---------- Forwarded message --------- From: N Sekar <[email protected]> Date: Tue, Mar 3, 2026, 9:05 PM Subject: Fwd - Nandhu Sundhu To: Kerala Iyer <[email protected]>, Narayanaswamy Sekar < [email protected]>, Suryanarayana Ambadipudi <[email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>, Chittanandam V. R. < [email protected]>, Mathangi K. Kumar <[email protected]>, Mani APS <[email protected]>, Rama (Iyer 123 Group) <[email protected]>, Srinivasan Sridharan <[email protected]>
****************************************** டாக்ஸி நல்ல டாக்ஸி தான் நந்து சுந்து ****************************************** கலிபோர்னியாவில் San Jose எனும் இடத்தில் இருக்கும் ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்துக்குப் போவதாகத் திட்டம் போட்டோம். அங்கு கார் பார்க்கிங் வசதி இல்லாததால் டாக்ஸியில் போவதாக முடிவு. அந்த டாக்ஸி பயணம் குறித்து தான் இந்தப் பதிவு. டாக்ஸி புக் செய்தோம் டாக்ஸி வந்தது. ஆனால் டாக்ஸியில் டிரைவர் இல்லை. ஆம். அது Driverless robot taxi. டாக்ஸி புக் செய்து பத்து நிமிடத்தில் சாலை சந்திப்பில் அழகாக இடது பக்கம் திரும்பி பிறகு வலது புறம் திரும்பி எங்கள் அருகில் வந்து நின்றது. உள்ளே சத்தியமாக சாரதி இல்லை. வெள்ளை நிறத்தில் கிறுஸ்துவ மணப் பெண்னின் கவுன் போல அழகாக இருந்தது. டாக்ஸியின் மண்டையில் ஒரு கொண்டை. போக்கிரி படத்து வடிவேலு போல. அந்தக் கொண்டை தான் கண்டவன் மேல் எல்லாம் டாக்ஸி மோதி விடாமல் பார்த்துக் கொள்கிறது. 360 டிகிரியில் வேவு பார்ப்பது தான் கொண்டையின் வேலை. மற்றவர்களை விலகிப் போகச் சொல்வதில்லை. தான் விலகிப் போகிறது. நான் முதலில் நல்லவனாக இருக்கிறேன் நீயும் நல்லவனாக இரு என்று சொல்கிறது. நாம் புக் செய்த App ல் Log in செய்தால் மாயக் கதவு திறக்கிறது. உள்ளே ஏறினால் ஸ்க்ரீனில் நம் பெயரைப் போட்டு வரவேற்பு சொல்கிறது. டிரைவர் சீட்டில் எட்டிப் பார்த்தால் யாருமே இல்லை. மீதி நாங்கள் மூன்று பேர். இட்லி தட்டில் மூன்று தட்டில் இட்லி மாவு ஊற்றி விட்டு ஒரு தட்டு காலியாக விட்டால் எப்படி இருக்கும்! அந்த மாதிரி இருந்தது. “ஹலோ! நாங்க இங்கே உள்ளே. நீங்க எங்கே?” என்று கவுண்டமணியும் அர்ஜுனும் டீக்கடை ஊர்வசியிடம் கேட்பது போலக் கேட்டோம். பதில் இல்லை. “போலாமா?” என்று ஸ்க்ரீன் சீக்கிரப்படுத்தியது. போகலாம் தான். ஆனால் பத்திரமாக இறக்கி விடுமா என்ற பயத்துடனேயே போகலாம் என ஸ்க்ரீனைத் தொட்டோம். சீட் பெல்ட் எச்சரிக்கை மணி அடித்தது. பெல்ட் போடல்லேன்னா பிச்சுபுடுவேன் படவா என்றது. மெதுவாக வண்டி கிளம்பியது. ஆக்ஸிலேட்டரை யார் அமுக்குகிறார்கள்? ஏதாவது அமுக்குப் பிசாசா? தெரியவில்லை. ஸ்டீயரிங் அதுவாகச் சுற்றியது. ஏதோ ஒரு பேய் வண்டி ஓட்டுகிறது என்று மட்டும் புரிந்தது. பேய் சாரதிக்கு நல்ல புத்தி கொடு பார்த்தசாரதிப் பெருமாளே என்று வேண்டிக் கொண்டோம். வண்டி புறப்பட்ட முப்பதாவது செகண்டில் மெயின் ரோடு வந்து விட்டது. கார்கள் பும்ரா போட்ட பந்துகள் மாதிரி புர் புர்ரென்று போய்க் கொண்டிருந்தன. எங்கள் காரும் ஜோதியில் கலந்து கொண்டது. ஐம்பது கிலோ மீட்டர் வேகம் எடுத்தது. எங்களுக்கு ஐம்புலன்களும் ஆட்டம் கண்டன. வயிற்றில் அன்லிமிடெட் ஆசிட் சுரந்தது என்னவோ நிஜம். சாலையின் வலது