[image: web.whatsapp.com]web.whatsapp.comWhatsApp Web
By ⁠⁠⁠⁠Karthikeyan⁠⁠⁠⁠⁠
Send to Kindle

⁠⁠[8:43 PM, 7/10/2017] Karthikeyan: ⁠⁠⁠நம் பிரைவஸியை காவு கேட்கும் பிக்
டேட்டா பிஸினஸ்... தெரிந்ததும் தெரியாததும்!. சமீபத்தில் இந்தியாவையை அதிர
வைத்த, திரும்பிப் பார்க்க வைத்த ஒரு வார்த்தை ஜியோ. ஜியோ நிறுவனத்தின்
லோகோவில் ஒரு மேஜிக் இருக்கிறது. அதைக் கண்ணாடியில் பார்த்தால் JIO என்பது OIL
எனத் தெரியும். ”data is new oil" என்கிறார் அம்பானி.அவர் சொன்னது போல
நேற்றுவரை எண்ணெய் பின்னால் ஓடிய உலகம் இன்று டேட்டா பின்னால் ஓடுகிறது.
கூகுள் சர்ச் செய்யும் பழக்கம் நம் அனைவருக்கும் இருக்கும். அதில், நம்மைப்
பற்றி நாமே எப்போதாவது கூகுளின் தேடி செய்து பார்த்திருக்கிறோமா? எனக்குத்
தெரிந்த ஒருவர் அவரைப் பற்றி அவரே கூகுள் செய்த போது கொஞ்சம்
அதிர்ச்சியாகத்தான் இருந்தது. “போன வருஷம் கபாலி படம் பாத்தேன். ஆனா எந்த
தியேட்டர்னு மறந்துடுச்சு. அதான் கூகுள் பண்றேன்” என்றவருக்கு சில நொடிகளில்
விடை தந்தது கூகுள். “சத்யம்ல டிக்கெட் கிடைக்கல. ஐநாக்ஸ்ல பாத்திருக்கேன்.
இதோ ட்விட் போட்டிருக்கேனே” எனக் காட்டினார். கேட்டதும் அதிர்ச்சியையோ,
சிரிப்பையோ தரும் நிகழ்வுதான். ஆனால், யோசித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
நம்மைப் பற்றி நமக்கே தெரியாத விஷயத்தை கூட இணைய நிறுவனங்கள் நமக்குத்
தருகின்றன. இதைத் தேவையான சமயத்தில் நமக்கு சாதகமாக பயன்படுத்தினால் சரி.
தவறாக பயன்படுத்தினால்? மேலே சொன்ன சம்பவத்தில் நண்பர் ஐநாக்ஸில் படம் பார்த்த
தகவலை அவரே சொல்லியிருக்கிறார். அதனால் பிரச்னையில்லை. ஆனால், நமக்குத்
தெரியாமல் நம்மிடம் இருந்து தகவல்களை பெற்றால்? அது எப்படி பெற முடியும் என
யோசிக்க வேண்டாம். நம்மிடம் இருந்து எடுக்கப்படும் தகவல்களை வைத்து உலகம்
முழுவதும் 203 பில்லியன் டாலர் மதிப்பிலான வியாபாரம் நடக்கிறது. இந்திய
மதிப்பில் சொன்னால் 13 லட்சம் கோடி. 1999-ல் அமெரிக்காவில் யாட்லி(Yodlee)
என்றொரு இண்டெர்நெட் ஸ்டார்ட்அப் தொடங்கப்பட்டது. அதன் வேலை, பயனர்களின்
செலவுகளைத் தொகுத்து, பிரித்து விரும்பிய வடிவில் ரிப்போர்ட் ஆக தருவதுதான்.
ஒரு எக்ஸ்பர்ட் செய்யக்கூடிய வேலை, அதுவும் இலவசச் சேவை என்பதால் நிறுவனம்
அதிரடியாக வளர்ந்தது. இலவசம் என்றால் அவர்களுக்கு ஏது லாபம்? யாட்லி எப்படி
பணம் சேர்க்கும் என அப்போது யாரும் யோசிக்கவில்லை. யாட்லி செய்தது இதுதான்.
