VEL KEPT HORIZONTALLY IS AYIL. KRIRS 3226

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Mon, 2 Feb 2026 at 20:44
Subject: Fwd: Andaman Krishnamoorthi
To:


*அம்பு விழி என்று...*

*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி *

'வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும்'. இப்படி ஒரு பாடல் ஒரு காலத்தில்
செமெ ஹிட். பார்க்கின்றவர்களை வேல் போல் குத்திக் குதறும் விழிகளாய்
இருந்தாலும்கூட காதலனாய் அதனையும் பாராட்டி டூயட் பாட முடியும். ஆழ்ந்து
யோசித்தால் (ஏன் அப்படியெல்லாம் யோசிக்கணும்?) அறிவுசார் பெண்களின் கண்களை
நேருக்கு நேர் சந்திக்க இயலாது. ஓர் அறிவுச்சுடர் ஒளிவட்டம் போல் சுற்றிக்
கொண்டு பார்க்க விடாது. (வீட்டு அம்மணி பின்னாடி திரும்பி ஒளிவட்டம்
தேடுகிறார்கள்) நம்ம ஆய்வு இப்படி இருக்க, நம்ம வாலி(பக்கவிஞர்) சொல்கிறார்,
நீலமான கண்கள் இருந்தால் நீண்ட கனவு வரும் என்று.

எனக்கு அந்தமாதிரி கண்தான். பூனைக்கண்ணன் என்று கேலி செய்வார்கள். (பின்னர்
ஐஸ்வர்யராய் கண் என்று ஐஸ் வைத்ததும் யாம் அறிவோம்). அறிவியல்படி நீல நிறக் கண்கள்
ஒளியை எதிர்கொள்ளும் திறன்  சற்று அதிகமா வச்சிருக்குமாம். இவர்களால்
வெளிச்சம் கொஞ்சம் வந்தாலும் தூக்கம் சீக்கிரம் கலைந்துவிடுமாம். அப்போ நீண்ட
கனவு? தூக்கம் தடைபட்டால், கண்ட கனவுகள் நன்றாக நினைவில் இருந்து நீண்ட கனவாய்
கவிதையில் வருமாம்.

சங்ககாலப் பாடல் ஒன்றில் இப்படி வேல் விழி வருது. கடியலூர் உருத்திரங்
கண்ணனார் கண்ணில் பட்ட காட்சியினைச் சொல்கிறார் அகநானூறில். தலைவன் வெளிநாடு
போகலாமா என்று கிளிஜோசியம் பாக்கலை. தன் நெஞ்சிடம் பேசுகிறான். அந்த
நெஞ்சுவாய்ஸ் நம்ம புலவன் காதுக்கும் கேட்டிருக்கு. கடைசியில் வெளிநாடு
புரோகிராம் டிராப். காரணம்?  இங்கே காதலியுடன் பேசிப் பழகி இனிமையாய் நாள்
போகிறது. வெளிநாடு அப்படியா? போகும் வழியில் கொள்ளையர்! கொள்ளையடித்த நிலம்
எப்படி இருந்தது என்று பல வரிகளில் உள்ளது. நச்சென்று புரியவேண்டுமெனில்
தற்போதைய யாழ்ப்பாணம் போல் இருந்ததாம். கூர்மையான இரு ஆயுதங்கள் கண்ணில்
பட்டிருக்கு. கொள்ளையரின்  வேல்;  வேல் போன்று கூர்மையான கரையான்.

குயில்காழ் சிதைய மண்டி, அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த
போர்மடி நல்இறைப் பொதியி லானே!

அயில்வாய் என்றால் வேல்முனை போன்ற கூர்மையான என்று புலியூரார் சொல்கிறார். இதே
பொருளில் 109 இடங்களில் திருப்புகழில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதை
ஒட்டித்தான் அயில்வோன் என்றால் முருகன் என நினைத்தால் அது இல்லையாம். பின்னே
யார்? திருப்புகழ் பதில் தருகிறது.

வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும் எட்டு திசையும்
வானோரும் அட்ட குலகிரி யாவும்
ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க வரும்
ஆலாலம் உற்ற அமுது அயில்வோன் முன்

அரக்கர்களுடன்  கடல் கடைந்த போது அங்கு தேவர்கள் பிழைக்க ஆலகால விடத்தை
முழுவதும் அமுதமாக உண்ட சிவபெருமான் எனப் புகழ்கிறார். அயில்வோன் என்றால்
சிவன் என்கிறார் அ கி நாதர்.

திருக்குறளில் ஒரு முறை கூட பயன்படுத்தப்படாத அயில் என்ற ஒற்றைச் சொல்லை
மட்டும் கம்பன் 126 முறை தனது பாடலில் மட்டும் பயன்படுத்தியுள்ளார். (கம்பர்
எப்பவுமே ஷார்ஃப்தான் என்று தைரியமாகச் சொல்லலாம்.) கம்பரின் ஒரு பாடலில்
சீதையினை மிக நீளமான பெயர் சூட்டி மகிழ்கிறார்.

*நிழல் இடு குண்டலம் அதனின் நெய் இடா அழல் இடா மிளிர்ந்திடும் அயில் கொள்
கண்ணினாள்* -   ஒளி   வீசுகின்ற காதணியான  குண்டலம்   வரை   சென்று நெய் தடவப்
பெறாமலும் நெருப்பிலே  வைத்துக் காய்ச்சப்  பெறாமலும் விளங்கும் வேல் போன்ற
விழிகளையுடைய  சீதை;  நீல நயனங்களில் என்பதை விட *நீள நயனங்களில்* என்று
பாடினால் சீதைக்கு சரியாய் இருக்கும்.

இதோ கம்பன் பாடல்:

நிழல் இடு குண்டலம் அதனின். நெய் இடா.
அழல் இடா மிளிர்ந்திடும் அயில் கொள் கண்ணினாள்.
சுழலிடு கூந்தலும் துகிலும் சோர்தர.
தழல் இடு வல்லியே போல சாம்பினாள்.

சீதை, இறுதியில் சுருண்ட  தன் கூந்தலும், உடையும் நெகிழும்படி நெருப்பிலே
போட்ட  பூங்கொடி  போல வாடினாள்.  (606 பால காண்டம் – மிதிலைக் காட்சிப் படலம்)

*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*

**************************************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopEV0kkWXxXqVive0yu84%2BnQ9U7V6DVHSHAaUz36%3DXafg%40mail.gmail.com.

Reply via email to