ஓம்.
கதை என்பது ஒரு சிந்தனை. ஒரு அறிவு பூர்வமான களம்.சொல்லப்புகும் நீதியை,
கருத்தை உவமானங்களாலும் கற்பனை கலந்த அறிவுரைகளாலும் பிறருக்குப் புரிய
வைப்பது. உண்மையான நிகழ்வுகளையும் சற்றே விவரித்து நீதியையும் சேர்த்துக்
கலந்து படைப்பது மிகவும் மதிப்பைப் பெறுகின்றது. கல்லிவரின் யாத்திரைகள் ஒரு
அருமையான படைப்பு., கல்லிவர் பெரிய உருவம் படைத்த கூட்டத்தினரிடமும் எறும்பு
போன்ற சிறிய உருவம் பெற்ற மாந்தர்களிடமும் சிக்கிகொண்டு அவன் நிகழ்திய
சாகஸங்கள் நல்ல ஒரு கதை அம்சம். எளிமையான மொழியில், மிகவும் இக்கட்டான
சூழ்நிலைமையில், எதிரிகளிடமிருந்து தப்பித்தான் என்று கதை போகும். தன்னைவிட
மிகவும் சிறிய உடல் கொண்ட மக்களுக்கு அவன் எவ்வாறு சிக்கல்களை விடுவித்தான்
என்பதும் மகிழ்ச்சி தருபவை..
புராணக்கதைகளும் பெரியோருக்கும் சிறியோருக்கும் மகிழ்ச்சிதருபவை.
கண்ணன், சாத்யகி. மற்றும் பலராமன் மூவரும் அந்திப்பொழுதில் ஒரு வனத்தைக்
கடந்து செல்லவேண்டியதாயிற்று. அடர்ந்த வனத்தில் ஒரு பாழடைந்த மண்டபத்தில்
இரவுதங்கிப்போவதே நன்று என நினைத்து தங்கலாயினர். இருவர் தூங்குவது என்றும்
ஒருவர் விழித்திருந்து காவல் காப்பது என்றும் ஒரு சாமம் முடிந்தபின்னர் காவல்
செய்பபவர் உறங்குபவரில் ஒருவரை எழுப்பி காவலுக்கு அனுப்பிவிட்டு உறங்கவேண்டும்
என்று முடிவு செய்தனர்.
முதல் காவல் பொறுப்பு சாத்யகியிடம் விழுந்தது. கையில் ஒரு மரக்கிளையினை
ஒடித்து பற்றிக்கொண்டு பாழ்மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான் சாத்யகி.
திடீரென மின்னல் தோன்றியது. கார் மேகங்களே இல்லாத போது ஒரு விண்மீன்
வானத்தினின்றும் உதிர்ந்து கீழே விழுந்தது. அந்த உதிர்ந்த விண்மீன் தரையைத்
தொட்டு வீழ்வதை சாத்யகி பார்த்தான். உன்னிப்பாக இருளின் ஊடே நடக்கும் இந்த
நிகழ்வைக் கண்டான். விழுந்த துகள் போன்ற விண்மீன் மனித உருக்கொண்டது. காவல்
புரியும் சாத்யகியிடம் வம்பு பேசியது. அவன் ஒரு அசுரன் என்றும் பாழ்மண்டபம்
தன் வசமானது என்றும் அங்கு தங்கலாகாது என்றும் மீறினால் தண்டனை கிடைக்கும்
என்றும் உறத்த குரலில் கூறினான். சாத்யகியும் பலவான்,வீரன் என்பதால்
இருவருக்கும் சண்டை மூண்டது.இருவீரர்களும்ஒருவர் மற்றவரை அடித்துத்
துன்புறுத்தினர். வீழ்த்த முயன்றனர். இருவரும் பெற்ற குருதி வழியும்
காயங்களுடன் இருந்தனர். ஒரு சாமம் முடிந்துவிட்டதால் சற்றே பின்வாங்கி
சாத்யகி பலராமனை எழுப்பி காவல் புரிய விட்டுவிட்டு உறங்கச்சென்றுவிட்டான்.
