திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடப்பெற்ற இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
இத்தலத்துப் பெருமாளைச் சகாதேவன் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்பெறுகிறது. இப்பகுதியில் பிரதிஷ்டை செய்ய விக்ரகம் கிடைக்காமல் மனம் வருந்திய சகாதேவன், அக்கினிப்பிரவேசம் செய்ய முயன்றான். அப்போது அந்த இடத்தில் பெருமாளின் சிலை தோன்றி சகாதேவனின் துயர் துடைத்ததாம். இதன் காரணமாக இத்தலப் பெருமாள் “அற்புத நாராயணன்” என அழைக்கப்பெறுகிறார். இப்பகுதியில் சகாதேவன் கட்டிய கோவில் என்றால் தான் அனைவருக்கும் தெரிகிறது. மூலவர் – அற்புதநாராயணன் (அம்ருத நாராயணன்) தாயார் – கற்பகவல்லி நாச்சியார் தீர்த்தம் – பூமி தீர்த்தம் பழமை – 2000-3000 வருடங்களுக்கு முன் ஊர் – திருக்கடித்தானம் மாவட்டம் – கோட்டயம் மாநிலம் – கேரளா பெயர்க்காரணம் கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். 108 வைணவத் திருத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் விளங்குகின்றன. அவைகள் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டுப் பகுதிகளுள் ஒன்றான கண்டமென்னும் கடிநகர், திருக்கடித்தானம் ஆகியன. கடிகை பொழுதில், ஒரு நாழிகையில் (நாழிகை என்பது 24 நிமிடம்] தூய்மையான கடுந்தவம் இந்தத் தலங்களில் மேற்கொண்டால் காரிய சித்தியும் வீடுபேறும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும். சூரிய வம்சத்தை சேர்ந்த ருக்மாங்கதன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். இவனது நந்தவனத்தில் அரிய மலர்கள் பூத்து குலுங்கின. இந்த மலர்களை தேவர்கள் பறித்துச் சென்று பெருமாளுக்கு அணிவித்தனர். தினமும் மலர்கள் காணாமல் போனதை அறிந்த காவலர்கள் மன்னனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட மன்னன் மலர்களை பறிப்பவர்களைக் கைது செய்யும்படி உத்தரவிட்டான். மறுநாள் தேவர்கள் பூவைப் பறிக்க வந்த போது, காவலர்கள் தேவர்கள் எனத் தெரியாமல் கைது செய்து மன்னன் முன் நிறுத்தினர். உண்மையை அறிந்த மன்னன் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுவித்தான். இருந்தாலும் மனிதர்களால் கைது செய்யப்பட்ட தேவர்கள் தங்கள் சக்தியை இழந்து வானுலகம் செல்ல இயலாமல் போனது . இதற்கு என்ன வழி என தேவர்களிடம் மன்னன் கேட்க, “நீ ஆண்டுதோறும் இருக்கும் ஏகாதசி விரத பலனை எங்களுக்கு அளித்தால் நாங்கள் வானுலகம் செல்ல முடியும்” எனத் தேவர்கள் கூறினர். இதைக்கேட்ட மன்னன் மகிழ்ச்சியுடன் தேவர்களை அழைத்துக்கொண்டு , இத்தலத்து பெருமாளின் முன்னிலையில் தனது ஏகாதசி விரதபலனை தேவர்களுக்குத் தானமாக அளித்தான். தேவர்களும் வானுலகம் சென்றனர். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு கடிகை நேரத்தில் இத்தலத்தில் நடந்ததால் இத்தலத்திற்கு “திருக்கடித்தானம்” எனப் பெயர் வந்ததாக கூறுவர். ஆனால் ருக்மாங்கதன் (விதர்ப்ப நாட்டு மன்னன்) வடநாட்டு மன்னன் ஆவான் ஆயின் தென்னாடு பெற்ற மலை நாட்டின் பதிகளுள் திருக்கடித்தானத்திற்கு இக்கதை தொடர்பு படுத்திக் கூறப்பெறுகிறது என்பது ஆராய்ச்சிக்குரியதாகும். இறைவன், இறைவி இத்தலத்தின் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அற்புத நாராயணன் பெயருடன் விளங்குகிறார்.