மக்களின் செலவுகளை வைத்து ஒரு தரமான புள்ளி விவரங்களை சேகரித்தது. எந்தத்
துறையில் மக்கள் அதிகம் செலவழிக்கிறார்கள்? எந்த வகை சேமிப்பில் ஆர்வம்
காட்டுகிறார்கள், எந்த நிறுவனத்தின் பொருள்களை அதிகம் வாங்குகிறார்கள் எனத்
துல்லியமான தகவல்களை யாட்லியால் திரட்டப்பட்டது. எவ்வளவு செலவு செய்து சர்வே
நடத்தியிருந்தாலும் இந்தத் தகவல்களை யாராலும் திரட்ட முடிந்திருக்காது. இந்த
டேட்டாவை யாட்லி தனது பொருளாதார நிறுவன பங்குதாரர்களுடன் பகிர்ந்துகொண்டது.
வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் யார் என்பதை மிகச் சரியாக கண்டறிய யாட்லி
உதவியது. இதனால் விளம்பரச் செலவுகள் தொடங்கி, அனைத்தும் குறைந்தன. பயனர்களின்
பெர்சனல் தகவல்களை வைத்து யாட்லி கோடிக்கணக்கான டாலர் சம்பாதிக்க ஆரம்பித்தது.
இன்று உலகின் டாப் 100 நிறுவனங்களில் டெக் நிறுவனங்கள் தான் அதிகம். அவற்றில்
பெரும்பாலானவை செயல்படுவதே தனி நபரின் பெர்சனல் தகவல்களை மூலதனமாக கொண்டுதான்.
கூகுள், ஃபேஸ்புக் என அத்தனை ஜாம்பவான்களும் அடுத்தவன் ஆட்டோக்குதான் ஆயுத
பூஜை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். டெக் நிறுவனங்கள் நிற்காமல் ஓட உதவும்
இந்த கச்சா எண்ணெயை பிக் டேட்டா என்கிறார்கள். இதைப் பற்றி NFL labs என்ற டெக்
நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோகுலிடம் பேசினோம். ”பலபேரிடமிருந்து
தகவல்களை தொகுத்து, தொகுக்கப்பட்ட தகவல்களை அலசி, அதிலிருந்து ஒரு ட்ரெண்ட்
பிடித்து, “இது நடந்தா அடுத்த என்ன நடக்கும் என கணிக்கும் முறைதான் பிக்
டேட்டா. டேட்டா விஷயத்தில் நாம் மூன்று தலைமுறைகளைத் தாண்டி வந்திருக்கிறோம்.
முதல் தலைமுறை என்பது டேட்டாவை வெறுமனே தொகுத்து வைத்தது. நம் வீட்டு பரண்
மேல் பொருட்களை போட்டு மூடி வைப்போமே. அப்படி. அடுத்தத் தலைமுறையில், அதைப்
பிரித்து வைத்தார்கள். துணியை தனி ஷெல்ஃபிலும், புத்தகங்களையும் தனியாகவும்
அடுக்கி வைப்போமே... அப்படி. மூன்றாம் தலைமுறையில், தொகுக்கப்பட்ட தகவல்களை
வைத்து ஒரு ட்ரெண்டை கண்டறிந்தார்கள். இதன் அடுத்தக்கட்டம் ஆர்ட்டிஃபிஷியல்
இண்டெலிஜன்ஸ். இதுவரைக்கும் பிக் டேட்டாவை பயன்படுத்தி என்ன செய்ய
வேண்டுமென்பதை மனிதர்கள் தலையிட்டு சொல்ல வேண்டியிருக்கிறது. நான்காம்
தலைமுறையில் அதுவும் மிஷினின் வேலை ஆகிவிடும். ஆனால், அதற்கு இன்னும் சில
ஆண்டுகள் ஆகும்” என்றார். வாட்ஸ்அப் வராத காலத்திலே ஒரு ஃபார்வர்ட் மெஸெஜ்
உண்டு. சச்சின் சதமடித்தால், அன்று இந்தியா முழுவதும் அதிக வியாபாரம்
நடக்குமாம். இந்தியர்கள் ஒவ்வொருவரும் எப்போது, எங்கு சாப்பிடுவார்கள்,
ஷாப்பிங் செய்வார்கள் என்ற தகவல் நம்மிடம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம்.