இருளில் மறைந்த அசுரன் மீண்டும் ஒருகாவல்வீரனாக பலராமன் வந்தவுடன் அவனையும்
எதிர்பார்க்காத நேரத்தில் தாக்கினான். துவந்த யுத்தம் மூண்டது. வனமே
அந்தப்பகுதியில் சேதமுறும் அளவில் இருவரும் சளைக்காமல் போரிட்டனர்.நேரம
செல்லச் செல்ல அசுரன் உருவத்தில் வளர்ச்சி அடைவதை சாத்யகியைப் போன்று
பலராமனும் கவனித்தான். முடிவு காணாத வகையில் யுத்தம் தொடந்து நடந்தது. இரு
மல்லர்கள் அடுத்தவரை மாய்த்துவிட பெரிதும் முயன்றனர். ஒரு சாமம் கழிந்தது.
யுத்தம் முடிவடையவில்லை. பலராமன் மண்டபத்தில் கண்ணனை எழுப்பிவிட்டுவிட்டு
படுத்துக்கொண்டான். கண்ணன் பாதுகாக்கும் முறையானதால் மண்டபத்தைவிட்டு வெளி
வந்ததும் அசுரன் பலத்துடன் கண்ணனைத் தாக்க வந்தான். பெரிய உருவம் படைத்த
அசுரன் கண்ணனின் முன்னர் சிறிய உருவம் கொண்ட பொம்மை போன்று ஆகிவிட்டான். அவனை
இரு விரல்களால் தூக்கி தன்னுடைய அரைஞாண் கயிற்றில் தொங்கவிட்டான் கண்ணன்.
அசுரன் கண்ணனின் ஆடைக்குள் பொம்மையாகத் தொங்கிக்கொண்டிருந்தான்.
பொழுது புலர்ந்தது. கண்ணன் இனிதே மண்டபத்தில் இருந்த பலராமன்,சாத்யகி
இருவருடனும் உரையாடி எழச்செய்தான்.
கண்ணனின் திறமையால் அசுரன் மாய்க்கப்பட்டிருப்பான் என்று சாத்யகியும்
பலராமனும் யுத்தம் நிகழ்ந்த இடத்தில் தம் பார்வையைச் செலுத்தினர். கண்ணன்
அவர்களிடம் என்ன தேடுகிறீர்கள் என்று வினவினான். அவர்கள் இருவரும் ஒருவரை
ஒருவர் பார்த்துக்கொண்டே கண்களை அகல விழித்து அசுரனின் உடலைத் தேடினர். கண்ணன்
அவர்களிடம் “இவனையாதேடுகிறீர்கள்”என்று கேட்டுக்கொண்டே மேலாடையை
சற்றே விலக்கி இரு விரல்களால் பொம்மை போன்ற உருவம் கொண்ட அசுரனைத் தூக்கிக்
காட்டினான். சடலமாக இருப்பான் என்று எதிர்பார்த்த அசுரன் பொம்மையாகிக்
கண்ணனின் இருவிரல்களிடயே கைகளையும் கால்களையும் அசைத்து ஆடிக்கொண்டிருக்கும்
அசுரனைக் கண்டு திகைத்தனர்.
கண்ணன் விளக்கினான். எதிரிகளின் பயம் வளர வளர அந்த அசுரன் வல்லமை
பெறுவான். பயமே இல்லாத எதிரியிடம் அவன் பாவையாகிவிடுவான். இதோ இவனைப்
பாருங்களேன் என்று ஒரு கல்லின் மேல் அவனை வைத்தான். கண்ணன். செல் என்றதும்
அவன் மறைந்து போனான்.
வெ.சுப்பிரமணியன் ஓம்
On Wed, Apr 10, 2019 at 7:59 AM Vanakkam Subbu <[email protected]> wrote:
> கடவுளின் நாக்கு 7: வெங்காயத்தின் குரல்!எஸ்.ராமகிருஷ்ணன்
>
>
> கதைகள் நம்மை யோசிக்க வைக்கின்றன. சில கதைகளைக் கேட்டோ, வாசித்தோ முடிக்கும்
> போது இப்படியும் சிந்திக்க முடியுமா? கற்பனை செய்ய முடியுமா என வியப்பாக
> இருக்கிறது.
