*தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல்- 6முனைவர் மா. பத்மபிரியா*

*[image:
http://2.bp.blogspot.com/-5oUEWOpnlrs/VhdZYV3KqPI/AAAAAAAACSI/O7TrRp0-ndU/s400/download.jpg]விருந்திடும்
சீறூர்*

தலைவன் -தலைவி என்ற குடும்ப விருந்தோம்பல் மட்டுமின்றி ஊரே விருந்திடும்
மரபினைச் சங்க அகஇலக்கியம் பதிவுசெய்துள்ளது.

“தூங்கல் ஒலை ஓங்குமடற் பெண்ணை
மாவரை புதைத்த மணல்வி முன்றில்,
வரையாத் தாரம் வருவிருந்து அயரும்
தன்குடி வாழ்நர் அங்குடிச் சீறூர்” *(நற்றிணை.135)*

வரைவு நீட்டித்த நெய்தல் நிலத் தலைவனிடம் தோழி சிறைப்புறமாக கூறிய கூற்றில்
சீறூர் மக்களின் விருந்தோம்பும் பாங்கினைக் குறிப்பிடுகின்றாள். தலைவனிடம்
அறம் வற்புறுத்த ஊரின் இயல்பினை முன்வைத்துப் பேசும் தோழியின் திறம் இதன்
மூலம் வெளிப்படுகின்றது.

“தூங்கல் ஓலை ஓங்குமடற் பெண்ணை
மாஅரை புதைத்த மணல்மலி முன்றில்,
வரையாத் தாரம் வருவிருந்து அயரும்
தன்குடி வாழ்நர் அங்குடிச் சீறூர்
இனிது மன்ற அம்ம தானே பனிபடு
பல்சுரம் உழந்த நல்கூர் பரிய,
முழங்கு திரைப் புதுமணல் அழுந்தக் கொட்கும்
வால்உளைப் பொலிந்த, புரவித்
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே.” *(நற்றிணை.135)*

தொங்கும் ஓலைகளையும் நீண்ட மடலையும் உடைய பனை மரத்தின் அடிமரம் புதையும்படி
மணல் மூடிய முற்றத்தினை உடைய நெய்தல் நிலச் சிற்றூர். அவ்வூர் மக்கள்
.உணவுப்பொருட்களை விருந்தினருக்குப் பகிர்ந்து கொடுக்கும் இயல்புடையவர்கள்
என்று கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட பாடல் தனிநபர் மட்டுமின்றி, குடும்பம்
மட்டுமின்றி, ஊரே விருந்தோம்பும் திறத்தைச் சுட்டுகின்றது.

*உடன்போக்கில் விருந்து*

தலைவன், தலைவியின் காதல் பெற்றோர்களால் மறுக்கப்பட்ட நிலையில், தலைவன் தலைவியை
உடன்கொண்டு போதல் இயல்பு. அத்தகைய உடன்போக்கின் போது இருவரும் விருந்தினராகக்
கவனிக்கப்படும் நிலை அகஇலக்கியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

“கல்கெழு சிறப்பின் நம்ஊர்
எல்விருந்தாகிப் புகுகம்,நாமே” *(ஐங்குறுநூறு.396)*

விருந்தினராகச் சற்று இளைப்பாறிச் செல்வோம் என்று தலைவன் கூறுகிறான். இதன்
மூலம் வழிநடை வருத்தம் தீர வழிச்செல்வோருக்கு சங்ககால மக்கள் விருந்தோம்பிய
பாங்கு புலனாகின்றது.

*கலைஞர்களுக்கு விருந்து*

சங்ககால மக்கள் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் தந்துள்ளனர்.
பாணர்,பொருநர்,கூத்தர்,விறலியர் போன்ற கலைவளர் செம்மல்களைப் போற்றிப்
பாதுகாத்துள்ளனர். கலைஞர்கள் தமது திறமைகளை வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று
வெளிப்படுத்தச் செல்லும் இடங்களில் விருந்து உபச்சாரங்களைப் பெற்றுள்ளனர்.
இதனை ஆற்றுப்படை இலக்கியம் பதிவுசெய்துள்ளதைப் போன்று அகஇலக்கியமும் பதிவு
செய்துள்ளது.