அதில், யாரெல்லாம் சச்சின் சதமடிக்கும் நாளில் வெளியே சாப்பிடுகிறார்கள்,
ஷாப்பிங் செய்கிறார்கள் என்ற தகவலை கம்ப்யூட்டர் கன நேரத்தில் சொல்லிவிடும்.
அடுத்த முறை சச்சின் சதமடித்தால் அவர்கள் மொபைலுக்கு “சாப்ட வாங்க
பாஸ்...சச்சின் சதமடிச்சதால 10% தள்ளுபடி... உங்களுக்கு மட்டும்” என ஒரு
குறுஞ்செய்தி போதும். 10% தள்ளுபடி, கூடவே சச்சின் டச் என்றதும் அவர்களும்
அந்த ஹோட்டலுக்குத்தான் விசிட் அடித்துவிடுவார்கள். டிஜிட்டல் மார்க்கெடிங்:
நாம் எல்லோருமே ஜிமெயில்வாசிகள் தான். காதல் கடிதங்கள் தொடங்கி ராஜினமா கடிதம்
வரை ஜிமெயில் மூலம் தான் அனுப்புகிறோம். பெறுகிறோம். இவை அனைத்தும் கூகுள்
சர்வரில் தான் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை பார்க்க, படிக்க, பயன்படுத்த
கூகுளுக்கு நாம் அனுமதி தந்திருக்கிறோம். கூகுள் என்ன செய்யும்? நாம் ஒரு வீடு
வாங்க திட்டமிடுகிறோம் என வைத்துக் கொள்வோம். அதற்கான அனுமதிக் கடிதத்தை வங்கி
நமக்கு மின்னஞ்சல் அனுப்பும். அதைப் படிக்கும் கூகுள் “இவன் புதுசா வீடு
வாங்கியிருக்கான்” என புரிந்துகொள்ளும். புதிதாக வீடு வாங்கியவர்களுக்கு
காலிங் பெல்லில் தொடங்கி சோஃபா வரை ஆயிரம் தேவைகள் இருக்கும். அந்தப்
பொருட்களை விற்கும் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, நம் மொபைல் எண்,
மின்னஞ்சல் முகவரி முதற்கொண்டு அனைத்தையும் கூகுள் கொடுத்துவிடும். அவர்கள்
நமக்கு “லைட் வேணுமா சார்? பெட் வேணுமா சார்” என மெயில் அனுப்புவார்கள்.
குறுஞ்செய்தி அனுப்புவார்கள். இதுதான் டிஜிட்டல் மார்க்கெடிங். காவல்துறையின்
இன்ஃபார்மர் என்றொரு வேலை உண்டு. குற்றங்கள் பற்றியோ, குற்றவாளியைப் பற்றியோ
ரகசியமாக உளவுப் பார்த்து காவல்துறைக்கு வேண்டிய தகவல்களை இன்ஃபார்மர்
கொடுப்பார். அதற்கான சன்மானம் அவருக்கு வழங்கப்படும். ஃபேஸ்புக்கில் தொடங்கி
கூகுள் வரை அனைத்து நிறுவனங்களும் டிஜிட்டல் இன்ஃபார்மர்கள் தான். டிஜிட்டல்
மார்க்கெட்டிங்கில் User profiling எனச் சொல்வார்கள். ஒருவரைப் பற்றிய
தகவல்களை துல்லியமாக, தரமாக, விரிவாக சேகரித்து வைப்பதுதான் யூஸர்
புரொஃபைலிங். இதை யார் திறம்பட செய்கிறார்களோ, அவர்களிடம் பனம் கொடுத்து
டேட்டாவை வாங்க நம் தெருமுனை அண்ணாச்சி வரை தயாராக இருக்கிறார். இந்தக்
கட்டுரைக்காக ஒரு வர்ச்சுவல் எக்ஸ்ப்ரிமெண்ட்டுக்கு தயார் ஆனோம். முதலில்,
கூகுளுக்கு சென்று சென்னையில் இருந்து டில்லிக்கு விமானப் பயணத்துக்கான
கட்டணத்தைத் தேடினேன். அடுத்த சில மணி நேரங்களில் மின்னஞ்சல் மூலமும், மொபைல்
எண்ணுக்கும் அத்தனை விமானச் சேவை வழங்கும் நிறுவனங்களும் படையெடுத்தார்கள்.
