*திருப்பரமேச்சுர விண்ணகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
 திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம்
தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.*

*மூலவர் - பரமபத நாதன், வைகுந்தநாதன், வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே
திருமுக மண்டலம்.*

*தாயார் - வைகுந்தவல்லி. (தனிக்கோயில் நாச்சியார்) .*

*தீர்த்தம் - ஐரம்மத தீர்த்தம்.*

*விமானம் - முகுந்த விமானம்.*

*ப்ரத்யக்ஷம் - பல்லவராஜன்.*
வரலாறு



*இத்தலத்தைப் பற்றிக் குறிப்பாக எந்தப் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது
தெரியவில்லை. ஆனால் புராண காலத்தில் இத்தலம் சர்ப்பச் சேத்திரம் என
அழைக்கப்பட்டதாகவும், இறைவன் பரமபதநாதன் என்று ஆராதிக்கப்பட்டதாகவும் தல
வரலாற்றின் மூலம் அறியமுடிகிறது.   ஒரு காலத்தில் இக்கோவில் காசி யாத்திரை
செல்வோர் தங்கிச் செல்லும் மடமாக இருந்தது. மிகச் சிறிய அளவினதாக இருந்த
இத்தலம் பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 669) காலத்தில்தான்
இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாக கட்டப்பெற்றது.*



*பரமேஸ்வரவர்மன் இத்தலத்தின் இறைவனருளால் பிறந்ததாகவும் இதை நினைவு படுத்தும்
முகமாக பரமேஸ்வரன் இக்கோவிலுக்கு 18 யானைகளைக் கொடுத்திருந்ததாகவும் கூறுவர்.
பரமேஸ்வர வர்மனுக்கு இப்பெருமான் 18 கலைகளைப் போதித்ததாகவும், அவைகளைச்
சொல்வதற்காக எழுந்த நிலையில் நின்ற திருக்கோலத்திலும், சீடனுக்கு
உபதேசித்தருளக் குருவாக அமர்ந்த திருக்கோலத்திலும், அவனுக்குச் சேவை சாதிக்கக்
கிடந்த திருக்கோலத்திலும் இருந்ததாகக் கூறுவர். இதனால் தான் பரமேஸ்வரவர்மன்
இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாகக் கட்டி முதல் அடுக்கில் (கீழ் அடுக்கில்)
பெருமாள் வீற்றிருந்த நிலையிலும், இரண்டாவது தளத்தில் அரங்கநாதனாகச்
சயனத் திருக்கோலத்திலும், மூன்றாவது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் இறைவனை
எழுந்தருளச் செய்தார். *

*மூன்றாவது அடுக்கில் நின்ற திருக்கோலத்தில் அமைக்கப்பட்ட சிலை ஒரு சமயம்
மழையின் போது உண்டான பேரிடியின் காரணமாகச் சிதலமடைய பிறகு அவ்விடத்தில்
சுதையால் செய்யப்பட்ட சிலை வைக்கப்பெற்றது. இது தவிர மற்ற இரண்டு தளத்திலும்
உள்ள சிலைகள் கற்களில் வடிக்கப்பெற்றவையாகும்.*
இறைவன் இறைவி



*பரமபதநாதன், மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
இறைவி வைகுந்த வல்லி. இத்தலத்தின் தீர்த்தம் ஐரம்மத தீர்த்தம். விமானம்
முகுந்த விமானம் என்ற வைகையைச் சேர்ந்தது.*

