*4.தடாதகைபிராட்டியாரின் திருஅவதாரப் படலம்!*


*குலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான்.
அவனுக்கு மலையத்துவஜன் என்று பெயரிட்டான் குலசேகர பாண்டியன். அந்த மன்னனின்
மகளாக தன் மனைவி பார்வதிதேவியையே அவதரிக்கச் செய்தார் சிவபெருமான். *












*ஆம்... அவளே தடாதகை பிராட்டி எனப்படும் மீனாட்சி. அவள் மலையத்துவஜனின்
மகளாகப் பிறந்தது சுவை மிக்க வரலாறு. மலையத்துவஜனின் மனைவி காஞ்சனமாலை. இவள்
இவ்வுலகில் தோன்றிய உயிர்களில் வித்தியாசமானவள். மனித நிலையில் இருக்கும்
நம்மை, நாளையே கடவுள் அழைத்து, இன்று முதல் நீ தேவலோகத்தில் தேவனாக இருப்பாய்,
என்று சொன்னால், நாம் அடையும் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது. மனித நிலையில்
தேவநிலைக்கு உயர்வதையே உயிர்கள் விரும்பும். ஆனால், காஞ்சனமாலை இதற்கு நேர்
எதிரானவள். அவள் தனது முந்தையப் பிறவியில் மனித குலத்தை விட உயர்ந்த கந்தர்வ
குலத்தில் பிறந்தாள். அந்தப் பிறவியில் இருந்து, தன்னை மனித குலத்திற்கு
தாழ்த்திக் கொண்டாள். அப்போது அவளது பெயர் வித்யாவதி. இவளது தந்தை விசுவாவசு.
இவளுக்கு அம்பிகையின் மீது பிரியம் அதிகம்.தந்தையே! அம்பிகையை நேரில்
தரிசிக்கும் பாக்கியம் பெற வேண்டும், தாங்கள் தான் அதற்கு உதவ வேண்டும்,
என்றாள். விசுவாவசு அவளுக்கு சக்தி மந்திரத்தை உபதேசித்து, அதையே தொடர்ந்து
பக்தியுடன் சொல்லி அம்பாளைக் காணும் பாக்கியத்தை பெறலாம் என்றார். அடுத்து
அம்பாளைத் தரிசிக்க உகந்த இடம் எது எனக் கேட்டாள் வித்யாவதி. பூலோகத்தில்
துவாதசாந்தம் என்று புகழ் பெற்றதும், கடம்பமரங்கள் நிறைந்த வனத்திலுள்ளதுமான
மதுரை என்னும் புண்ணிய ÷க்ஷத்ரத்தில், யார் ஒருவர் அம்பாளைத்
தரிசிக்கிறார்களோ, அவர்கள் பாக்கியசாலிகள்,என்றார் விசுவாவசு. தந்தையிடம்
அனுமதி பெற்று கந்தர்வக்கன்னியான வித்யாவதி பூலோகம் வந்தாள். மதுரை
÷க்ஷத்ரத்தில் குழந்தை வடிவில் அருள்பாலித்த சக்திதேவியை வணங்கி வந்தாள்.
தந்தை உபதேசித்த மந்திரத்தை இடைவிடாது சொன்னாள். ஒரு ஆண்டு வரை கடுமையான
விரதம் அனுஷ்டித்த அவளது பக்திக்கு அம்பாள் இரங்கினாள். வித்யாவதியின் முன்பு
மூன்று வயது குழந்தையின் வடிவில் காட்சி தந்தாள். தாயே என அழைத்தாள்.
வித்யாவதி நெகிழ்ந்து போனாள்.அம்மா மீனாட்சி! நான் உன்னை குழந்தையாகக் கருதி
என் மனதால் பாராட்டினேன், சீராட்டினேன், நீராட்டினேன், அழுது அடம்பிடித்த
உன்னை பொய்க்கோபம் கொண்டு கண்டித்தேன், பாலூட்டினேன், ஜடை முடிந்து
பின்னலிட்டேன். இத்தனையும் கற்பனை தான் என்றாலும், இந்த எளிய பக்திக்கும்
அகமகிழ்ந்து காட்சி தந்தாயே! பிறந்த பயனை அடைந்தேன், என்றாள் வித்யாவதி.