அடுத்து, டில்லியில் இருக்கும் ஹோட்டல்கள் வரிசைக்கட்டி வந்தன. உண்மையாகவே
டில்லிக்கு சென்று, அங்கிருந்து ஃபேஸ்புக்கில் “ டில்லி வந்தாச்சு” என ஒரு
ஸ்டேட்டஸ் தட்டினேன். ஓலா நிறுவனத்திடம் இருந்து ஒரு வெல்கம் தகவலும், டில்லி
ஓலா விலைப்பட்டியலும் வந்தன. அன்று மாலை, நான் அடிக்கடி உணவருந்தப் போகும்
பீட்ஸா நிறுவனம் ஒன்று நான் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் இருக்கும் தனது
கிளையின் முகவரியை அனுப்பி வைத்தது. மீண்டும் சென்னைத் திரும்பும் வரை எனக்கு
என்னவெல்லாம் பிடிக்கும், எப்போது என்ன செய்வேன் என்பதை அறிந்து அந்தந்த சேவை
வழங்கும் நிறுவனங்கள் சரியாக என்னை வந்தடைந்தார்கள். “சார்ஜரை சென்னைலயே
விட்டுட்டேன்” என ஸ்டேட்டஸ் தட்டியிருந்தால், உடனே டோர் டெலிவரி
ஆகியிருக்கும். அந்த அளவுக்கு இருந்தது அந்த வர்ச்சுவல் உபசரிப்பு. வளர்ந்த
நாடுகள் தங்கள் குடிமக்களை பாதுகாப்பதில் கில்லி. என்ன நடந்தாலும் அவர்கள்
நாட்டு மக்கள்தான் முக்கியம். ஆனால், அவர்களுக்கும் இணையம் என்ற ஒன்று
வந்தபோது அதன் நீள, அகலம் தெரியவில்லை. “நீட்டிய இடத்துல எல்லாம் கையெழுத்து
போட்டேனே... இப்படி ஏமாத்திட்டானே” என புலம்பும் சராசரி மனிதனை போலதான்
இப்போது கவலைப்படுகின்றன. சீனா போன்ற “ரஃப் அண்ட் டஃப்” நாடுகள் கொஞ்சம்
தாமதமாக விழித்துக்கொண்டு இப்போது தடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நாடுகளுக்கு இடையே எல்லைக்கோடுகள் உண்டு. ஒரு நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு
மனிதனும், எந்த ஒரு பொருளும், எந்த ஒரு விஷயமும் இன்னொரு நாட்டின் எல்லைத்
தாண்டி போக முடியாது. மீறிச் சென்றால், போர்தான். ஆனால், இணையத்திடம் இது
வேலைக்காவாது. ராமநாதபுரத்தில் ஒரு பிரவுசிங் செண்டரில் இருந்து அமெரிக்காவின்
வெள்ளை மாளிகைக்கு ஒரு மெயில் அனுப்பலாம். கொஞ்சம் விவரம் தெரிந்தால் கூடுதலாக
சில விஷயங்களை செய்யலாம். நிறைய விவரம் தெரிந்தால் வெள்ளை மாளிகை சிஸ்டத்தையே
ஹேக் பண்ணலாம். இந்தக் காரணத்தால், வளர்ந்த நாடுகளிலும் இணையத்தால் சிக்கல்கள்
எழுகின்றன. மக்களின் பிரைவசி கேள்விக்குள்ளாகிறது. உணவு, உடை, உறைவிடம். இந்த
மூன்றும் தான் மனிதனின் அத்தியாவசிய தேவைகள் என்கிறார்கள். மனிதன் நாகரீக
வளர்ச்சி இல்லாமல் இருந்த காலத்தில் அப்படி சொல்லலாம். “உங்க மத்தியில உயிர்
வாழறதே சாதனைதான்” என்னும் நகைச்சுவை அப்போது யதார்த்தம். அந்தச் சமயத்தில்
அவை மூன்றும் போதுமானதாக இருந்தது. இப்போதும் அதையே சொல்லிக்கொண்டிருக்க
முடியாது பிரைவசி என்பதும் இன்றைய யுகத்தில் ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை.