>
> பெரியவர்கள் சொல்லும் கதைகள் ஒருவிதம் என்றால், சிறுவர்கள் சொல்லும் கதைகள்
> வேறுவிதம். நாம் குழந்தைகளுக்குக் கதை சொல்வது போலவே, குழந்தைகளிடம் கதை
> கேட்கவும் வேண்டும். முடிந்தால் மகனோ, மகளோ, பேரன், பேத்தியோ சொன்ன கதை களைச்
> சிறுநூலாக அச்சிட்டு, அவர்களின் பிறந்தநாள் பரிசாகத் தரலாம். பள்ளிக்கூடமே
> தனது மாணவர்கள் சொன்ன கதைகளை அச்சிட்டு, சிறு வெளியீடாகக் கொண்டுவரலாம்.
>
> சிறுவர்களிடம் ‘எதைப் பற்றிக் கதை கேட்கப் பிடிக்கும்?’ என்று கேட்டால், உடனே
> அவர்கள் ‘சிங்கம், யானை, குரங்கு’ ஆகிய மூன்றைத்தான் விரும்பித் தேர்வு
> செய்கிறார்கள்.
>
> ‘சிங்கம்’ பற்றி ஆயிரமாயிரம் கதைகள் சொல்லப்பட்டுள்ளன. எழுதப் பட்டுள்ளன.
> ஆனாலும், சிங்கத்தின் வசீகரம் குறையவே இல்லை.
>
> நான் கூடச் சிறார்கள் செய்தித்தாள் படிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச்
> சொல்லும் விதமாக, நியூஸ் பேப்பர் படிக்கிற சிங்கம் பற்றிப் ‘படிக்கத் தெரிந்த
> சிங்கம்’ என்ற சிறார் நாவலை எழுதியிருக்கிறேன். இதனை ‘டிஸ்கவரி புக் பேலஸ்’
> வெளியிட்டுள்ளது.
>
> சமீபத்தில் சஞ்சீவ் சன்யால் எழுதிய ‘ஏழு நதிகளின் நாடு’ என்ற புத்தகத்தைப்
> படித்தேன். அதில் அவர் ‘சிங்கம் எப்படி இந்தியாவில் இவ்வளவு முக்கியத்துவம்
> அடைந்தது?’, ‘மவுரியர்கள் ஏன் சிங்கத்தைச் சிற்பமாகச் செதுக்குவதில் இவ்வளவு
> ஆர்வம் காட்டினார்கள்?’, ‘சிந்து சமவெளி நாகரீகத்தில் சிங்கம் இருந்ததா,
> இல்லையா?’ எனப் பல செய்திகளைச் சுவாரஸ்யமாக எழுதி யிருக்கிறார். தமிழகத்தில்
> சிங்கம் இருந்ததா? சங்க இலக்கியத்தில் சிங்கம் இடம் பெற்றிருக்கிறதா என்பது
> பற்றி ஆய்வாளர்கள்தான் சொல்ல வேண்டும்.
>
> துருக்கி நாட்டுப்புறக் கதை ஒன்று ‘வெங்காயம் ஏன் சிறியதாக இருக்கிறது?’,
> ‘தர்பூசணி ஏன் பருமனாக இருக் கிறது?’ என்பதற்குப் பதில் சொல்கிறது.
> ‘இதற்கெல்லாம் கூட கதைகள் இருக்குமா?’ என யோசிக்க வைக்கிறது இக்கதை.
>
> முன்னொரு காலத்தில் வெங்காயம்தான் மிகப் பருமனாக இருந்தது. சோம்பேறியாகவும்
> தூங்குமூஞ்சியாகவும் இருந்த வெங்காயத்துக்கு, வம்பு பேசுவதைத் தவிர எதிலும்
> விருப்பம் இல்லை. இதற்கு மாறாகத், தர்பூசணி சிறியதாக எலுமிச்சை அளவில்
> இருந்தது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாகத் தாவிக் குதித்துக் கொண்டு உற்சாகமாக
> பேசிக் கொண்டிருந்தது. இந்த இரண்டும் ஒரே தோட்டத்தில் இருந்தன.
