NALLAVAI KETPIN NAATKKAL NANDRU NAGARVURA நல்லவைக் கேட்பின் நாட்கள் நன்று
நகர்வுற   KR IRS 15922

On Wed, 14 Sept 2022 at 22:42, Venkatachalam Subramanian <
[email protected]> wrote:

> மயில் குயிலாச்சுதடி – அ. நலங்கிள்ளி
>
> POSTED BY SSINGAMANI <http://thoguppukal.wordpress.com/author/ssingamani/>
>  ⋅
>
> ”செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
>
> செல்வத்துள் எல்லாந் தலை” (குறள் – 411)
>
> ”கற்றிலன் ஆயினுங் கேட்க அஃதுஒருவற்கு
>
> ஒற்கத்தின் ஊற்றாம் துணை” (குறள் – 414)
>
> என்பன கேள்வி ஞானத்தின் உயர்வைப் புலப்படுத்தும் குறட்பாக்கள். ஒரு காலத்தில்
> கேள்வி ஞானமே பெரு வழக்கில் இருந்தது. ஒருவர் சொல்லப் பலரும் கேட்டுப்
> பயன்பெறும் கேள்வி ஞானம் மிக உயரியது. நாம் எந்த ஒன்றைக் காண்கின்றோமோ அதைப்
> பற்றிய அறிவு நமக்குத் தேவை. அத்தகைய அறிவைத் தருவது கேள்வி ஞானம். அன்றைய
> குருகுலப் படிப்பும், இன்றைய பள்ளிகளும், கல்லூரிகளும் கேள்வி ஞானத்தின்
> இன்றியமையாமையை அடிப்படையாகக் கொண்டவை. ஆசிரியர்கள் கேள்வி ஞானத்தை நமக்கு
> அளிக்கும் ஞானிகள். வெறும் புத்தகப் படிப்பு மட்டும் போதுமென்றால் கல்வி
> நிறுவனங்கள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. ஆசிரியர்கள் பணியாற்றத் தேவையில்லை.
> கண்ணுற்றுக் கற்பதோடு நின்றுவிடாது காது கொடுத்துக் கேட்கின்ற போதுதான் அறிவு
> முழுமையடைகின்றது. காண்பதோடு நின்று விடாது கேட்டறிகின்றபோது மனம்
> தெளிவடைகின்றது.
>
> காணாத ஒன்றைப் பற்றிக் கேள்வியறிவால் உணரவியலும். ஆனால் கேள்வியறிவின்றிக்
> காண்பது ஒன்றையே கொண்டு அதனைப் பற்றிய முழுமை அறிவுபெற முடியாது. காட்சிப்
> பொருள் கேள்விப்பொருளாக மாறும்போது தான் முழுமையடைகின்றோம். எனவே தான்
> ”கேள்வியால் தோட்கப்படாத செவி” என்றார் வள்ளுவர். சேக்கிழார், தடுத்தாட் கொண்ட
> புராணத்தில் திருமுனைப்பாடி நாட்டின் சிறப்பைக் கூறும்போது,
>
> ”மங்கையர் வதன சீத மதி இருமருங்கும் ஓடிச்
>
> செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு” (பாடல்-1)
>
> எனக் கூறுவர். திருமுனைப்பாடி நாட்டில், பெண்களின் கயல் போன்ற கண்கள்,
> அவர்களின் முகத்தில் இரு மருங்கும் ஓடிக் காதில் அணிந்துள்ள குழைகளை
> நாடுகின்றன என்பர். பெண்கள் காதளவோடிய கண்களைப் பெற்று அழகுடன் திகழ்கின்றனர்
> என்பது எளியபொருள்.
>
> சேக்கிழார் ஈண்டு ஒரு நுட்பத்தை உணர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
> கண்கள், காதுகளை நாடிச் சென்றன என்றால் காட்சிப் பொருள் கேள்விப் பொருளாக
> மாறுகிறது என்பது நுட்பம். திருமுனைப்பாடி நாட்டுப் பெண்கள் கேள்வியறிவு
> பெற்று விளங்குகின்றனர் எனக் கூறி அந்நாட்டின் சிறப்பைச் சேக்கிழார்
> எடுத்துக்கூறுவர். அந்நாட்டுப் பெண்கள் நுணங்கிய கேள்வியராக இருப்பதால்
> வணங்கிய வாயினராகவும் இருப்பர் என்பதும் இதன் உட்கிடக்கை. எனவே, எனைத்தானும்
