---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Sat, 14 Mar 2026 at 12:19
Subject: Fwd: Nandhu Sundhu
To:





*அந்த பத்து நாட்கள்*

*நந்து சுந்து *


*************************************************

சிவராமன் சிரசாசனம் செய்து கொண்டிருக்கும் போது அவருடைய வீட்டுக்குள்
நுழைந்தார் பக்கத்து வீட்டு பாராங்குசம்.

“ரொம்ப வருஷமா சிரசாசனம் செய்யறீங்க போல இருக்கு?” என்றார்.

“இல்லே. இப்போ பத்து நிமிஷமாத் தான் செய்யறேன்” என்றார் சிவராமன்.

அவருடைய மண்டையிலிருந்து வியர்வை ஆறாக ஓடித் தரையை நனைத்தது.

“ஆசனம் பண்றேன்னு சொல்லி நீர்ப்பாசனம் பண்ணிகிட்டிருக்கீங்க” என்றார்
பாராங்குசம்.

“சிரசாசனம் உடம்புக்கு ரொம்ப நல்லது. தலையால நடக்கறதுக்குக் கூட பயிற்சி
எடுத்துகிட்டிருக்கேன்”

“அப்படியா?”

“ஆமா. காரைக்கால் அம்மையார் தலையால மலை ஏறினாங்களாம். நானும் பல கோவில்களுக்கு
இப்படி யாத்திரை போலாம்னு இருக்கேன்”

“ஓ..ஸ்தல யாத்திரை மாதிரி தல யாத்திரை. பேஷ்! நடத்துங்கோ. இப்படி தலை கீழா
யாத்திரை போனா ஒரு செளகரியம். கோவில் வாசல்ல செருப்பு டோக்கன் வாங்க வேணாம்”

“சக்ராசனம் செய்யறீங்களா? சொல்லித் தரேன்”

“முதல்ல ஒரு chair ஆசனம் கொடுங்க. உட்கார்ந்து பேசணும்”

“சொல்லுங்க” என்றார் சிவராமன்.

“அடுத்த மாசம் நான் ஃபேமிலியோட நார்த் இண்டியா டூர் போறேன்”

“போயிட்டு வாங்க”

“ஆனா நான் நாய் வளர்க்கறேன்”

“நாய் வளர்த்தாலும் நார்த் இண்டியா போலாம் சார். அரசியலமைப்பு சட்டத்துல
அதுக்கு இடம் இருக்கு”

“நான் நாகாலாந்து போறேன். அங்கே நாயைக் கூட்டிப் போக முடியாது”

“ஓ..நாகப் பாம்பு தான் கூட்டிப் போலாமா?”

“அதில்லே. ரயில்ல போறேன். நாயைக் கூட்டிப் போக முடியாது”

“ஒரு கஷ்டமும் இல்லே. அப்பர் பெர்த்துக்கு கபக்னு ஜம்ப் பண்ணிடும்”

“நாய் நாட் அலோவ்ட். அதனால நாயை நீங்க பத்து நாள் பார்த்துக்கணும்”

“ஐயோ. பத்து நாள் நாய் கூடவா?”

“நாய் ரொம்ப நல்ல நாய். ஒன்பதாவது நாள்ல உங்க கிட்டே செட் ஆகிடும்”

“எனக்கு நாய்னா பிடிக்கவே பிடிக்காது”

“என் நாய்க்குக் கூடத் தான் உங்களைப் பிடிக்காது. உங்க தொடை மேல ஒரு கண்ணு
வச்சிருக்கு. நாய் டிஸ்டர்ப்டா இருக்கு. கவுன்சிலிங் கூட்டிப் போனா
சரியாயிடும்”

“நாய்க்கு கவுன்சிலிங்கா? நாய் நீட் பரிட்சையா எழுதியிருக்கு?”

“கவுன்சிலிங்குக்கு நீங்களும் வரணும். சைக்ரியாஸ்ட்ரிட் பேசுவார். நாயும்
நீங்களும் ஒரே வேவ் லெங்ந்த்ல வந்துட்டாப் போதும். நாய் உங்க கூட ஃப்ரெண்ட்
ஆகிடும்”

“அப்படியா?”

