தொழில் ரகசியம்: இசையால் பெருகும் வருமானம்
சதீஷ் கிருஷ்ணமூர்த்தி ஒலிபரப்படும் இசையின் டெம்போ வாடிக்கையாளர் கடையில் செலவழிக்கும் நேரத்தை நிர்ணயிக்கும் என்கிறார்கள். பின்னணியில் குத்துப் பாட்டு போட்டால் குதித்து ஓடி வாங்கும் வாடிக்கையாளர் டெம்போ குறைவான இசையை ஒலிபரப்பினால் ஆர அமர மெதுவாக ஷாப்பிங் செய்கிறாராம். இசை கேட்டால் புவி அசைந்தாடுமா என்று எனக்குத் தெரியாது. இப்பொழுது வரும் பாதி இசை கேட்டால் வசை பாடத்தான் தோன்றுகிறது. ஆனால் மார்க்கெட்டிங் ஆலோசகராய் இலட்சணமாய் ஒன்று தெரியும். கடைகளில் சரியான இசை கேட்டால் வாடிக்கையாளர் வசை பாடாமல், அசைந்தாடிப் பொருள் வாங்குவார். இதை நான் கூறவில்லை. கடையில் ஒலிபரப்பப்படும் இசை வாடிக்கையாளர் மனதைப் பாதிக்கும் விதத்தை நாற்பது வருடங்களாக ஆராய்ந்த பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆய்வுகள் கூறுகின்றன. இசையின் ஒலி அளவு, டெம்போ, தன்மை ஆகியவை கடையில் வாடிக்கையாளர் செலவழிக்கும் நேரத்தை, பிராண்டுகளை பார்க்கும் கோணத்தை, வாங்கும் அளவை நிர்ணயிக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். இசையின் ஒலி அளவு ஒலிபரப்பப்படும் இசையின் அளவு அதிகமாக இருந்தால் வாடிக்கையாளர்கள் தங்களை அறியாமல் கடையில் குறைந்த நேரமே செலவழிக்கிறார்களாம். விட்டால் போதும் என்று வாடிக்கையாளர்கள் கடையிலிருந்து ஓடுகிறார்களாம். இளைஞர்கள் மட்டுமே அந்தக் காட்டுச் சத்தத்தைப் பொறுத்துக் கொண்டு ஷாப்பிங் செய்கிறார்கள் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம்மூர் கடைகள் பல இப்படித்தான் இசையைக் கடை முழுவதும் அலர விடுகிறது. கடைக்கு வந்தவர்களை அசிங்கமாய் திட்டி, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதற்கு ஈடானது இது. மெதுவாய், பதமாய், அமைதியாய் பின்னணியில் இசை ஒலிபரப்படும்போது வாடிக்கையாளர் கடையில் செலவழிக்கும் நேரம் அதிகரிக்கிறது. இதில் ஒரு வேடிக்கையான விஷயம் உண்டு. சூப்பர் மார்க்கெட்டில் பின்னணி இசையின் அளவு அதிகமிருந்தால் வாடிக்கையாளர் கடகடவென்று ஷாப்பிங் முடித்துக் கிளம்புகிறார். ஆனால் அவர் கடையில் வாங்கும் அளவும் செலவழிக்கும் பணமும் குறைவதில்லை. வாங்க வந்ததை வாங்கிக் கடையிலிருந்து விட்டால் போதும் என்று எஸ்கேப் ஆகிறார். டீக் கடைகளில் இசையை அசுரத்தனமாக அலர விடுவதைக் கேட்டிருப்பீர்கள். சும்மா ஒரு டீ மட்டும் வாங்கி வெட்டியாய் உட்கார்ந்து வியாபாரத்தைக் கெடுக்காதே என்று வந்தவர்களை விரட்ட டீக் கடைகள் பயன்படுத்தும் விவகாரமான டெக்னிக் இது. நம்மூரில் இன்னொரு கன்றாவியும் நடக்கும். ஏதோ அலர விட்டுத் தொலைக்கிறார்கள், ஒழிந்து போகிறதென்று பார்த்தால் சில கடைகள் ஹிந்திப் பாடல்களைப் பாம்பே பாலிவுட்டிற்கே கேட்கும் அளவிற்குக் காட்டுத்தனமாக அலரவிடுவார்கள். அது போன்ற சமயங்களில் அக்கடைகளில் நிற்கையில் அசாத்திய எரிச்சல் வருகிறதா இல்லையா! இசையின் டெம்போ ஒலிபரப்பப்படும் இசையின் டெம்போ வாடிக்கையாளர் கடையில் செலவழிக்கும் நேரத்தை நிர்ணயிக்கும் என்கிறார்கள். பின்னணியில் குத்துப் பாட்டு போட்டால் குதித்து ஓடி வாங்கும் வாடிக்கையாளர் டெம்போ குறைவான இசையை ஒலிபரப்பினால் ஆர அமர மெதுவாக ஷாப்பிங் செய்கிறாராம். மெதுவாக ஷாப்பிங் செய்வதனால் என்ன பயன்? மெதுவாக ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்குகிறார்கள் என்று உலகின் பல ஆய்வுகள் கூறுகின்றன. மெதுவாய் ஷாப்பிங் செய்யும் போது ஒவ்வொரு பொருளையும் எடுத்து, பார்ப்பதால் வாங்கக்கூடிய சாத்தியக்கூறு அதிகமாகிறது. சூப்பர்மார்க்கெட்டில் பரவாயில்லை. டெம்போ அதிகமுள்ள இசையையோ, குத்து பாட்டுப் போட்டாலோ வந்தது வந்தோம், டக்கென்று வாங்கிவோம், கிளம்புவோம் என்று வந்தவர்கள் வாங்கிச் செல்வார்கள். நின்று, பார்த்து, மெதுவாய் வாங்கும் கடைகளான ஜவுளிக் கடை, நகைக் கடைகளில் டெம்போ அதிகமான இசையை ஒலிபரப்புவதற்கு பதில் பேசாமல் ‘கடைக்குள் அத்துமீறி யாரும் பிரவேசிக்கக் கூடாது’ என்று போர்ட் வைத்துவிடலாம்! இசையின் தன்மை இசையின் தன்மை, அதாவது ஷானர் (Genre) ஷாப்பிங்கைப் பாதிக்கும் மற்றொரு முக்கியமான விஷயம். ஒலிபரப்பும் இசை அமைதியானதாக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் தங்களையும் அறியாமல் மெதுவாக ஷாப்பிங் செய்கிறார்கள். அவர்கள் மனமும், எண்ணங்களும் கூடச் சாந்தமாகி அதிகம் வாங்குகிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பாடல்களுக்குப் பதில் காதையும், மனதையும் அதிகம் நெருடாத இன்ஸ்ட்ருமெண்டல் இசை இன்னமும் பெட்டர் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது பாடல் இல்லாமல் இசைக் கருவிகள் மட்டும் கொண்டு இசைக்கப்படும் இசை. புத்தகக் கடைகள், ஷாப்பிங் மால்கள் சிலவற்றில் ’இசைஞானி இளையாராஜா’வின் இன்ஸ்ட்ருமெண்டல் ஹிட்ஸ் ஒலிபரப்பப்படுவதை கேட்டிருப்பீர்கள். எண்ணங்களை நெருடாத, அமைதியான இசையில் மனம் லயித்து, மனம் சந்தோஷமாய் ஷாப்பிங் செய்வதை உணர்ந்திருப்பீர்கள். இதற்காகவாவது ஒரு எட்டு அந்த கடைகளுக்குச் சென்று பாருங்கள். உணர்வீர்கள். ஒலிபரப்பும் இசையின் தன்மை வாடிக்கையாளர்கள் கடை பொருட்களை பார்க்கும் விதத்தையும் பாதிக்கிறது