நம்பியை நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு. நம்பியை நம்பி ,நம்பியின்
 பலவித  தோற்றத்தை தந்து நம்பியின் நம்பிக்கையை அதிகரித்ததற்கு நன்றி  K
Rajaram IRS  31725

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Thu, 31 Jul 2025 at 07:40
Subject: Fwd: Indira Priyadarshini - Nambi
To:



*நம்பி*

*இந்திரா ப்ரியதர்ஷிணி *

(அந்தமான் கிருஷ்ணமூர்த்தி 'தீய வேலை செய்யணும் குமாரு' என்கிற தலைப்பில் ஒரு
கட்டுரை அனுப்பியிருந்தார். அது தொடர்பாக இந்திரா ப்ரியதர்ஷிணி அனுப்பியுள்ள
கருத்து.)

நம்பி என்ற சொல்லோடு மிகுந்த பிரேமை எனக்குண்டு. நம்பி என்றால் ஆண்தகை,
இறைவன், பூரணன், இளைஞன், குலம் குணத்தில் ஏற்றமுடையான் மற்றும் செல்லப் பிள்ளை
என்று பல பொருள் உண்டு. இந்தச் செல்லப் பிள்ளை என்ற பொருள் தான் நமக்கு
அணுக்கம் தருகிறது. நம்பி ஆருரன், நாற்கவிராச நம்பி, நம்பியாண்டர் நம்பி,
திருநறையூர் நம்பி, திருநாரையூர் நம்பி, திருக்கச்சி நம்பி, திருமலை நம்பி
என்று ஆன்றோர் பலர் இத்திருநாமம் உள்ளவர். நம்ப வல்லவன் நம்பி என்பதாகுமோ?

எங்கள் திருவள்ளூர்ப் பாசுரத்தில் பெரிய திருமொழியில் இரண்டாம் பத்தில்
திருமங்கையாழ்வார் அருளிச் செய்தது. "காசையாடை மூடியோடிக் காதல் செய்தான்
அவனூர் நாசமாக நம்பவல்ல நம்பி நம்பெருமான்" காஷாயம் தரித்து ஔித்துக் கரந்து
பிராட்டி மேல் ஆசை வைத்த இராவணன் ஊர் நாசமாக சங்கல்பம் தீர்மானம் செய்த நம்பி
நம் பெருமான் திருஎவ்வுள் கிடந்தான். எவ்வுள் கிடக்கும் எம்பெருமான் ஸ்ரீ
வீரராகவன். திருநறையூர் என்னும் நாச்சியார் கோயிலில் குடி கொண்டுள்ள நம்பி
நறையூர் நம்பி ஸ்ரீ நிவாஸன். நம்பியின் திவ்ய மகிஷி வஞ்சுளவல்லி என்னும்
நம்பிக்கை நாச்சியார். நம்பியை நம்பினோர் கெடுவதில்லை. இது நான்கு மறைத்
தீர்ப்பு.

திருநாரையூர் நம்பி சைவத்தில் பொல்லாப் பிள்ளையாரின் அருள் பெற்று பதினொரு
திருமுறைகளைத் தொகுத்தார். திருவிரட்டை மணிமாலை போன்ற நூல்களையும் இயற்றியவர்.
இவர் வழியில் வந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவாலவாய் உடையார்
திருவிளையாடற்புராணம் என்னும் நூலை இயற்றியுள்ளார் சோழ மண்டலத்தில் புலியூர்
என்ற பெயர் கொண்ட பல திருத்தலங்கள் உள்ளன. ஒரு நாள் வியாக்ரபாத முனிவர் தொழுத
அத்தலங்களை சேவிக்க வேண்டும்.

நம்பி ஆருரர் என்ற இயற்பெயர் கொண்ட சுந்தர மூர்த்திப் பெருமான் தியாகேசப்
பெருமானை நம்பி இம்மையும் மறுமையும் சிறக்க வாழ்ந்தார். நாம் நம்பியிருக்க
திருப்பாட்டுப் பதிகங்கள் செய்து தந்தார். ஸ்ரீ வைணவத்தில் திருக்கச்சி
நம்பியும் கச்சி தேவராஜப் பெருமாளும் உரையாடுதல் இயல்பாகும். திருமலை நம்பியை
திருவேங்கடவன் ஆட்கொண்ட வரலாறு நாம் வாசிக்கிறோம். நாற்கவிராச நம்பி சித்ரகவி,
வித்தாரக் கவி, ஆசு கவி, மதுரகவி என நாலுவகைக் கவி பொழியும் ஆற்றல் பெற்றவர்.
திருமங்கையாழ்வாரும் நாலுகவிப் பெருமாள் என்று இதனால் போற்றப்படுகிறார்.

