அனைவரும் பூலோகம் புறப்பட்டனர். பனிபொங்கும் கயிலைமலையில் இறங்கிய அவர்கள் சிவபெருமானையும், உமாதேவியையும் வணங்கி கேதாரம், காசி உள்ளிட்ட தலங்களைத் தரிசித்தனர். கங்கை, யமுனை, சரஸ்வதியில் நீராடினர். நாம் பூலோகத்தில் வாழ்கிறோம் என்றால் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தேவர்கள் கூட அவர்கள் செய்த பாவம் நீங்க பூலோகத்து புண்ணிய தீர்த்தங்களை நாடித்தான் வர வேண்டியுள்ளது. ஆனால், அதன் அருமை தெரியாமல் நாம் ஆறுகளை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். இனியேனும், நதிகளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டு அவற்றுக்குரிய மரியாதையைச் செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் கடம்பவனத்தை அடைந்தனர். அங்கே ஒரு லிங்கம் தென்பட்டது. அதைக் கண்ட இந்திரன் அவ்விடத்தில் ஒரு தாமரைக் குளம் இருந்ததையும் பார்த்தான். அந்த தீர்த்தத்தில் தங்கத் தாமரைகள் பூத்திருந்தன. அந்த லிங்கத்திற்கு பூஜை செய்த இந்திரன், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவிடம், உடனடியாக லிங்கம் இருந்த இடத்தில் அழகிய விமானம் அமைக்குமாறு பணித்தான். எட்டு யானைகள் தாங்கும் அழகிய விமானத்தை விஸ்வகர்மா அமைத்தார். பலநாட்களாக அங்கேயே தங்கி இந்திரன் பூஜைகள் செய்தான். அவனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விட்டது. இறைவன் அவன் முன்னால் தோன்றி, இந்திரா! உன் மீதான சாபம் நீங்கியது. நான் இந்த தலத்தில் சொக்கநாதர் என்ற பெயருடன் எழுந்தருள்வேன். சோமசுந்தரர் என்றும் என்னை அழைப்பர். இத்தலத்துக்கு வருபவர்கள் தீராத பாவங்களும் நீங்கப்பெறுவர், என அருள் பாலித்தார். பின்னர் அனைவரும் தேவலோகம் சென்றனர். அங்கு சென்றதும், மற்றொரு புது பிரச்னை தோன்றியது.* <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *v **a n a k k a m** S u b b u* [image: Divorce Advice - Legal Advice] [image: h16k4xlCNmQFfVwI9uA3CZUv0sTjrXqOh2qpTve4] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
