திருக்காக்கரை காட்கரையப்பன் திருக்கோயில்
இயற்கை சூழ்நிலையை காண்கின்ற பொழுது, அங்கு செல்வம் நிலைத்து நிற்பதைக் காண்கிறோம். பகவானுக்கு உற்சாகம் ஏற்பட்டால் பக்தர்களைச் சோதிப்பது இயல்பு. அப்படி ஒரு அற்புதத் திருவிளையாடலைத் திருமால் திருக்காட்கரை என்னும் திவ்ய தேசத்தில் செய்திருக்கிறார். இது கேரள மக்களுக்கு மட்டுமல்ல, நமது பாரத தேசத்து மக்களுக்கும் பெருமைதான். திருச்சூர் - ஆலவாய் ரயில்வே நிலையத்திலிருந்து ரயில்வே மார்க்கமாகச் சென்றால் இருநவகோடி என்ற ரயில் நிலையம் வரும். இங்கிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது திருக்காட்கரை. பேருந்தில் சென்றால் ' ஆலவாய்' போகும் பாதையில் எட்டு கிலோ மீட்டர் செல்ல வேண்டும். நேரடியான பாதை இல்லை. மூலவர் காட்கரையப்பன். தெற்கே பார்த்துத் தரிசனம், நின்ற திருக்கோலம். தாயார் பெருஞ்செல்வ நாயகி. வாத்ஸல்யவல்லி என்று வேறு பெயரும் உண்டு. தீர்த்தம் கபில தீர்த்தம். விமானம் புஷ்பக விமானம். கோயில் புராண வரலாற்றில் இப்பெருமாளை ' வாமனர்' என்று நினைத்து வணங்குகின்றனர். ஓணம் பண்டிகை மிகவும் விசேஷம். முன்பொரு சமயம் ஒரு விவசாயி வாழைத் தோட்டங்களை ஏற்படுத்தினான். ஆனால் வாழைக்குலை தள்ளவே இல்லை. எனவே அவன் பொன்னாலான வாழைக்குலை செய்து திருக்காட்கரை அப்பனுக்குச் சமர்ப்பித்தான். மறுநாளே பகவானுடைய அனுக்கிரகத்தால் வாழை மரங்கள் வளர்ந்து வாழைக்குலைகள் தள்ளியது. இதுதான் ' நேந்திரம் வாழை' என்று மாறிவிட்டதாக ஐதீகம். ஒரு சமயம் அந்தப் பொன் வாழைக்குலை கோவிலில் இருந்து காணாமல் போயிற்று. இதைக் கண்ட அங்குள்ள அரசன் ஒரு யோகியைச் சந்தேகப்பட்டுத் துன்புறுத்தியதால் அந்த முனிவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் மறுநாளே காணாமல் போன அந்த பொன் வாழைக்குலை கர்ப்பகிரகத்தில் வந்து சேர்ந்தது. அரசன் தான் அவசரப்பட்டு ஒரு முனிவரின் தற்கொலைக்குக் காரணமாகி விட்டோமே என வருந்தி, அந்த முனிவரது சாபம் தீர்க்க மூங்கில் கூடை ஏற்படுத்திக் கொண்டு கோரை கொள்ளியை வெளிச்சமாக்கி பகவானை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. கபில முனிவருக்குப் பகவான் இங்கு பிரத்தயட்சம் என்பது சிறப்பு. மூலவர்:காட்கரையப்பன் (அப்பன்) அம்மன்/தாயார்:பெருஞ்செல்வநாயகி, வாத்ஸல்யவல்லி தீர்த்தம்:கபில தீர்த்தம் புராண பெயர்:திருகாட்கரை ஊர்:திருக்காக்கரை மாவட்டம்:எர்ணாகுளம் மாநிலம்:கேரளா மங்களாசாசனம் நம்மாழ்வார் நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிருண்டான் சீர்மல்கு சோலை தென் காட்கரை யென்னப்பன் கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேனே. -நம்மாழ்வார் திருவிழா ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் திருவோண உற்சவம் நடக்கும். ஒரு காலத்தில் 28 நாள் திருவிழா நடந்துள்ளது. இப்போது பத்து நாள் திருவிழா நடக்கிறது. தலச் சிறப்பு பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 67 ஆவது திவ்ய தேசம்.