“ஆனா வேவ் லெங்ந்த் வரதுக்குள்ளே ரெண்டு மூணு தடவை வவ்னு கடிக்கும். உங்க
தொடையைத் தொடாமலே கடிக்கும். அதுக்காக பயப்பட வேணாம். அது வெறி நாய் இல்லே.
வெறிஃபைட்”

“எனக்கு நாய் வளர்க்கத் தெரியாதே!”

“நீங்க ஒண்ணும் செய்ய வேணாம். அதுவா வளரும். புரளும். நைட் கோ ஆப்டெக்ஸ்
பெட்ஷீட் போர்த்தி விட்டுட்டா கம்முன்னு தூங்கும். பாத்ரூமுக்கெல்லாம் எழுப்பி
விட வேணாம்”

“பத்து மணிக்குத் தூங்கிடும் இல்லே?”

“தூங்கிடும். ஆனா நாய்க்கு பெட் டைம் ஸ்டோரி சொல்லணும். பஞ்ச தந்திரக்
கதைகள்னா நாய்க்கு ரொம்ப பிடிக்கும். பட் அதுல நாய் இல்லாத ஸ்டோரியா சொல்லணும்”

“நாங்க ப்யூர் வெஜிட்டேரியன். நாய்க்கு மாமிசம் போட முடியாது”

“கவலைப்படாதீங்க. நாங்க நாயை வெஜிடேரியனாத் தான் வளர்த்திருக்கோம். கூடிய
சீக்கிரம் அதுக்கு ஜெயின் ஃபுட் பழக்கி விடலாம்னு கூட இருக்கோம்”

“இது ஓவர். நாய்க்கு செயின் போடலாம். ஜெயின் ஃபுட் போடலாமா?”

“இல்லேன்னா தை ஃபுட் கேக்கும்”

“தாய்லாந்து ஃபுட்டா?”

“நோ. Thigh food”

“பத்து நாள் என்னால மேனேஜ் செய்ய முடியாது சார்”

“கார்த்தால ஒரு தட்டுல பால் வைச்சிடணும். சூடு பதமா இருக்கணும். நாய் பால்ல
வாய் வைக்கறதுக்கு முன்னால நீங்க நக்கிப் பார்க்கணும்”

“நாயையா?”

“இல்லே. பாலை. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை தண்ணீர் கொடுக்கணும். ஒன்லி
மினரல் வாட்டர்”

“அனிமலுக்கு மினரல் வாட்டரா? வெளங்கிடும்”

“நீங்க நாய் முன்னால யோகா எதுவும் செஞ்சிடாதீங்க. நாய்க்கு யோகா ஆகாது”

“நான் டெய்லி கார்த்தால பூஜை செய்வேன். நாய் ஏதாவது டிஸ்டர்ப் செய்யுமா?”

“அதெல்லாம் செய்யாது. நாய்க்குத் தனியா நைவேத்யம் வைச்சிட்டாப் போதும்”

“தூபம்?”

“ஐயோ. அது பாபம்”

நாயை சிவராமன் வீட்டில் விட்டு விட்டு பாராங்குசம் யாத்திரைக்குக் கிளம்பி
விட்டார்.

யாத்திரை முடிந்து பாராங்குசம் தன் வீட்டுக் கதவைத் திறந்தார்.  பல
பொருட்களும் எலி கடித்து நாசமாகியிருந்தன.

“நான் தான் சார் பத்து நாளைக்கு எங்க வீட்டு எலியை உங்க வீட்ல விட்டு
வைச்சிருந்தேன். நல்ல எலி. பட்டுப் புடவை மட்டும் தான் கடிக்கும். இருந்தாலும்
ஒரு தடவை பேங்க் டாகுமென்ட்ஸ் எல்லாம் செக் பண்ணிக்குங்க” என்றார் சிவராமன்.

*நந்து சுந்து *
*************************************************
*சித்தானந்தம்*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoogOcO8FX3SghCestgPTTKajegaibN-g%2BghJ-opeTV9hQ%40mail.gmail.com.

Reply via email to