*திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு)*
*திருவணந்தபுரத்திலிருந்து கொல்லம் வழியாக எர்ணாகுளம் செல்லும் இரயில் பாதையில் செங்கண்ணூர் ஸ்டேஷன் இருக்கிறது. வெளியூர் பஸ்கள் பல வருகின்றன. ஹோட்டல்கள் சத்திரங்கள் உண்டு. தருமர் தவம் செய்த இடம். பெரிய டவுன்* *மூலவர் - இமையவரப்பன், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.* *தாயார் - செங்கமலவல்லி.* *தீர்த்தம் - சங்க தீர்த்தம், திருச்சிற்றாறு.* *விமானம் - ஜகஜ்ஜோதி விமானம்.* *ப்ரத்யக்ஷம் - ருத்ரன் (சிவன்)* *விசேஷங்கள் - சூரன் பத்மன் என்றிருவர் சிவனிடம் வரம் பெற்று ஓர் உடலாய் சூரபத்மன் என்ற பெயர் பூண்டு, தேவர் உட்பட எல்லாரையும் இம்சை செய்ததால், சுப்பிரமணியன் இவர்களை ஸம்ஹாரம் செய்து, அவர்களைக் கொடியில் சேவலாகவும் மயிலாகவும் ஆக்கிக்கொண்டதாக வரலாறு. * *தன் குருவான துரோணரை யுத்தத்தில் கொல்வதற்கு "அச்வத்தாமா ஹத" என்று உரக்கச் சொல்லி "குஞ்ஜர" என்று மெதுவாக சொன்னது தர்ம புத்திரரின் மனதை வருத்திய படியால், இத்தலத்திற்கு வந்து ஆலய ஜீர்ணோத்தாரணம் செய்து, திரு சிற்றாற்றில் ஸ்நானமும் பகவத் பூஜையும் செய்து, மனநிம்மதி அடைந்ததாக வரலாறு. தர்மபுத்திரர் ஜீர்ணோத்தாரணம் செய்ததால், தர்மபுத்திரர் பிரதிஷ்டை என்பர்.* *திருச்செங்குன்றுர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருச்சிற்றாறு மகாவிஷ்ணு கோயில் என்றும் அழைக்கப்பெறுகிறது. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுள் தருமரால் கட்டப்பெற்ற தலம் எனக் கருதப்பெறுகிறது. மகாபாரதப் போரில் துரோணாச்சாரியாரைக் கொல்வதற்காகத் தருமன் பொய் சொன்னதை எண்ணி, மனம் வருந்தி போர் முடிந்த பிறகு இத்தலத்தில் வந்து மன அமைதிக்காகத் தவம் இருந்ததாகவும், அப்போது சிதலமடைந்திருந்த இத்தலத்தைத் தருமன் புதுப்பித்ததால் இத்தலத்தையும் இங்குள்ள எம்பெருமானையும் தருமனே நிர்மாணம் செய்தாரெனவும் கருதப்பெறுகிறது. இக்கோவிலின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இமையவரப்பன் என்ற பெயருடன் காட்சி தருகிறார். தருமன் இங்கு வருவதற்குப் பல்லாண்டு முன்பே இத்தலம் சிறப்புற்றிருந்தது எனலாம். இமையவர்கள் (தேவர்கள்) இங்கே குழுமியிருந்து திருமாலைக் குறித்துத் தவம் புரிந்தனர் என்றும் அவர்களுக்குத் திருமால் இவ்விடத்தில் காட்சி தந்ததால் “இமையவரப்பன்” என்ற பெயர் இறைவனுக்கு உண்டாயிற்றென்றும் செவிவழிச் செய்திகள் மூலம் அறியமுடிகிறது. * *நம்மாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களில் பாடல் பெற்றுள்ளது.* *தல வரலாறு :* *மகாபாரதப் போரில் பதினைந்தாம் நாளில் பாண்டவர்கள் படையை எதிர்த்துத் துரோணர் கடுமையாகப் போர் செய்தார். அதைக் கண்ட கிருஷ்ணர் அவரை வீழ்த்துவதற்காகப் பீமனை அழைத்து, மாளவ நாட்டு மன்னனிடம் இருக்கும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று மட்டும் சொல்லச் சொன்னார்.* *அதே போல் தருமரிடமும், ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சொல்லச் சொன்னார். ஆனால் தருமர், தன்னால் பொய் சொல்ல முடியாது என்று சொல்லி மறுத்தார்.* *உடனே கிருஷ்ணர், ‘தருமா, நீ பொய் எதுவும் சொல்ல வேண்டாம், ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சத்தமாகச் சொல்லிவிட்டுப் பின்னர், ‘அசுவத்தாமா என்ற யானை’ என்பதை மட்டும் மெதுவாகச் சொல், அது போதும்’ என்றார். தருமரும் அதனை ஏற்றுக் கொண்டார்.