இக்கோவிலின் நுழைவு வாயிலில் மகாபலியின் ஆஸ்தானம் இருந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது ஒரு சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இவ்விடத்தில் விளக்கேற்றி மகாபலியை வழிபடுகின்றனர். கேரளபாணியில் ஓடு வேய்ந்த வட்ட வடிவக் கோவில் இது. முகப்பில் உள்ள மண்டபத்தில் பெருமாள் வாமனராக, குள்ள வடிவம் எடுத்து வரும் காட்சி மரத்தில் சிற்பமாகச் செதுக்கப்பெற்றுள்ளது. மூலஸ்தானத்தில் வாமன மூர்த்தி அருள்பாலிக்கிறார். இவரை மக்கள் திருக்காக்கரை அப்பன் எனச் செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள். திறக்கும் நேரம் காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். முகவரி அருள்மிகு காட்கரையப்பன் (வாமனர்) திருக்கோயில், திருக்காக்கரை-683 028 எர்ணாகுளம் மாவட்டம் கேரளா மாநிலம். போன் +91 99952 16368, 97475 36161 பொது தகவல் கோவிலுக்கு வெளியே தனிச் சன்னதியில் தேவி பகவதி, சாஸ்தா, சுந்தர யக்க்ஷி, கோபால கிருஷ்ணன், நாகர் ஆகியோர் உள்ளனர். இக்கோவிலைப் பரசுராமர் நிறுவியுள்ளார். மகாபலி சிறந்த சிவபக்தன். அவன் வழிபாடு செய்ததாகச் சொல்லப்படும் லிங்கம் இங்கு இருக்கிறது. இந்த வகையில் சைவ, வைணவர்கள் இரு தரப்பினரும் இங்கு வழிபாடு செய்கின்றனர். இந்தக் கோவிலில் வாமனருக்கு ஒரு கருவறையும், சிவபெருமானுக்கு ஒரு கருவறையும் தனித்தனியே உள்ளன. தினமும் 5 பூஜைகள், 3 சீவேலிகள் நடைபெறுகின்றன. வாமன மூர்த்தி சந்நிதிக்குத் தெற்குத் திசையில், மகாபலி வழிபட்டதாகக் கூறப்பெறும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது. இந்தத் தலத்தில், வாமனரை வழிபடுவதற்கு முன்பாகச் சிவலிங்கத்தை வழிபடுவதைப் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரார்த்தனை கோரிக்கைகள் நிறைவேறவும், ஞானம் வேண்டியும் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். தோஷ நிவர்த்தி, பாவ நிவர்த்தி மற்றும் சந்தானப் பிராப்தி ஆகியவற்றுக்காக இத்தல இறைவனைப் பிரார்த்திப்பது விசேஷம். தசாவதாரங்களில் வாமன அவதாரம் நிகழ்ந்த இந்தத் தலத்துக்கு வந்து பெருமாளைச் சேவித்தால், எல்லாப் பாவங்களும் நீங்கும் என்பது நிச்சயம். * பரிகாரம்* முன்னோர்கள் செய்த பாவங்கள் நம்மைத் தொடராமல் இருக்கவும், தெரியாமல் செய்த தப்பினால் வந்த சாபங்கள் விலகுவதற்கும், தோட்டத்தில் காய்கறிகள், பழங்கள் எல்லாம் நல்லபடியாக விளைச்சல் பெறுவதற்கும் பிரம்மகத்தி தோசம் போவதற்கும் இங்குள்ள காட்கரையப்பன் பெருமாளை ஒரு முறை தரிசனம் செய்தால் போதும். அத்தனை பாவங்களும் விலகும். மோட்சத்திற்கு வழி பிறக்கும். நேர்த்திக்கடன் பிரார்த்தனை நிறைவேறியதும் திருக்காக்கரை அப்பனுக்கு பால் பாயாசம் வைத்து, அதையே பிரசாதமாக விநியோகித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தலப்பெருமை கேரளத்தில் பழமை வாய்ந்த கோவில் இது. தமிழ் கல்வெட்டுக்கள் இங்கு உள்ளது. தமிழக மக்களுக்கு ஒரு காலத்தில் இது வழிபாட்டுத் தலமாக இருந்துள்ளது. கி.பி. 9 முதல் 12 ம் நூற்றாண்டு வரை சேர மன்னர்கள் இத்தலத்தைப் பிரபலமாக்கியுள்ளனர். 