>
> அங்கே ஒரு வாழை மரம் இருந்தது. அந்த மரத்தை வெங்காயத்துக்குப் பிடிக்கவே
> பிடிக்காது. வாழையும் அதன் பிள்ளைகளும் இருக்கிற தண்ணீரைக்
> குடித்துவிடுகிறார்கள் என்று ஆத்திரமே, அதற்கான காரணம். எப்போதும் வாழை
> மரத்தைக் குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தது வெங்காயம். இதற்கு மாற்றாக
> தர்பூசணிப் பழம் வாழை மரத்தைப் பாராட்டிக் கொண்டே இருந்தது.
>
> ஒரு நாள் வாழை மரம் வெங்காயத்திடம் கேட்டது: “நீ ஏன் இப்படி உடம்பை
> வளர்த்துக் கொண்டு வீணாக இருக்கிறாய்? உன்னால் யாருக்கு என்ன பிரயோஜனம்?”
>
> அதைக்கேட்ட வெங்காயம் சொன்னது: “நீ மற்றவர்களுக்குப் பிரயோஜனமாக இருக்கிறாய்.
> அதற்காக உன்னை வெட்டாமல் விடுகிறார்களா? மனிதர்கள் உன் காய்களைப் பறித்துக்
> கொள்கிறார்கள். இலையை அறுத்துக் கொண்டுப் போகிறார்கள். பழங்களைத்
> தின்கிறார்கள். முடிவில் ஒருநாள் உன்னையே வெட்டிவிடுகிறார்கள். நல்லது
> செய்தால் ஒரு பயனும் இல்லை என்பதை உன்னிடம் இருந்தே கற்றுக் கொண்டேன்.”
>
> அதைக் கேட்ட வாழைமரம் சொன்னது: “அப்படிச் சொல்லாதே. இருப்பதை எல்லாம் அள்ளிக்
> கொடுப்பது சந்தோஷமானது. அதை அனுபவித்துப் பார் தெரியும்!”
>
> “பொய். நீ ஒரு முட்டாள். ஏமாளி. வெட்ட வருபவனை உன்னால் எதிர்க்கவோ, தடுக்கவோ
> முடியாது. தைரிய மற்ற கோழை!” என்றது வெங்காயம்.
>
> “அதெல்லாமில்லை. தைரியம் என்பது சண்டை போடுவது இல்லை. வேதனையைத் தாங்கி
> நிற்பதே உண்மையான தைரியம்” என்று வாழை மரம் மறுபடியும் சொல்ல, அதைக் கேட்ட
> தர்பூசணி சொன்னது:
>
> “வாழை மரம் சொல்வது உண்மை தான். தன்னைக் கஷ்டப்படுத்துகிறார்களே என்று வாழை
> ஒரு போதும் மனிதர்களுக்குக் கசப்பான பழத்தைத் தருவதில்லை. சொல்லாலும்
> செயலாலும் அடுத்தவரை இம்சிக்காமல் வாழ்வது சிரமம். இந்த வாழை மரம் துறவியைப்
> போல வாழ்கிறது’’ என்றது.
>
> இதைக் கேட்ட வெங்காயம் எரிச்சலான குரலில் சொன்னது: “இதெல்லாம் வெறும்
> நடிப்பு. சுயநலம். நான் நம்ப மாட்டேன்!”
>
> அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கே தோட்டக்காரன் வேலைக்கு வந்தான்.
> அவனிடம் சென்று வெங்காயம் கண்ணீர் சிந்தியபடியே சொன்னது: “இந்த வாழை மரம்
> சுத்த மோசம். அதுவே எல்லாத் தண்ணீரையும் குடித்துவிடுகிறது. முதலில்
> இங்கிருந்து அதை வெட்டி எறி”என்றது.
>
> இதைக் கேட்ட தர்பூசணி: “அய்யோ! வெட்ட வேண்டாம்” என்றது.
>
> தோட்டக்காரன் வெங்காயத்தின் பேச்சைக் கேட்டு, வாழைமரத்தை வெட்டிப்போட்டான்.
> துண்டாகி விழுந்த வாழைமரம் வெங்காயத்தைப் பார்த்து சாபமிட்டது: “வாழ்க்கையின்
> அர்த்தத்தை நீ உணரவில்லை. அதனால் மெலிந்து சுருங்கிப் போவாய். உண்ணும்
> பொருளாகி, நீயும் என்னைப் போல துண்டு துண்டாக்கப் படுவாய். உன்னால் கண்ணீர்
> வடிப்பவர்கள் தினமும் உன்னைத் திட்டுவார்கள்!”