குழந்தை மீனாட்சி சிரித்தாள். தாயே! பக்தர்கள் எனக்கு கொண்டு வரும் ஆடம்பர
காணிக்கைகளால் நான் மகிழ்வதில்லை. கால் கடுக்க காத்திருப்பதால் மட்டும் என்னை
அடைந்து விட முடியாது. இருந்த இடத்தில் இருந்தபடியே, உன்னைப் போல் மானசீகமான
பக்தியை செலுத்துவதையே நான் விரும்புகிறேன். அவர் களுக்கு காட்சி கொடுப் பதையே
பெருமையாகக் கருதுகிறேன். சரி...நீ ஏதாவது என்னிடம் கேள். வரம் தருகிறேன்,
என்றாள். தெரிந்தோ தெரியாமலோ உன்னை என் பிள்ளையாகக் கருதிவிட்டேன். அந்தப்
பிணைப்பை என்னால் விட முடியாது. இந்த நிலை தொடர வேண்டும். இதைத் தவிர என்னிடம்
எந்தப் பிரார்த்தனையும் இல்லை, என்றாள் வித்யா. இதுகேட்டு அகம் மகிழ்ந்த
மீனாட்சி, அம்மா! அடுத்த முறை நீ மானிட ஜென்மம் எடுப்பாய். சோழராஜனின் மகளாகப்
பிறக்கும் உன்னை, மலையத்துவஜ பாண்டியன் திருமணம் செய்வார்.உங்கள் இல்லத்தில்
நான், இதே மூன்று வயதுக் குழந்தையாய் அவதரிப்பேன், என்று சொல்லி வித்யாவதிக்கு
நல்லாசி கூறி மறைந்தாள். வித்யாவதி நினைத்திருந்தால், கந்தர்வ நிலையில்
இருந்து தேவநிலைக்கு உயர்ந்து சக்திலோகத்திலேயே இருந்திருக்கும்படியான வரம்
கேட்டிருக்க முடியும். ஆனால், அவள் மானிடப்பிறவி பெற்றதன் மூலம்,
தெய்வத்திற்கே தாயான பெருமையைப் பெற்றாள். ஈசனுக்கு மாமியாராகும் தகுதியும்
கிடைத்தது. மீனாட்சியின் அருள்வாக்கின் படி, அவள் சோழமன்னன் சூரசேனனின்
மகளாகப் பிறந்தாள். மலையத்துவஜ பாண்டியனை மணம் செய்தாள். நீண்ட காலமாயிற்று.
அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தனக்குப் பிறகு நாடாள வாரிசு இல்லையே
என்ற கவலை மன்னனை உருக்கியது. அவன் பல யாகங்கள் செய்தான். கோயில்களுக்கு
கும்பாபிஷேகம் செய் வித்தான். கடைசியாக, அஸ்வமேதயாகம் செய்வதென முடிவு
செய்தான். இதன்மூலம் சகல லோகங்களும் தனக்கு அடிமை படுவதுடன், குழந்தை
பாக்கியமும் சித்திக்கும் எனக் கருதினான். யாக ஏற்பாடுகள் ஜரூராக நடந்தது.
வெற்றிகரமாக யாகம் நடந்து விடும் என்ற நிலை வந்ததும், தேவ லோகத்தில் இருந்த
இந்திரனுக்கு பயம் வந்து விட்டது. யாகம் வெற்றி பெற்றால், மலையத்துவஜன்
இந்திரலோகத்தையே கைப்பற்றி விடுவான். தன் பதவி போய்விடுமே என்று
கவலையடைந்தான். ஒருநாள், மலையத்துவஜனின் முன்பு தோன்றினான்.ஆச்சரியமடைந்த
மலையத் துவஜன், ஐயனே! தாங்களே எங்கள் மதுரை நகருக்கு நேரில் வந்தீர்களா! நான்
என்ன பாக்கியம் செய்தேன், என்று உபசார வார்த்தைகள் சொல்லி வரவேற்றான்.
இந்திரன் அவனிடம், மாமன்னனே! குழந்தை வேண்டும் என்பதே உனது கோரிக்கை. அதற்கு
அஸ்வமேதயாகம் பலன் தராது. நீ பல யாகங்கள் செய்தாலும் புத்திரகாமேஷ்டி யாகம்
செய்யத் தவறிவிட்டாய். அந்த யாகத்தை நடத்து. உனக்கு பராசக்தியே மகளாக அவதரிக்க
காத்திருக்கிறாள். முற்பிறப்பில், உன் மனைவி செய்த புண்ணியத்தால் கிடைத்துள்ள
பாக்கியம் இது, என்று சொல்லவும், அஸ்வமேத யாக திட்டத்தைக் கைவிட்டு,
புத்திரகாமேஷ்டி யாகம் செய்வதற்கு ஒப்புக் கொண்டான் மன்னன். இந்திரனும் பயம்
நீங்கி விடை பெற்றான். புத்திர காமேஷ்டி யாகம் தொடங்கியது. இந்த தகவல்
பட்டமகிஷி காஞ்சனமாலைக்கும் தெரியவரவே, அவளும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை.