புறம் ஸ்டார்பக்ஸ் காபிக் கடை இருந்தது. சத்தியமாக ஸ்டார்பக்ஸில் சொருகப் போகிறது என பயந்து கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. ‘காக்கக் காக்க கார் வீல் காக்க’ என்று கண்டபடி பிரார்த்தித்தோம். இந்த பயம் இரண்டு நிமிடம் தான் இருந்தது. பிறகு ஒரு நம்பிக்கை வந்தது. கார் ஒரே சீரான வேகத்தில் போக ஆரம்பித்தது. “தம்பி, நீ எந்த ஊரு?” என்று டிரைவரிடம் பேச்சுக் கொடுக்க முடியவில்லை. அது தம்பியா இல்லை தங்கச்சியா! பின் பக்கமாகத் திரும்பிப் பார்த்து “விஜய் எலெக்சன்ல ஜெயிப்பாரா சார்?” என்று டிரைவர் விஜாரிக்கவும் இல்லை. இந்தக் காருக்குக் கொண்டையைக் கொடுத்த ஆண்டவன் தொண்டையைக் கொடுக்கவில்லை. ஒரு நாற்சந்தி சிக்னல் வந்தது. முன்னால் போகும் கார்கள் நிற்க ஆரம்பித்தன. எங்கள் காரும் நின்றது. ரவா கேசரியில் ஸ்பூன் நுழைவது போல ஸ்மூத் ஆன ப்ரேக் ப்ரயோகம். முன்னால் இருந்த காருக்குப் பின்னால் இருபதடி இடைவெளி விட்டு நின்றது. டெபுடி கலெக்டர் முன் தள்ளி நிற்கும் டவாலி மாதிரி அதீத பவ்யம். சிக்னலில் வலது புறம் திரும்ப வேண்டும். ஹார்லிக்ஸ் பாட்டில் மூடியைத் திருகுவது போல ஸ்டீயரிங்க் அதுவாகச் சுற்றியது. துல்லியமாக கர்வ் அடித்துத் திரும்பியது. நம்மூர் டிரைவர் விஸ்வம் கூட இந்த Invisible driver அளவுக்கு கர்வ் அடித்திருக்க மாட்டார். சிறிது தூரம் போனதும் அதுவாக Lane மாறியது. ரியர் வியூ மிரர் பார்த்து அல்ல. கொண்டையிலிருந்து வந்த கமாண்ட் அது. பத்து நிமிடத்தில் எங்களுக்குப் பழகி விட்டது. பயம் போய் விட்டது. அந்த அரூபமான டிரைவர் மேல் பிரியம் வந்தது. ‘புளியோதரை சாப்பிடுப்பா’ என்று டப்பாவை நீட்ட வேண்டும் போல் இருந்தது. தொடு திரையுடன் ம்யூசிக் சிஸ்டம் இருந்தது. அனிருத் பாட்டு ஒன்றைப் போட்டு விட்டோம். அந்த ரோபோ டிரைவர் ரசித்திருக்க வேண்டும். ஏதோ ஒரு அமெரிக்கப் பாட்டு தானே அது! மொத்தம் 28 நிமிடப் பயணம். இந்த இடைப்பட்ட நேரத்தில் ரோபோ எங்களுடன் ராசியாகி விட்டது. ஜாதகப் பரிவர்த்தனை செய்யும் அளவுக்கு நெருக்கமாகி விட்டது. சரியாக 28 வது நிமிடத்தில் ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனம் முன்னால் போய் நின்றது. நீங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது என சொன்னது. அநேகமாக அடுத்த வருடம் ‘பூஜ்யாய ராகவேந்திராயா’ என்ற ஸ்லோகத்தைக் கூடச் சொல்லிவிடும் என்று நினைக்கிறேன். நாங்கள் இறங்கினோம். ஒரு நிமிடம் நின்றது. பிறகு யாரோ ஒரு Johnson அல்லது Wilson ஐத் தேடிப் போனது. வில்சன் என் மாதிரி வியாசம் எழுதமாட்டார். திரும்பி வரும் போதும் இதே போல Robotic Taxi ல் தான் வந்தோம். Robotic திமிர் தான் காரணம். மாலை இந்தியாவில் இருக்கும் என் நண்பருக்குப் பெருமையாகப் போன் செய்தேன். “இங்கே எல்லாம் டிரைவர் இல்லாத டாக்ஸி எவ்வளவு இருக்கு தெரியுமா?” “அட போய்யா. இங்கே எல்லாம் டாக்ஸி இல்லாத டிரைவருங்க எவ்வளவு பேர் இருக்காங்க தெரியுமா?” என்றார் அவர் பதிலுக்கு. என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ****************************************** Yahoo Mail: Search, Organize, Conquer <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer> -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zf9LNf2%2BZYa-K9sZwrjm%2BwFu0fpiMZQX6EHwm%3D8kHVm-A%40mail.gmail.com.