என்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் வைன், ஷாம்பேய்ன் விற்கும் கடைகளில் க்ளாசிகல் இசையை ஒலிபரப்பும் போது விலை அதிகமான ஐடங்கள் ஜோராய் விற்கிறதாம். நம்மூர் புடவைக் கடைகள் கல்யாணக் கூரை பட்டு புடவை விற்கும் செக்ஷனில் பாரம்பரிய இசையைப் பின்னனியில் ஒலிபரப்பலாம். பயன் தரும். சாப்பிடும் நேரம் இசையின் தாக்கம் கடைகளில் மட்டுமே என்று நினைக்காதீர்கள். ஹோட்டல், ரெஸ்டாரண்ட் செல்பவர்களையும் பாதிக்கும் சக்தி இசைக்கு உண்டு என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆர அமர ஆறு நாள் இருந்து சாப்பிடும் சௌகரியமுள்ள டைன் இன் ரெஸ்டாரெண்டுகளில் அமைதியான இசையைப் பின்னனியில் ஒலிபரப்பப்பினால் பில் தொகை கூடும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியென்றால் வருகிறவர்கள் அதிகம் தின்கிறார்களா? இல்லை. சரக்கும் சேர்த்து விற்கும் ரெஸ்டாரண்டுகளில் தின்பதற்கு முன் கொஞ்சம் அதிகமாகவே குடித்துவிட்டு சாப்பிடத் தோன்றுமாம். அதன் பின் சிறிது வயிற்றிகும் ஈவதால் பில் வேல்யூ கூடுகிறது. அதுவும் பின்னனியில் அமைதியான இசையாய் இருந்துவிட்டால் இன்னமும் விசேஷம். விலை உயர்ந்த சீமைச் சரக்கை விரும்பிக் குடிப்பார்களாம். பலரும் குடித்திருப்பதால் தானே சொல்கிறார்கள். கேட்டு வைப்போம். நம்மூர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உள்ள ரெஸ்டாரெண்டுகள் இந்த டெக்னிகை அதிகம் பயன்படுத்துவதை அங்கு சென்றவர்கள் பார்த்திருக்கலாம். அந்த ஹோட்டல்கள் ஜோராகக் கல்லா கட்டுவதாகவும் கேள்வி. கடைகள், சூப்பர்மார்க்கெட் போன்ற இடங்களை விடுங்கள், பொதுவாகவே மனித மனங்களை பாதிக்கும் சக்தி இசைக்கு உண்டு. அமைதியான இசை கேட்கும் போது மனம் சாந்தமடைகிறது. உணர்வுகள் புதுப்பிக்கப்படுகின்றன. தீய எண்ணங்கள் மறைகின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. ஜெர்மனியில் இரவில் திருட்டு அதிகம் நடந்து கொண்டிருந்த தெருக்களில் க்ளாசிகல் இசை ஒலிபரப்பப்பட்ட போது அந்தத் தெருக்களில் திருட்டு பெருமளவு குறைந்துவிட்டதாம். என் வீட்டிற்கு அருகில் இருக்கும் காலனியில் இரவில் திருட்டு அதிகம். காலனி செக்கரட்டரியிடம் ஜெர்மனி ஆய்வு பற்றி விளக்கி இரவில் சீடி ப்ளேயரில் மெல்லிய இசையை ஒலிபரப்புங்கள் என்றேன். அவரும் அது போலவே செய்தார். அடுத்த நாள் வாக்கிங் போகும் போது அவரைப் பார்த்தேன். ’எப்படி சார் என் ஐடியா’ என்று பெருமையாய் கேட்டேன். ‘சீடி ப்ளேயர் திருட்டு போயிடுச்சு சார்’ என்றார்! <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* [image: Law Article] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
