#எப்படியொரு_சிந்தனை?

108 உபநிடதங்களில் ஒன்றாகவும், 10 முக்கியமான உபநிடதங்களில்  ஒன்றாகவும்
இடம்பெறும் #தைத்தரீயோபநிஷத்.தில் வரும் ஒரு புதிரான வாக்கியம் இது:

#ஸயஏத1த்1_அன்னம்அன்னேப்1ரதி1ஷ்டி2த1ம்வேத3ப்1ரதி1தி1ஷ்ட2தி1 ||

"உணவால் உணவு நிலைபெறுகிறது எனும் உண்மையை உணர்பவனே உலகில் நிலைக்கிறான்"
என்று இதனை ஒருவாறு மொழிபெயர்க்கலாம்.

இதைப்பற்றிய விளக்கம் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானங்களில் கூடத் தெளிவாக இல்லை.
ஆழ்ந்து சிந்தித்தும், விபரந் தெரிந்த நண்பர்களுடன் விவாதித்தும் நீண்ட
முயற்சியின் விளைவாய் ஒருவாறு பொருள் புரிந்தது. இது பல காலத்துக்கு முந்தைய
நிகழ்வு எனினும் முகநூல் நண்பர்களுடன் அதனைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு மனிதன் இறந்தபின், சடலத்தை அப்படியே விட்டுவிட்டால், காக்கை, கழுகு, நாய்,
நரிக்கு இரையாகிவிடும்.

புதைத்தால், கிருமி, புழு, பூச்சிகளுக்கு இரையாகிவிடும்.

எரித்தால், தீக்கு இரையாகிவிடும்.

இவ்வகையில், உடல், வருங்காலத்தில் உணவாகப் போகிறது.

உயிருள்ளபோது, அந்த உடல், பல்வேறு  உணவுகளை உண்டு உயிர்வாழ்கிறது.
#உணவால்உணவுநிலைபெறும்_உண்மை என்பது இதுதான்! இக்கருத்தை உள்வாங்கியதே
இனிவரும் பட்டினத்தார் பாடலும்:

"இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்ததொந்தி
நம்மதென்று  நாமிருக்க நாய்,நரிகள் பேய்,கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்."

நிறைய உணவை உண்டு, அதனால், தன் "காயாபுரிக் கோட்டை" [உடம்பு தான்] ஒரு
கற்கோட்டையைப் போல் உறுதியாய் இருப்பதாக எண்ணி, இறுமாப்புக் கொள்ளும்
மனிதர்களைப் பார்த்து:

"பிற்காலத்தில் நீயே உணவாகப் போகிறாய். இந்த உண்மையை உணராமல், உனக்கு உண்பதில்
இத்தனை இறுமாப்பா?" என்று கண்டிக்கும் வகையில் உள்ளதே உபநிடத  வாக்கியம்
மற்றும் அடிகளாரின் பாடலும்.

எப்படியொரு சிந்தனை, பாருங்கள்!

(பதிவிட்டவர்: பேரா. விஷ்வநாத் தாஸ்)

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvMziXsANLAHu69r19S1y1yW%3D5y%3Ds9BMVTUDr6EZf0O6w%40mail.gmail.com.

Reply via email to