This is future. அம்மா என்றழைக்காத உயிரில்லையே....!

காலை 8 மணி காலிங்பெல் அடித்ததும் ஓடிப் போய் கதவைத் திறந்தான் வருண், வாசலில்
அம்மா நின்றிருந்தார்கள்.

"அம்மா...!" என உற்சாக குரல் எழுப்பி அம்மாவை வரவேற்றான். வருணுக்கு
திருமணமாகி 9 ஆண்டுகளில் அம்மா அவன் வீட்டுக்கு வருவது இதுவே முதன் முறை
அதிலும் அம்மா இன்று இரவு 8 மணிக்கே கிளம்புகிறாள். இன்னொரு அண்ணனின்
வீட்டுக்கு அவள் போகவேண்டும்.

நல்லாருக்கியாப்பா என்றாள் அம்மா வருணின் தலையைக் கோதி. அப்போது கிச்சனில்
இருந்து வெளிப்பட்டாள் மருமகள் ஆர்த்தி ‘வாங்க.. அத்தே செளக்கியமா...’
என்றாள். அவளையும் அணைத்து எங்கே என் பேரப் பிள்ளைகள் என்றாள். வருண்
ஆர்த்திக்கு 2 பிள்ளைகள் மூத்தவள் ஸ்வேதா 5 வயது, இளையவன் ரிஷி 3 வயது
இருவரும் எட்டி எட்டிப்பார்த்து விட்டு வீட்டுக்குள் ஓடி மறைந்தனர்.

முதன் முதலில் பாட்டியைப் பார்க்கிறார்கள் அல்லவா! ஆர்த்தி குரல் கொடுத்தாள்
‘ஸ்வேதா, ரிஷி இங்க வாங்க பாட்டி வந்திருக்காங்க பாருங்க’ என்றதும்
வெட்கத்துடன் தயங்கித் தயங்கி வெளியே வந்தார்கள். பாட்டியை தெரியுமாடா என்று
அம்மா கேட்டதும் மூத்தவள் ஸ்வேதா தான் சொன்னாள் ‘ஓ... அப்பா மொபைலில் உங்க
போட்டோ காட்டினாரே...’ என்றாள்.

அம்மா வாங்கிக் கொண்டு வந்திருந்த பொம்மைகளையும் தின்பண்டங்களையும்
பிள்ளைகளிடம் தந்துவிட்டு இருவரையும் தன் மடி மீது அமர்த்திக் கொண்டாள். நேரம்
9:30 மணி ஆனதும் வருண். நெடுநாள் கதைகள் பேச நேரமில்லை உனக்குப் பிடிச்ச
வத்தக் குழம்பு, புடலை கூட்டு, பைனாப்பிள் ரசம், வேறென்ன வேண்டும் சொல்லு நானே
சமைக்கிறேன் என்றாள் அம்மா.

இல்ல அத்தை நான் சமைக்கிறேனே என்றாள் ஆர்த்தி! அட 8 மணிக்கு அண்ணன் வீட்டுக்கு
கிளம்பிடுவேன். என் கையால்  சமைச்சுப் போடத்தானே வந்திருக்கேன் நீ நகரு
என்றவள். பரபரன்னு சமையலில் இறங்கினாள். ஆர்த்தியும் உதவ அற்புதமான அம்மா
சமையலை 9 ஆண்டுகளுக்குப் பின் ருசித்தான் வருண். ஆர்த்திக்கும் அந்த சமையல்
பிடித்திருந்து.

பிள்ளைகள் எல்லாம் பாட்டியோடு ஒட்டிக்கொள்ள எல்லாருக்கும் கதை சொல்லி
மகிழ்வித்து குழந்தைகளோடு குழந்தைகள் ஆனாள் அம்மா. மதியம் ஒரு குட்டித்தூக்கம்
போட்டு எழுந்தால் வீடே கம கமன்னு வாசம் முந்திரி பர்பியும், வாழைக்காய்,
ஆனியன், உருளை என வகை வகையாக பஜ்ஜியும் சுட்டிருந்தாள் அம்மா...! குழந்தைகள்
ஆசையாக சாப்பிட்டு யம்மி பாட்டி சூப்பர் என்றனர்.

