---------- Forwarded message --------- From: N Sekar <[email protected]> Date: Wed, Dec 11, 2024, 8:49 AM Subject: Fwd - Meaning of Manthra Pushpam, what a Noble Thought To: Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. < [email protected]>, Narayanaswamy Sekar <[email protected]>, Chittanandam V. R. <[email protected]>, Mathangi K. Kumar < [email protected]>, Srinivasan Sridharan <[email protected]>, Rama (Iyer 123 Group) <[email protected]>, Dr Sundar <[email protected]>
மந்த்ர புஷ்ப வழிபாடு என்று சொல்கிறார்களே, அப்படியென்றால் என்ன? என்பதை விரிவாக விளக்கும் சிறப்பு பதிவு! மந்திர சக்தியை உடைய புஷ்பம் என்று சொல்வதை விட, மந்திர உச்சாடனத்தின் மூலம் சக்தி பெற்ற பூக்களைக் கொண்டு வணங்குவது என்று இதனை புரிந்துகொள்ளலாம். ஆலயத்தில் அபிஷேகம், அலங்காரம், ஷோடஸ உபச்சார தீபாராதனை, சதுர்வேத பாராயணம் என்று அத்தனை உபச்சாரங்களையும் இறைவனுக்கு செய்து முடித்த கையோடு, ‘யோபாம் புஷ்பம் வேத..’ என்று ஆலயத்தில் அர்ச்சகரின் குரல் கணீரென்று ஒலிக்கும்போது மெய் சிலிர்க்கும். ஒவ்வொரு கால பூஜையின்போதும் மகாதீபாராதனைக்கு முன்னதாக ஆலயங்களில் ஓதப்படும் இந்த மந்த்ரபுஷ்பம் என்கிற வேத மந்திரம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. பொருள் புரியாதவர்கள் கூட அந்த மந்திரத்தின் ஸ்வரத்திலும், உச்சரிப்பிலும் மெய்மறந்து உருகி நிற்பர். நம் இல்லங்களில் நடைபெறும் பூஜையின்போதும் ஏற்ற இறக்கத்தோடு அதற்குரிய ஸ்வரத்தில் சாஸ்திரிகள் இந்த மந்திரபுஷ்பத்தை உச்சாடனம் செய்யும்போது நாமும் அவரோடு இணைந்து சொல்வது போன்ற ஒரு உள்ளுணர்வு நமக்குள் உண்டாவதை உணர முடியும். எல்லாவிதமான பூஜைகளின் போதும், அதன் உச்சக்கட்டத்தில் முத்தாய்ப்பாக இந்த மந்திரபுஷ்பத்தைச் சொல்கிறார்களே அப்படி என்னதான் இந்த மந்திரத்திற்கு சிறப்பு என்பதையும் இந்த மந்திர புஷபத்தின் தமிழ் விளக்கத்தையும் தெரிந்து கொள்ள மேலே தொடர்ந்து படியுங்கள். நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. இந்த நீர்தான் உலகின் அடிப்படை ஆதாரம் என்பதையே இந்த மந்திரம் வலியுறுத்துகிறது. நீர், நிலவு, நெருப்பு, காற்று, சூரியன், நட்சத்திரங்கள், மேகங்கள் போன்ற இயற்கை சக்திகளுக்கு இடையே உள்ள தொடர்பினை நாம் அறிந்துகொள்ளும் விதமாக இந்த மந்திரத்தின் வாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. இறைவனின் படைப்பில் உருவான இந்த இயற்கைச் சக்திகளைக் கொண்டு வழிபடுவதுதான் இந்த மந்த்ர புஷ்பத்தின் தனிச்சிறப்பு. ஆப: என்றால் தண்ணீர் என்று பொருள். யோ + ஆப: + புஷ்பம் = யோபாம் புஷ்பம் என்று அந்த மந்திரம் துவங்குகிறது. திருப்பாற்கடலைக் கடையும்போது அந்த ஜலத்தில் இருந்து புஷ்பமாக எழுந்தவன் சந்திரன். அந்த சந்திரனைக் கொண்டு உம்மை வழிபடுகிறேன். இறைவன் இந்த உலகத்தை படைக்கும் காலத்தில் இந்த ஜலத்தில் இருந்து உருவானதே அக்னி. ஆயதனம் என்றால் அடிப்படை ஆதாரம் என்று பொருள். அக்னிக்கு ஆயதனம் ஆப: என்று அழைக்கப்படுகின்ற நீர். அந்த நீருக்கு ஆயதனம் அதாவது அடிப்படை அக்னி. இவ்வாறு நீரும், நெருப்பும் ஒன்றுக்கொன்று ஆதார சக்தியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அறிவியலை துல்லியமாக எடுத்துச் சொல்கிறது இந்த வேத மந்திரம். ஜலத்தில் இருந்தே வாயு தோன்றுகிறது. இந்த வாயு எடுத்துச் செல்லும் நீர்த்திவலைகளே மேகங்கள். அப்படியென்றால் வாயுவிற்கு அடிப்படையாக ஜலமும், ஜலத்திற்கு ஆதாரமாக வாயுவும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெறுகிறது. சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி உருவாவது மேகங்கள். இந்த