>
> வாழை மரத்தின் நிலையைக் கண்டு தர்பூசணி வருந்தியது. அதைக் கண்ட வாழை மரம்
> சொன்னது: “மனதில் நல்லதை நினைத்து, நல்லதைப் பாராட்டும் தர்பூசணியே... நீ உடல்
> பெருத்து, எப்போதும் கருணை ஈரத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வாய்!”
>
> அன்று முதலே வெங்காயம் சுருங்கிச் சிறியதாகிவிட்டது. தர்பூசணி பருமனாகிப்
> பலராலும் விரும்பப்படுகிறதாம்.
>
> உடற்பருமன் என்பது கேலிக்குரிய விஷயமில்லை. ஒருபோதும் எவரையும் அவரது
> உடலமைப்பை வைத்து கேலி செய்யவோ, அவமதிக்கவோ கூடாது. உலகப் புகழ் பெற்ற ஓவியரான
> ஹென்றி டாலெஸ் லாட்ரெக் நாலரை அடி உயரமுள்ளவர். ஆனால், அதை ஒரு குறையாக
> ஒருபோதும் அவர் கருதவேயில்லை.
>
> உணவுப் பொருட்கள் உண்டான விதம் பற்றியும் தாவரங்கள் உருவான விதம் பற்றியும்
> நிறைய வாய்மொழிக் கதைகள் உள்ளன. ‘பிரம்மாஸ் ஹேர்’ (Brahma's Hair) என்ற மேனகா
> காந்தி தொகுத்த நூலில் இதுபோன்ற சிறந்த கதைகள் உள்ளன.
>
> உலகில் அதிகம் உண்ணப்படும் பொருட்களில் ஆறாவது இடத்தில் வெங்காயம் உள்ளது.
> எகிப்தில் கி.மு-3500-ல் வெங்காயம் பயிரிட்டிருக்கிறார்கள். அங்கே வெங்காயம்
> புனிதப் பொருளாகக் கருதப்பட்டது. எகிப்திய மன்னர்களைப் புதைக்கும்போது
> வெங்காயத்தையும் சேர்த்து வைத்து புதைத்திருக்கிறார்கள். மரணச் சடங்கு களில்
> வெங்காயம் முக்கிய பொருளாக இடம்பெற்றுள்ளது.
>
> எகிப்திய மத குருக்கள் வெங்காயத்தில் மந்திரத் தன்மை இருப்பதாகவும், இதன்
> மூலம் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும் என நம்பினார்கள். கிரேக்க ஒலிம்பிக்
> போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் உடல் உறுதிக் காக வெங்காயத்தை நிறையச்
> சாப்பிட்டுள்ளார்கள். அத்தோடு நோய்த் தொற்றைத் தடுக்க உடலில் வெங்காயச் சாற்றை
> தேய்த்துக் கொள்வார்களாம்.
>
> வாழ்க்கைப் பாடங்களை எளிமையாகக் கற்றுத் தருவதற்குக் கதைகள் அதிகம் உதவி
> செய்கின்றன. கதை வழியாகத்தான் வெங்காயமும் தர்பூசணி யும் பேசிக் கொள்கின்றன.
> இக்கதையை ஒரு சிறுவனிடம் சொன்ன போது அவன் உடனே, “வெங்காயத்தின் குரல்
> எப்படியிருக்கும்?” என்று கேட்டான்.
>
> “நீயே சொல்லு!” என்றேன். அவன் உடனே கீச்சுக் குரலில் பேசத் தொடங்கினான்.
> வெங்காயத்தின் குரல் இப்படிதான் இருக்கும் என சிறுவன் கற்பனை செய்யத்
> தொடங்கும் போது, அவனுக்குள் இருந்து படைப்பாற்றல் முளைவிடத் தொடங்குகிறது.
> இதற்காகத்தான் கதைகள் கேட்கவும் சொல்லவும் வேண்டியிருக்கிறது.
> - கதை பேசும்… |
>
>
> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! *
>
> *வாழிய பாரதமணித் திருநாடு! *
>
> *வணக்கம் சுப்பு*
>
>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> For more options, visit https://groups.google.com/d/optout.
>
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.