1825ல் திருவிதாங்கூர் அரசு இக்கோவிலை எடுத்துக்கொண்டது. 1948ல் புனர்பிரதிஷ்டை நடந்துள்ளது. இருந்தாலும் இன்றும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. இந்தத் தலத்தில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார் வாமன அவதார பெருமாள். இவருக்குக் கதாயுதம் கிடையாது. கருவறை விமானம்- புஷ்கல விமானம். தாயார் ஸ்ரீபெருஞ்செல்வநாயகி. தாயாருக்குத் தனிச் சன்னதி கிடையாது. 10 மற்றும் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 18 கல்வெட்டுக்கள் இந்தத் தலத்தில் காணக்கிடைக்கின்றன. தல வரலாறு மகாபலிச்சக்கரவர்த்தி என்பவன் கேட்டவர்க்கு கேட்டதை எல்லாம் கொடுப்பவன். இவன் அசுர குலத்தில் பிறந்தாலும் மிகவும் நல்லவன். ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் இடறி விட்டான். தர்மம் செய்வதில் தன்னை விடத் தலை சிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தை அவனிடம் ஏற்பட்டு விட்டது. நல்லவனிடத்தில் அகந்தை ஏற்பட்டால் ஆபத்து. இதை உணர்ந்த மகாவிஷ்ணு அதை வளரவிடாமல் தடுக்கவே குள்ள வடிவெடுத்து வந்தார். மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டார். தாங்கள் குள்ளமானவர். உங்கள் காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே, என்றான் மகாபலி. அவனது குல குரு சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து தானம் கொடுப்பதைத் தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால், இதுவரை செய்த தானம் பலனில்லாமல் போய்விடும் என நினைத்தான் மகாபலி. எனவே சம்மதித்தான். பெருமாள் விஸ்வரூபம் எடுத்தார். ஓரடியால் பூமியையும், இன்னொரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே? என கேட்டார். அகந்தை கொண்டிருந்த மகாபலி பணிந்து தலைவணங்கி நின்றான். பகவானே! இதோ என் தலை இதைத்தவிர என்னிடம் வேறெதுவும் இல்லை என்றான். பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி, தன்னோடு இணைத்துக் கொண்டார். வாமனர் மகாபலியைப் பாதாளத்திற்கு அனுப்புவதற்கு முன், மகாபலி ஒரு வரம் கேட்டான். வருடத்துக்கு ஒருமுறை தனது தேசத்து மக்களைச் சந்திப்பதற்கு அருள்செய்யுமாறு வேண்டிக்கொண்டான் பகவானும் ஏற்றுக்கொண்டார். பகவான் மகாபலிக்கு அருள்புரிந்தது ஆவணி மாதம் திருவோண நடசத்திரத் திருநாளில். இதை நினைவுகூரும் வகையில் கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பெறுகிறது. மகாபலியும் தான் வேண்டிக்கொண்டபடி இந்த விழாவில் கலந்துகொண்டு குடிமக்களை வாழ்த்துவதாக ஐதீகம். <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> https://www.youtube.com/watch?v=WF152rNP5jc https://www.youtube.com/watch?v=lkBKzoCqizI https://www.youtube.com/watch?v=1clDEXZoG6c *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* *Vanakkam Subbu* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2Br192WH61CX%3DN-c3OU9S4xa2Ti72kqPbVN%3DKuhQumeUAQ%40mail.gmail.com.