* *கிருஷ்ணர் சொன்னபடி, பீமனும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று சத்தமாகச் சொன்னான். பீமன் சொன்னதைக் கேட்டுத் துரோணர் அதிர்ச்சியடைந்தாலும், பீமன் சொன்னதில் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. தருமர் பொய் சொல்ல மாட்டார் என்று நம்பிய துரோணர், ‘என் மகன் அஸ்வத்தாமா போரில் கொல்லப்பட்டானா?‘ என்று தருமரைப் பார்த்துக் கேட்டார்.* *கிருஷ்ணர் சொல்லியிருந்தபடி தருமரும், ‘அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சத்தமாகச் சொல்லிக், ‘கொல்லப்பட்டது அஸ்வத்தாமா என்ற பெயருடைய யானை’ என்று மெதுவாகச் சொன்னார். தருமர் மெதுவாகச் சொன்னது துரோணரின் காதுகளில் விழவில்லை. துரோணர் தன் மகன் அசுவத்தாமன் இறந்து போனதாக நினைத்துத் தான் வைத்திருந்த ஆயுதத்தைக் கீழே போட்டார். அதன் பிறகு, துரோணர் எளிதில் கொல்லப்பட்டார்.* *மகாபாரதப் போர் நிறைவடைந்ததற்குப் பின்பு, துரோணர் மரணத்துக்குத் தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்கிற மன வருத்தம் தருமர் மனதில் நிலைத்துப் போனது. அதில் இருந்து விடுபட்டு மன அமைதி அடைய நினைத்த தருமர், தனது சகோதரர்களுடன் கேரளப் பகுதிக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த பழமையான விஷ்ணு கோவில் ஒன்றைப் பார்த்தார். அந்தக் கோவிலைப் புதுப்பித்து வழிபட்டு மன அமைதி அடைந்தார் என்று இந்தக் கோவிலின் தல வரலாறு தெரிவிக்கிறது.* *தருமர் புதுப்பித்து வழிபட்ட விஷ்ணு கோவில், முன்பு தேவர்கள் அனைவருக்கும் விஷ்ணு ஒரே இடத்தில் காட்சியளித்த இடத்தில் அமைந்தது என்று சொல்லப்படுகிறது. அதற்கும் ஒரு முன் வரலாற்றுக் கதை இருக்கிறது.* *புராணக் கதை :* *சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற சூரபத்மன், தான் பெற்ற வரங்களைக் கொண்டு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல்வேறு துன்பங்களைக் கொடுத்து வந்தான். அதனால் கவலையடைந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான், தான் கொடுத்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அவனைத் தன்னால் தண்டிக்க இயலாது என்றும், விஷ்ணுவிடம் சென்று முறையிட்டால் அவர், உங்களுக்கு நல்வழி காட்டுவார் என்றும் சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார்.* *இதையடுத்து தேவர்கள் அனைவரும் பூலோகத்தில் ஒன்றாகக் கூடினர். பின்னர் அனைவரும் இணைந்து விஷ்ணுவை நோக்கி தவமியற்றத் தொடங்கினர். அவர்களது ஒன்றுபட்ட வேண்டுதலில் மனம் மகிழ்ந்த விஷ்ணு, அங்கே காட்சியளித்தார். தேவர்கள் (இமையவர்கள்) ஒன்றாகக் கூடிய இடத்தில் காட்சியளித்ததால், இத்தல இறைவனுக்கு ‘தேவர்களின் தந்தை’ என பொருள்படும் வகையில் ‘இமையவரப்பன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.* *மங்களாசாஸனம் -* *நம்மாழ்வார் - 3480-90 - 11 பாசுரங்கள்.* * இந்த திருச்செங்குன்றூர் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது..... கண்ணகி மதுரை எரித்த பின்னர் வைகை ஆற்றங்கரை ஓரமாக மேற்கு நோக்கி சென்று சேர நாட்டின் (கேரளா) திருச்செங்குன்றூர் அடைந்து அங்கு ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டு இருந்த போது தேவர்கள் சூழ கோவலன் வானத்தில் இருந்து இறங்கி வந்து கண்ணகியை அழைத்து கொண்டு சென்றதாக வேடுவர்கள் கண்டு சேரன் செங்குட்டுவனிடம் சொல்லியதாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொல்லி உள்ளார்............* *You tube link:* https://www.youtube.com/watch?v=ej57uaDKFmA *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* *Vanakkam Subbu* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BoTWiTMPQHK1ks2%3DAH4mEy4QbA5Rk_7jyd_4QvohDjtYQ%40mail.gmail.com.
