ENNANDRI KONDRAARKKUM UYVUNDAAM, ILLAI, SEI NANDRI KONDRA MAGARKKU. Tirukkural. Valluvar finished all the above article in 2 words nandri and seinandri and 7 words the impact. At the same time, it is also said that PATTHIRAMARINDU PITCHAIYIDU. K R IRS 8425
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Mon, 7 Apr 2025 at 20:57 Subject: Fwd: Indira Priyadarshini - Squirrel's service To: *அணில் மனம்* *இந்திரா ப்ரியதர்ஷிணி * அணில் பற்றிய அழகான பதிவு பிரபந்தப் பாசுரத்தில் உண்டு. அதைப் பற்றிய ஒரு பதிவு ஆசான் தமிழ்நாயகத்திடம் இருந்து நண்பர் சித்தானந்தம் வழி கிட்டி சிந்தனையைத் தூண்டியது. பழைய திருமுறைகள் திவ்யப் பிரபந்தங்கள் காவியங்கள் பக்தியோடு சிந்தனைச் செறிவும் மிகுந்தவை. வாழும் முறை பற்றிய விஷயங்கள் விழுமியங்கள் ஆகியவற்றை தெளிவுபடுத்தும் கடல்கள். காட்டித் தந்த சித்தானந்தம் சார் தமிழ்நாயகம் ஆசான் யாவருக்கும் நன்றி. கூட நடையில் நின்றுயர் இராமபிரான் அடி போற்றும் நல்வாய்ப்பு இனிய காலையில். இப்போதுதான் திருப்பதி ஸ்ரீ சீதாலக்ஷ்மண ஹனுமத் ஸமேத ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி தரிசனம் அவன் அருளால் கிட்டியது. நெடிதுயர்ந்த ஆஜானுபாஹூ மூர்த்தி. ஸ்ரீ ராமானுஜர் அருளால் பிரதிஷ்டை. தரிசனம் செய்யுங்கள். அணில் மனம் என்றால் என்ன? ஆழ்வார் சாதிக்கும் பாசுரம். "குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட்டு ஓடி தரங்க நீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலம் போலேன்; மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால் அரங்கனார்க்கு ஆட் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே" ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார். பொருள்: வானரங்கள் மலையை பிளந்து கல்லைத் தூக்கி வந்து பாலம் போட கடலில் குளித்து தான் புரண்டு இட்டு ஓடி அலையும் கடலை அடைக்க நினைத்து, இது முடியுமா முடியாதா என்ற சந்தேகம் இல்லாத அணில் போலக்கூட இல்லாத நான், மரத்தைப் போல வன்மையான மனத்தைக் கொண்ட வஞ்ச மனம் உள்ள நான் மனதில் அரங்கனுக்கு ஆட்செய்யாமல் வீணாக வாழ்நாளை வீணடிக்கிறேனே!" அவனை வழுத்தாத நாளெல்லாம் வீணாளே என்று தனக்கன்று, நமக்குத்தான் சொல்கிறார். அவருக்குக் கல்மனம் என்றால் நமக்கு என்ன மனம் என்று சொல்ல இயலாது. இதில் சலம் என்பதுதான் உயிர்ச்சொல். அணில் தன் திறன் இயலாமை ஆகியவற்றைப் பற்றியோ செயலின் வன்மை பற்றியோ சலமே (சந்தேகமே) இல்லாதது. இந்த சந்தேகம்தான் செயலில் முட்டுக்கட்டை போடுகிறது. இந்த அணில் கதை கர்ண பரம்பரைக் கதை. கம்பனிடம் இல்லை எனினும் ஆழ்வார் தந்திருப்பதால் நிச்சயம் நடந்த பெருமை. அணில் தன் முதுகில் சிறியக் கல் மற்றும் மண்ணை தன்னால் ஆன வண்ணம் இராமசேதுப் பணியில் நிரப்பிக் கொண்டிருத்தது. வானரங்கள் அதை இழிவாகப் பேசி எறிய இராமபிரான் அதைக் கையில் எடுத்து அதன் சேவையை உகந்து மன்னிப்புக் கோரி முதுகில் தடவ அதன் சந்ததி மொத்தம் இராமன் கையால் மூன்று கோடுகளைப் பெற்றது. அணில் மனம் தன்னாலான உதவியைச் செய்யும். தந்நிலை கண்டு மனம் தளராது. ஏளனச் சொல் பொருட்படுத்தாது. குலம் விளங்கச் செய்யும். ஸெவன் ஹேபிட்ஸ் என்று ஸ்டீபன் கோவி புத்தகம் இருக்கிறது. அதில் பெரிய கற்களை முதலில் இட்டாலும் இறுதியில் புட்டி நிறைவது சிறிய சரளைக் கற்களால் மண்ணால் என்று காட்டப்படும். பைன்டிங் ஏஜன்ட் என்று சொல்கிறோமே அதுதான். பழைய கால கோயில் மண்டப மேற்கூரைகளில் சிமென்ட் பூச்செல்லாம் இன்றி கற்களைக் கொண்டே பூட்டி இருப்பர். பலம், அந்த இணைப்பில்தான். கப்பல் நிறுத்தம் சிறிய