மேகம் பொழிவிப்பதே மழை. ஆக இந்த மழை நீருக்கு அடிப்படை சூரியன், சூரியனுக்கு ஆதாரம் நீர் என்று சந்திரன், நக்ஷத்திரங்கள், ஸம்வத்ஸரம் என்று அழைக்கப்படக்கூடிய காலத்தின் அளவுகள் அத்தனையும் நீர் என்ற ஆதார சக்தியுடனும், நீர் என்பது இத்தனை இயற்கை சிருஷ்டிகளுடனும் தொடர்பு கொண்டிருக்கிறது. இறைவா, நீ சிருஷ்டித்த இந்த இயற்கையின் பிணைப்புகள் சரியான முறையில் இயங்கி இந்த மண்ணில் நீர்வளம் பெருக வேண்டும், அதனால் இப்பூவுலகில் ஜீவராசிகள் அனைத்தும் எவ்விதக் குறையுமின்றி ராஜாதி ராஜன் ஆகிய குபேரனின் அனுக்ரஹத்தோடு அனைத்துவிதமான செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழவேண்டும் என்பதே இந்த மந்த்ர புஷ்பம் என்ற வேதமந்திரத் தொகுப்பின் பொருள். ஆலயங்களில் ஒவ்வொரு கால பூஜையின்போதும் நமது இல்லங்களில் நடைபெறுகின்ற யாகாதி கிரியைகள், பூஜைகளின்போதும் இந்த மந்திரத்தொகுப்பினை முழுமையாகச் சொல்லி ஆத்மார்த்தமாக இறைவனை வழிபடும்போது வான்முகில் வளாது பெய்து, மண்வளம் சுரந்து, விளைபொருட்களும் செல்வங்களும் பெருகி, மக்கள் வளமுடன் வாழ்ந்து மன்னர்தம்கோன் ஓங்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. மந்திர புஷ்பத்தின் பொருள் தமிழில்! யஜுர் வேதத்தைச் சார்ந்த தைத்ரீய ஆரண்யகம் (1.22) இந்த மந்திர புஷ்பத்தைக் கொண்டிருக்கிறது. மந்திரமெனும் தேனில் தோய்ந்த இம்மலர்களின் பொருளை அறியும் போது, நம் ப்ரார்த்தனைகளின் தொன்மை கவித்வமான அழகும், பொருளும் கொண்டதாகவும், இயற்கையை வணங்கி, அதனுடன் இணைந்து அதன் மடியில் தவழ்வதாகவும் இருக்கிறது. “ நிலவே நீரின் மலர்” என்று முதலாம் ச்லோகத்தில் துவங்கும் வசீகரம் கிளர்த்துகிறது; கவிதையின் வேர் கிளை பரப்பி, ப்ரார்த்தனையாக வடிவெடுத்து மயக்கும் மாயம்; மீண்டும் மீண்டும் இயற்கையின் ஆதாரங்களான நீர், நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேகம், மழைக்காலம் என்று சுழன்று, நீருடன் ஒவ்வொன்றும் ஆதாரம்; ஆனால் நீரே இவை எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்று உறுதியாய்ச் சொல்லி முடிக்கிறது. ஒன்பதாவது ச்லோகத்தில், ஓடத்தால் கடக்க அறிவுறுத்தும் கட்டத்தின் மூலம் அந்த இயற்கையை வணங்கி அதன் அடுத்த தளமான இவை அத்தனையையும் உருவாக்கிக் காக்கும் இறையை அடையும் முயற்சிக்கு ஆதி மனிதனைக் கொண்டு செல்கிறது. செல்வத்துக்கு அதிபதியான குபேரனை வணங்கும் பத்தாவது ச்லோகத்துடன் மந்திர புஷ்பம் எனும் நறுமணம் வீசும் மலர்கள் இறைவனின் பாதங்களில் சேர்க்கப்படுகின்றன. இனி மந்திர புஷ்பத்தின் அந்த 10 ஸ்லோகங்களும் அதற்கான விளக்கமும்! மந்திர புஷ்பம் ”ஓம் பத்ரம் கர்ணேபி” எனும் சாந்தி பாடத்துடன் துவங்குகிறது மந்திர புஷ்பம். (சாந்தி பாடம் குறித்த பதிவு அடுத்த சில நாட்களில் எழுதுகிறேன்) ஸ்லோகம்(1) ஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா அபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ ய ஏவம் வேத விளக்கம்:யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ, அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான். நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான். (1) ஸ்லோகம்(2):யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அக்னிர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோக்னேராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வா அக்னேராயதனம்/ ஆயதனவான் பவதி/ய ஏவம் வேத விளக்கம்:யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.