*தலபெருமை:*

*ஒருமுறை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியர்களும் ஒன்றாகப்
பூலோகத்திற்கு வந்து தவம் செய்தனர். அவர்களது தவத்திற்கு அத்திரி, பிருகு,
காசிபன், கவுண்டில்யன், திரியோரிஷேயன், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள் உதவி செய்தனர்.
மூன்று தேவியர்களையும் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்ல சிவன், மகாவிஷ்ணு,
பிரம்மா ஆகிய மூவரும் பூலோகம் வந்தனர். ரிஷிகளின் தவ வலிமையால் தேவியர்களை
நெருங்க முடியாத மூவரும், ஒரு கந்தர்வக் கன்னியை அனுப்பினர். அவளைக் கண்ட
பரத்வாஜர் காமுற, ஒரு குழந்தை பிறந்தது. வேடுவ வடிவமெடுத்த மகாவிஷ்ணு, அக்
குழந்தைக்கு “பரமேச்சுர வர்மன்’ எனப் பெயரிட்டு வளர்த்தார். பிறப்பிலேயே
திருமால் பக்தனாக இருந்த பரமேச்சுரனுக்கு ஆய கலைகளையும் கற்றுக் கொடுத்தார்.
கலைகள் அனைத்தையும் கற்று முடிப்பதற்குள் அவனுக்கு இறுதிக் காலமும்
நெருங்கிவிட்டது.*

*அவனது ஆயுளை அதிகரிக்க விரும்பிய விஷ்ணு ஒரு சூசகம் செய்தார். எமன் வரும்
நேரம் பார்த்து வடக்குப் பக்கம் தலைவைத்துப் படுத்துக் கொண்டார். பொதுவாக
வடக்கே தலைவைத்துப் படுத்தால் ஆயுள் குறையும் என்று சொல்வர்.*

*மனிதர்களுக்கே இந்த விதி இருக்கும்போது உலகைக் காக்கும் விஷ்ணு இவ்வாறு
படுத்திருக்கிறார் என்றால் என்ன ஆகும்?. அவரது நிலையைக் கண்ட எமன் ஏதோ
விபரீதம் நடக்கப் போகிறது என எண்ணி அவரருகே வந்து எழுந்திருக்கும்படி
வேண்டினான். அவரோ மறுத்தார். காரணம் புரியாமல் அவன் விழித்தபோது, தன் பக்தனது
ஆயுளை நீட்டித்தால், தான் எழுந்திருப்பதாகக் கூறினார். பக்தனுக்கு இரங்கும்
விஷ்ணுவின் கோரிக்கையை ஏற்ற எமன், பரமேச்சுரனின் உயிரை எடுக்காமல்
தீர்க்காயுள் கொடுத்துச் சென்றுவிட்டான். இதைக் கண்ட பரமேச்சுரன் தந்தையாக
இருந்த வேடுவரை யார் என கேட்க, அவர் மகாவிஷ்ணுவாகக் காட்சி கொடுத்தார்.
மகிழ்ந்த அவன், இவ்விடத்தில் அவரது மூன்று கோலங்களையும் ஒவ்வொரு நிலையில்
வைத்து மும்மாடக் கோயிலாகக் கட்டினான். இப் பரமேச்சுர வர்மன்தான் பல்லவ
வம்சத்தின் துவக்கமாக இருந்து ஆட்சி செய்தார் என்றொரு வரலாறும் கூறுகின்றனர்.*

*மன்னனுக்கு மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் இத்தலத்துப் பெருமாளை
மங்களாசாசனம் செய்யும்போது, “”பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரமதுவே” என
அனைத்துப் பதிகங்களிலும் பல்லவ மன்னனின் பெருமைகளைச் சேர்த்துப் பாடியுள்ளார்.
மேலும், பல்லவர்களின் போர்புரியும் திறனைக் குறிப்பிடும்போது அவர்கள்
ஒலிக்கும் பறையானது விண் அதிரும்படி இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனாலேயே இத்தலத்திற்குப் “பரமேச்சுர விண்ணகரம்’ என்ற பெயர் வந்தது
என்கின்றனர். திவ்ய தேசங்களில் மன்னனையும் சேர்த்து இத்தலத்தில் மங்களாசாசனம்
செய்யப்பட்டிருப்பதால் பல்லவ மன்னனுக்கு விஷ்ணு அருளியதை
உறுதிப்படுத்துகின்றனர்.*
சிறப்புகள்