இறைவியின் பெயர் கற்பகவல்லி என்பதாகும் இதலத் தீர்த்தம் பூமி தீர்த்தம். இதன் விமானம் புண்யகோடி விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. சிறப்புகள் இத்தலத்தில் அமைந்துள்ள நரசிம்மன், கிருஷ்ணன், சந்திரன் ஆகியோருக்கு தனித்தனிச் சன்னதிகளும் அமைந்துள்ளன.பஞ்ச பாண்டவர்களுள் சகாதேவனால் இத்தலம் புதுப்பிக்கப்பெற்றது. இங்குள்ள கிருஷ்ணன் சன்னதியை சகாதேவனே கட்டி முடித்தான். எனவே இந்தத் தலம் சகாதேவன் கட்டிய தலம் என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்பெறுகிறது. இந்தக் கோவிலின் மதில் சுவற்றில் காணப்படும் கல்வெட்டு ஒன்று வட்டெழுத்தில் உள்ளது. நம் தமிழ்மொழி வட்டெழுத்து நிலையில் இருந்த காலத்திலேயே இத்தலம் இருந்ததென்று அறியலாம். நினைத்த மாத்திரத்தில் முக்தி தரத்தக்க திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். காஷ்மீரத்து மொழியில் எழுதப்பட்ட நூலொன்றில் இந்தியாவிலேயே தலைசிறந்த 15 கிருஷ்ண சேத்திரங்களில் மூன்று ஷேத்திரங்கள் உடனடியாக முக்தியளிக்க வல்லதென்றும் அதில் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தென்றும் கூறப்பட்டுள்ளது. நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களில் இத்தலம் பாடல்பெற்றுள்ளது. இங்கு ஒரு காலத்தில் எம்பெருமானுக்கு நடைபெற்ற திருவிழாக்களில் ஒன்றில் பெண்கள் குடைபிடித்து நடனமிடும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இடம் பெற்றிருந்தது. இக்கோவிலைச் சுற்றி சிதலமடைந்த மண்டபம், மற்றும் வெளிப்புற வாயிற் கதவருகேயுள்ள சுவர்ச் சிற்பங்களில் பெண்கள் குடைபிடித்து நடன மிடுதல் போல உள்ள காட்சிகளும் ஆய்வுக்குரியதாகும். வட்ட வடிவமான ஒரே கர்ப்பகிரகத்தில் பெருமாள் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். எனவே இக்கோவிலில் இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரம் உள்ளது. இது இத்தலத்தின் சிறப்பு. இதில் நரசிம்மரின் உருவத்தைப் பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்ததாகக் கூறுவர். கருவறையின் தென்பகுதியில் தெற்கு நோக்கி தெட்சிணாமூர்த்தியும், விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள். இவர்களது சன்னதிக்குக் கதவுகள் கிடையாது. அங்கு அமைக்கப்பட்டுள்ள மரத்துவாரங்கள் வழியாகத்தான் இவர்களைத் தரிசிக்க முடியும். நரசிம்மருக்கு, அவரது உக்கிரத்தைக் குறைப்பதற்காக, பால் பாயாசம் நைவேத்யம் செய்யப்பெறுகிறது. நரசிம்மருக்குரிய ஒவ்வொரு பூஜையின் போதும் “நாராயணீயம்” சொல்லப்பெறுகிறது. இத்தலப் பெருமாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு மேலே உள்ள விமானம் புண்ணியகோடி விமானம் எனப்படுகிறது. இந்த பெருமாளை ருக்மாங்கதன் மற்றும் தேவர்கள் தரிசனம் செய்துள்ளனர். “கடி” என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். பெருமாளின் 108 வைணவத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் விளங்குகின்றன. அவைகளுள் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டில் உள்ள கண்டமென்னும் கடிநகர், கேரளாவில் திருக்கடித்தானம். அதாவது ஒரு கணப்பொழுதில் தூய்மையான மனத்துடன் இறைவனை நினைத்து இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால், எடுத்த