I have met Mr Nalla sivan in Tirunelveli and spoken to him as my father in law and sivaan were schoolmates and friends. KR 4525
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Sat, 3 May 2025 at 21:13 Subject: Fwd: Tirunelveli To: திருநெல்வேலி பிள்ளைமார் வாழ்க்கை. எனது நண்பர் நல்லசிவன் அவரும் அந்த சமூகம்தான்., எழுதியுள்ளார். படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. படியுங்கள். *அளவு காரர்கள் * நாங்கள் இருந்த வளவு வீடுகளுக்கு தனி, தனி பெயர்கள் உண்டு. எங்களது வளவு வெண்டர் பிள்ளை காம்பௌண்ட். அடுத்த வளவு சைக்கிள் ஆயான் கம்பௌண்ட். இன்னும் சில பெயர்களைக் கேட்டால் ஒன்றுமே புரிபடாது. செவரு பிள்ளை காம்பௌண்ட்! கொஞ்சம் விசாரித்ததில், அது சிவகுரு பிள்ளை என்று புரிந்தது. டபுள் பாடி பிள்ளை காம்பௌண்ட். அந்த சுப்பிரமணியப் பிள்ளைக்கே அவர் எப்படி டபுள் பாடிபிள்ளை ஆனார் என்று தெரியாது. மனிதர் அப்படி ஒன்றும் உசிலை மணி சைஸ் கிடையாது. சொல்லப்போனால் ஓமக்குச்சி நரசிம்மனின் ஒன்று விட்ட தம்பி போலத்தான் இருப்பார். வளவு வீடுகள் என்றால் இன்றைய Gated Community க்கு ஒன்றும் குறைந்தது இல்லையாக்கும். பெரிய பெரிய வீடுகள் மூன்று, நான்கு இருக்கும். அது அந்த வளவுக்கு பட்டா போட்டு ஏக போக உரிமை அனுபவிக்கும் வீடுகளின் உரிமையாளர்கள். அதற்கு எதிர், எதிரில் மூன்று நான்கு சின்ன வீடுகள், இந்த, இதே முதலாளிகளுக்கு சொந்தமானதுதான், வாடகைக்கு விட்டு இருப்பார்கள். இது போக எங்கள் பகுதியில் குச்சு வீடு என்று சொல்லுவோம். கிட்டத்தட்ட ஒரு சமையலறை, ஒரு ரூம் மற்றபடி பொது கழிப்பறை என்று ஒரு மூன்று நான்கு இருக்கும். இதிலும் குஞ்சும் குழுவாணுமாக குடும்பங்கள் இருக்கும். ஆனாலும் உறவென்று வந்துவிட்டால் எல்லோரும் சொந்தங்கள்தான்.அத்தை, சித்தி, பெரியம்மை, அண்ணன், மதினி, அத்தான்கள்தான். வீட்டு சொந்தக்காரர்களின் வீடுகளுக்கு பின்னால் பெரிய, பெரிய, தனித்தனியே தோட்டங்கள், ஒரு பத்து இருவது தென்னை மரங்கள், இன்னும் பல மரங்கள்; பெரிய கிணறுகள் என்று, ஒரு சின்ன கிராமம் போலவே இருக்கும். சில வீட்டு சொந்தக்காரர்கள் கார்களை நிறுத்த தனி ஷெட்களும் கூட இருக்கும். இத்தனை வீடுகளுக்கும் ஒரே ஒரு பெரிய மெயின் வாசல்தான், இரவில் பூட்டி வைத்து விடுவார்கள். இந்த வளவு வீடுகளின் சொந்தக்காரர்கள், ஆண்டு அனுபவித்து வந்தவர்கள், சொல்லி வைத்தாற் போல அநேகமாக விதவை ஆச்சிகளே! இவர்களேதான் வளவு வீடுகளை ஆட்டிப்படைத்து வந்தார்கள். அவர்களின் வீட்டுக்கார்கள் இந்த ஆச்சிமார்கள் ஆண்டு அனுபவிக்க பெரிய சொந்த வீடு, வாடகைக்கு விட்டு குடக்கூலி வருமானம் என்று நிறைய சொத்து சேர்த்து வைத்துவிட்டுத்தான் போனார்கள். இந்த ஆச்சிமார்களிடம் ஒரு பத்து நிமிஷம் பேசினாலே அவர்களுடைய வீட்டு ஐயாக்கள் சீக்கிரமே போய் சேர்ந்த காரணம் புரியும். இதுபோக இரு போகம் நெல் விளையும் தாமிரபரணி உபநதி பாசன செழுமையான