*மாமல்லபுரத்தைப் போன்று கவினுறு சிற்பங்கள் இக்கோவிலின் உட்புறச் சுவற்றில்
செதுக்கப்பட்டுள்ளது. பல்லவ மன்னர்களின் குடவரைக் கோவில் அமைப்பின்படி
இத்தலத்தின் கருவறையும் அதைச் சுற்றியுள்ள பிரகாரம் மற்றும் தூண்கள் யாவும்
ஒரே பாறையில் குடையப்பட்டதாகும். பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் தனது அரசு
சம்பந்தப்பட்ட அனைத்து அலுவல்களிலும், தான் போர் மேற் செல்வதற்கும்,
இப்பெருமாளையே வழிபட்டு வெற்றிமேல் வெற்றி கண்டான். இவன் பாண்டியனை வென்றதை
திருமங்கையாழ்வார் தனது பாடலில்.*




*"தேர்மன்னு தென்னவனை முனையில் செறுவில்          திறல் வாட்டிய திண்
சிலையோன்     பார் மன்னு பல்லவர் கோன் பணிந்துவரும் - பர          மேச்சுர
விண்ணக ரமதுவே*



*என்று குறிப்பிடுகிறார்.*

*திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் பாடல் பெற்றுள்ளது. பிள்ளைப்
பெருமாளையங்கார், மணவாள மாமுனி, இராமானுஜர் ஆகியோரும் இத்தலத்திற்கு வருகை
தந்துள்ளனர்.*
சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலைச் சிறப்பு



*பரமேசுவரவர்மனின் பிறப்பைச் சித்தரிக்கும் சிற்பங்கள், அவனுக்கு இறைவன்
நீதிகளைப் போதித்த நிலையிலான சிற்பங்கள் போன்றன இத்தலத்தின் உட்பிரகாரத்தில்
வெகு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் மேல் மாடியில் இரணியனை
வதம் செய்யும் நரசிம்மன், நரகாசுரனை வதம் செய்யும் கிருஷ்ணன், வாலியை வதம்
செய்யும் இராமவதாரம் போன்ற காட்சிகள் அற்புதமாகச் செதுக்கப்பெற்றுள்ளன.*

*விசேஷங்கள் - விமானம் மூன்று அடுக்காக அஷ்டாங்க விமானமாக உள்ளது. கீழ்
அடுக்கில் (அடியில்) பெருமாள் வீற்றிருந்த நிலையிலும், மத்தியில் (இரண்டாவது
அடுக்கில்) ஸ்ரீ தேவி பூதேவியுடன் அரங்கநாதன் சயனத்திருக்கோலத்திலும், மேல்
அடுக்கில் நின்ற திருக்கோலத்திலும் உள்ளனர். ஆனால், இவர்களுக்குப் பூஜை இல்லை.
விதர்ப்ப தேசத்தை அரசாண்ட விரோசனனுக்கு புத்திர ஸந்ததி இல்லாமல்
காஞ்சீபுரத்திலுள்ள கைலாஸ நாதரைப் பூஜை செய்ய, அவருடைய அருளால், விஷ்ணுவின்
த்வாரபாலகர்கள் இரண்டு **புத்திரர்களாக பல்லவன், வில்லவன் என்பவர்கள் விஷ்ணு
பக்தர்களாகப் பிறக்க, புத்திரர்கள் புண்யகோடி விமானத்துக்கு வாயு மூலையில்
அச்வமேத யாகம் செய்ய, ஸ்ரீமந் நாராயணன் அவர்களுக்கு ஸ்ரீ வைகுண்ட நாதனாகச்
ஸேவை ஸாதித்தபடி வீற்றிருந்த திருக்கோலத்துடன் இன்றும் பக்தர்களுக்குச் ஸேவை
ஸாதிப்பதாக ஐதீஹம். விரஜையும் அங்கே புஷ்கரிணியாக அமைந்திருக்கிறது*
சுரங்கப்பாதை