> நல்லவை கேட்க வேண்டும் என்பதும், அதுவே ஆன்ற பெருமை தரும் என்பதும், கற்றலிற்
> கேட்டலே நன்று என்பதும் உணர முடிகின்றது.
>
> இராமலிங்க வள்ளலார் ஆறாம் திருமுறையில் பாடியுள்ள அருட்பாப் பாடலொன்று
> இங்குச் சுட்டத்தக்கது.
>
> ”வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
>
> மயில் குயிலாச்சுதடி – அக்கச்சி
>
> மயில் குயிலாச்சுதடி”
>
> என்பர். வானத்தின் மீது ஆடிய மயில் அவருடைய பார்வைக்குக் குயிலாகிவிட்டது.
> மயிலின் ஆட்டம் காண்பதற்கு இனியது. குயிலின் ஓசை கேட்பதற்கு இனியது. மயில்
> காட்சிப்பொருள்; குயில் கேள்விப் பொருள். காட்சிப் பொருள் கேள்விப் பொருளாக
> மாறுகிறது. இராமலிங்க அடிகளாருக்கு இவ்வுலகில் காட்சியளவிற் கண்ட அனுபவம்,
> கேள்வி ஞானமாக மாறியது. கேள்வி ஞானம் அவருக்கு இறையனுபவத்தைத் தந்தது. கேள்வி
> ஞானம் பெற்றவர்கள் பேதைமையானவற்றைச் சொல்ல மாட்டார். அத்தகைய கேள்வி ஞானம்
> உடையவர்களின் வாய்ச் சொற்கள், துன்பக் காலத்தில் நம்மனோர்க்கு இன்பமளிக்கும்.
>
> உலக இயக்கத்திற்கு ஒளியும் ஒலியும் இன்றியமையாதன. அறிவியல் வளர்ச்சிக்குத்
> துணை செய்பவை. இறைவனைச் சோதியே, சுடரே என்றும், ஓசை ஒலியெலாம் ஆனாய் என்றும்
> பரவி வழிபட்டனர். கற்றல் கேட்டல் உடையவர்கள் இறைவன் திருவடியைக் கைகளினால்
> தொழுது ஏத்தினர். இறைவனை ஒளியாகவும் ஒலியாகவும் உருவகிக்கின்ற போது காட்சி
> ஞானம், கேள்வி ஞானம் இரண்டும் உணர்த்தப்படுகின்றன. மயில் ஒளிப்பொருள்; குயில்
> ஒலிப் பொருள். ஒளியானது காட்சி; ஒலியானது கேள்வி. இவ்வகையிலும் காட்சிப்
> பொருள் கேள்விப் பொருளாக மாறிய திறத்தினை இராமலிங்கரின் பாடலில் உணரலாம்.
> நாதம், விந்து இரண்டும் உலக அடிப்படை என்பர். நாதம் ஒலி, விந்து ஒளி,
> ”நாதவிந்துகளாதி நமோ நம” என அருணகிரியார் பரவிய திறமும் சுட்டுதற்குரியது.
> எதையும் காண்பதுவும் வேண்டும்; கேட்பதுவும் வேண்டும்.
>
> கேள்வி ஞானம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். ”எனைத்தானும் நல்லவை கேட்க”
> என்றார் வள்ளுவர். அவர் மேலும் ”தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு”
> என்றும் கூறுவர். கேள்விச் செல்வமே நுண்பொருளை அறியவியலும் என்பது தெளிவு.
> ”மயில் குயிலாச்சுதடி” என்பது காட்சிப் பொருள் கேள்விப் பொருளாக மாற வேண்டும்
> என்ற கருத்தினைக் கொண்டு விளங்குகின்றது. இவ்வகையில் மயில் என்பதைக்
> கல்வியறிவு என்றும், குயில் என்பதைக் கேள்வியறிவு என்றும் உருவகித்துக் கொள்ள
> இடமுண்டு.
>
> நன்றி: ஆய்வுக்கோவை
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddt4zscoc4M6ygt73LZHnbeEJwkf%3D%3DZOyXqkxVg56FNfkQ%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddt4zscoc4M6ygt73LZHnbeEJwkf%3D%3DZOyXqkxVg56FNfkQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo0%2BnMnFyAa_AVa_UtgB25m5vNKrg%2BQCM-kAHjWr-teVw%40mail.gmail.com.

Reply via email to