நம்பிகளில் மிகச் சிறந்த நம்பி ஒருவன் உண்டு. அவன் குறுங்குடி நம்பி. ஸ்ரீ
இராமனுஜரிடம் உபதேசம் பெற்ற வைணவ நம்பி. அழகிய நம்பி, வடுக நம்பி.
பெரியாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் மங்களாசாஸனம். நம்பி
ராஜன் என்ற வேடர் குலத் தலைவர் தான் ஸ்ரீ வள்ளியம்மை தகப்பனார்.

கம்ப ராமாயணத்தில் "நன்றே நம்பி நம் குடி வாழ்க்கை" என்ற பாடல் மிகவும்
சிறப்பு.  "ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம் அன்றே
என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம் இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று
உரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு
அம்மா!” இறைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்; பல என்றால் பலவேதான்; அப்படி
அல்ல என்றாலும் அல்லதான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை
என்றாலும் இல்லைதான்; உண்டு என்றாலும் உண்டுதான்; எல்லாம் நமது நம்பிக்கையில்
தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நன்று. இது தான் நம்பி
என் தலைவா இறைவா எம் வாழ்வு என உணர்ந்து கொண்டோம் என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்த நம்பி சொல் பிரயோகத்தில் இந்தப் பாசுரம் மிக அழகானது.
"சோத்த நம்பி யென்று தொண்டர்
மின்டித் தொடர்ந்தழைக்கும்,
ஆத்தனம்பி செங்கணம்பி
யாகிலும் தேவர்க்கெல்லாம்,
மூத்த நம்பி முக்கணம்பி
யென்று முனிவர்தொழு
தேத்தும், நம்பியெம்பெருமா
னெவ்வுள் கிடந்தானே"

தொண்டர்கள் அடர்ந்து  "ஐயனே உனக்கு ஸ்தோத்திரம்" அஞ்சலி என்று அயராது
அழைக்கும் நம்பி.  என்றும் உற்ற துணையாய் இருக்கும் ஆப்த(ஆத்த) நம்பி.
செங்கணம்பி. சிவந்த தாமரை போன்ற நேத்ரங்களை உடைய எம் நம்பி. அவன் நேத்ரங்கள்
சிவக்கக் காரணம் தசகண்ட ராவணனை அழித்த சினம். ஸ்ரீ வீரராகவன் அன்றோ? தேவாதி
தேவர்க்கெல்லாம் முன்னவன். மூத்தவன். தேவரும் அயனும் முக்கண் ஈசனும் தொழும்
நம்பி. இத்தகைய சிறப்பு வாய்ந்த நம்பி உறைவதற்குரிய உள் எவ்வுள் என்று ஸ்ரீ
சாலிஹோத்ர மஹரிஷியிடம் கேட்டு திருஎவ்வுள்ளில் கிடந்த திருக்கோலம் கொண்டது
நம்முடைய பெரும்பயனாகும். கிம் கிருஹசேம் (எந்தக் கிருஹம் யாம் உறைவதற்கு?")
என்று சம்ஸ்கிருதத்திலும் திருஎவ்வுள் என்று அழகுத் தமிழிலும் விளிக்கப்படும்
இந்த திவ்ய தேசம் அவசியம் சேவிக்க வேண்டும். எம்பெருமான் மரவுரி எனும் பப்ளி
துப்பட்டி சார்த்திக் கொண்டு இங்கு வருவோரின் சங்கடங்கள் நீக்குவேன் என்று
ஸ்ரீ சாலி ஹோத்ர மஹரிஷி தலையில் கை வைத்துச் சொல்கிறான். இராவணன் நாசமாக நம்ப
வல்ல நம்பி நம் குறை தீர்ப்பான் என்று நம்பிச் செல்லுங்கள். நிச்சயம்
நடக்கும். இந்த நம்பியை நம்பாமல் இந்தக் கலியில் யாரை நம்புவது? கநகவல்லி
நாயீக சமேத ஸ்ரீ வீரராகவஸ்வாமி சரணம். நாள் இனியது.

*இந்திரா ப்ரியதர்ஷிணி *
*******************************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqBk6cpiRGD4po9t8F7jiEs1wf7PLveKFnu7iz4uWR5nA%40mail.gmail.com.

Reply via email to