(2) ஸ்லோகம்(3):யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ வாயுர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ வாயோராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை வாயோராயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத விளக்கம்:யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். காற்றே நீரின் ஆதாரம். யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே காற்றின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (3) ஸ்லோகம்(4):யோபா மாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அஸெள வை தபன்னபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோமுஷ்ய தபத ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத விளக்கம்:யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4) ஸ்லோகம்(5)யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ சந்த்ரமா வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யச்சந்த்ரமஸ ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத விளக்கம்:யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நிலவே நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (5) ஸ்லோகம்(6)யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ நக்ஷத்ராணி வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத விளக்கம்:யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நட்சத்திரங்களே நீரின் ஆதாரம். யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நட்சத்திரங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (6) ஸ்லோகம்(7)யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ பர்ஜன்யோ வாஅபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத விளக்கம்:யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மேகமே நீரின் ஆதாரம். யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மேகங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (7) ஸ்லோகம்(8):யோபாமாயதனம் வேத/ ஆயதனாவான் பவதி/ ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யஸ்ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத விளக்கம்:யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மழைக்காலமே நீரின் ஆதாரம். யார் மழைக்காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மழைக்காலத்தின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (8) ஸ்லோகம்(9)யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத/ ப்ரத்யேவ திஷ்டதி விளக்கம்:யாரொருவன் நீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோ, அவன் அதிலேயே நிலை பெறுகிறான். (9) ஸ்லோகம்(10)ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே/ நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே/ ஸ மே காமான் காமகாமாய மஹ்யம்/ காமேச்வரோ வைச்ரவணோ ததாது/ குபேராய வைச்ரவணாய/ மஹா ராஜாய நம: விளக்கம்:தலைவர்களுக்கெல்லாம் தலைவனும், பெரும் வெற்றிகளைக் கொடுப்பவனுமான குபேரனை நாங்கள் வணங்குகிறோம். விருப்பங்களை நிறைவேற்றுபவனும், செல்வத்தின் தலைவனான அவன், என் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு எனக்குத் தேவையான செல்வத்தைக் கொடுக்கட்டும். செல்வத்தின் தலைவனான குபேரனுக்கு,மன்னாதிமன்னனுக்கு வணக்கங்கள். ஓம் பத்ரம் கர்ணேபி…..(எனும் சாந்தி பாடத்துடன் நிறையும்) ஓம் ஷாந்தி: ஷாந்தி: ஷாந்தி இந்த மந்த்ர புஷ்பத்தினை சரியான முறையில் உச்சரிக்க உதவும் ஒலி வடிவ காட்சியினை கேட்டு பயனடையுங்கள்.🙏 Yahoo Mail: Search, Organize, Conquer <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer> -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZeiwiVbeuhke-45HEYR_hpPr42B%2BFYdaWrst2rFTb5MGg%40mail.gmail.com.