நங்கூரத்தில்தான். இதில் இயற்பியல் மனிதம் எல்லாம் இருக்கிறது. இந்த அணில் கதையின் சாரம் குற்றம் குறை சொல்லும் பழக்கம் நிறுத்தி நல்ல நோக்கம் எதற்கும் நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும். காந்திஜி "நீ விரும்பும் மாற்றத்தை உன்னில் இருந்து தொடங்கு" என்பார். "ஒண்ணும் உருப்படாது" என்பது தான் தெரிந்திருக்கிறதே "அதை உருப்பட வைக்க நீ எந்தத் துரும்பைக் கிள்ளிப் போட்டாய்" என்று சொல்லாமல் செயலில் காட்டும் பாடம். தினமும் நல்ல செயல் ஏதாவது செய்கிறோமா? யாருக்காவது கைம்மாறு கருதாது சிறிய உதவியேனும் செய்தோமா? என்பதே முக்கியம். இதில் பொருள் செயல் உடல் உழைப்பு கடந்து அயர்வில் ஆற்றுப்படுத்தும் சொல்கூட அடக்கம். "யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை; யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை; யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி; யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே". திருமந்திரம். மிக உயர்ந்த ஆத்ம ஞானி திருமூலர். அவர் ஏது உயிரிலும் இறையைக் காண்பதால் உயிர்க்கு உதவுதல் மனிதப் பிறவியின் கடன் என்று காட்டித் தருகிறார். இதைத் தாண்டி பிறவிப் பயனே அதுதான் என்று கூறும் பாடல் சிவபோக சாரத்தில் உண்டு. "அவரவர் வினைவழி அவரவர் வந்தனர் அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்; எவரெவர்க் குதவினர் எவரெவர்க் குதவிலர்; தவரவர் நினைவது தமை யுணர்வதுவே". இன்னம்பூரில் கணக்குப் புத்தகம் வைத்து நம் கணக்கை ஈசன் எழுதுகிறார். இந்த உதவி உதவாமைதான் நம்மை வரையறுப்பது மட்டுமன்றி நம் பின் தலைவிதியை மாற்றுகிறது என்பதால் "தமை அறிவதுவே" என்று கூறப்பட்டது. ஸ்ரீ காளஹஸ்தி கோயிலில் சித்ரகுப்த பிரதிஷ்டை லிங்கம் இருக்கிறது. சுவாமி முன் கையால் எழுதுவது போல் பாவனை செய்யும் பழக்கம் இருக்கிறது. வேறென்ன நல்லதை தலையில் எழுது என்பது தான். இந்தத் தலையெழுத்து என்றதும் அருணகிரிப் பெருமான் பாட்டுத் தான் நினைவுக்கு வரும். "சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன் வேல்பட்டு அழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன் கால்பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே" "செந்தூர் வயல் பொழில் மீன்களால் வரப்பு உடைபட்டது. மங்கையர் மனம் கடம்ப மலர்ச் சோலை மனத்தால் கொள்ளை போனது. சூரன் கடல் மலையாம் கிரௌஞ்சம் ஆகியன குமரன் கை வேலால் அழிந்தன. நம் முருகன் திருப்பாதம் என் தலை மேல் பட பிரமன் எழுதிய தலைவிதியைக் காணோம்" பெரியவர்கள் ஐயமின்றி அறுதியிட்டு சொல்வார்கள். அணில் சலம் இன்மையால் இந்த கோஷ்டியில் சேர்ந்து விட்டது. அணில் மனத்தில் முக்கியம் கைம்மாறு கருதா இயல்பு. இன்றைய வணிக உலகில் இரண்டு சொற்கள் மாசு படிந்து விட்டன. ஒன்று உதவி. மற்றது நன்றி. தமக்கொன்றில்லாமல் உதவுவதும் இல்லை. உதவிய உள்ளத்திற்கு நன்றி பாராட்டுவதும் இல்லை. இது ஏதோ வாழ்வு நெறி என்பது மாறி நடக்கின்றனர் மனிதர். உதவுவதில் என்றும் நன்றே செய். நன்றும் இன்றே செய். அதுவும் இன்னே செய் என்பதாகும். மாறும் மனம் மறக்கும். பிறழும். "என்ன செய்வது? எல்லாம் மோசம். கலி காலம். சிஸ்டம் மோசம் அரசு செய்தல் மோசம்" என்பதைக் காட்டிலும் தன் கடன் பிறழாமல் அணில் மனத்துடன் துரும்பைக் கிள்ளிப் போடுதல் சாலச் சிறந்தது. இறை அருள்க! *இந்திரா ப்ரியதர்ஷிணி * ******************************************************* சித்தானந்தம் -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorWJEjBf0QuDUZ1PNCRi4%2BSfAdiwAPzPLayO8fgn897CA%40mail.gmail.com.