*இங்குள்ள மூலவர் சன்னதிக்கும், முன் மண்டபத்திற்கும் இடைப்பட்ட பகுதியில்
(இடைகழியில்) சுரங்கப் பாதை இருப்பதை அறிந்த வெள்ளையர்கள் அதனைத் தோண்டிக்காண
முனைந்த போது, இவ்வூர் பொதுமக்களும், இப்பெருமான் மீது பேரன்பு
கொண்ட இஸ்லாமிய பக்தர் அலி முகம்மதுகான் என்பவரும், இச்சுரங்கத்திற்கு
கோவிலிலிருந்து செல்லக்கூடிய வழியினை மூடி அதன்மேல் படிக்கட்டுக்கள் அமைத்து
மூலவர் சன்னதிக்கு நடந்து செல்லக் கூடிய பாதையாக மாற்றிவிட்டனர். இவ்வாறு
மூடப்பட்டு கல்பாலம் இடப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். இங்கிருந்து
மாமல்லைக்கும், கைலாச நாதரின் கோவிலுக்கும் பரமேஸ்வரவர்மனின் அரண்மனைக்கும்
சுரங்கப்பாதை இருந்ததாக நம்பிக்கை. கிருஷ்ண தேவராயர் இத்தலத்திற்கு ஆற்றிய
பெருந்தொண்டின் நினைவாக இங்கு அவருக்கும் சிலை வைக்கப்பெற்றுள்ளது.
இக்கோவிலில் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்ய இரண்டு (ராஜ தர்பார்கள்) நடன
சாலைகள் இருந்தன. அவைகள் இன்று சாதாரண மண்டபங்களாக விளங்குகின்றன. *



*இத்தலப் பெருமாள் அமர்ந்த, சயன, நின்ற கோலத்தில் அஷ்டாங்க (முகுந்த)
விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். மணல் பாறையில் செய்யப்பட்ட இக்கோவில்
சுவாமி கருவறை, முதல் பிரகாரம் ஆகியன குடவறையாக உள்ளது. இக்கோவில்
மும்மாடக்கோவில் எனப்படும்.முன்மண்டபத்தில் கிழக்குப் பார்த்துத் தாயார் தனிச்
சன்னதியில் இருக்கிறார். பிரகாரத்தில் இணைந்திருக்கும் இரண்டு மரங்களுக்குக்
கீழே ஆதிசேஷன் இருக்கிறார்.*


*பிரார்த்தனை*

*இங்கு வேண்டிக்கொண்டால் பாவங்கள் நீங்கி, வைகுண்ட பதவி அடையலாம், திருமண,
புத்திர பாக்கியங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.*

*நேர்த்திக்கடன்:*

*சுவாமிக்குச் சர்க்கரைப் பொங்கல், அவல், தயிர்சாத நைவேத்யங்கள் படைத்து நெய்
தீபம் ஏற்றலாம்.*


*முகவரி:*

*அருள்மிகு வைகுண்ட பெருமாள் சுவாமி திருக்கோயில், பரமேஸ்வர விண்ணகரம் – 631
502. காஞ்சிபுரம் மாவட்டம்.*

*போன்:*

*+91- 44 – 2723 5273.*


<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*you Tube Link:*

*https://www.youtube.com/watch?v=IXh7YID7EaY*
<https://www.youtube.com/watch?v=IXh7YID7EaY>

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

 *Vanakkam Subbu*

 [image:
wygltUSizKEORrTQqC2Nk0Ug4hf6FDz7Lcu2SYFxlGnPRsLO_T3n36kqlspaL6no.gif]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BoEtovMY13M99dNspFHN%2BA0d6v_2rvo4diLHm9jxUJzKQ%40mail.gmail.com.

Reply via email to