நஞ்சை நிலங்களுக்கும் உரிமையை இவர்கள் அனுபவிக்க விட்டுச் சென்றார்கள். வயலில் நெல் அறுப்பு முடிந்தவுடன் நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கே வீட்டில் மாடிகளையும் வசதியாக கட்டியிருந்தார்கள். வண்ண நிலவனின் சொர்ணாதாச்சி கதை நீங்கள் படித்திருந்தால், இவர்களின் சரித்திரம் பற்றி தனியே சொல்லவேண்டாம் இவர்களுக்கு நெல் விலைக்கு போட்டு பணம் கை வந்து சேர்க்க பக்கத்து தெருக்களில் குடி இருந்தவர்கள், நெல் சந்தை ஸ்பெஷலிஸ்டுகள். அவர்கள் தொழில் ஒரு தரகர் என்று சொல்லலாம். ஆனால் இவர்கள் அளவு காரர்கள் என்ற பெயரிலே அறியப்பட்டார்கள். நாங்கள் நடுத்தர குடும்பத்தில் அடித்தட்டு வகையா! சொந்த வீடும் கிடையாது, வயல் வரப்பாடும் என்று ஒன்றும் கிடையாது. ஆனாலும் நாங்களும் சாப்பாட்டுக்கு நெல்லாகவே வாங்கும் கெத்து மட்டும் உண்டு. கடையில் அரிசி எவன் வாங்குவான் என்ற கொழுப்புப் பேச்சு நிறையவே உண்டு. அளவு காரர்களுக்கு விரல் நுனியில், யார் யார் வீட்டில் நெல் இருக்கிறது, எந்த வகையான நெல், எவ்வளவு இருக்கிறது, எந்த விலைக்கு கிடைக்கும், எல்லாவற்றுக்கும் மேல் நெல்லின் தரம் பற்றியும் இவருக்கு நன்றாக தெரியும். அவர் வீட்டில் காலை கதவை தட்டினால் காப்பி குடித்துவிட்டு, சட்டையெல்லாம் கிடையாது, மேல் துண்டை மட்டும் போட்டுகொண்டு, ஒரு கிருஷ்ணமாச்சி வீட்டுக்கோ அல்லது அடுத்த வளவு ஒரு வேலமாச்சி வீட்டுக்கோ அவரது நெல் அளக்கும் மரக்கா, ஒரு சாக்கு, அவரின் மூலதனம் இவற்றுடன் என்னை கூட்டிக்கொண்டு போவார். நெல் அளவை கால் கோட்டை, அரைக்கோட்டை என்ற அளவிலே விலை பேசப்படும். நெல்லை இவர் அளந்து போடுவதால் அளவு காரர் என்று அறியப்பட்டிருக்கலாம். இவரை அப்படியே நம்பக்கூடாது, நம்பவும் முடியாது. ஒரு தடவை இவர் அளந்து கொள்முதல் செய்து கொடுத்த நெல்லில் பாதிக்கும் மேல் சாவியாக(பழுதாக) போய்விட்டது என்று எங்க அம்மா சாபம் ஒன்றுதான் தான் கொடுக்கவில்லை. எனது அம்மாவிடம் நான் கேட்டேன், இது என்ன ஒரு பொழைப்புன்னு இந்த அளவுகார குடும்பங்கள் வாழுகின்றன? அதற்கு அவர் பொட்டில் அடித்தாற் போல் சொன்னார். "நீயும் தான் பெத்த படிப்பு எல்லாம் படிச்சு, போதாதுக்கு சட்டம் வேறு படிச்சிட்டு பாங்கிலே 40 வருஷம் குப்பை கொட்டினாயே! ஒரு வயக்காடு உண்டா, வேலை பாத்து கிழித்தாயே அந்த ஊரில் ஒரு வீடு உண்டா? பெரிசா பேச வந்துட்டான். இந்த அளவு காரனோட ஐயா காலத்திலேயே தன்னுடைய ரெண்டு மகன்களுக்கும் சேர்ந்த மாரி ரெண்டு வீடு கட்டிட்டாரு. இவன் அடுத்தவர்களுக்கு விலைக்கு நெல் அளக்கிறானே தவிர அவன் குடும்பம் சாப்பிட சிந்தாமணி வாய்க்காலை ஒட்டி ஒரு அரைக்கோட்டை விதப்பாடு உண்டு. அத்தனையும் பவுனாக்கும், தெரிஞ்சுக்கோ" என்று சொல்ல, நான் அதற்கு மேல், ஏன் பேசுகிறேன்? என்ன பேசுவேன்? ச நல்லசிவன் -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoovguDWCO%3D3mCbPEu2z%2BPzmhUfrHhLg8YR0hRjgXZHVRg%40mail.gmail.com.