“அன்னாய்! இவன் ஓர் இளமாணாக்கன்
தன்ஊர் மன்றத்து என்னன் கொல்லோ?
இரந்தூண் நிரம்ப மேனியொடு
விருந்தின் ஊரும் பெருங் செம்மலனே” *(குறுந்தொகை.33)*

பாணன் சிறந்த மாண்புடையவன் மன்றத்தில் திறன் வெளிப்படுத்துபவன். பிறரிடம்
விருந்துண்டு வாழ்வதால் மெலிந்த தேகத்தை உடையவன் என்று சுட்டப்பட்டுள்ளதன்
மூலம் கலைஞர்களின் வாழ்வே மற்றவர்கள் தரும் விருந்துகளில் கழிவது புலனாகின்றது.

*விருந்து பற்றிய நம்பிக்கை*

சங்ககால மக்கள் சில சகுனங்களை வைத்து நன்மை, தீமைகளைக் கணிப்பார்கள். ‘புள’
நிமித்தம் அவற்றில் குறிப்பிடத்தகுந்தது. ‘காகம் கரைவதை’ விருந்தினர் வருகையை
தெரிவிக்கும் சகுனமாகக் கருதியுள்ளனர். மேலும், இல்லற மகளிர் நாள்தோறும்
காக்கைக்குப் பலியிடுதல் முறையை மேற்கொண்டுள்ளனர்.

“திண்தேர்நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிதுஎன் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே” *(குறுந்தொகை.210)*

புதிய விருந்தினர் வருகையை அறிவிக்கும் பொருட்டாக ‘காகம் கரைதல’
நம்பப்பட்டுள்ளது. அதனால் விருந்தினர் வருகையை அறிவிக்கும் காக்கைக்கு
கோப்பெரு நள்ளியின் காட்டிலுள்ள இடையர்கள் தந்த நெய்யுடன் தொண்டி ஊரில்
விளைந்த வெண்ணெல் சோற்றைக் கலந்து தந்தாலும் தகாது என்று தோழி கூறுகின்றாள்.

*விருந்தினன் போன்ற தலைவன் வருகை*

தலைவன் விருந்தினன் போன்று தலைவியின் வீட்டிற்குச் செல்லுதல் நிகழ்ந்துள்ளது
என்பதைத் தொல்காப்பியம் பதிவு செய்துள்ளது.

“புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப்
பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும்” *(தொல்.களவு.17)*

விருந்தினன் வரவு எப்போதும் வரவேற்கத்தக்கது என்ற நிலை பழந்தமிழகத்தில்
இருந்துள்ளதால் தலைவனை பார்க்க விரும்பிய தலைவி ‘விருந்தினன்’ போன்று வருமாறு
வழி கூறுகின்றாள்.

“சிறுதலை துருவின் பழுப்புஉறு வளைதயிர்,
இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசியொடு,
கார் வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து
ஈயல்பெய்து அட்ட இன்புளி வெஞ்சோறு
சேதான் வெண்ணெய் வெம்புறத்து உருக,
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
பாலுடை அடிசில் தொடீஇய, ஒருநாள்,
மாவண்தோன்றல்! வந்தனை சென்மோ” *(அகம்.394)*

முல்லை நிலத்து தோழி இரவுக்குறி வரும் தலைவனிடம் ‘விருந்தினன்’ போன்று வருமாறு
வரைவுகடாவுகின்றாள். முல்லை நிலத்தில் படைக்கப்படும் உணவு வகைகள் இப்பாடலில்
பதிவு செய்யப்பட்டுள்ளது. செம்மறியாட்டின் பழுப்பு நிறம் ஒத்த தயிரை உலையாக்கி
வரகரிசியை இட்டு, புற்றில் எடுத்த ஈசலைக் கலந்த புளியஞ்சோற்றினைச் சமைப்பர்.
அச்சோற்றின் மீது பசுநெய் ஊற்றி உண்ணத் தருவர். இரவில் வராமல் பகலில் அத்தகைய
விருந்திற்குத் தலைவனை வருமாறு தோழி கூறுகின்றாள்.

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

                    *V A N A K K A M     S U B B U    *
[image: யவனிகா's Avatar]
<http://www.tamilmantram.com/vb/member.php/3694-%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE?s=6aac0b7d675c9503be3932975e5ccdaf>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to