ஒவ்வொரு மனிதனுக்கும் இருள் பக்கம் என ஒன்றிருக்கும். இந்த டேட்டா பிஸினஸ்
அந்த இருண்ட பக்கத்துக்கு பெரிய சோடியம் வேப்பர் விளக்கை போடுகிறது. “ஒரு
இண்டெர்வியூவுக்கு போறீங்க. “வீக் எண்ட் ஆனா சொந்த ஊருக்கு போயிடுவீங்களா” எனற
கேள்விக்கு இல்லையென சொல்வீங்க. ஆனா, அவங்க “இல்லையே. போன வருஷம் 52 வாரத்துல
32 வாரம் ஊருக்கு போயிருக்கீங்களே”ன்னு சொல்வாங்க. காலையில் எத்தனை மணிக்கு
எழுந்திருப்போம் என்பதில் தொடங்கி நமது கேர்ள் ஃப்ரெண்ட் பெயர் வரைக்கும்
அவர்களுக்குத் தெரியும். ஒரு விதத்தில் எந்த ரகசியங்களும் இல்லாமல் இருப்பது
என்பது நிர்வாணமாக நிற்பது போன்றதுதான்” என்கிறார் கோகுல். அவர் சொல்வதும்
உண்மைதான். எதிர்காலத்தில் உலகம் முழுவதும் சிசிடிவி கேமரா போட்டு நமது
அனைத்து நடவடிக்கைகளையும் ஒருவர் பார்த்துக்கொண்டிருப்பது போல இருக்கும்.
இதில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறதா? இருக்கிறது. ஜிமெயிலை நீங்கள் பணம்
கொடுத்து வாங்கினால் நம் தகவல்களை அவர்கள் பார்க்க மாட்டோம் என்கிறார்கள்.
ஆப்பிள், ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு இடையே இருக்கும் முக்கியமான வித்தியாசம்
இதுதான். ஆப்பிள் மொபைலில் உங்களால் கால் ரெக்கார்டு செய்ய முடியாது. ஏன்
என்றால், ”பேசும் இரண்டு பேரில் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவர் பதிவு
செய்வதே பிரைவசியை மீறும் செயல். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்கிறது
ஆப்பிள். ஆனால், ஆண்ட்ராய்டு கூகுளின் சேவை. அவர்கள் நிறுவனத்தில் 90% சேவைகள்
இயங்குவதே தனிநபர் பற்றிய தகவல்களை வைத்துதான். அதனால், ஆண்ட்ராய்டு
மொபைல்களில் ஆப்பிள் அளவுக்கு பாதுகாப்பு இருக்காது. பிரைவஸி என்பதும் ஒரு
பிராடக்ட் ஆகிவிட்டது. விலையும் அதிகம். பணம் இல்லாதவர்களுக்கு பிரைவசி
கிடையாது. ஒரு பொருளையோ, சேவையையோ நாம் பெற விரும்பினால் அதற்கு பணம் கொடுக்க
வேண்டும். பணம் வேண்டாம் என சொல்லப்படும் சந்தையில் நாமே ஒரு பொருளாக மாற
வேண்டியிருக்கிறது நம் முன் மிக முக்கியமான ஒரு கேள்வி இருக்கிறது. பிரைவசி
என்பது பணம் செழித்து இருப்பவர்கள் மட்டுமேயானதா? எளிய மனிதன் தொடங்கி,
தொழிலதிபர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கங்கள்
வரை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய கேள்வி. பகிர்வு செய்தி.

<https://twitter.com/intent/tweet?url=https%3A%2F%2Fweb.whatsapp.com%2F&text=WhatsApp%20Web>
<?subject=WhatsApp%20Web&body=WhatsApp%20Web%0D%0Ahttps%3A%2F%2Fweb.whatsapp.com%2F>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to