காரியத்தில் வெற்றியும், மோட்சமும் கிட்டும் என்பது ஐதீகம். இத்தலப் பெருமாள் சிலை, அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடும் என்றும் கூறுகிறார்கள். கோவில் சுற்றுப்பிரகாரத்தில் சாஸ்தா, சுப்பிரமணியர், நாகர் விக்ரகங்கள் உள்ளன. இங்குள்ள பிரமாண்டமான கோட்டைசுவர்கள் பூதங்களால் கட்டப்பெற்றது என கூறுவர். இக்கோயிலின் முன் ஒரு மனிதனின் உடல் ஒரு கல்லின் மேல் வைக்கப்பட்ட நிலையில் இருக்கும். அதற்கு ஒரு புராணக் கதை உள்ளது. ஒரு முறை இப்பகுதியை ஆண்ட ராஜா, சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அவர் வந்த போது நடை சாத்தப்பட்டிருந்தது. ஆனால் கோவில் மெய்க்காப்பாளன் ராஜாவிடம் பணம் வாங்கிக் கொண்டு கோவில் நடையைத் திறந்து விட்டான். இதன் தண்டனையாகத்தான் அந்த மெய்க்காப்பாளனின் உடல் கோவில் வாசல் முன் வைக்கப்பெற்றுள்ளது என்பர். பாடியவர்கள்: நம்மாழ்வார் மங்களாசாஸனம் கோவில் கொண்டான் திருக்கடித்தானத்தைன் கோவில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம் கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம் கோலில் கொண்ட குடக்கூத்த அம்மானே. –நம்மாழ்வார் திருவிழா: திருக்கார்த்திகையில் 10 நாள் திருவிழா சிறப்பாகன் கொண்டாடப்பெறுகிறது. ஒன்பதாம் நாள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடத்தப்பெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்குச் “ சங்கேதம்” என்று பெயர். இந்தத் தீபங்கள் மறுநாள் காலை வரை எரிந்து கொண்டிருக்கும். இந்தத் தீபம் ஏற்றும் விழாவிற்குப் புராண நிகழ்ச்சியைக் கூறுகின்றனர். முன்னொரு காலத்தில் சிவபெருமான் இப்பகுதியில் தீப்பிழம்பாகத் தோன்றியதாகவும், இந்த வெப்பத்தால் இப்பகுதி அழிந்து விடாமல் இருக்க பிரம்மனும் விஷ்ணுவும் சிவனிடம் வேண்டினர். சிவன் சிறிய தீபமாக மாறி அருள்புரிந்ததாகவும் கூறப்பெறுகிறது. இந்த நிகழ்ச்சி திருக்கார்த்திகை தினத்தில் நடந்தாகக் கூறப்பெறுகிறது. இவை தவிர கோகுலாஷ்டமி மற்றும் பெருமாளுக்குரிய விசேஷங்கள் சிறப்பாக கொண்டாடப்பெறுகிறது. பிரார்த்தனை: எடுத்த காரியத்தில் வெற்றியும், மோட்சமும் வேண்டிப் பிரார்த்தனை செய்கின்றனர். நேர்த்திக்கடன்: பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்கின்றனர். வழிகாட்டி: கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து(21கி.மீ.) திருவல்லா செல்லும் வழியில் செங்கணாச்சேரியில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ. ஆட்டோவில் செல்ல வேண்டும். அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கணாச்சேரி அருகிலுள்ள விமான நிலையம்: நெடும்பாசேரி. தங்கும் வசதி : கோட்டயத்தில் உள்ள ஹோட்டல்களில் தங்கிக் கோவிலுக்குச் சென்று வரலாம். <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *https://www.youtube.com/watch?v=2wVJye64alM <https://www.youtube.com/watch?v=2wVJye64alM>* *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* *Vanakkam Subbu* [image: wygltUSizKEORrTQqC2Nk0Ug4hf6FDz7Lcu2SYFxlGnPRsLO_T3n36kqlspaL6no.gif] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BpPmv3nqggSNDeV7nOV12hgqG26iq36MjrgpM87wOXxtw%40mail.gmail.com.