அம்மா உன் மடியில் படுத்துக்கணும் போல இருக்கும்மா என்றான் வருண் கண் கலங்கி
வாடா குழந்தே படுத்துக்கோ என அவனை மடியில் சாய்த்துக் கொண்டாள் இன்னொரு
மடியில் பேரப் பிள்ளைகள் அமர 8 மணி.. ஆக 10 நிமிடம் இருந்த போது அம்மாவின்
கைபேசி ஒளிர்ந்தது எடுத்துப் பார்த்தவள் “அண்ணன் தான் வண்டி அனுப்பிட்டானாம்
மெசேஜ் பண்ணியிருக்கான் என்றாள்.

சரிம்மா நீங்க கிளம்புங்க என்றான் வருண். “பாட்டி ப்ளீஸ் பாட்டி இங்கேயே
இருங்களேன்” என்றன பிள்ளைகள். டோண்ட் ஒர்ரி செல்லங்களா எங்க போறேன் என்
இன்னொரு பிள்ளை வீட்டுக்குத் தானே! உங்கப்பா ஒரு கால் பண்ணா போதும்
எங்கிருந்தாலும் உடனே வந்துடுவேன் ஓகேவா என்றவள் தன் பையை எடுத்துக் கொள்ள
எவ்வளவு ஆச்சும்மா? என்றான் வருண்.

சிரித்தபடி தன் கைப்பையில் இருந்து ஐபேட் போல இருந்த ஒரு மானிட்டரை எடுத்து
அழுத்திப் பார்த்து மொத்தம் 12 மணிநேரம் ஆச்சுப்பா 1ஹவருக்கு 1500 ரூபாய்
வீதம் 18 ஆயிரம் ஆயிருக்கு! ஜி.எஸ்.டி. தனி நான் குழந்தைகளுக்கு வாங்கிட்டு
வந்த பொம்மைகள் ஸ்வீட்ஸ் எல்லாமே இந்த பேக்கேஜில் சேர்த்து தான் இந்த சார்ஜ்!
எங்க app Money இருந்தா 10% கேஷ் பேக் ஆஃபர் உண்டு.

ஜிபே க்ரெடிட் கார்ட் இப்படி பேமண்ட் உன் சவுகரியம் என்றாள் அந்த அம்மா.!!!

“நீங்கள் தாய் தந்தையை இழந்தவரா உங்கள் அப்பா அம்மாவாக ஒருவர் ஒருநாள்
உங்களுடன் அன்பாக இருக்க வேண்டுமா? அவர்களைப் பற்றியும் உங்கள்
குடும்பத்தினரைப் பற்றியும் முழு விவரங்களை எங்கள் வெப் சைட்டுக்கு
அனுப்புங்கள். எங்களிடம் பயிற்சி பெற்ற அம்மா அப்பாக்களை உங்கள் விருப்பப்படி
நீங்களே தேர்ந்தெடுக்கலாம் அவர்களை உங்கள் வீட்டுக்கு அனுப்புகிறோம்.

நாங்கள் அனுப்பும் வாடகை அப்பா அம்மா உங்கள் வீட்டிற்கே வந்து உங்கள்
எதிர்பார்ப்புக்கு தகுந்தபடி பாசம் காட்டுவார்கள். குறைந்த கட்டணத்தில்
நிறைவான சேவை.. அணுகுவீர் “உறவுகள்.காம்” அல்லது எங்கள் appஐ டவுன்லோட்
செய்து…..

வருணுக்கு ஃபேஸ்புக்கில் பார்த்த அந்த ஆன் லைன் விளம்பரமும் 9 ஆண்டுகளுக்கு
முன்பு மறைந்த அவன் தாயின் முகமும்  நினைவுக்கு வர ஜிபேயில் பணத்தை செட்டில்
செய்தான் வருண்..!

தன் அடுத்த அப்பாயின்ட்மெண்ட் வீட்டிற்கு கையசைத்து விட்டு கிளம்பினார்கள்
அந்த வாடகை அம்மா...!

படித்ததில் ~பிடித்தது~ உறுத்தியது

எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZemM%2BgqMXt8YC_aA-3T4NeOxxVTxh1bBTuE%2BQgCk-RA0A%40mail.gmail.com.

Reply via email to