கண்டோர் வியக்கும் வேள்விச்சாலை ஒன்றை அமைத்தான் மலையத்துவஜன். யாகம்
கோலாகலமாகத் துவங்கியது. நாட்டுமக்கள் தங்கள் வாரிசை எதிர்பார்த்து ஆவலுடன்
யாக பூஜையில் கலந்து கொண்டனர். மலையத்துவஜனும், காஞ்சனமாலையும் புனிதநீராடி,
வேப்பிலை மாலை சூடி யாக குண்டத்தின் முன் அமர்ந்தனர். யாக குண்டத்தில் பல்வகை
பொருட்கள் போடப் பட்டன. குடம் குடமாக நெய் ஊற்றப்பட்டது. வேள்விப்புகை மதுரை
நகரெங்கும் பரவியது. இந்திரன் அந்த யாகத்தின் பலனைப் பெற்றுக் கொண்டு,
அதற்கேற்ப பலனும் அளித்தான். அப்போது யாகசாலையில் பூமழை பொழிந்தது. மன்னனுக்கு
வலது தோளும் வலது கண்ணும் துடித்தன.ஆண்களுக்கு வலது கண், வலது தோள் துடித்தால்
சுபமான நிகழ்ச்சிகள் ஏற்படும். பெண்களுக்கு இடது கண் துடித்தால் அது
சுபசகுனம். அதற்கேற்ப, காஞ்சனமாலைக்கு இடது கண் துடித்தது. அப்போது அந்த இடமே
பிரகாசமானது. யாக குண்டத்தில் எரிந்த அக்னியின் மத்தியில், பளிச்சென வெளிச்சம்
உண்டானது. அதன் மத்தியில் பச்சை நிறத்தில் மூன்று வயதுடைய ஒரு பெண் குழந்தை,
நின்ற நிலையில் தோன்றியது. ஆம்... தெய்வத்தாயான மீனாட்சி பூமியில் அவதரித்து
விட்டாள். காஞ்சனமாலை என்னும் பெண் தெய்வம் மதுரை மக்களுக்கு கொடுத்த மற்றொரு
தெய்வம் அவள். மதுரைக்கு போகிறவர்கள் மீனாட்சியை மட்டும் வணங்கினால் போதாது.
அவள் இந்த பூமியில் அவதரிக்க காரணமான காஞ்சனமாலையையும் வணங்கி வர வேண்டும்.
கோயில் கிழக்குவாசல் எதிரேயுள்ள புதுமண்டபத்தைக் கடந்தால் வரும் எழுகடல்
தெருவில் இந்த அம்மைக்கு தனிக் கோயில் இருக்கிறது. அந்தக் குழந்தையைக் கண்டு
அகமகிழ்ந்தாள் காஞ்சனா. அவளது மார்பில் தன்னையறியாமல் பால் சுரந்தது. அனலில்
உதித்த அந்தச் சிறுமியின் கண்கள் கயல் என்னும் மீனுக்கு சமமாக நீண்டு பெரிதாக
மிக அழகாக இருந்தது. என் அம்மையே, அங்கயற்கண்ணியே என அவள் அழைத்தாள்.
அம்+கயல்+கண்ணி என்பதே அங்கயற் கண்ணி ஆனது. அம் என்றால் அழகிய, கயல் என்றால்
மீன். கண்ணி என்றால் கண்களையுயைடவள். அங்கயற்கண்ணி என்றால் அழகிய கண்களை
உடையவள் என்று பொருள். இன்னொரு பொருளும் இதற்கு உண்டு. மீனுக்கு தனது
பார்வையாலேயே குஞ்சுகளுக்கு இரையூட்டும் சக்தியுண்டு. அது தனது கண்களை
இமைப்பதே இல்லை. நாமே கூட பார்க்கலாம். மீனை தண்ணீரை விட்டு வெளியே தூக்கிப்
போட்டு அது இறந்துவிட்டாலும் சரி தான். அதன் கண்கள் மட்டும் திறந்தே
இருக்கும். ஆக, ஒரு கணம் கூட இமைக்காமல் மக்களை பாதுகாப்பவள் என்ற பொருளும்
இதற்குண்டு. அதனால் தான் மீனின் ஆட்சி மதுரையில் நடக்கிறது. அன்னையையும்
மீனாட்சி என்கிறோம்.*



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



*v **a n a k k a m**  S u b b u*    [image: Divorce Advice - Legal Advice]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to